search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Senthil Balaji"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செந்தில் பாலாஜி மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
    • ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பதில் இரு கோர்ட்டுகளும் மாறி மாறி உத்தரவுகளை பிறப்பித்து, விசாரிக்க மறுத்துள்ளது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    அப்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு ஆகியவற்றை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு விசாரித்தது. இந்த கோர்ட்டு, 2016-ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையின்படி, சட்ட விரோத பண பரிமாற்றம் தடைச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டாகும்.

    இந்தநிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு அமைத்து உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த கோர்ட்டில் செந்தில் பாலாஜி ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார்.

    இதையடுத்து அவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அந்த சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை நீதிபதி ரவி விசாரிக்க மறுத்து விட்டார்.

    ஜாமீன் மனுவை, சட்ட விரோத பண பரிமாற்றம் தடைச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி உத்தரவிட்டார். உடனே ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் தாக்கல் செய்தபோது, அந்த மனுவை விசாரிக்க மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி அல்லி மறுத்து விட்டார்.

    இந்த வழக்கை விசாரிக்கும் எம்.பி., எம்.எல்.ஏ., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் தான் முறையிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சிறப்பு கோர்ட்டை செந்தில்பாலாஜி தரப்பு அணுகியபோது, விசாரணைக்கு எடுக்க மறுத்து நீதிபதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, அமலாக்கத்துறை சிறப்பு வக்கீல் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளார். அவரை ஓய்வு எடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்ததால், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இந்த ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பதில் இரு கோர்ட்டுகளும் மாறி மாறி உத்தரவுகளை பிறப்பித்து, விசாரிக்க மறுத்துள்ளது.

    சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுதான் என்று கூறி, இந்த கோர்ட்டை சிறப்பு கோர்ட்டாக அறிவித்து மத்திய அரசு 2016-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.

    அதேபோல, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, ஐகோர்ட்டுடன் ஆலோசனை செய்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த அரசாணையின்படி உருவாக்கப்பட்ட கோர்ட்டில்தான், செந்தில் பாலாஜி வழக்கு மாற்றப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது.

    ஆனால், இந்த கோர்ட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அதிகாரம் கொண்டது. ஆனால், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்குத்தான் உள்ளது.

    அதனால், இந்த ஜாமீன் மனுவை மட்டுமல்ல, செந்தில்பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்கையும், மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும். எனவே, இந்த வழக்கை சிறப்பு கோர்ட்டில் இருந்து, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

    • சட்டவிரோதமாக கிடைக்கப்பெற்ற பணத்தை செந்தில்பாலாஜி நேரடியாக பெற்றுள்ளார்.
    • செந்தில் பாலாஜி தனது சகோதரர் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதற்கான டிஜிட்டல் ஆதாரங்களும் உள்ளன.

    சென்னை:

    கடந்த 2014-ம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் போன்ற பணியிடங்களுக்கு பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 குற்ற வழக்குகளை பதிவு செய்த நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது 120 பக்க குற்றப்பத்திரிகை மற்றும் 3 ஆயிரம் பக்க வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறை சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு ஆவணங்கள் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அந்த தகவல்கள் வருமாறு:-

    போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் மூலம் பலரிடம் பெரும்தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு சட்டவிரோதமாக கிடைக்கப்பெற்ற பணத்தை செந்தில்பாலாஜி நேரடியாக பெற்றுள்ளார். அந்த பணத்தை தனது வங்கி கணக்கிலும், தனது மனைவி, சகோதரர் மற்றும் உறவினர்கள் சிலரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளார்.

    இந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக உதவியாளர்களால் மின்னஞ்சல் மூலம் பகிரப்பட்ட தகவல்களும் கிடைத்துள்ளன.

    செந்தில் பாலாஜி திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான டிஜிட்டல் ஆதாரங்களும், ஆவணங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. சட்டவிரோத பண பரிமாற்றத்தில் மையப்புள்ளியாக செந்தில் பாலாஜி செயல்பட்டுள்ளார்.

    சகோதரர், உதவியாளர்கள் மற்றும் சில போக்குவரத்து அதிகாரிகளுடன் சேர்ந்து பணம் ஈட்டுவதற்கான உத்தியை செந்தில் பாலாஜி உருவாக்கி உள்ளார்.

    இந்த முறைகேட்டில் தனக்கு தொடர்பில்லை என செந்தில்பாலாஜி கூறினாலும், அவரது அதிகாரத்தின் கீழ்தான் இந்த முறைகேட்டுக்கான சதி அரங்கேற்றப்பட்டு உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

    மொத்தம் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன, ஒவ்வொரு பணியிடத்துக்கும் எவ்வளவு பணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது, இந்த பணிக்காக யார், யாரிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது போன்ற விவரங்களுடன் கூடிய பென்சிலால் எழுதப்பட்ட ஆவணங்களும், பென் டிரைவ்களும் கிடைத்துள்ளன.

    செந்தில் பாலாஜி தனது சகோதரர் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதற்கான டிஜிட்டல் ஆதாரங்களும் உள்ளன.

    இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் ஆண்டுகளிலும், அதற்கடுத்த ஆண்டுகளிலும் உள்ள வருமானத்தை ஒப்பிடும் போதும் மிகப்பெரிய அளவில் முரண்பாடு உள்ளது. இதேபோன்று வருமான வரி கணக்கை ஒப்பிட்டு பார்க்கும்போதும் முரண்பாடுகள் உள்ளன.

    முறைகேடான இந்த பணம் யார் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது? என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. பொது ஊழியரான அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

    போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று அதனை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததற்கான அத்தனை ஆதாரங்களும் உள்ளன.

    இதுபோன்று பல்வேறு தகவல்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

    • செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 2 மாதங்களாகும் நிலையில் அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.
    • செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    இதன்பின்னர் காவேரி ஆஸ்பத்திரியில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்தும் விசாரித்தனர். பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 2 மாதங்களாகும் நிலையில் அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டவுடன் அடுத்த 14 நாட்கள் அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி முதல் நீதிமன்ற காவல் ஜூன் மாதம் 28-ந்தேதி வரை என உத்தரவிடப்பட்டிருந்தது. 2-வது முறையாக ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    இதன்பின்னர் ஜூலை 26-ந்தேதி வரையில் 3-வது முறையாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் 11-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவலை பின்னர் ஆகஸ்ட் 25-ந்தேதி வரை நீட்டிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் இன்று நீட்டிக்கப்பட்டது. செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு காணொளி வாயிலாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது அன்று புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி அன்று அழைத்துச் செல்லப்படுகிறார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படும்போது 28-ந்தேதி குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்படுகிறது.

    • சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஆகியவற்றில் தனித்தனியாக 3 வழக்குகள் செந்தில்பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • சிறப்பு கோர்ட்டில் வருகிற 28-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

    சென்னை:

    கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஆகியவற்றில் தனித்தனியாக 3 வழக்குகள் செந்தில்பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ந்தேதி செந்தில்பாலாஜியை கைது செய்தது.

    இதன்பின்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது.

    இதைத்தொடர்ந்து அவர் மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வாக இருப்பதால் அவர் மீதான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான சிறப்பு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும்.

    அந்த அடிப்படையில், இந்த வழக்கை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டு உள்ளார்.

    சிறப்பு கோர்ட்டில் வருகிற 28-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் செந்தில்பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்க வாய்ப்பு உள்ளது.

    குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதும் சாட்சி விசாரணை உள்ளிட்ட அடுத்தகட்ட விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நிலுவையில் உள்ள வழக்குகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்குகளிலும் செந்தில்பாலாஜி மீது அடுத்த மாதம் இறுதிக்குள் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.

    • செந்தில் பாலாஜி கடந்த 12-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது.

    சென்னை:

    சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து பல்வேறு தகவல்களை திரட்டினர்.

    இந்த விசாரணையின்போது செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் பற்றியும் அமலாக்கத்துறையினர் கேள்விகளை கேட்டு விசாரித்தனர். பின்னர் செந்தில் பாலாஜி கடந்த 12-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என்று அமலாக்கத்துறையினர் மறுத்து விட்டனர்.

    இந்த நிலையில் அசோக்குமார் மத்திய உளவு துறையின் பிடியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜி விரைவில் அமலாக்கத்துறையில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் அவர் எப்போது சரண் அடைவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சரண் அடைந்த பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசோக் குமாரின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாய் லட்சுமி என இருவருக்கும் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.
    • செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கருதியதால் சம்மன் அனுப்பப்பட்டது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடான பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்ட பிறகு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அசோக் குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்து விசாரணை நடத்துவதாக வெளியான தகவலுக்கு அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    அசோக் குமார் கைது செய்யப்படவில்லை. அவருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை. அசோக் குமாரின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாய் லட்சுமி என இருவருக்கும் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.

    செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கருதியதால் சம்மன் அனுப்பப்பட்டது.

    கொச்சியில் அசோக்குமார் கைதானதாக வெளியான செய்தி தவறானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டது.

    • அமலாக்கத்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காண்பித்து, அதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர்.
    • கடந்த 6 நாட்களில் அவரிடம் 300-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரை கடந்த 7-ந் தேதி காவலில் எடுத்த அமலாக்கத்துறையினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இன்று 6-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.

    சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து பல்வேறு கேள்விகளை கேட்டு செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அமலாக்கத்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காண்பித்து, அதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தை விரிவாக பதிவு செய்து உள்ளனர். அந்த வகையில், கடந்த 6 நாட்களில் அவரிடம் 300-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்த அவகாசம் இன்றுடன் (12-ந் தேதி) முடிகிறது. இதையடுத்து அவர் இன்று பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். 

    • இதுவரை நடந்துள்ள விசாரணையில் 150-க்கும் மேற்பட்ட ஆவணங்களுக்கு செந்தில்பாலாஜி விளக்கம் அளித்து உள்ளார்.
    • பிரபல ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்து சரியான நேரத்துக்கு, செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்படுகிறது.

    சென்னை:

    சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

    அதன் அடிப்படையில் செந்தில்பாலாஜியை கடந்த 7-ந்தேதியில் இருந்து காவலில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடக்கிறது.

    இதன்படி நேற்று 3-வது நாளாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ள ஆவணங்களை வைத்து அவரிடம் விளக்கம் கேட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இதுவரை நடந்துள்ள விசாரணையில் 150-க்கும் மேற்பட்ட ஆவணங்களுக்கு செந்தில்பாலாஜி விளக்கம் அளித்து உள்ளார். நேற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

    விசாரணைக்கு இடையே அவருக்கு சற்று ஓய்வு கொடுக்கப்படுகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்து சரியான நேரத்துக்கு, செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்படுகிறது. டாக்டர்கள் குழுவினரும் செந்தில்பாலாஜியை தினமும் 2 முறை பரிசோதிக்கிறார்கள். ரத்த அழுத்தம் பார்க்கப்படுகிறது.

    செந்தில் பாலாஜியை விமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

    அந்த தகவலுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதால், அவரை டெல்லி அழைத்து செல்லும் திட்டம் இல்லை, என்று கூறி விட்டார்கள். இதை செந்தில்பாலாஜி தரப்பும் உறுதி செய்து விட்டது.

    • சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர்.
    • மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் ½ மணி நேரம் அவகாசம் கேட்கப்பட்டது.

    புதுடெல்லி:

    அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் போட்டுள்ள வழக்கு விசாரணையும் சூடு பிடித்துள்ளது.

    போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் போடப்பட்டு உள்ள இந்த வழக்கு விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 16-ந் தேதி உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர்.

    இதனை கேட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அமர்வு கடும் அதிருப்தி அடைந்தது. ஏற்கனவே வழங்கிய 2 மாத அவகாசம் முடிந்துள்ள நிலையில் அதைவிட 3 மடங்கு கால அவகாசம் கேட்பது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் நினைத்தால் ஒரு வழக்கு விசாரணையை 24 மணி நேரத்திலும் முடிக்கலாம். 24 ஆண்டுகள் ஆனாலும் முடிக்காமல் இழுக்கலாம் என்று தெரிவித்தனர்.

    எனவே உங்கள் டி.ஜி.பி.யையும் உள்துறை செயலாளரையும் நேரில் வரச் சொல்லுங்கள். இன்னும் எத்தனை நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்கட்டும் என்று உத்தரவிட்டனர்.

    இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் ½ மணி நேரம் அவகாசம் கேட்கப்பட்டது. பின்னர் கோர்ட்டுக்கு வந்து முறையிட்ட போலீசார் மேலும் 3 மாதங்கள் அவகாசம் கேட்டதுடன் டி.ஜி.பி., உள்துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து டி.ஜி.பி.யும் உள்துறை செயலாளரும் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற்ற நீதிபதிகள், 3 மாதம் அவகாசம் வழங்க முடியாது என்றும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதற்குள் நீங்கள் முடிக்காவிட்டால் சிறப்பு புலனாய்வு விசாரணை உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளதாக அமலாக்கத்துறை வாதம்.
    • ஒருவர் கோர்ட்டு காவலில் இருக்கும் போது அவரை ஒப்படைக்கும்படி ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்ய முடியாது.

    புதுடெல்லி:

    வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

    அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த இயலவில்லை.

    இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணை டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. கடந்த சில தினங்களாக இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார். மற்றொரு மூத்த வக்கீல் முகில் ரோத்தகி நேற்று ஆஜராகி வாதாடினார்.

    இன்று (புதன்கிழமை) இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. தலைமை வக்கீல் துஷார்மேத்தா ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊழல் உள்பட பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜி மீது கொடுக்கப்பட்டுள்ளன. அந்த புகார்கள் மீது விசாரணை நடத்த விடாமல் செந்தில்பாலாஜி அனைத்து வகைகளிலும் தடுத்தார். தனிப்பட்ட முறையில் அவரை விசாரணை நடத்த வேண்டியது மிக மிக அவசியமாகும்.

    செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பெற முயற்சி செய்தபோது அவர் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. எனவேதான் அவரை கைது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

    எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதிக்க வேண்டும். அப்படி விசாரித்தால்தான் பல்வேறு விஷயங்களுக்கு தீர்வு காண முடியும். ஒருவர் கோர்ட்டு காவலில் இருக்கும் போது அவரை ஒப்படைக்கும்படி ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்ய முடியாது.

    இவ்வாறு தலைமை வக்கீல் வாதாடினார்.

    இத்துடன் வக்கீல்கள் வாதம் இன்று முடிந்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற காவலில் இருக்கும்போது விசாரணை நடத்த எவ்வித தடையும் இல்லை என கபில் சிபல் கூறினார்.
    • சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு.

    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபல் ஆஜராகி தொடர்ந்து தனது வாதத்தை முன்வைத்தார். அவர் கூறியதாவது:-

    அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இருந்தாலும், கைது செய்யப்படும் நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைத்திருக்க முடியாது. கைது செய்யப்படும் நபரை அமலாக்கத்துறை காவலில் எடுக்க வேண்டும் என்றால் அதன் அதிகாரிகளை காவல் அதிகாரிகளுக்கு இணையாக கருதவேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். அவ்வாறு தீர்ப்பளிக்கும்பட்சத்தில் குற்றவியல் நடைமுறை சட்ட அதிகாரங்கள் அனைத்தும் அமலாக்கத்துறைக்கு கிடைத்துவிடும்.

    சுங்க சட்டத்தின்படி கைது செயய்ப்படும் நபரை சுங்க அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிப்பதில்லை என்றும், போலீசார்தான் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.

    கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற காவலில் இருக்கும்போது விசாரணை நடத்த எவ்வித தடையும் இல்லை. எனவே, சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க எதுவும் அமலாக்கத்துறைக்கு தடையாக இல்லை.

    தமிழ்நாடு காவல் நிலையாணை விதிகளின்படி, கைது செய்யப்படும் நபர் நீதிமன்ற காவலுக்கு முன் அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதிக்கவேண்டும். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.

    அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும், சட்டரீதியான வாதங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதி நண்பகல் 12 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.
    • தேவைப்பட்டால் சிறைக்குச் சென்று குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிக்கலாம் என வாதம்.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    இதற்கிடையே, செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பு அளித்தது. அவர் கைது செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது என்றும், குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்றும் கூறியது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்திருந்தார்.

    அதேசமயம், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். மேலும் நீதிபதிகள் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்த பின் நாங்கள் ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும்? அனைத்து அம்சங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்போது இந்த வழக்கை முடித்து வைக்கலாமே எனக் கேள்வி எழுப்பி வழக்கை முடித்து வைத்தனர்.

    இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

    அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது, அப்படி இருக்கையில் அமலாக்கத்துறையினர் எப்படிக் கைது செய்ய முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார். ஒருவரிடம் விசாரணை செய்து அதன் மூலம் வாக்குமூலத்தை பெற்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். அமலாக்கத்துறையால் நேரடியாகக் கைது செய்து விசாரணை நடத்த முடியுமா? சுங்கத்துறை அதிகாரிகளால் ஒருவரைக் கைது செய்ய முடியுமா? காவல்துறையினர்தான் கைது செய்ய முடியும் என கபில் சிபல் வாதிட்டார்.

    புகார்தாரர் அளித்த விவரங்களையே ஆதாரங்களாக முன்வைத்த பிறகு, குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் விசாரிக்க வேறு என்ன உள்ள? தேவைப்பட்டால் சிறைக்குச் சென்று குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிக்கலாமே தவிர, அமலாக்கத்துறை காவல் கோருவது முறை ஆகாது என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. சட்டத்தில் இல்லாததை அமலாக்கத்துறையினர் கோர முடியாது, வசதிக்கேற்ப சட்டத்தை வளைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த விவகாரத்தை விரைந்து விசாரிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கின் விசாணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். வாதங்களை நாளைக்குள் நிறைவு செய்யும்படி செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    ×