search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    செந்தில் பாலாஜியை விசாரிப்பது என்பது மிக மிக அவசியம் - அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் வாதம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    செந்தில் பாலாஜியை விசாரிப்பது என்பது மிக மிக அவசியம் - அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் வாதம்

    • செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளதாக அமலாக்கத்துறை வாதம்.
    • ஒருவர் கோர்ட்டு காவலில் இருக்கும் போது அவரை ஒப்படைக்கும்படி ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்ய முடியாது.

    புதுடெல்லி:

    வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

    அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த இயலவில்லை.

    இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணை டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. கடந்த சில தினங்களாக இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார். மற்றொரு மூத்த வக்கீல் முகில் ரோத்தகி நேற்று ஆஜராகி வாதாடினார்.

    இன்று (புதன்கிழமை) இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. தலைமை வக்கீல் துஷார்மேத்தா ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊழல் உள்பட பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜி மீது கொடுக்கப்பட்டுள்ளன. அந்த புகார்கள் மீது விசாரணை நடத்த விடாமல் செந்தில்பாலாஜி அனைத்து வகைகளிலும் தடுத்தார். தனிப்பட்ட முறையில் அவரை விசாரணை நடத்த வேண்டியது மிக மிக அவசியமாகும்.

    செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பெற முயற்சி செய்தபோது அவர் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. எனவேதான் அவரை கைது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

    எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதிக்க வேண்டும். அப்படி விசாரித்தால்தான் பல்வேறு விஷயங்களுக்கு தீர்வு காண முடியும். ஒருவர் கோர்ட்டு காவலில் இருக்கும் போது அவரை ஒப்படைக்கும்படி ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்ய முடியாது.

    இவ்வாறு தலைமை வக்கீல் வாதாடினார்.

    இத்துடன் வக்கீல்கள் வாதம் இன்று முடிந்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×