search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maoists"

    நீலகிரி மாவட்ட எல்லையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். #Maoist

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய கேரளா வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

    இதை தொடர்ந்து அம்மாநில போலீசார் மற்றும் வனத்துறையினர் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கேரளா போலீசாரின் தேடுதல் நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பி தமிழக பகுதிகளில் ஊடுருவக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

    இதையடுத்து தமிழக போலீசார் மற்றும் அதிரடி படையினர் தமிழக-கேரளா எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஆந்திராவை சேர்ந்த தெலுங்குதேச எம்.எல்.ஏ சர்வேஸ்வரராவ், முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

    மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை ஒருங்கிணைத்து கொரில்லா ஆயுத போராட்டம் நடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநில தெலுங்கு தேச எம்.எல்.ஏ சர்வேஸ்வரராவ், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோரை சுட்டு கொன்றது சீனுபாபு என்கின்ற சுனில், அருணா என்ற வெங்கட்ரவி சைதன்யா, காமேஸ்வரி ஆகிய 3 பேர் என தெரிய வந்துள்ளது. இவர்களின் புகைப்படங்களை ஆந்திர போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    இதுகுறித்து தமிழக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் தமிழக, கேரளா, கர்நாடகா மாநில எல்லையோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் நக்சல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. மோகன்நவாஸ் அறிவுறுத்தலின் பேரில் நக்சல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, தலைமை காவலர் சார்லஸ் ஆகியோர் மேற்பார்வையில் அதிரடி படையினர் 20-க்கும் மேற்பட்டோர் தமிழக கேரளா எல்லையை ஒட்டிய கேரிங்டன், கிண்ணக்கொரை, தனயகண்டி, இரியசீகை, முள்ளி, பெரும்பள்ளம், மானார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் அதிரடி படை போலீசாருக்கு நவீன துப்பாக்கிகளுடன் புல்லட் புரூப் எனப்படும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. #Maoist

    ஆந்திராவில் எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். #TDPMLA #MLAKidariSarveswaraRao
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானவர் கிடாரி சர்வேஸ்வரா ராவ்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர். பிறகு ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சந்திரபாபு நாயுடு அரசு கொறடா பொறுப்பை வழங்கி இருந்தது.

    இவர் தனது அரக்கு தொகுதியில் உள்ள குடா கிராமம் உள்பட பல இடங்களில் கருங்கல் குவாரிகளை நடத்தி வந்தார். அந்த குவாரிகளால் தங்களது வீடுகள் சேதம் அடைவதாக பழங்குடி இன மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதோடு கிடாரி சர்வேஸ்வரா ராவுக்கு எதிராக கிராம மக்கள் போராட்டங்களும் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மக்களை பாதிக்கும் செயல்களை சர்வேஸ்வரா ராவ் நிறுத்த வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் கடிதம் மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் எச்சரித்தனர். அதை சர்வேஸ்வரா ராவ் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அவரை கொலை செய்யப் போவதாக மாவோயிஸ்டுகள் கடந்த ஏப்ரல் மாதம் கடிதங்கள் மூலம் மிரட்டல் விடுத்தனர்.

    மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் குறித்து ஆந்திர போலீசார் கடந்த சில மாதங்களாக அடிக்கடி எம்.எல்.ஏ. சர்வேஸ்வரா ராவை உஷார்படுத்தியபடி இருந்தனர். ஆனால் சர்வேஸ்வர ராவ் போலீஸ் எச்சரிக்கையை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் செப்டம்பர் 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஒரு வார காலத்தை தங்கள் அமைப்பின் உதய வாரமாகக் கொண்டாடப்போவதாக அறிவித்தனர். எனவே இந்த கால கட்டத்தில் மாவோயிஸ்டுகள் கொலை பட்டியலில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உஷாராக இருக்கும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.வுக்கு போலீசார் பிரத்யேகமாக கடிதம் அனுப்பி இருந்தனர். அதில் மாவோயிஸ்டுகள் செப்டம்பர் 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை உதய தினம் கொண்டாடுவதால் நீங்கள் இந்த ஒரு வாரம் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். வீட்டிலேயே இருப்பது நல்லது” என்று அறிவுறுத்தி இருந்தனர்.

    போலீசாரின் இந்த குறிப்பிட்ட எச்சரிக்கையையும் சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ. உதாசீனப்படுத்தினார். ஆந்திரா-ஒடிசா எல்லை அருகே தனது தொகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நேற்று நடந்த “கிராமதர்சினி” திட்ட விழாவில் கலந்து கொள்ள சென்றார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் சென்றிருந்தார்.

    பிறகு அவர்கள் இருவரும் அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்தனர். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கார்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    துடாங்கி எனும் கிராமம் அருகே அவர்கள் கார்கள் வந்து கொண்டிருந்தபோது ஏராளமான பெண் தீவிரவாதிகள் உள்பட சுமார் 40- மாவோயிஸ்டுகள் வழி மறித்தனர். கார்கள் நின்றதும் பின்னால் இருந்து வந்த சுமார் 20 பேர் முற்றுகையிட்டனர். அவர்கள் 60 பேரும் நவீன துப்பாக்கிகள் வைத்திருந்தனர்.

    எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கார்களுக்கு பாதுகாப்பாக சென்றிருந்த 2 போலீசார் உள்பட சிலர் காரில் இருந்து இறங்கி சென்று மாவோயிஸ்டுகளை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். உடனே மாவோயிஸ்டுகள் காவலர்களிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடுமாறு உத்தரவிட்டனர்.

    பயந்து போன காவலர்கள் அடுத்த நிமிடமே துப்பாக்கிகளை கொடுத்து விட்டு ஓடி விட்டனர்.

    இதையடுத்து மாவோயிஸ்டுகள் காரில் இருந்து எம்.எல்.ஏ. சர்வேஸ்வரா ராவையும், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவையும் காரில் இருந்து இறக்கினார்கள். பிறகு அவர்களை அருகில் உள்ள காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் 10 நிமிடங்கள் எம்.எல்.ஏ.வுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பேச்சு நடந்தது.

    மாவோயிஸ்டுகள் வழக்கமாக கடத்தி வருபவர்களை கோர்ட்டில் விசாரிப்பது போல விசாரித்து விட்டு சுட்டுக் கொல்வது வழக்கம். அதுபோல்தான் சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.விடம் மாவோயிஸ்டுகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.

    அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா தப்பி ஓட முயன்றார். உடனடியாக அவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். அடுத்ததாக சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.வையும் சுட்டுக் கொன்றனர்.

    சர்வேஸ்வரா ராவை நோக்கி மாவோயிஸ்டுகள் மொத்தம் 6 ரவுண்டுகள் சுட்டனர். இதில் எம்.எல்.ஏ.வின் உடல் சல்லடையாக துளைக்கப்பட்டது. அவர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். பிறகு அவர்களது உடல்களை போட்டு விட்டு மாவோயிஸ்டுகள் தப்பி ஓடி விட்டனர்.

    எம்.எல்.ஏ. சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ. உடலை மீட்டு விசாகப்பட்டினத்துக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்ததும் சர்வேஸ்வராராவ் குடும்பத்தினரும் அங்கு விரைந்தனர்.

    இதையடுத்து பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். என்றாலும் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்கள் நடந்தன.

    நேற்று ஆந்திராவில் பல்வேறு இடங்களில் கலவரம் மூண்டது. அரக்கு மற்றும் தும்ரிகுடா நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்குள் சர்வேஸ்வரா ராவின் ஆதரவாளர்கள் புகுந்து போலீசாரிடம் சண்டையிட்டனர். அந்த 2 காவல் நிலையங்களும் சூறையாடப்பட்டன.


    சர்வேஸ்வரா ராவுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று கூறி ஒரு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் தீ வைத்து எரித்தனர். போலீசாரையும் தாக்க முயற்சிகள் நடந்தது. இதையடுத்து அரக்கு மற்றும் தும்ரிகுடா பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தெலுங்கு தேசம் தொண்டர்களும் போராட்டத்தில் குதித்தனர். சில இடங்களில் போலீசார் மீது தாக்குதல்கள் நடந்தன. அதுமட்டுமின்றி எதிரே வந்த வாகனங்கள் அனைத்தையும் அடித்து உடைத்து சூறையாடி னார்கள்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த கலவரத்தால் முற்றிலும் சேதம் அடைந்தன. நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ. சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கலெக்டர்களை தொடர்பு கொண்டு நிலவரத்தை விசாரித்தார்.

    கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகளை வேட்டையாடவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஆந்திரா, ஒடிசா எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவோயிஸ்டுகளை பிடிப்பதற்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்களும் ரோந்து சென்று மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணித்தது.

    தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் யார் என்பதும் தெரிய வந்துள்ளது.

    ஆந்திராவில் மாவோயிஸ்டுகளின் சிறப்பு மண்டல கமிட்டி தலைவராக இருக்கும் பிரதாப் ரெட்டி என்ற சலாபதி தலைமையில் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக இவர் தாக்குதல் நடந்த பகுதியில் சுற்றி திரிந்ததாக தெரிய வந்துள்ளது. எனவே தாக்குதலை மிக மிக திட்டமிட்டு மாவோயிஸ்டுகள் நடத்தி இருப்பது தெரிகிறது.

    இதற்கிடையே போலீசாரில் சிலர் சலாபதியின் மனைவி அருணா தலைமையிலான மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாக சொல்கிறார்கள். முதலில் ஆந்திரா-ஒடிசா எல்லையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ராமகிருஷ்ணா என்பவர் தலைமையிலான மாவோயிஸ்டு குழுவினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது.

    ஆனால் தற்போது சலாபதியின் கைவரிசை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையிலான மாவோயிஸ்டுகளை வேட்டையாட போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.  #TDPMLA #MLAKidariSarveswaraRao
    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டனம் மாவட்டத்திம் தெலிங்கு தேசம் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. இன்று கொல்லப்படதற்கு கண்டனம் தெரிவித்து காவல் நிலையம் தீயிட்டு எரிக்கப்பட்டது. #TDPMLAshotdead #Vizagpolicestations
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்கு தொகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம்  எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர்  இன்று தங்களது ஆதரவாளர்களுடன் தொகுதி மக்களை சந்திக்கச் சென்றனர். 

    அவர்கள் வந்த காரை சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள்  துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் கொல்லப்பட்டனர். 

    அவர்கள் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்தனர். எம்.எல்.ஏ.வை சரியான முறையில் பாதுகாக்க தவறிய போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சில பழங்குடியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுட்டதுடன் கடுமையாக தாக்கினர். 

    அரக்கு மற்றும் தும்ரிகுடா காவல் நிலையங்களுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை எல்லாம் சூறையாடியதுடன் தீயிட்டு எரித்தனர். காவல் நிலையம் மற்றும் அதன் அருகாமையில் இருந்த வாகனங்கள் தீக்கிரையாகின.

    இதனால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக போலீஸ் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. #TDPMLAshotdead #Vizagpolicestations 
    வத்தலக்குண்டு அருகே மாயமான சப்-இன்ஸ்பெக்டர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 44). இவர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 26-ந் தேதி திண்டுக்கல் கோர்ட்டுக்கு சென்ற பாண்டி அதன் பின்பு பணிக்கு திரும்பவில்லை.

    வீட்டுக்கும் செல்லாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மீனாட்சி பட்டிவீரன் பட்டி போலீசில் புகார் அளித்தார். திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்டு இருந்த பாண்டியின் மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது செல்போன் மற்றும் கடிதம் சிக்கியது. அதில் நான் மன உளைச்சலில் இருப்பதால் வெளியே செல்கிறேன். யாரும் தேட வேண்டாம் என குறிப்பிட்டு இருந்தார்.

    இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் தனிப்படை அமைத்து தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட மலை கிராமங்களில் பாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மாவோயிஸ்டு தேடுதல் தொடர்பான வழக்குகளில் அதிகமாக ஈடுபட்டு வந்தார். எனவே அவர்கள் பாண்டியை கடத்தி இருப்பார்களா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவருடைய உறவினர்கள் தர்மபுரியில் இருப்பதால் அங்கு சென்றாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜார்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடி தாக்குதலில் ஆறு சிறப்புப்படை போலீசார் உயிரிழந்தனர்.

    ராஞ்சி:

    சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பணக்காரர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இந்த குழுவினர் அவ்வப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரையும் தாக்கிக் கொல்கின்றனர்.

    தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இந்த குழுவினரை தடுத்து நிறுத்த நக்சல் ஒழிப்பு படை என்ற தனிப்படை பிரிவு இயங்கி வருகிறது. காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கு நக்சலைட்களையும், மாவோயிஸ்ட்களையும் இந்த தனிப்படையினர் கைது செய்தும், சுட்டுக் கொன்றும் வருகின்றனர்.

    இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள சின்ஜோ பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் மாநில போலீசை சேர்ந்த சிறப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. அதோடு மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு சிறப்புப்படை போலீசார் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
    மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்த கர்நாடக கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

    காஸ்ப்பூர்:

    ஒடிசாவில் மாவோயிஸ்டு இயக்க தலைவர் குட்சா உசென்டி, விகால்ப், சசிபட்நாயக் மற்றும் வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது இவர்களுக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிபுரியும் அபய் தேவ் தாஸ்நாயக் என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்.

    அதைதொடர்ந்து இவரை சத்தீஸ்கரின் பாஸ்டர் போலீசார் தேடி வந்தனர். கடந்த ஆண்டு மே மாதத்தில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முடியாதபடி ‘அவுட் லுக்’ நோட்டீசு பிறப்பித்தனர்.

    இந்தநிலையில் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது லேப்டாப், பென்டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் போன்றவற்றை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது இவருக்கும் மாவோயிஸ்டு தகவல் தொடர்பு பிரிவினருக்கும் தொடர்பு இருந்ததை உறுதி செய்துள்ளனர். இவர் சமூக வலை தளங்கள் மூலம் மாவோயிஸ்டு கருத்துக்களை பரப்பி வந்தார்.

    மேலும் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, நெதர்லாந்து, பெல்ஜியம், மெக்சிகோ, நேபாளம் உள்ளிட்ட 15 நாடுகளுக்கு பயணம் செய்து இருக்கிறார். தெற்காசிய மாவோயிஸ்டு கமிட்டியினரை சந்தித்ததும் தெரியவந்தது.

    இவர் கர்நாடக மாநில மாவோயிஸ்ட் இயக்க தலைவர் சகேத்ரஞ்சன் மீதான ஈர்ப்பு காரணமாக இந்த இயக்கத்தில் சேர்ந்ததாக கூறினார். சகேத்ரஞ்சன் கடந்த 2005-ம் ஆண்டு பிப்ரவரியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். #tamilnews

    பீகாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 4 தொழிலாளர்களை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றுள்ளனர்.
    பாட்னா:

    பீகாரில் ஹவேலி காராக்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான காரக்பூர் ஏரியின் அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 4 தொழிலாளர்களை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றுள்ளனர். மேலும் நிறுவனத்தில் இருந்த இயந்திரங்களையும் தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜிதேந்திர மிஸ்ரா கூறுகையில், ”காரக்பூர் ஏரி அருகே அமைந்திருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் நேற்றிரவு 50க்கும் அதிகமான மாவோயிஸ்ட்டுகள் புகுந்து அங்குள்ள தொழிலாளர்களை தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்த 4 பொக்லைன் இயந்திரங்கள், 2 டிரக்குகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய மாவோயிஸ்ட்டுகள், 4 தொழிலாளர்களையும் கடத்தி சென்றுள்ளனர்.

    மாவோயிஸ்ட்டுகள் மக்களை கடத்தி துன்புறுத்தி கொல்லும் இந்த பயங்கரமான சம்பவங்களை தடுப்பதற்காக முங்கெர், ஜாமுய் மற்றும் லக்ஹிசராய் ஆகிய மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
    ×