என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gunfire"

    • ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் தூள் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
    • தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.

    ஜம்மு:

    பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை வேட்டை யாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் ஆதரவு பெற்று காஷ்மீரில் ரகசியமாக செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் ஆபரேஷன் அசல் என்ற அதிரடி நடவடிக்கையை பாதுகாப்பு படை தொடங்கியுள்ளது. அதன்படி பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு வருகிறார்கள். குல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இந்த நிலையில் காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

    ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் மலைப் பகுதியான தூள் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அங்கு 2 பயங்கரவாதிகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து இந்திய ராணுவத்தின் எக்ஸ் தளப் பதிவில், "பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டு உள்ளது.

    • தென்னரசு ஏர்கன் துப்பாக்கியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
    • சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள வாக்கூரை சேர்ந்தவர் தென்னரசு. இவரது குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தென்னரசு தனது தாய் பச்சையம்மாள், மனைவி லாவண்யா, சித்தப்பா மகன் கார்த்திக் ஆகியோரை தான் வைத்திருந்த ஏர்கன் (துப்பாக்கி) கொண்டு சுட்டார்.

    இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விசாரணையில், தென்னரசு ஏர்கன் துப்பாக்கியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் தென்னரசு போதைக்கு அடிமையாக்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தென்னரசு, தனது தாய், மனைவி சித்தப்பாவின் மகன் ஆகியோரை சுட்டது தெரிய வந்தது.

    சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் தென்னரசுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மூதாட்டி சரஸ்வதியை கொடூரமாக கொன்று கொள்ளையடித்த நரேஷ் குமார் சங்ககிரி அருகே மலையடிவாரத்தில் பதுங்கி இருந்துள்ளார்.
    • நரேஷ் குமார் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மூதாட்டியை கொன்ற கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 20-ந்தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி சரஸ்வதியை கொடூரமாக கொன்று கொள்ளையடித்த நரேஷ் குமார் சங்ககிரி அருகே மலையடிவாரத்தில் பதுங்கி இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்ற நரேஷ் குமாரின் காலில் துப்பாக்கியால் போலீசார் சுட்டனர்.

    நரேஷ் குமார் கத்தியால் வெட்டியதில் 2 போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நரேஷ் குமார் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நரேஷ் குமார் வயதான மூதாட்டிகளையும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து நகை கொள்ளையடித்து விட்டு அவர்களை கொலை செய்து வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    • இன்று காலை மாரிச்சாமிக்கும், மணிகண்டனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூடக்கோவில் அருகே உள்ள ஏ.பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான இவர் தற்போது அேத கிராமத்தில் விவசாய தொழில் செய்து வருகிறார். இதற்கிடையே இவருக்கும், இவரது பெரியப்பா மகனுமாகிய மணிகண்டன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை மாரிச்சாமிக்கும், மணிகண்டனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்த அந்த ஊரைச்சேர்ந்த சிலர் அவர்களை சமாதானப்படுத்திவிட்டு சென்றனர். இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத மாரிச்சாமி வீட்டிற்குள் சென்று அங்கு வைத்திருந்த ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை எடுத்துவந்து கண்மூடித்தனமான வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பலர் வீடுகளுக்குள் முடங்கினர். அப்போது அவரது நெருங்கிய உறவினரான உதயகுமார் (வயது 40) என்பவர் ஓடிவந்து மாரிச்சாமியை தடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த பால்ரஸ் எனப்படும் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள் துளைத்தது. அவரது உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

    அதேபோல் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த எதிர்வீட்டில் வசித்து வரும் கவியரசன் என்பவரது மகன் கிஷோர் (12) என்ற சிறுவனுக்கும் உடலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து பதறியடித்துக் கொண்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காயம் அடைந்த இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்ட மாரிச்சாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
    • துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த போலீசாரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    சிவாடட் யுரேஸ்:

    மெக்சிகோ நாட்டில் சிவாடட் யுரேஸ் என்ற பகுதியில் சிறைச்சாலை உள்ளது. இந்த ஜெயிலில் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். நேற்று வழக்கம் போல சிறைச்சாலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது மர்மநபர்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சிறைச்சாலைக்கு வாகனங்களில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கைதிகள் மற்றும் போலீசார் மீது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். எதிர்பாராதவிதமாக நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்.

    இந்த சம்பவத்தில் 10 பாதுகாப்பு படை போலீசார் மற்றும் 4 கைதிகள் உயிர் இழந்தனர். 13 பேர் குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்கள் எதற்காக இந்த தாக்குதல் நடத்தினார்கள் என்றும் தெரியவில்லை. அவர்களை அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

    துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த போலீசாரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    துப்பாக்கி சூடு நடந்த மெக்சிகோ சிறையில் அடிக்கடி கைதிகள் வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த சிறையில் கைதிகள் இடையே நடந்த மோதலில் 11 பேர் பலி யானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாக்குதலை நடத்தியவர் யார், துப்பாக்கி சூடு கடைக்கு வெளியே நடந்ததா அல்லது உள்ளே நடந்ததா உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தெற்கு ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்டைஸ் என்ற பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் கடையில் இருந்த பொதுமக்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். பலர் கடையில் இருந்த அறைகளில் பதுங்கி கொண்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசார் சுட்டதில் அந்த நபர் பலத்த காயமடைந்தார்.

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலை நடத்தியவர் யார், துப்பாக்கி சூடு கடைக்கு வெளியே நடந்ததா அல்லது உள்ளே நடந்ததா உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    போலீசார் கூறும்போது, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பலத்த காயம் அடைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர். ஆர்கன்சாஸ் கவர்னர் சாரா ஹக்கபி சாண்டர்ஸ் கூறும்போது, போர்டைசில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் கவலை அடைந்துள்ளேன். இதில் விரைந்து செயல்பட்ட அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு தெருவில் சடலங்கள் உள்ளன.
    • கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

    இஸ்ரேல்:

    பாலஸ்தீனத்தின் காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஈரான் ஏவுகனை வீசி வரும் நிலையில் டெல் அவிவ் நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

    அந்த இடத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஒரு தெருவில் சடலங்கள் கிடப்பதைக் காணப்பட்டது அதேபோல் துப்பாக்கிச் சூடும் சத்தங்கள் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்ட வீடியோக்களில் கேட்கப்பட்டன. கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. குர்பிரீத் பாசி கோகி கை தவறுதலாக பட்டதில் ஏற்பட்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ குர்பிரீத் பாசி கோகி, தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது, தவறுதலாக சுடப்பட்டதில் காயமடைந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    குர்பிரீத் பாசி கோகி உடல் டி.எம்.சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு தான் மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    நீலகிரி மாவட்ட எல்லையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். #Maoist

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய கேரளா வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

    இதை தொடர்ந்து அம்மாநில போலீசார் மற்றும் வனத்துறையினர் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கேரளா போலீசாரின் தேடுதல் நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பி தமிழக பகுதிகளில் ஊடுருவக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

    இதையடுத்து தமிழக போலீசார் மற்றும் அதிரடி படையினர் தமிழக-கேரளா எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஆந்திராவை சேர்ந்த தெலுங்குதேச எம்.எல்.ஏ சர்வேஸ்வரராவ், முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

    மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை ஒருங்கிணைத்து கொரில்லா ஆயுத போராட்டம் நடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநில தெலுங்கு தேச எம்.எல்.ஏ சர்வேஸ்வரராவ், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோரை சுட்டு கொன்றது சீனுபாபு என்கின்ற சுனில், அருணா என்ற வெங்கட்ரவி சைதன்யா, காமேஸ்வரி ஆகிய 3 பேர் என தெரிய வந்துள்ளது. இவர்களின் புகைப்படங்களை ஆந்திர போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    இதுகுறித்து தமிழக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் தமிழக, கேரளா, கர்நாடகா மாநில எல்லையோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் நக்சல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. மோகன்நவாஸ் அறிவுறுத்தலின் பேரில் நக்சல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, தலைமை காவலர் சார்லஸ் ஆகியோர் மேற்பார்வையில் அதிரடி படையினர் 20-க்கும் மேற்பட்டோர் தமிழக கேரளா எல்லையை ஒட்டிய கேரிங்டன், கிண்ணக்கொரை, தனயகண்டி, இரியசீகை, முள்ளி, பெரும்பள்ளம், மானார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் அதிரடி படை போலீசாருக்கு நவீன துப்பாக்கிகளுடன் புல்லட் புரூப் எனப்படும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. #Maoist

    இலங்கை ராணுவத்தினரின் தோட்டாவுக்கு தப்பியவர் தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான தகவல் வெளியாகி உள்ளது. #SterliteProtest #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். அவர்களில் கே.கந்தையா (58) என்பவரும் ஒருவர்.

    இலங்கை அகதியான இவர் தூத்துக்குடி சிலோன் காலனியில் மனைவி செல்வமணி (48), மகன் ஜெகதீஸ் வரன் (27). ஆகியோருடன் தங்கியிருந்தார். கட்டுமான வேலை செய்து வந்த இவர் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தனி மனித உரிமைக்காக போராடுவதில் முன்னணியில் இருந்தார்.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு 100-வது நாள் போராட்டத்தின் போது கலெக்டர் அலுவலகம் சென்ற அவர் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையானார். வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து சென்ற அவர் ரத்த வெள்ளத்தில் மண்ணில் பிணமாக கிடந்தார்.

    இந்த வீடியோ அனைத்து டெலிவி‌ஷன்களிலும் ஒளி பரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது யார்? என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால் அவரது மனைவி செல்வமணிக்கோ தனது கணவர் துப்பாக்கி சூட்டில் பலியானது தெரிந்து விட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இதுகுறித்து அவர் கூறும் போது, “டி.வி.யில் பார்த்தவுடன் துப்பாக்கி சூட்டில் பலியானது எனது கணவர் என தெரிந்து விட்டது.


    இலங்கையில் ராணுவ தாக்குதலுக்கு பயந்து உயிர் பிழைக்க மற்ற தமிழர்களுடன் நாங்களும் கடந்த 1981-ம் ஆண்டு இந்தியா வந்தோம். தற்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகி விட்டார்” என்றார்.

    துப்பாக்கி சூட்டில் பலியான கந்தையாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிலோன் காலனியில் அவரது உருவப்படம் பொறித்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அவரது ஒரே மகன் ஜெகதீஸ்வரனுக்கோ தனது தந்தை மரணம் அடைந்தது தெரியவில்லை. ஏனெனில் பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றியவர். அவரால் பேச முடியாது. ஆனால் மற்றவர்களின் நடவடிக்கையை அவரால் புரிந்து கொள்ள முடியும். இவர் தனது தந்தை கந்தையா மீது அதிக பாசம் கொண்டவர். அவர் ஊட்டி விட்டால் தான் உணவு சாப்பிடுவார்.

    தற்போது அவர் உயிருடன் இல்லாததால் ஜெகதீஸ்வரன் கடந்த 5 நாட்களாக உணவு சாப்பிட மறுத்து பட்டினி கிடக்கிறார். இரவில் தனது தந்தையை கட்டிப்பிடித்து தான் தூங்குவார். தற்போது அவர் இல்லாததால் தூக்கமின்றி தவிக்கிறார். அவர் இறந்தது கூட தெரியாமல் பேனர் அருகேயே நிற்கிறார். இது அப்பகுதி மக்களின் நெஞ்சங்களை கணக்க செய்கிறது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு படிப்புக்கு தகுந்தபடி வேலை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    ஆனால் கந்தையாவின் மகன் மனவளர்ச்சி குன்றியவர். படிப்பறிவு இல்லாதவர் அவரது மனைவி குடும்ப தலைவி, அவர் தனது மகன் ஜெகதீஸ்வரனை கவனிக்க வேண்டியுள்ளது. கந்தையாவின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த அவரது குடும்பத்தை காப்பாற்ற பாதுகாவலர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #SterliteProtest #Thoothukudi
    ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி பேரணி நடத்திய பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யுமாறு இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் இது வரை 13 பேர் பலியாகி விட்டார்கள்.

    இதைகண்டித்து தமிழ்நாடு முழுவதும் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரையும் அரசையும் கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி பஸ் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும்,போலீசாரை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி பேரணி நடத்திய பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதேபோல் கவுந்தப்பாடி நால்ரோட்டில் ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதை அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Sterliteprotest #Rahulgandhi
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அவ்வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனமும், வேதனையும் வெளியிட்டுள்ளார்.


    ’ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 9 பேரை போலீசார் சுட்டுக்கொன்ற போலீசாரின் செயல் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்துக்கு காட்டுமிராண்டித்தனமான உதாரணமாக அமைந்துள்ளது. இவர்கள் அநீதிக்கு எதிராக போராடியதற்காக இவர்கள் கொல்லப்பட்டனர். இறந்த தியாகிகள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குடுபத்தாருடன் எனது நினைவுகளும், பிரார்த்தனைகளும் இணைந்திருக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். #Sterliteprotest #policefiring #Rahulgandhi
    ×