என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சொத்து பிரச்சனையில் விபரீதம்... துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உள்பட 2 பேர் காயம்
- இன்று காலை மாரிச்சாமிக்கும், மணிகண்டனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூடக்கோவில் அருகே உள்ள ஏ.பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான இவர் தற்போது அேத கிராமத்தில் விவசாய தொழில் செய்து வருகிறார். இதற்கிடையே இவருக்கும், இவரது பெரியப்பா மகனுமாகிய மணிகண்டன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் இன்று காலை மாரிச்சாமிக்கும், மணிகண்டனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்த அந்த ஊரைச்சேர்ந்த சிலர் அவர்களை சமாதானப்படுத்திவிட்டு சென்றனர். இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத மாரிச்சாமி வீட்டிற்குள் சென்று அங்கு வைத்திருந்த ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை எடுத்துவந்து கண்மூடித்தனமான வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பலர் வீடுகளுக்குள் முடங்கினர். அப்போது அவரது நெருங்கிய உறவினரான உதயகுமார் (வயது 40) என்பவர் ஓடிவந்து மாரிச்சாமியை தடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த பால்ரஸ் எனப்படும் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள் துளைத்தது. அவரது உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.
அதேபோல் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த எதிர்வீட்டில் வசித்து வரும் கவியரசன் என்பவரது மகன் கிஷோர் (12) என்ற சிறுவனுக்கும் உடலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து பதறியடித்துக் கொண்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காயம் அடைந்த இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்ட மாரிச்சாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






