

ஜம்மு:
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை வேட்டை யாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு பெற்று காஷ்மீரில் ரகசியமாக செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் ஆபரேஷன் அசல் என்ற அதிரடி நடவடிக்கையை பாதுகாப்பு படை தொடங்கியுள்ளது. அதன்படி பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு வருகிறார்கள். குல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் மலைப் பகுதியான தூள் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அங்கு 2 பயங்கரவாதிகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து இந்திய ராணுவத்தின் எக்ஸ் தளப் பதிவில், "பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டு உள்ளது.
#WATCH | Indian Army troops launched an anti-terror operation in the general area of Dul in Kishtwar, Jammu and Kashmir Gunfire exchanged. Operation under progress: White Knight Corps, Indian Army(Visuals deferred by unspecified time; no live operational details disclosed) pic.twitter.com/4FigXgH3g7