search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manipur Violence"

    • நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் விவாதித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.
    • பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தனது விளக்கத்தை அளிப்பார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது.

    மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் கொடூரம் நிகழ்த்தப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

    மணிப்பூர் சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று பிற்பகல் மத்திய, மாநில அரசுகளின் வக்கீல்கள் வாதத்திற்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக மணிப்பூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் தற்போது நடந்து வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்து வருகிறது. மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க கோரி இன்று 9-வது நாளாக பாராளுமன்றம் முடக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

    இதுதொடர்பாக அவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் விவாதித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பது விதியாகும்.

    அதன்படி பாராளுமன்றத்தில் வருகிற 8-ந்தேதி முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளது. அனைத்து கட்சி எம்.பி.க்களும் இதுதொடர்பாக பேச வாய்ப்பு வழங்கப்படும். இதன்காரணமாக மறுநாள் 9-ந்தேதியும் விவாதம் நீடிக்கும்.

    10-ந்தேதியும் விவாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. அன்று பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தனது விளக்கத்தை அளிப்பார். அவர் பேசி முடித்த பிறகு ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

    சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும்.

    • மாநிலங்களவையில் கடந்த 27ம்தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் குறுகிய காலம் விவாதிக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.

    புதுடெல்லி:

    மணிப்பூர் விவகாரம், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. விவாதம் நடத்த வேண்டும் என்றும், பிரதமர் பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அவையில் தொடர்ந்து அமளி நிலவுகிறது. இந்த அமளிக்கு மத்தியிலும் சில முக்கிய மதோக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    அவ்வகையில், மக்களவையில் இன்று கடும் அமளிக்கிடையே ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாளை காலை 11 மணிக்கு இனி மக்களவை கூடும்.

    ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த 27ம்தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மக்களவையில் நிறைவேறியிருக்கிறது. 

    மாநிலங்களவையில் இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விதி எண் 267ன் கீழ் விவாதிக்க வலியுறுத்தினர். இதனால் அவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னரும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகள் 3.30 வரை ஒத்திவைக்கப்பட்டன.

    • விதி எண் 176-ன் கீழ் 2.30 மணி நேரம் வரை மட்டுமே விவாதம் நடைபெறும்.
    • விதி எண் 267-ன் கீழ், நடைபெறும் விவாதத்திற்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது.

    புதுடெல்லி:

    மணிப்பூர் வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தன. ஆனால் விவாதத்தை நடத்துவதில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு காரணமாக விவாதம் நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. குறுகிய கால விவாதத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விதி எண் 267-ன் கீழ் நீண்ட நேரம் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. இதனை ஏற்றுக்கொள்ளாத அரசு, விதி எண் 176-ன் கீழ் மட்டுமே குறுகியகாலம் விவாதம் நடத்த முடியும் என கூறி வருகிறது.

    விதி எண் 176-ன் கீழ் 2.30 மணி நேரம் வரை மட்டுமே விவாதம் நடைபெறும். ஆனால் விதி எண் 267-ன் கீழ், நடைபெறும் விவாதத்திற்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது என்பதால் மத்திய அரசு இதனை ஏற்க முன்வரவில்லை.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்பியும், மாநிலங்களவை கட்சி தலைவருமான பியூஷ் கோயல், மணிப்பூர் விவகாரம் குறித்து பிற்பகல் 2 மணிக்கு விவாதம் நடத்த வலியுறுத்தினார். ஆனால் விதி எண் 267ன் கீழ் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    பிற்பகல் 2 மணிக்கு விவாதத்தை தொடங்க அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தயாரானார். விதி எண் 267-ன் கீழ் கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களை ஏற்க மறுத்தார். விதி எண் 176-ன் கீழ் விவாதிப்பதற்கான மத்திய அரசின் நோட்டீசை ஏற்றார். அதன்படி குறுகிய கால விவாதத்திற்கு அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விதி எண் 267ன் கீழ் விவாதிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அமைதியற்ற நிலை உருவானது. எனவே, அவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னரும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகள் 3.30 வரை ஒத்திவைக்கப்பட்டன.

    3.30 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.

    • வன்முறை தொடர்பான கள நிலவரத்துடன் தங்கள் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.
    • மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.

    வன்முறையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கள ஆய்வு செய்வதற்காக, எதிர்க்கட்சிகளின் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்றும் இன்றும் ஆய்வு செய்த அவர்கள் இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்தனர். அப்போது மணிப்பூர் வன்முறை தொடர்பான கள நிலவரத்துடன் தங்கள் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.

    பின்னர் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

    மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் கூறியிருக்கிறார். பாராளுமன்றத்தில் பேசுவதற்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும். அப்போது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மக்கள் எழுப்பும் பிரச்சனைகளையும், மத்திய, மாநில அரசுகளின் குறைபாடுகளையும் முன்வைப்போம். காலதாமதம் செய்யாமல், எங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்று, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்துமாறு இந்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், இது தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்புகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுராசந்த்பூர் மாவட்டத்தில் கலவரத்தின்போது 7 மியான்மர் நாட்டவர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
    • பயோமெட்ரிக் தரவுகளை சேகரிக்கும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    இம்பால்:

    மணிப்பூரில் இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. மே 3ம் தேதி ஆரம்பித்த வன்முறையின் தாக்கம் இன்னும் ஓயவில்லை. தொடர்ந்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. இந்த வன்முறையுடன் போதைப்பொருள் பயங்கரவாதம், மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், காடுகளில் நடக்கும் போதைப்பொருள் சாகுபடி, கடத்தல் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன.

    இந்நிலையில், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை மணிப்பூர் அரசு சேகரிக்கத் தொடங்கி உள்ளது.

    இதுதொடர்பாக மணிப்பூர் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத மியான்மர் குடியேறிகளின் பயோமெட்ரிக் தரவுகள் முழுமையாக பெறப்படும்வரை அனைத்து மாவட்டங்களிலும் பயோமெட்ரிக் இயக்கம் தொடரும். இப்பணிகளை செப்டம்பர்  மாதத்திற்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத மியான்மர் குடியேறிகளை அடையாளம் கண்டு அவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை பெறுவது குறித்து மாநில அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் குழுவை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது என்று உள்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்கும்படி மணிப்பூர் மற்றும் மிசோரம் அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    குகி சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கும் மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் கலவரத்தின்போது 7 மியான்மர் நாட்டவர், தோட்டா மற்றும் வெடிமருந்தினால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

    காடுகள் அழிப்பு, போதைப்பொருள் சாகுபடி மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு மியான்மர் குடியேறிகளே காரணம் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்துள்ளன.
    • குகி மற்றும் மைதேயி இன மக்கள் இனி ஒன்றாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளது என்று அந்த பெண் கூறினார்.

    மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வன்முறையின்போது இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊருக்குள் இழுத்து வந்தனர். அவர்களின் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொந்தளிப்பான சூழ்நிலை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்துள்ளது.

    இந்த சூழ்நிலையில், மணிப்பூரில் உள்ள கள நிலவரம் குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான, இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (ஐ.என்.டி.ஐ.ஏ.) கட்சிகளின் எம்.பி.க்கள் இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்னர். இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் கவுரவ் கோகாய், திரிணாமுல் சார்பில் சுஷ்மிதா தேவ், திமுகவின் கனிமொழி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் குமார் ஜா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    கலவர கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் தாயாரை, எதிர்க்கட்சிகளின் எம்பி.க்கள் கனிமொழி மற்றும் சுஷ்மிதா தேவ் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, அந்த பெண் தன் மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீர்மல்க கூறியிருக்கிறார். கலவரத்தின்போது கொல்லப்பட்ட தனது மகன் மற்றும் கணவரின் உடல்களைப் பார்க்க எனக்கு உதவுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மோதலில் ஈடுபடும் இரண்டு சமூகங்களான குகி மற்றும் மைதேயி இன மக்கள் இனி ஒன்றாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளது என்றும் அந்த பெண் கூறினார்.

    • ஐஎன்டிஐஏ கூட்டணியின் எம்.பி.க்கள் இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்னர்.
    • நாங்கள் அரசியல் பிரச்சனையை எழுப்புவதற்காக மணிப்பூர் செல்லவில்லை என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கருத்து.

    மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. அத்துடன், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. சபாநாயகர் இன்னும் விவாதத்திற்கான தேதி அறிவிக்கவில்லை.

    இதற்கிடையே கள நிலவரம் குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான, இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (I.N.D.I.A.) கட்சிகளின் எம்.பி.க்கள் இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்னர். இன்று மதியம் இம்பால் சென்றடைந்த அவர்கள், ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூருக்குச் சென்றனர். அங்கு, அவர்கள் குகி பழங்குடி தலைவர்கள், சிவில் சமூகம் மற்றும் மகளிர் குழுக்களை சந்திப்பார்கள் என்று தெரிகிறது.

    இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் கவுரவ் கோகாய், திரிணாமுல் சார்பில் சுஷ்மிதா தேவ், திமுகவின் கனிமொழி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் குமார் ஜா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த பயணம் குறித்து பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, 'நாங்கள் அரசியல் பிரச்சனையை எழுப்புவதற்காக மணிப்பூர் செல்லவில்லை. மணிப்பூர் மக்களின் அவலநிலை, அவர்களின் வலியை புரிந்து கொள்வதற்கான செல்கிறோம். அவர்களின் வலிக்கு தீர்வு காணவேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம். மணிப்பூரில் உண்மையிலான நிலை குறித்து ஆராய்வதற்காக செல்கிறோம்' என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இந்த பயணத்தை பாஜக விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறும்போது, 'இந்த ஐ.என்.டி.ஐ.ஏ. குழுவினர் மணிப்பூரில் இருந்து திரும்பும்போது, ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் மேற்கு வங்காள மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆதரிக்கிறாரா? என்று கேட்க விரும்புகிறேன். ஐ.என்.டி.ஐ.ஏ.வின் இந்த 20 எம்.பி.க்கள் ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் பற்றிய அறிக்கைகளையும் கொடுப்பார்களா?' என கேள்வி எழுப்பினார்.

    • பிழைக்க ஏதுமின்றி குழந்தைகளுடன் தவிக்கிறோம் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தார்.
    • 2 பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை கலெக்டர் அருணா பெற்றுக்கொடுத்தார்.

    சென்னை:

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் சம்பவம் நடந்தது. இதற்கிடையே, மணிப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்த தமிழகத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் அங்கிருந்து தப்பி வந்தார். அவர் சென்னை தலைமை செயலகத்திற்கு வந்து வாழ்வாதார உதவி கோரினார்.

    பிழைக்க ஏதுமின்றி குழந்தைகளுடன் தவிக்கிறோம் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தார். அதில், மணிப்பூர் கலவரத்தில் தங்களது வீட்டை தீ வைத்து எரித்து, அடித்து விரட்டி விட்டதாக உருக்கமாக தெரிவித்திருந்தார். பிழைக்க வழியின்றி தவிக்கும் தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

    தாய் மண் தங்களை அரவணைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகம் வந்த ஜோசப், 9 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்களை நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டோமே என்று நெஞ்சுருகி நின்றிருந்தார். அவரின் குடும்ப நிலைமை தினத்தந்தியில் படத்துடன் செய்தியாக வெளியானது. இந்த செய்தியை பார்த்ததும், சென்னை மாவட்ட கலெக்டர் அருணா உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். தாயுள்ளத்துடன் அவர்களை அணுகினார்.

    அவர்களின் குறைகளை, கனிவுடன் கேட்டறிந்தார். உடனடியாக அவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ, அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். குடும்பத்துடன் வந்திருந்த அவர்களுக்கு தங்கும் இடத்திற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார். அதற்கு அவர்கள் செங்குன்றத்தில் சிலரின் உதவியால் தங்கியுள்ளோம், எங்களுக்கு வாழ்வதாரத்திற்கான ஏற்பாடுகளை செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து 2 பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை கலெக்டர் அருணா பெற்றுக்கொடுத்தார். உணவு, உடைகளை வழங்கினார். மேலும் அவர்கள் ஒரு மாத காலத்திற்கு உணவு தேவைக்காக ரேஷனில் இருந்து பொருட்கள் பெற்று தரப்படும் என்ற உறுதியை அளித்தார்.

    அடுத்தடுத்து உதவிகளை வழங்கிய கலெக்டர் அருணாவுக்கு அவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். பிழைக்க சென்ற மாநிலத்தில் இருந்து தப்பி வந்த தங்களுக்கு அன்னை தமிழ்நாடு வாரி அணைத்து வரவேற்றதை கண்டு அவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

    இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அருணா கூறும்போது, 'அவர்களின் நிலையை பார்க்கும்போதும், கேட்கும்போது கஷ்டமாக இருந்தது. உதவி வேண்டி நின்றார்கள், தமிழக அரசு அவர்களுக்கு உடனடி தேவையை பூர்த்தி செய்து இருக்கிறது. 2 பேருக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறோம். அவர்கள் திங்கட்கிழமையில் இருந்து பணிக்கு செல்வார்கள்.

    மேலும் ஒருவருக்கும் வேலை வாங்கி கொடுக்க இருக்கிறோம். உடைகள், தங்குமிடத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அவர்களின் குழந்தைகள் படிப்பதற்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியிருக்கிறோம். ஒரு மாதத்திற்கான உணவு பொருட்கள் ரேஷனில் இருந்து வழங்க இருக்கிறோம். என்ன தேவையோ, அதை கேளுங்கள் தருகிறோம் என்று உறுதியை கொடுத்து அவர்களின் வாழ்வாதார பயத்தை போக்கி இருக்கிறோம்' என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரத மாதாவுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது நிலவுகிறது.
    • ஒரு பிரச்சனை வந்தால் சிபிஐ விசாரணை கோருகிறார்கள் தமிழக காவல்துறை என்ன செய்கிறது.

    மதுரை:

    மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மணிப்பூர் சம்பவம் உலக நாடுகளுக்கு தலைகுனிவு. பாரத மாதாவுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது நிலவுகிறது.

    இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மகாராஷ்டிராவும் தமிழ்நாடும் தான். மாநிலத்திற்கு என்ன உரிமை உள்ளது. வரி... கல்வி எதுவுமே இல்லை.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை என்ன ஆனது?

    ஒரு பிரச்சனை வந்தால் சிபிஐ விசாரணை கோருகிறார்கள். தமிழக காவல்துறை என்ன செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி இனத்தவருக்கும் குகி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள். சுமார் 40 ஆயிரம் பேர் உடமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் இன்று வரை நீடித்து வருகிறது. இந்த நிலையில் மே மாதம் 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலகமாக அழைத்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நாட்டையே உலுக்கியது.

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாத நிலை நிலவுகிறது. இதற்கிடையே 2 பெண்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தாமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.

    நேற்று நடந்த விசாரணையின்போது, மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மணிப்பூரில் மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் காட்சியை வீடியோவாக பதிவு செய்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மைதேயி இனத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் வீடியோவாக பதிவு செய்த காட்சிகள் அடங்கிய செல்போன் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த விசாரணைகளில் என்னென்ன நடந்தது என்பது தெரிய தொடங்கி இருக்கிறது.

    குகி இனப் பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காட்சியை பதிவு செய்தவர்கள் அதை ரகசியமாக வைத்திருந்துள்ளனர். பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்பு அந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில் மிகப்பெரிய சதித் திட்டம் இருப்பது முதல் கட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

    பாராளுமன்றம் நடக்கும் நேரத்தில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டிருக்கிறது.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கு ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த 7 வழக்குகள் விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்படும். விசாரணை முடிவில் நிச்சயம் உண்மை தெரியும்.

    விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எனவேதான் மணிப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    சி.பி.ஐ. விசாரிப்பது போல மணிப்பூர் கலவரத்தின் 3 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பான காட்சிகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு இருப்பதால் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்குகிறார்கள்.

    மேலும் மணிப்பூர் மாநில அரசு செயல் இழந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் மே 4-ந்தேதி 2 பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி அழைத்து செல்லப்பட்டபோது அங்கு ராணுவமோ, உள்ளூர் போலீசாரோ இல்லை.

    சம்பவம் குறித்து தெரிய வந்த பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும், குகி இனத்தவருக்கும் இடையே சமரசம் செய்து கொள்வதற்கு இதுவரை 12 தடவைக்கு மேல் பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இரு இனத்தவர்களின் வாழ்விடங்களுக்கு இடையே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமரச முயற்சிகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் ஒவ்வொரு நாளும் மணிப்பூர் சட்டம் ஒழுங்கை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    மணிப்பூரில் நாங்கள் முழுமையாக அமைதி ஏற்படுத்தி வருகிறோம். 16 மாவட்டங்களில் தலா ஒரு படை வீதம் 16 படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கலவரத்தை அவர்கள் முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளனர்.

    மணிப்பூரில் 72 சதவீதம் அரசு ஊழியர்கள் இடையூறு இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள். 82 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு திரும்பி உள்ளனர். சமீபத்தில் கூட மத்திய, மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகள் திட்டமிட்டபடி அமைதியாக நடந்தன.

    90 சதவீதம் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. விரைவில் மணிப்பூர் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    மணிப்பூரில் வன்முறை ஏற்படுவதற்கு அம்மாநில ஐகோர்ட்டில் வழங்கப்பட்ட மைதேயி இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கலாம் என்ற தீர்ப்புதான் காரணமாகி விட்டது. இது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யும். மேலும் மணிப்பூரில் நாங்கள் ஆயுத சட்டத்தை திரும்ப பெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு வருபவர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறார்கள். வருகிற டிசம்பர் மாதம் இது தொடர்பான பட்டியல் வெளியிடப்படும். பட்டியலில் இல்லாதவர்கள் இந்திய குடியுரிமை அடையாள அட்டை பெற இயலாது.

    மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் பா.ஜனதா ஆட்சியில் மட்டும் நடப்பது போல காங்கிரசார் பிரசாரம் செய்கிறார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது 1993, 1995, 1997, 1998 ஆண்டுகளில் 4 தடவை மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அப்போது கலவரங்கள் தொடர்பாக மத்திய ராஜாங்க மந்திரி ராஜேஷ் பைலட் விளக்கம் அளித்தார்.

    மணிப்பூர் எம்.பி. ஒருவர் பிரதமர் இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சபையை விட்டே வெளிநடப்பு செய்தார். ஆனால் நாங்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை.

    பாராளுமன்றத்தில் முழுமையாக விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அதை கேட்பதற்கு முன் வருவது இல்லை.

    காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது 14 நாட்கள் கழித்துதான் துணை நிலை ராணுவத்தை அனுப்பி வைத்தார்கள். ஆனால் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணிப்பூர் குழுக்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்கிறோம். இதன் மூலம் வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் பரவுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.

    காங்கிரஸ் ஆட்சியின் போது மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட போது 149 நாட்கள் தொடர்ந்து அந்த மாநிலத்துக்குள் யாரும் செல்ல முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 240 ரூபாய்க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.1900-த்துக்கும் விற்பனை ஆனது.

    ஆனால் நாங்கள் அத்தியாவசிய பணிகள் அனைத்தையும் சீராக வைத்திருக்கிறோம். மணிப்பூருக்கு இப்போதும் யாரும் சென்று வரலாம் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

    ராகுல்காந்தி சென்ற போது ஹெலிகாப்டரில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் வாகனத்தில் செல்வது சரியாக இருக்காது என்று சொல்லப்பட்டதால் அவர் தடுக்கப்பட்டார். அது அவருக்கே தெரியும்.

    தற்போது மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

    இவ்வாறு மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

    • எங்களின் வீடு, உடமைகள், வாகனம் அனைத்தையும் விட்டுவிட்டு போகும் இடம் தெரியாமல் தலைமறைவாக காடுகளில் இருந்தோம்.
    • பிழைக்கவும், உண்ணவும் ஏதும் இன்றி பச்சிளம் குழந்தையுடன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

    சென்னை:

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மே மாதம் கடுமையான மோதல் நடைபெற்றது. அப்போது 2 பெண்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மணிப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்த தமிழகத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், சென்னை தலைமைச் செயலகத்திற்கு தனது குடும்பத்தாருடன் வந்தார். அங்குள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நான் மணிப்பூர் மாநிலம் சுகுனு என்ற இடத்தில் வசித்துவந்தேன். அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து உள்ளேன். எனக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். நான் மனைவி, மருமகள், ஒரு பேரக்குழந்தை என 9 பேர் அங்கு வசித்து வந்தோம். தற்போது மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் எங்கள் வீட்டை தீ வைத்து எரித்து, எங்களை விரட்டி அடித்து விட்டனர்.

    எங்களின் வீடு, உடமைகள், வாகனம் அனைத்தையும் விட்டுவிட்டு போகும் இடம் தெரியாமல் தலைமறைவாக காடுகளில் இருந்தோம். பின்னர் கவுகாத்தி சென்றோம். தமிழ் பேச தெரிந்ததால் அங்கிருந்து சென்னைக்கு வந்தோம். சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் அலைந்து திரிந்தபோது எங்களுக்கு உதவ நல்லுள்ளம் கொண்ட ஒருவர் முன்வந்தார். அவரது உதவியால் நாங்கள் தற்போது செங்குன்றத்தில் ஒரு சிறிய வீட்டில் தங்கி இருக்கிறோம்.

    பிழைக்கவும், உண்ணவும் ஏதும் இன்றி பச்சிளம் குழந்தையுடன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே இந்த கோரிக்கையை அரசு ஏற்று எங்களுக்கு தகுந்த உதவிகளை செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    • வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்படி மத்திய அரசு கேட்க உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. கிட்டத்தட்ட மூன்று மாத காலம் நீடித்த இந்த வன்முறையில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உயிருக்குப் பயந்து ஏராளமானோர் ஊரை காலி செய்து வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

    இந்த வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    குறிப்பாக இரண்டு பெண்களை ஆடையின்றி மானபங்கம் செய்தபடி ஊருக்குள் இழுத்து வந்தது தொடர்பான வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

    இந்நிலையில், மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்றும், வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்படி மத்திய அரசு கேட்க உள்ளதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். அநேகமாக அண்டை மாநிலமான அசாமில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    மைதேயி மற்றும் குகி ஆகிய இரு சமூக குழுக்களுடனும் மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும், மணிப்பூரில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×