search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra politics"

    • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் இணைந்துள்ளார்.
    • அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எது நடந்தாலும் வேதனையானது, கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவோம்.

     தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது. சரத் பவாரின் அந்தஸ்து மேலும் உயரும். இதற்குப் பிறகுதான் எங்கள் நம்பகத்தன்மை உயரும்.

    அஜித் பவாருக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் எனது மூத்த சகோதரருடன் சண்டையிட முடியாது.

    ஒரு சகோதரியாக அவரை எப்போதும் நேசிக்கிறேன் என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிர மாநில துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார்.
    • அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றார் சஞ்சய் ராவத்.

    மும்பை:

    மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அஜித் பவார் அதிருப்தியில் இருந்தார். அண்மையில் கட்சியின் செயல் தலைவர் பொறுப்பில் சுப்ரியா சுலே நியமனம் செய்யட்டார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த அஜித் பவார் ஆளும் சிவசேனா- பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார்.

    இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் இணைந்துள்ளார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் அஜித் பவார் துணை முதல்மந்திரியாக பதவியேற்றது குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் டுவீட் செய்துள்ளார். அதில்,

    மகாராஷ்டிர அரசியலை சுத்தப்படுத்தும் பணியை சிலர் கையில் எடுத்துள்ளனர், அவர்கள் வழிக்கு வரட்டும். நான் சரத் பவாருடன் இப்போதுதான் பேசினேன். அவர், நான் வலிமையானவன். எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. உத்தவ் தாக்கரே மூலம் அனைத்தையும் மீண்டும் உருவாக்குவோம். ஆம், இந்த விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், பா.ஜ.க. எதிர்க்கட்சிகளை உடைக்கிறது. அவர்கள் ஆட்சியை உருவாக்குகிறார்கள், உடைக்கிறார்கள். பிரதமர் மோடியால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் இன்று பதவியேற்றனர். அதாவது அந்தக் கூற்றுகள் தவறானவை அல்லது பாஜக ஊழல்வாதிகளை தங்கள் கட்சியில் சேர்க்கிறது என தெரிவித்தார்.

    • அஜித் பவாருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அன்பான வரவேற்பு அளித்தார்.
    • அஜித் பவார் பதவி ஏற்றது தொடர்பாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) மூத்த தலைவர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார்.

    ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

    ஆளும் கூட்டணியில் இணைந்த அஜித் பவாருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அன்பான வரவேற்பு அளித்தார்.

    பின்னர் அஜித் பவார் பதவி ஏற்றது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "மகாராஷ்டிராவில் இப்போது இரட்டை எஞ்சின் அரசாங்கத்தில் மூன்று இயந்திரம் உள்ளது. இது இனி புல்லட் ரெயிலாக இயங்கும். மாநிலம் வளர்ச்சிப் பாதையில் விரைந்து செல்லும்" என்றார்.

    • தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக- சிவசேனா கூட்டணி அரசின் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
    • பிரதமர் மோடிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

    தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது, செய்தியாளர் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நம்பத்தகுந்த முகமாக யார் இருப்பார்கள்? என கேட்டதற்கு கையை உயர்த்தி "சரத் பவார்" என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் பதிலளித்துள்ளார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது:-

    தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என 2 நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இப்போது சில எம்எல்ஏக்கள் பாஜக- சிவசேனா கூட்டணி அரசின் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதன்மூலம், அவர்கள் மீத இருந்த குற்றச்சாட்டுகள் நீங்கிவிட்டன என தெளிவாக தெரிகிறது.

    இதனால் பிரதமர் மோடிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

    எவ்வாறாயினும், எனக்கு இது ஒன்றும் புதிதல்ல. 1980ல் நான் தலைமை வகித்த கட்சியில் 58 எம்எல்ஏக்கள் இருந்தனர். பின்னர் அனைவரும் வெளியேறி 6 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் நான் எண்ணிக்கையை பலப்படுத்தினேன். என்னை விட்டுச் சென்றவர்கள் தங்கள் தொகுதிகளில் தோல்வியடைந்தனர்.

    நான் நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். அங்கு இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
    • பாஜகவில் இருந்து 9 பேர், சிவசேனா சார்பில் 9 பேர் பதவியேற்றனர்

    மும்பை:

    மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை, அவரது கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டேவே கவிழ்த்துவிட்டு பாஜக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தார். முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

    ஆனால் ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் மற்ற துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததை எதிர்க்கட்சியினர் கேலி, கிண்டல் செய்ய தொடங்கினர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜக சார்பில் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சுதிர் முங்கந்திவார் உள்ளிட்ட 9 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். சிவசேனா சார்பில் 9 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    • சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர்.
    • ராகுல் நர்வேகர் 160-க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று சபாநயகராக தேர்வாகியுள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாக செயல்பட்டு, பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். புதிய முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதல் மந்திரியாக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.

    இதையடுத்து ஷிண்டே தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.

    சட்டசபை கூட்டத்தின் முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி சார்பில் அக்கட்சியின் எம்எல்ஏ ராகுல் நர்வேகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ராகுல் நர்வேகர் 160-க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று சபாநயகராக தேர்வாகியுள்ளார்.

    • மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ வேட்புமனு தாக்கல்.
    • சட்டசபை கூட்டத் தொடரை நடத்துவது குறித்து ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை.

    மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே, வரும் 4ம் தேதி அம்மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னதாக அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இரண்டு நாட்கள் சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்வு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேக்கர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக அம்மாநில சட்டசபையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சபாநாயகர் பதவிக்கு போட்டி இருந்தால் வரும் 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் 4ம் தேதி முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தங்கள் அணியில் 170 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், எங்களுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்றும் கூறினார்.

    தமது ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை மும்பை வருவதாகவும், ஜூலை 3, 4 தேதிகளில் சட்டசபை கூட்டத்திற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை மற்றும் நாளை மறுநாள் சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
    • சிவசேனா தலைவர் சுனில் பிரபு சுப்ரீம் கோர்ட்டில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்து இருந்தார்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய முதல்-மந்திரியாக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.வான ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார்.

    இதையடுத்து அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நாளையும் (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை ) சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும் இக்கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்து உள்ளார்.

    இந்த நிலையில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 39 எம்.எல்.ஏக்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    அதில் சிவசேனா அதிருப்தி எம்,எல்.ஏக்களுக்கு ஏற்கனவே நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் இப்போது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கிடையாது. இதனால் இந்த எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கை விசாரித்து முடிக்கும் வரை அவர்களை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே சிவசேனா தலைவர் சுனில் பிரபு சுப்ரீம் கோர்ட்டில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்து இருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை 11-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தது.
    • ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பட்னாவிஸ் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

    சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி தந்த நிலையில் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் விரைவில் பதவியேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பட்னாவிஸ் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஆட்சியை கவிழ்க்க சொந்த கட்சியினரே சதி செய்தனர்.
    • கொரோனா பிரச்சினையின்போது அரசுக்கு உறுதுணையாக இருந்து தொற்று பரவலை கட்டுப்படுத்திய அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே நன்றி கூறினார்.

    மும்பை:

    மகாராஷ்டிரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் மந்திரி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 943 நாட்கள் பதவியில் இருந்த உத்தவ் தாக்கரே நேற்று இரவு பதவியை ராஜினாமா செய்தார்.

    பதவி விலகியதும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த உத்தவ் தாக்கரே, அங்கிருந்த அம்பேத்கர் மற்றும் சிவாஜி உருவ படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு காரில் புறப்பட்டார்.

    பின்னர் அவரும், 2 மகன்களும் மும்பையில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்பு உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    மகாராஷ்டிர முதல் மந்திரியாக இருந்தபோது எனக்கு துணையாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    ஆட்சியை கவிழ்க்க சொந்த கட்சியினரே சதி செய்தனர். துரோகிகள் முதுகில் குத்தியதால் ஆட்சியை இழந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே, அதிகாரிகளுக்கு நன்றி கூறியதாக, கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் கூறினார்.

    கொரோனா பிரச்சினையின்போது அரசுக்கு உறுதுணையாக இருந்து தொற்று பரவலை கட்டுப்படுத்திய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நடக்கவிருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ரத்து.
    • முதல்வர் பதவியை உத்தவ்தாக்கரே ராஜினாமா செய்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவில்லை.

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழந்தது. உத்தவ் தாக்கரே அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து மகாராஷ்டிர சட்டசபையில் இன்று சிறப்பு கூட்டத்தை கூட்டி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார். கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

    தொடர்ந்து, உத்தவ் தாக்கரே பேஸ்புக் நேரலையில் உரையாற்றினார். அப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறினார். சட்ட மேலவை பதவியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்தார்.

    இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நடக்கவிருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. முதல்வர் பதவியை உத்தவ்தாக்கரே ராஜினாமா செய்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவில்லை.

    நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லாததால் அதற்காக கூட்டப்பட்டிருந்த சிறப்பு பேரவை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, மாநில சட்டப்பேரவை செயலாளர் ராஜேந்திர பகவத் அறிவித்துள்ளார்.


    • ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார் உத்தவ் தாக்கரே.
    • பதவியேற்பு நாளில் மும்பை வருமாறு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பாஜக வலியுறுத்தல்.

    மும்பை:

    மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில்.உத்தவ் தாக்கரே தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உடனடியாக ராஜ்பவன் சென்ற அவர், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக தொடருமாறு கேட்டுக் கொண்டார். 


    இந்நிலையில், மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் பிற கட்சித் தலைவர்களுடன் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து, ஆட்சி அமைப்பது குறித்து இன்று முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், முதலமைச்சர் பதவியை உத்தவ் ராஜிமானா செய்ததால், சட்டசபையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது.

    இதையடுத்து ஆளுநரை இன்று சந்திக்கும் பட்னாவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்றும், தமக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. ஆளுநர் அழைப்பு விடுக்கும் நிலையில் நாளை அவர் முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பதவியேற்பு நாளில் மும்பைக்கு வருமாறு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை பட்னாவிஸ் மற்றும் ஷிண்டே முடிவு செய்வார்கள் என்றும்,பாஜகவினர் வெற்றி கொண்டாட்டத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    ×