search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallakurichi"

    கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #Ramadoss #PMK
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் தொகையும், நிலப்பரப்பும் அதிகம் உள்ள மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்கவேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை மூன்றாக பிரித்து விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகியவற்றை தலைநகரங்களாக கொண்ட புதிய மாவட்டங்களை உருவாக்க வலியுறுத்தி பா.ம.க. பல போராட்டங்களை நடத்தியுள்ளது. அதை ஏற்கும் வகையில் கள்ளக்குறிச்சியை தலைநகரமாக கொண்ட புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றியாகும்.

    நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும். அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தனியாக பிரித்து திண்டிவனத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கையையும் அரசு நிறைவேற்றவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோன்று, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் பாரிவேந்தர், கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். #Ramadoss #PMK
    பெரிய மாவட்டமாக இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி என்னும் புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். #Kallakurichi #EdappadiPalaniswami
    சென்னை:

    விழுப்புரம் மாவட்டத்தை 2 ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம், குமரகுரு எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் சட்டசபையில் குமரகுரு எம்.எல்.ஏ பேசும்போது, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.



    இன்று தமிழக சட்டசபையில் கவர்னர் உரை மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் அது 2 ஆக பிரிக்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது என்று கூறினார்.

    இதன் மூலம் தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகியுள்ளது. #Kallakurichi #EdappadiPalaniswami
    வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கள்ளகுறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே உள்ள புது உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் விவசாயி. இவரது மனைவி அலமேலு(வயது23). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக செல்வம் வெளியூருக்கு சென்று விட்டார்.

    அலமேலு தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு உணவை முடித்து விட்டு அலமேலு அவரது குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    இதை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் சிலர் நள்ளிரவில் அலமேலுவின் வீட்டிற்குள் புகுந்தனர்.

    பின்னர் அவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அலமேலுவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கலியை பறித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு அலமேலுவின் குழந்தை கதறி அழுதது.

    இந்த சத்தம் கேட்டு அலமேலு கண் விழித்தார். அழுது கொண்டிருந்த குழந்தையை சமதான படுத்தினர். அப்போது அவர் தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பார்த்தார். அதை காணவில்லை. அப்போது தான் சங்கிலி திருடு போயிருப்பது அலமேலுவுக்கு தெரிய வந்தது.

    பின்னர் அவர் திருடன்...திருடன்...என அலறினார் . அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்களிடம் நகை திருடு போன சம்பவத்தை கூறினார்.

    உடனே அந்த பகுதி பொதுமக்கள் திருடர்களை அந்த பகுதியில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்ற நகையின் மதிப்பு ரூ1½ லட்சம் ஆகும்.

    இது குறித்து வரஞ்சரம் போலீசில் அலமேலு புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து 2 வயது பெண் குழந்தையை தந்தை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீ.கிருஷ்ணாபுரத்தில் விவசாய நிலத்தில் 60 அடி ஆழமுள்ள தரை கிணறு உள்ளது. கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தது. இந்த கிணற்றில் நேற்று மதியம் 2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை பிணமாக மிதந்தது.

    இதை பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கீழ்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கிணற்றில் பிணமாக மிதந்த குழந்தை யாருடையது? குழந்தையை கிணற்றில் வீசி சென்றது யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருந்தலாகுறிச்சி பகுதியை சேர்ந்த அருள்மணி-அஞ்சலை தம்பதியரின் குழந்தை என்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீசார் கருந்தலாகுறிச்சியில் உள்ள அருள்மணி வீட்டுக்கு சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது.

    இதையடுத்து அருள் மணி மற்றும் அவரது மனைவி அஞ்சலையை தேடி வந்தனர். இந்த நிலையில் அருள்மணி வீ.கிருஷ்ணாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். அங்கு பதுங்கியிருந்த அருள்மணியை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. போலீசாரிடம் அருள்மணி கூறியதாவது:-

    எனக்கும், திருக்கோவிலூர் அருகே உள்ள கோட்டைபுதூரை சேர்ந்த அஞ்சலைக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 வயதில் அனுசியா என்ற பெண் குழந்தை இருந்தது. திருமணம் ஆனதில் இருந்து என் மனைவி அஞ்சலையின் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்தது. இதனால் எங்களுக்கிடையே பலமுறை தகராறு ஏற்பட்டது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு என்னுடன் அஞ்சலை கோபித்து கொண்டு குழந்தையை தனியாக வீட்டில் விட்டு அவளது தாய் வீடான கோட்டைபுதூருக்கு சென்று விட்டாள்.

    இதையடுத்து அவளை வீட்டுக்கு அழைத்து வர நான் கோட்டைபுதூருக்கு சென்றேன். அங்கு அஞ்சலையிடம் சமாதானம் பேசினேன். ஆனால் அவள் என்னுடன் சேர்ந்து வாழ முடியாது என்று சொல்லி விட்டாள். என்னுடன் வர மறுத்து விட்டாள். இதனால் வீட்டுக்கு தனியாக வந்தேன். என் மனைவியின் நடத்தை சரியில்லாததால் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் இது எனக்கு பிறந்த குழந்தையாக இருக்காது என சந்தேகப்பட்டேன்.

    இதனால் மனைவியின் மீது உள்ள ஆத்திரத்தில் 2 வயது குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி அருகே உள்ள வீ.கிருஷ்ணாபுரத்துக்கு குழந்தையை தூக்கி சென்றேன். அங்குள்ள விவசாய கிணற்றில் குழந்தையை தூக்கி வீசினேன். இதில் தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து விட்டது. பின்னர் காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கி கொண்டேன். ஆனால் போலீசார் எப்படியோ என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அருள் மணியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ரெயில் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒகையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தர்மலிங்கம்(வயது 45). இவரது மகன் செல்வக்குமார்(19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த வாரம் தர்மலிங்கம் ஒகையூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் இருந்த அவரது உறவினர்கள் தர்மலிங்கத்தின் ஆதார் கார்டு கொண்டு வரும்படி செல்போன் மூலம் தர்மலிங்கத்தின் மகன் செல்வக்குமாரிடம் கூறினர்.

    இதனைத்தொடர்ந்து தர்மலிங்கத்தின் ஆதார் கார்டை எடுத்துக் கொண்டு செல்வக்குமார் ஒகையூரில் இருந்து சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு சென்றார். நேற்று இரவு 11 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

    ரெயிலில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. செல்வக்குமார் அந்த ரெயிலில் ஏறினார். ரெயில் புறப்படத் தொடங்கியது. அப்போது ரெயில் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த செல்வகுமார் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான செல்வக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ரெயிலில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இன்று அதிகாலை பர்னிச்சர் மற்றும் ஜவுளி கடையில் திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தால் சுமார் மூன்றரை கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள காம்ப்ளக்சில் பர்னிச்சர் மற்றும் ஜவுளி கடைகள் உள்ளன.

    கேரளாவை சேர்ந்த சஞ்சீவி (வயது 45) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பர்னிச்சர் கடையை நடத்தி வருகிறார். இந்த கடையின் அருகே திருப்பத்தூரை சேர்ந்த அன்பழகன் (43) என்பவரது ஜவுளி கடை உள்ளது.

    நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு அனைவரும் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கச்சேரி சாலையில் வந்தனர்.

    அந்த நேரத்தில் பர்னிச்சர் கடையில் தீப்பிடித்து எரிவதை பார்த்தனர். உடனே அவர்கள் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.

    அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்த நிலையில் அருகில் இருந்த அன்பழகனின் ஜவுளிக் கடைக்கும் அந்த தீ பரவியது.

    தீயணைப்பு படை வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பர்னிச்சர் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமாகின. சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.

    இதுபோல் ஜவுளிக்கடையில் இருந்த துணிகளும் தீயில் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம்.

    மேலும் இந்த கடையின் அருகே இருந்த குளிர்பான கடையிலும் தீ பரவியது. இதில் அந்த கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.

    இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    அதிகாலை நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
    பிளஸ்-2 தேர்வில் மாணவி தோல்வி அடைந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நல்லாத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் இளமதி (வயது 17). இவர் நல்லாத்தூர் அருகே உள்ள குதிரைசந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இன்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் மாணவி இளமதி 2 பாடங்களில் தோல்வி அடைந்தார்.

    இதனால் மாணவி மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணவேணி, கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக மிதந்த இளமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    கள்ளக்குறிச்சியில் பஸ்சில் பயணம் செய்த விவசாயிடம் ஜேப்படி செய்த வாலிபரை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48), விவசாயி. நேற்று இவர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து நீலமங்கலம் செல்லும் பஸ்சில் ஏற முயன்றார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முருகேசனின் சட்டை பையில் இருந்த 300 ரூபாயை ஜேப்படி செய்து விட்டு தப்பி ஓட முயன்றார்.

    இதில் சுதாரித்துக் கொண்ட முருகேசன் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த வாழவந்தான் மகன் ராமமூர்த்தி (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்தனர். 

    ×