search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "textile shop fire accident"

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இன்று அதிகாலை பர்னிச்சர் மற்றும் ஜவுளி கடையில் திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தால் சுமார் மூன்றரை கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள காம்ப்ளக்சில் பர்னிச்சர் மற்றும் ஜவுளி கடைகள் உள்ளன.

    கேரளாவை சேர்ந்த சஞ்சீவி (வயது 45) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பர்னிச்சர் கடையை நடத்தி வருகிறார். இந்த கடையின் அருகே திருப்பத்தூரை சேர்ந்த அன்பழகன் (43) என்பவரது ஜவுளி கடை உள்ளது.

    நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு அனைவரும் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கச்சேரி சாலையில் வந்தனர்.

    அந்த நேரத்தில் பர்னிச்சர் கடையில் தீப்பிடித்து எரிவதை பார்த்தனர். உடனே அவர்கள் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.

    அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்த நிலையில் அருகில் இருந்த அன்பழகனின் ஜவுளிக் கடைக்கும் அந்த தீ பரவியது.

    தீயணைப்பு படை வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பர்னிச்சர் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமாகின. சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.

    இதுபோல் ஜவுளிக்கடையில் இருந்த துணிகளும் தீயில் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம்.

    மேலும் இந்த கடையின் அருகே இருந்த குளிர்பான கடையிலும் தீ பரவியது. இதில் அந்த கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.

    இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    அதிகாலை நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
    ×