search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalalithaa death"

    இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து இடைக்கால அறிக்கையை ஆணையம் வெளியிட வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல் வலியுறுத்தி உள்ளார். #Jayadeathprobe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. 22.9.2016 அன்று இரவு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் சத்தியமூர்த்தி நேற்று ஆணையத்தில் ஆஜரானார்.

    அப்போது அவர், ‘22.9.2016 அன்று இரவு 9.45 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டு வருமாறு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மேலாளர் எனக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்தேன். நான் மருத்துவமனைக்கு வந்த பின்னர் தான் ஜெயலலிதாவை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனை வந்து சேர்ந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்ற, இறக்கமாக இருந்தது. தற்காலிகமாக அவருக்கு இதய துடிப்பை சீராக்க பேஸ் மேக்கர் பொருத்தினோம்’ என்று சாட்சியம் அளித்தார்.

    ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட தகவல் அப்பல்லோ மருத்துவமனைக்கு 22.9.2016 அன்று இரவு 10 மணிக்கு தான் தெரிவிக்கப்பட்டது என்று அப்பல்லோ மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் ஏற்கனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ள நிலையில், மருத்துவர் சத்தியமூர்த்தி இரவு 9.45 மணிக்கு தனக்கு தகவல் சொல்லப்பட்டதாக சாட்சியம் அளித்தது குறித்து சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை செய்தார்.

    அதற்கு மருத்துவர் சத்தியமூர்த்தி, உத்தேசமாக இரவு 9.45 மணி இருக்கும் என்றும், அதுதான் மிகச்சரியான நேரம் என்றால் சரியல்ல என்றும் பதில் அளித்தார்.

    உடனே கோபம் அடைந்த நீதிபதி ஆறுமுகசாமி, ஏன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். மருத்துவர் சத்தியமூர்த்தியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.


    இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் உள்பட 4 பேரை ஆணையம் விசாரிக்க வேண்டும், அவர்களை குறுக்கு விசாரணை நடத்த தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஜோசப் என்பவர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ‘ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரையும் விசாரிப்பது குறித்து ஆணையம் இதுவரை முடிவு செய்யவில்லை. அவ்வாறு முடிவு செய்யாதபோது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஒருவேளை அவர்களை விசாரிக்கக்கூடிய தருணம் வரும்பட்சத்தில் மனுதாரர் ஜோசப் மனு தாக்கல் செய்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ளலாம்’ என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

    விசாரணை முடிவடைந்து வெளியே வந்த சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘22.9.2016 அன்று ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் 4.12.2016 அன்று ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது வரை என்ன நடந்தது என்பதை அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலமாக ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஆணையமே இடைக்கால அறிக்கை வெளியிட்டால் சரியாக இருக்கும்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பழச்சாறு குடிப்பது போன்ற வீடியோ பதிவை வெற்றிவேல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த வீடியோ பதிவு இதுவரை ஆணையத்தால் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அந்த வீடியோவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி அது உண்மையானதா போலியானதா என்பதை கண்டறிந்து அதையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்’ என்றார். #Jayadeathprobe
    ஜெயலலிதா மரணத்துக்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என்று தங்கதமிழ்செல்வன் மற்றும் புகழேந்தி கூட்டாக தெரிவித்தனர். #ThangaTamilSelvan #Pugalenthi #OPS
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமி‌ஷன் தமிழக துணை முதல்வரை விசாரணைக்கு அழைக்க பயப்படுகிறது . ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது எனக் கூறிய ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை கமி‌ஷன் இதுவரை அதற்கான ஆதாரத்தை ஏன் கேட்கவில்லை. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்களை விசாரணைக் கமி‌ஷன் ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை. இவர்களை உடனடியாக விசாரிக்கா விட்டால் ஆறுமுகசாமி கமி‌ஷனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். ஜெயலலிதா மரணத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம்.



    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டு எடப்பாடி அரசு பயப்படுகிறது. எச்.ராஜா காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றி அவதூறாக பேசினார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த பின்பும் போலீஸ் துணையுடன் பொதுக்கூட்டத்திற்கு வருகை தருகிறார். அவரை கைது செய்யாமல் தமிழக அரசு ஏன் மவுனம் காத்து வருகிறது? அரசை மக்கள் கேவலமாக பார்க்க மாட்டார்களா அ.தி.மு.க. அரசை மக்கள் கூடிய விரைவில் தூக்கி எறிவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #ThangaTamilSelvan #Pugalenthi #OPS

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 23-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

    இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை கமி‌ஷன் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

    வாக்குமூலம் கொடுத்தவர்களிடம் சசிகலாவின் வக்கீல்கள் குறுக்கு விசாரணையும் நடத்தி உள்ளனர்.

    தற்போது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, நிதிஷ் நாயக், அஞ்சன் டிரிக்கா ஆகிய 3 பேருக்கும் விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



    அதில், வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்து விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி போயஸ்கார்டனில் நடந்தது என்ன? என்பது குறித்து சசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளதால் உச்சகட்ட குழப்பத்தில் ஆணையம் திணறி வருகிறது. #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி போயஸ்கார்டனில் நடந்தது என்ன? என்பது குறித்து சசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளது. இதேபோன்று மருத்துவர் சிவக்குமாரின் வாக்குமூலத்திலும் முரண்பாடு இருப்பதால் உச்சகட்ட குழப்பத்தால் ஆணையம் திணறி வருகிறது.

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் நேற்று ஆணையத்தில் ஆஜரானார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இரவு நான் பணியில் இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், எனவே, உடனடியாக போயஸ்கார்டனுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி உடனடியாக அங்கு சென்றேன். என்னுடன் மருத்துவர் சினேகாஸ்ரீ, ஆண் செவிலியர் அனீஸ் ஆகியோர் உடன் வந்தனர்.

    அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து 4 நிமிடத்துக்குள் போயஸ்கார்டன் சென்றேன். மருத்துவர், ஆண் செவிலியரும் ஜெயலலிதா இருந்த அறைக்கு சென்றனர். இதன்பின்பு வெளியே வந்த ஆண் செவிலியர், ஸ்ட்ரெச்சரை எடுத்துவரும்படி கூறினார். அதன்படி நான், ஸ்ட்ரெச்சருடன் உள்ளே சென்றேன். அப்போது ஜெயலலிதா கண்களை மூடியநிலையில் ஷோபாவில் அமர்ந்து இருந்தார். நானும், ஆண் செவிலியரும் ஜெயலலிதாவை ஷோபாவில் இருந்து தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்தோம்.

    சுமார் 15 நிமிடங்களில் மாடியில் இருந்து ஜெயலலிதாவை படிக்கட்டு வழியாக கீழே இறக்கி ஆம்புலன்சில் ஏற்றினோம். ஆம்புலன்சுக்குள் சசிகலா, மருத்துவர்கள் சிவக்குமார், சினேகாஸ்ரீ, பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், ஆண் செவிலியர் ஆகியோர் இருந்தனர். நான் ஜெயலலிதா இருந்த அறைக்குள் செல்வதற்கு முன்பு அவருக்கு முதல் உதவி செய்தார்களா? என்பது எனக்கு தெரியாது.

    இரவு 10.10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றடைந்தேன். ஜெயலலிதாவை வேனில் ஏற்றும் வரையிலும், வேனில் இருந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லும் வரையிலும் அவர் கண்களை மூடியபடி தான் இருந்தார். ஜெயலலிதாவை ஸ்ட்ரெச்சரில் வைத்துக்கொண்டு அவரது வீட்டு படிக்கட்டில் செல்லும்போது மருத்துவர் சிவக்குமார் ஜெயலலிதாவிடம், ‘மருத்துவமனைக்கு போகிறோம்’ என சொல்ல அதற்கு ஜெயலலிதா தலையை மட்டும் அசைத்தார்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    சசிகலா தனது வாக்குமூலத்தில், ‘2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அன்று போயஸ்கார்டனில் மயக்கநிலையில் ஜெயலலிதா கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். ஆம்புலன்சில் சென்றபோது கண்ணை விழித்த ஜெயலலிதா எங்கே செல்கிறோம் என்று என்னிடம் கேட்டார்’ என்று கூறி உள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷ்குமார், ஜெயலலிதா கண்களை மூடியபடி ஷோபாவில் அமர்ந்து இருந்தார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ள ஜெயலலிதா கார் டிரைவர் கண்ணன், ஆம்புலன்ஸ் வேனில் இருந்த மருத்துவர் சினேகாஸ்ரீ ஆகியோர் தங்களது வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா மயக்கநிலையில் நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தார்’ என்று கூறியிருந்தனர்.

    அதேபோன்று ஆம்புலன்ஸ் வேனுக்குள், சசிகலா, மருத்துவர்கள் சிவக்குமார், சினேகாஸ்ரீ, பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், ஆண் செவிலியர் அனீஸ் ஆகியோர் இருந்ததாக டிரைவர் சுரேஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் சசிகலா, சிவக்குமார் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் ஆம்புலன்ஸ் வேனுக்குள் அவர்கள் இருவர் மட்டும் இருந்ததாக கூறி உள்ளனர்.

    போயஸ்கார்டனில் நடந்தது குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாக்குமூலம் அளித்திருப்பது ஆணையத்துக்கு உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.



    துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராக ஏற்கனவே ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அப்போது அவர் ஆஜராகவில்லை. கடிதம் மூலம் தனது விளக்கத்தை அளித்திருந்தார். இந்தநிலையில் நேற்று மீண்டும் ஆஜராக அவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. நேற்றும் அவர் ஆணையத்தில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி, ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

    குருமூர்த்தி அந்த மனுவில் ‘என்னிடம் விசாரணை நடத்த தேவையில்லை. எனக்கும், ஜெயலலிதா மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று ஆணையம் எனது தரப்பு விளக்கத்தை பதிவு செய்து கொள்ளலாம். எனவே, ஆணையத்தில் ஆஜராக எனக்கு விலக்கு அளிக்க வேண்டும். எனக்கு அனுப்பிய சம்மனை திரும்ப பெற வேண்டும்’ என்று கூறி உள்ளார். இந்த மனு மீதான விசாரணையை ஆணையம் 20-ந் தேதி(நாளை) தள்ளிவைத்துள்ளது. #JayalalithaaDeath #InquiryCommission
    ‘ஜெயலலிதா எந்த நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது’ என்று அப்பல்லோ மருத்துவமனை நர்ஸ் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி ஆறுமுகசாமி அதிர்ச்சி அடைந்தார்.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் நளினி, நர்ஸ் பிரேமா ஆன்டனி ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அவர்களிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை கேட்டார். ஆணையத்தின் வக்கீல்கள் எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்தனர். நீதிபதி மற்றும் ஆணைய வக்கீல்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு தெரியாது, ஞாபகம் இல்லை என்று அவர்கள் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

    மருத்துவர் நளினி, 2016-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி தான் அப்பல்லோ மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார். ஜெயலலிதா மரணம் அடையும் வரை அவர் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டில் பல நாட்கள் பணியில் இருந்துள்ளார்.

    நான் பணியில் இருந்த போது, ஜெயலலிதா யாரிடமும் பேசியது இல்லை என்றும், ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவில்லை என்றும், தான் வார்டுக்குள் செல்லும் போது சில நேரங்களில் தன்னை பார்த்து ஜெயலலிதா புன்னகைத்து உள்ளதாகவும் நளினி வாக்குமூலம் அளித்துள்ளார்.

    நர்ஸ் பிரேமா ஆன்டனி

    ஜெயலலிதா மரணம் அடைந்த டிசம்பர் 5-ந் தேதி நளினி பணியில் இருந்துள்ளார். ‘அன்றைய தினம் ஜெயலலிதாவுக்கு மூளையை தவிர மற்ற பிரதான உறுப்புகள் செயல் இழந்துவிட்டன. குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் மூளையும் செயல் இழந்துவிட்டது’ என்றும் தனது வாக்குமூலத்தில் மருத்துவர் நளினி கூறி உள்ளார்.

    நர்ஸ் பிரேமா ஆன்டனி, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிறப்பு வார்டில் பணியில் இருந்த செவிலியர்களை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி, ஜெயலலிதாவுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு, மருந்து வழங்கப்படுகிறதா?, எந்தெந்த நேரத்தில் என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற மருத்துவக்குறிப்பு சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

    நீதிபதி அதிர்ச்சி

    விசாரணையின் போது, ஜெயலலிதா என்ன நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தனக்கு தெரியாது என்று பிரேமா கூறி உள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருந்து, சிகிச்சைக்கான மருத்துவக்குறிப்புகளை கண்காணித்து வந்த உங்களுக்கு அவர் என்ன நோய்க்காக அனுமதிக்கப்பட்டார், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? என்பது எப்படி தெரியாமல் இருக்கும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    என்ன நோய்க்காக இந்த மருந்து வழங்கப்பட வேண்டும் என்று தெரிந்தால் தானே, செவிலியர்கள் முறையாக மருந்து வழங்குகிறார்களா? என்பதை நீங்கள் கண்காணிக்க முடியும் என்று பிரேமாவிடம் ஆணையம் தரப்பு வக்கீல்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பிரேமா, ஜெயலலிதாவுக்கு இருந்த நோய் பற்றியோ, சிகிச்சை பற்றியோ தெரிந்து கொள்ளவில்லை என்றும், அதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்றும் பதில் அளித்துள்ளார்.

    ஆணையத்துக்கு சந்தேகம்

    அவ்வாறு தெரிந்து கொள்ளாததற்கு, ஜெயலலிதா மீது தனிப்பட்ட வெறுப்பா? அல்லது அவரது கட்சி மீது வெறுப்பா? அல்லது அப்பல்லோ நிர்வாகத்தின் மீது வெறுப்பா என அடுத்தடுத்து ஆணைய வக்கீல்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இவை எதுவும் காரணம் இல்லை என்றும், தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்றும் பதில் அளித்துள்ளார்.

    பிரேமாவின் பதில்கள் அனைத்தும் அவர் தானாகவே கூறிய பதில் தானா? அல்லது அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அளிக்கப்பட்ட பதிலா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து நர்ஸ் பிரேமாவிடம் மீண்டும் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழக உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகத்தின் கணக்கு பிரிவில் அலுவலராக பணியாற்றி வந்த ஆனந்தன் ஆகியோரிடம் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குளறுபடி நடந்ததா? என்பதை மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்து கண்டறிய சிறப்பு மருத்துவர்களை ஆணையம் தேர்வு செய்துள்ளது. #Jayalalithaa #Apollo
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் தற்போது ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை, ஏற்கனவே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களும், அப்பல்லோ மருத்துவர்களின் சாட்சியங்களும் சரியாக உள்ளதா? என்பதை கண்டறிய ஆணையம் தனியாக சிறப்பு மருத்துவர்கள் குழுவை ஏற்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி, தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன்படி, மருத்துவர்கள் குழுவை ஏற்படுத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது.

    அதன்படி, மருத்துவர்கள் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களை தேர்வு செய்யும் பணியை நீதிபதி ஆறுமுகசாமி நேரடியாக மேற்கொண்டு வந்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான பிரிவில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை தேர்வு செய்யும் பணி முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவக்குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஆணையம் வெளியிடும் என்று கூறப்படுகிறது.

    அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்த மருத்துவ குறிப்புகளிலும், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் அளித்துள்ள சாட்சியங்களிலும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது ஆணையம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குளறுபடி நடந்துள்ளதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது.

    மருத்துவக்குறிப்பு, சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளை சிறப்பு மருத்துவர்கள் மூலம் கண்டறிந்து உரிய தீர்வு காண ஆணையம் முடிவு செய்துள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அப்போது, 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கால அவகாசம் முடிடைந்தநிலையில் மேலும் 6 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் வருகிற 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    ஆனால், விசாரணை முடிவடையவில்லை. இதைத்தொடர்ந்து, விசாரணை ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 6 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.



    இந்த கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு, மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியாகும் என்று ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது. #Jayalalithaa #Apollo
    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற இருந்த வக்கீல்களின் ஆய்வை திடீரென ரத்து செய்து விசாரணை ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது. #JayalalithaaDeath #ApolloHospital
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு அறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோரை விசாரணை ஆணையம் நியமித்து உத்தரவிட்டது. இந்த வக்கீல்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்ய இருந்தனர்.



    இந்தநிலையில், வக்கீல்களின் ஆய்வை திடீரென ரத்து செய்து விசாரணை ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது. வக்கீல்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு வசதியாக முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்றும், அதனால் மற்றொரு நாளில் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாகவும், அதை ஏற்றுக் கொண்டு இன்று நடைபெற இருந்த ஆய்வுப்பணி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  #JayalalithaaDeath #ApolloHospital  #tamilnews 
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #JayalalithaaDeath #ArumugasamyCommission
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் பணியில் இருந்தார். இதனால், அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், நேற்று ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஜார்ஜுக்கு சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு ஆணையத்துக்கு ஜார்ஜ் வருகை தந்தார்.

    பிற்பகல் 2.30 மணி அளவில் தொடங்கிய விசாரணையின் போது, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஜார்ஜ் ஆஜரானார். அவரிடம் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். மாலை 4.30 மணி வரை அதாவது 2 மணி நேரம் விசாரணை நடந்தது.

    பின்னர் விசாரணை முடிந்து ஜார்ஜ் ஆணையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது நிருபர்கள் ஆணையம் முன்பு தங்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன? அதற்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்? என்பது குறித்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் அவர் எதற்கும் பதிலளிக்காமல் மவுனமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    ஜார்ஜிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:-

    ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜுக்கு ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணைக்கு அழைத்திருந்தோம். அதன்படி அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட போது, போலீஸ் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தேன். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா வெளியேற்றப்பட்டார் என்று அப்போது தெரிந்துகொண்டேன். அதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இந்த தகவலை அப்போது முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால், நான் மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டேன் என்று தெரிந்துகொண்டேன்.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் தினமும் மருத்துவமனைக்கு சென்று வருவேன். ஆனால் ஜெயலலிதாவை ஒரு நாளும் நேரில் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாக வி.ஐ.பி.க்கள் பார்த்ததாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருக்கிறேன். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6 மணியளவில் ஜெயலலிதா உடல்நிலை முடியாததை போலீஸ் வட்டாரங்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். இருப்பினும் அப்பல்லோ மருத்துவர்களிடம் நேரடியாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பான விசாரணை செய்யவில்லை. மேலும் தீபா, ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்று அப்போது எனக்கு தெரியாது. அப்போதைய தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தபோது, அவரை அழைத்து சென்றேன்.



    இவ்வாறு வாக்குமூலத்தில் ஜார்ஜ் கூறி உள்ளார்.

    தொடர்ந்து அவரிடம், சசிகலாவை சந்தித்து பேசினீர்களா? என்று வக்கீல்கள் கேள்வி எழுப்பியபோது, சசிகலாவை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என்று ஜார்ஜ் பதிலளித்தார்.

    தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு யார், யார் வந்து சிகிச்சை அளித்தார்கள்?, அவரை அமைச்சர்கள் சந்தித்தார்களா?, ஜெயலலிதா மரணம் குறித்து வேறு ஏதாவது தகவல்கள் தெரியுமா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

    மேலும் ஜார்ஜிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் நாளை (இன்று) பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதேபோன்று சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரிடம் இதற்கு முன்பு நடத்திய விசாரணையின் போது, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அங்கு டாக்டராக பணியாற்றி வரும் திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கி (பொதுமருத்துவம்), ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ குறிப்புகளை எடுத்திருந்தார் என்று கூறினார்.

    அதன்படி டாக்டர் ராஜமாதங்கி, திவாகரனின் மருமகன் டாக்டர் விக்ரம் ஆகியோர் நாளை (இன்று) ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆகியோரிடம் மறு விசாரணை நடத்துவதற்காக வரும் 16-ந் தேதி ஆஜராகவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்திய ஜெயலலிதாவின் வங்கி கணக்கு இருந்து வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கிளை முன்னாள் மேலாளர் மகாலட்சுமி, அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீகோபால், சாந்தாராம், சர்க்கரை நோய் தடுப்பு மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக 16-ந் தேதி அவர்கள் அனைவரும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. #JayalalithaaDeath ##ArumugasamyCommission
    சசிகலா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா என்னிடம் கூறினார் என்று அ.தி.மு.க. அதிகாரபூர்வ பத்திரிகையின் ஆசிரியர், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். #JayalalithaaDeath #Jayalalitha
    சென்னை:

    2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டபோது அவர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா என்னிடம் கூறினார் என்று அ.தி.மு.க. அதிகாரபூர்வ பத்திரிகையின் ஆசிரியர், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. பத்திரிகையாளர் சோ மகன் ஸ்ரீராம், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ பத்திரிகை ஆசிரியர் மருது அழகுராஜ் (முன்பு ‘நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்தவர்) ஆகியோர் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர்.

    ‘பத்திரிகையாளர் சோ ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கு பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கி வந்தார். இதனால் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மறைந்த சோ மூலம் ஸ்ரீராமிற்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது’ என்ற அடிப்படையில் ஆணையம் ஸ்ரீராமிடம் விசாரணை நடத்தியது.

    அப்போது அவர், ‘சசிகலா வெளியேற்றப்பட்ட போது போயஸ் கார்டனில் என்னை அனுமதித்ததாக கூறுவது தவறானது. நான், ஜெயலலிதாவை பார்த்தது இல்லை. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை எனது தந்தை சோவுடன் முக்கியமான ஆலோசனைகளை நடத்தி உள்ளார். அதை எனது தந்தை, எங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தது கிடையாது. மறுநாள் பத்திரிகையில் செய்தி வந்த பிறகு தான் எங்களுக்கு தெரியவரும்’ என்று கூறி உள்ளார்.

    அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக இருந்த நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் மருது அழகுராஜ் செய்தி ஆசிரியராக பணியாற்றியதால் அவர் அடிக்கடி ஜெயலலிதாவை சந்தித்து பேசி இருப்பார் என்ற அடிப்படையில் அவரிடம் ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அப்போது அவர் ஆணையத்தில் கூறியதாக கூறப்படுவதாவது:-

    என்னை ஜெயலலிதாவிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியது சசிகலாவின் உறவினர் ராவணன்தான். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வேலை பார்த்த நான், ஜெயலலிதாவுக்கு உரை எழுதி தரும் பணியையும் மேற்கொண்டேன்.

    2011-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சதி செய்கிறார்கள் என்று கூறி அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டு சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். அந்த சமயத்தில் ஜெயலலிதா என்னிடம், ‘சசிகலா உள்ளிட்டோரை நீக்கி உள்ளேன். இவர்கள் எல்லாம் ராஜ துரோகம் புரிந்தவர்கள். ராவணன் பெயரும் அந்த பட்டியலில் உள்ளது. இதில் மாற்றுக்கருத்து ஏதேனும் இருந்தால் நீங்களும் வெளியே சென்று விடலாம்’ என்று கூறினார். அப்போது நான், ‘உங்களுடன் இருக்கவே பிரியப்படுகிறேன்’ என்றேன்.

    சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, ஜெயலலிதா தனது நம்பிக்கைக்கு பாத்திரமான பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ்பாண்டியன் போயஸ் கார்டன் பணிகளை மேற்கொள்வார் என்றும், அவருடன் இணைந்து பணியாற்றுமாறும் எனக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில் 3 மாதங்கள் கழித்து சசிகலா மீண்டும் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் யாரையும் ஜெயலலிதா இறக்கும்வரை சேர்த்துக்கொள்ளவில்லை.

    ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரிந்தும் போயஸ் கார்டனில் ஆம்புலன்சை தயார் நிலையில் வைத்திருக்க எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

    போயஸ்கார்டனில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்காதது யாருடைய குற்றம்?. ஜெயலலிதாவை சுற்றி இருந்தவர்களின் குற்றம்தானே. ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் அவரை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

    ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் மருத்துவமனையில் கூடியிருந்த சிலர் பொய் சொன்னார்கள். இதை ஏன் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மறுக்கவில்லை. அப்படியென்றால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் உடந்தை என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.



    இவ்வாறு அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மருது அழகுராஜூவிடம் ஆணையத்தின் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினர். #JayalalithaaDeath #Jayalalitha 
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கார்த்திகேயன், தீபக், பூங்குன்றன் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    தற்போது ஓரளவு விசாரணை முடிந்த நிலையில் ஏற்கனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு வருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜெயலலிதான் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் இன்று காலை விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடமும் வக்கீல் ராஜ்குமார் குறுக்கு விசாரணை செய்தார்.

    சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி இருந்த நிலையில் இன்று மீண்டும் ஆஜர் ஆனார். அவரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது.



    விசாரணை ஆணையத்தில் இவர்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரது குரல் பதிவு விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பூங்குன்றன், ராமலிங்கம் உள்பட 4 பேரிடம் விசாரணை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    ×