search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "income tax raid"

    அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபத்திலும், அவரது உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து நாட்டறம்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் பார்த்தசாரதி தெருவில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று காலை 9 மணிக்கு திடீரென 2 கார்களில் வருமானவரி துறையினர் வந்தனர்.

    டெல்லியில் இருந்து 11 அதிகாரிகளும், சென்னையில் இருந்து 9 அதிகாரிகள் மண்டபத்தின் கதவுகளை மூடிவிட்டு அங்கு சோதனை நடத்தினர். 13 மணி நேரம் நடந்த சோதனை இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது.

    அங்கு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    திருமண மண்டப மேலாளர் சத்தியமூர்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு இரவு 10.30 மணிவரை சோதனை நடைபெற்றது. சத்தியமூர்த்தி வீட்டில் 2 மஞ்சள் நிற பைகளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் இருந்ததாக தெரிகிறது.

    மேலும் அமைச்சரின் நேர்முக உதவியாளரும், ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சீனிவாசன் வீட்டிலும் வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை நடந்தது.

    அங்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. நகை பணம் எதுவும் சிக்கவில்லை. இது குறித்து தகவல்களை வருமான வரிதுறையினர் தெரிவிக்க மறுத்தனர்.

    காட்பாடி காந்திநகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி ரெட்டி. கோபாலகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். 2 பேரும் ஒன்றாக ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் வீடுகளில் நேற்று காலை 6.30 மணி முதல் 2-வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

    காட்பாடி பாரதிநகரில் உள்ள ராமமூர்த்தி ரெட்டியின் தம்பி மோகன்ரெட்டி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நீடித்து வருகிறது.

    வீட்டில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதே போல குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பத்தில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான வி.டி.சிவக்குமார் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதனைதொடர்ந்து வருமான வரித்துறையினர் வி.டி.சிவக்குமாரை அழைத்துக்கொண்டு, அவர் வங்கி கணக்கு வைத்துள்ள கே.வி.குப்பத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரூ. 300 கோடி மதிப்புள்ள 6.90 ஏக்கர் நிலம் தொடர்பாக காட்பாடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோருக்கும், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமமூர்த்தி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்கள் நிலப்பிரச்சனையில் தலையிடுவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

    இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது அந்த நில விவகாரத்தில் அமைச்சருக்கு தொடர்பில்லை என்று உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இதில் தொடர்புடைய அனைவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

    ரூ. 300 கோடி மதிப்பிலான இந்த நிலப்பிரச்சனை தொடர்பான இந்த திடீர் சோதனை சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது.

    இதில் மத்திய வருமான வரி துறையினர் களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தர்மபுரி பகுதியில் உள்ள 3 தனியார் பள்ளிகளில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி நகரம் மற்றும் அதியமான்கோட்டை பகுதியில் ஒரே குழுமத்தை சேர்ந்த 3 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் 3 வாகனங்களில் திடீரென்று 9 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். காலை 11 மணி முதல் அதியமான்கோட்டை பள்ளியில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை நடைபெறுவதால் மாணவ-மாணவிகளை  வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

    மேலும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களை வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் கணினிகளை சோதனை செய்து வரவு செலவு தொடர்பான பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த சோதனையின்போது வருமான வரி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    3 பள்ளிகளில் வருமான வரி செலுத்துவதில் முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்று உள்ளதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த சோதனையில் வருமான வரி செலுத்துவதில் விதிமீறல் தொடர்பாக ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்ததா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    தர்மபுரி பகுதியில் உள்ள 3 தனியார் பள்ளிகளில் வருமான வரித்துறையினர் காலை 11 மணியில் இருந்து இரவு 10 மணிக்கும் மேல் நடைபெற்ற இந்த திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   
    சென்னை சவுகார்பேட்டையில் 6 ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகளில் இன்று காலையில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் வரி ஏய்ப்பு செய்து வியாபாரம் நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் அங்குள்ள கடைக்காரர்கள் தாக்கல் செய்துள்ள வருமானவரி விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் மின்ட் தெருவில் உள்ள 6 ஜவுளிக்கடைகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்தது.

    இதையொட்டி வருமானவரி அதிகாரிகள் இன்று காலையில் மின்ட் தெருவில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மொத்தம் 6 ஜவுளிக்கடைகளில் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. கடைகளில் விற்பனையான தொகைக்கும் பில்லுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதேபோல் லீலா கோல்டு-டைமண்ட் நகைக் கடையிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த கடையிலும் கணக்கில் வராத பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

    ஜவுளிக்கடை அதிபரின் வீடு-அலுவலங்களிலும் வருமான வரி அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதுபற்றி வருமானவரி அதிகாரிகள் கூறுகையில், எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கடைகளில் சோதனை நடத்தி வருகிறோம். சோதனை முடிந்த பிறகு தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பதை தெரிவிக்க இயலும் என்று தெரிவித்தனர்.

    வருமான வரித்துறையினரின் சோதனை சவுகார்பேட்டை வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ரஜினியை வைத்து லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளார்கள். #Lingaa
    கன்னட சினிமாவை சேர்ந்த தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். இவர் தீவிர ரஜினிகாந்த் ரசிகர். இவர் ரஜினியை வைத்து ‘லிங்கா’ படத்தை தயாரித்து வெளியிட்டார். இப்படத்தில் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    மேலும் இவர் கன்னட படங்களையும் தயாரித்து வருகிறார். இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை 6 மணி முதல் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



    பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் வீடு உள்பட 60 இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் பட தயாரிப்பிலும் ஈடுபட்டவர். #Lingaa
    தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் ஓட்டல்கள் உணவகங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை காரணமாக ஓட்டல் ஊழியர்கள் பீதி அடைந்துள்ளனர். #Incometaxraid

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பிரபல ஓட்டல்களில் இன்று வருமானவரி சோதனை நடைபெற்றது.

    சைவ உணவுக்கு புகழ் பெற்ற சரவணபவன் ஓட்டல், அசைவ பிரியர்களை கவர்ந்துள்ள அஞ்சப்பர் மற்றும் கிராண்ட் சுவீட்ஸ் நிறுவன கடைகளில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த 3 நிறுவனங்களும் முறையாக வருமானவரி கட்டவில்லை என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

    தமிழகம் முழுவதும் 32 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

    சென்னையில் வடபழனி எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவீட்ஸ் நிறுவன கிளைகள் உள்ளன.

    இங்கு இன்று காலையிலேயே புகுந்த வருமானவரித்துறை அதிகாரிகள் குழு ஓட்டல் விற்பனை விவரங்களையும், வரவு-செலவு கணக்குகளையும் ஆய்வு செய்தனர். இந்த சோதனை காரணமாக ஓட்டல் ஊழியர்கள் பீதி அடைந்தனர். #Incometaxraid 

    வரி ஏய்ப்பு புகாரில் மதுபான ஆலை உள்பட 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.40 கோடி சிக்கியது. #ITRaid
    சென்னை:

    சென்னை தியாகராயநகரை சேந்தவர் ஸ்ரீனிவாசரெட்டி. தொழில் அதிபரான இவர் பாலாஜி குழுமம் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பூந்தமல்லி அருகில் மதுபான ஆலை உள்ளது.

    இந்த குழுமத்தின் தலைமை அலுவலகம் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 150 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து பாலாஜி குழு நிறுவனங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் நேற்று முன்தினம் மாலை அதிரடி சோதனையில் இறங்கினார்கள்.

    மதுபான ஆலை, பாலாஜி குழுமத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசரெட்டி இல்லம், நிர்வாகிகள், மேலாளர்கள் உள்பட முக்கிய அதிகாரிகளுடைய இல்லம், குழுமத்தின் தலைமை அலுவலகம் ஆகிய இடங்கள் வருமான வரித்துறை சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன.

    நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய நடந்த சோதனை நேற்று 2-வது நாளாக நீடித்தது. இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்களும், கணக்கில் வராத ரூ.40 கோடியும் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கடந்த மாதம் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஹாங்காங் பகுதிகளில் இருந்து சட்ட விரோதமாக விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ தங்க கட்டிகள் மற்றும் ரூ.11.16 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தென் கொரியாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் ஜவுளிக்கடை அதிபர் ஒருவர் உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த ஹவாலா பண பரிமாற்ற விவகாரத்தில் பாலாஜி குழுமத்துக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற கோணத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.  #ITRaid
    பூந்தமல்லி தனியாருக்கு சொந்தமான மதுபான தொழிற்சாலையில் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தனியாருக்கு சொந்தமான மதுபான தொழிற்சாலை உள்ளது.

    இதில் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் இருந்து மதுபானங்கள் டாஸ்மாக் குடோன்களுக்கு அனுப்பப்படுகிறது.

    நேற்று மாலை 2 கார்களில் வந்த 14 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த தொழிற்சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் உரிமையாளர் ஆந்திராவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறையின் சோதனையில் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது. அதிகாரிகள் சோதனை செய்தாலும் தொழிற்சாலையில் மது உற்பத்தி ஏதும் தடைபடவில்லை.

    இந்த சோதனை நேற்று இரவு 10.30 மணி வரை நடந்தது. பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். #tamilnews
    கரூரில் உள்ள தனியார் கல்குவாரிகளில் 2-வதுநாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் விதிமுறைகளை மீறி கற்களை வெட்டி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. #ITRaid #Quarries
    கரூர்:

    கரூர் மாவட்டம் க.பரமத்தி, பவுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமாக ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மிகப்பெரிய பாறாங்கற்கள், ஜல்லிக்கற்கள் அனுப்பப்படுகின்றன.

    சமீபத்தில் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த பகுதியில் அடைப்பு ஏற்படுத்துவதற்காக இங்கிருந்துதான் பாறாங்கற்கள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.

    இந்த பகுதியில் இயங்கி வரும் பெரும்பாலான குவாரி உரிமையாளர்கள் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் வகையில் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. சரியான கணக்கு காட்டாமல் கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருச்சியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர் தனித்தனி குழுவாக பிரிந்து சென்று நேற்று கரூர் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் அதிரடி சோதனையை தொடங்கினர். முதலில் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் அலுவலகத்தில் சோதனையை தொடங்கினர்.

    பின்னர் க.பரமத்தி அருகே உள்ள தடையம்பாளையம் கற்பக விநாயகா, காருடையாம்பாளையத்தில் உள்ள பொன்விநாயகா, வல்லிபுரம் பிரிவு அருகே உள்ள விநாயகா, காட்டுமுன்னூரில் உள்ள பாலவிநாயகா, திருமுருகன் ஆகிய கல்குவாரிகளில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

    சோதனைக்காக குவாரியின் நுழைவு வாயிலை பூட்டியதோடு, யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல் யாரையும் வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.

    இதனால் கற்கள் ஏற்றப்பட்ட லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களை ஒரே இடத்தில் அமரச்செய்த அதிகாரிகள் கோப்புகளை பார்வையிட்டனர்.

    குவாரிகளில் எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன? அவைகள் எங்கெல்லாம் அனுப்பப்பட்டு உள்ளது? அதற்கு சரியான கணக்கு காட்டப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தனர். நேற்று காலை தொடங்கிய சோதனை இன்று அதிகாலை வரை விடிய, விடிய நீடித்தது.

    பின்னர் இன்று காலை முதல் 2-வது நாளாக அதிகாரிகள் கணக்கு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விதிமீறல்களை மீறியும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதும் அதிகாரிகளின் சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    மதுரை தனியார் கிரானைட் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் போன்று இங்கும் நடந்துள்ளது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோதனை முடிவில் என்னென்ன முறைகேடுகள் நடந்தது? அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய முழு விவரம் தெரியவரும். அதன்பிறகு அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அனுப்பி, குவாரிகளுக்கு சீல் வைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.  #ITRaid #Quarries
    சென்னை மற்றும் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். #ITRaid
    சென்னை:

    சென்னையில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    மும்பையை தலைமையிடமாக கொண்ட அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை தேனாம்பேட்டை அலுவலகத்திலும், சோழிங்கநல்லூரில் உள்ள அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்தது.

    பெங்களூர் வருமான வரித்துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அலுவலகங்களில் உள்ள முக்கியமான ஆவணங்களை ஆய்வு செய்து கைப்பற்றினர்.

    வருமான வரித்துறையினரின் சோதனையால் அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தேனாம்பேட்டையில் 2-வது மாடியில் அமைந்துள்ள சாப்ட்வேர் அலுவலகத்திற்கு இன்று குறைந்த அளவிலேயே ஊழியர்கள் வந்திருந்தனர். #ITRaid
    தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை மூடுமந்திரமாக உள்ளது என்று வைகோ நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Vaiko #ITRaid

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிரூபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோட்டில் ம.தி.மு.க. மாநில மாநாடு 23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொன் விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் தமிழகம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது மாநாட்டையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடந்து வருகிறது. இந்த மாநாடு இயக்கத்தின் உந்துதலாக இருக்கும்.

    பாராளுமன்றத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மிகச் சிறப்பாக பேசியுள்ளார். இந்திய அரசு எதில் எல்லாம் தோல்வியுற்றுள்ளது, எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பொருளாதார குற்றவாளிகள் எப்படி தப்பிச்சென்றார்கள், பொது மக்கள் எப்படி வாட்டி வதைக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை, கூட்டாட்சி தத்துவம் அழிக்கப்படுகிறது என்பது பற்றி பேசியதோடு, பிரான்சு நாட்டுடன் செய்து கொண்ட விமான படைக்கான விமான ஒப்பந்தத்திலும் கூட திரைமறைவில் பெரும் தவறு நடந்திருக்கிறது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்து மிகச்சிறப்பாக உரையாற்றியிருக்கிறார்.

    எண்ணிக்கை அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த 4½ ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கின்றனர் என்பதை கோடிக்கணக்கான மக்களுக்கு எடுத்து சொல்லுகின்ற விதத்தில் இந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் நடந்துள்ளது.

    இந்த தீர்மானத்தில் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் சேர்ந்து செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.

    தமிழகத்தில் பல வருமான வரி சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அதன் முடிவு என்ன? என்பது எதுவும் தெரியாமல் மூடுமந்திரமாக உள்ளது. இந்த வருமான வரி சோதனை குறித்து மக்கள் நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு மேல் நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் போராட்டக்காரர்களை குறும்படங்கள் மூலம் கொச்சைப்படுத்தி பேசுகின்றனர்.

    ஸ்டெர்லைட் நிறுவனம் என் வாதங்களை தடுக்க முயற்சி செய்கிறது. இது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும். நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிட வேண்டும் என் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் நம் தலையில் கல்லைப் போட்டு கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #ITRaid

    வருமான வரி சோதனையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கைமாறாக அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியுற்றது பற்றி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு, 15-வது நிதி ஆணையம், ஜி.எஸ்.டி., இந்தித் திணிப்பு மற்றும் மதவாத அரசியல் ஆகியவற்றைத் தாண்டி மோடி அரசுக்கு அளிக்கப்படும் ஆதரவு என்பது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் வகையில் இருவருக்கும் இடையேயான ரகசிய உறவு நிரூபிக்கப்பட்டு உள்ளது.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கான நோக்கம் இதன் மூலம் நிறைவேறிவிட்டது.

    அந்தச் சோதனையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கைமாறாக அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளது என்று இதனைக் கொள்ளலாம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #ITRaid
    வருமான வரித்துறை சோதனையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சேலத்தில் இல. கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #ilaganesan #incometaxraid

    சேலம்:

    சேலம் மரவனேரியில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இல.கணேசன் எம்.பி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆடிட்டர் ரமேஷ் அவருக்காக வாழாமல் ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தார். இவர் பண்பு, பணிவு குணத்தோடு வாழ்ந்தவர். இறந்த போது ஆஸ்பத்திரியில் இருந்து அவர் உடலை எடுத்து செல்லும் போது பொதுமக்கள் கதறி அழுதனர், அதை நான் நேரில் பார்த்தேன். அவர் உண்மையான தொண்டனாக இருந்தார். அவருடன் இருந்த நிர்வாகிகளுக்கு அவர் விட்டுச்சென்ற பணிகளை முழுமையாக செய்ய வேண்டும் என்று வேண்டுகோளாக வைக்கிறேன். 5 ஆண்டுகள் நிறைவு பெற்றாலும் வேதனை அளிக்கிறது என்னவென்றால் கொலையாளிகளை தேடும் முயற்சி, தண்டனை வழங்கும் முயற்சியும் முழுமை பெறவில்லை.

    இது போன்ற நிகழ்வுகளில் மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து, விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். வருமான வரி ரெய்டு என்பது பாராட்டுக்குரியது. யார் தவறு செய்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும். ரெய்டு மூலம் வருமான வரித்துறையினர் தவறு உண்மை என்றால் அவர்கள் மீது நீதி மன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவார்கள்.

    சிறுமி மீது நடந்த பாலியல் சம்பவம் வேதனை அளிக்கிறது. பாலியல் குற்றங்கள் குறைய கடுமையான சட்டம் ஏற்ற வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் கொண்டு வர பரிசீலித்து வருகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கோபிநாத், முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன், முருகேசன், அண்ணாதுரை, எஸ்.சி. எஸ்.டி பிரிவு செல்வம், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #ilaganesan #incometaxraid

    ×