search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை மூடுமந்திரமாக உள்ளது - வைகோ
    X

    தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை மூடுமந்திரமாக உள்ளது - வைகோ

    தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை மூடுமந்திரமாக உள்ளது என்று வைகோ நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Vaiko #ITRaid

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிரூபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோட்டில் ம.தி.மு.க. மாநில மாநாடு 23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொன் விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் தமிழகம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது மாநாட்டையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடந்து வருகிறது. இந்த மாநாடு இயக்கத்தின் உந்துதலாக இருக்கும்.

    பாராளுமன்றத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மிகச் சிறப்பாக பேசியுள்ளார். இந்திய அரசு எதில் எல்லாம் தோல்வியுற்றுள்ளது, எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பொருளாதார குற்றவாளிகள் எப்படி தப்பிச்சென்றார்கள், பொது மக்கள் எப்படி வாட்டி வதைக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை, கூட்டாட்சி தத்துவம் அழிக்கப்படுகிறது என்பது பற்றி பேசியதோடு, பிரான்சு நாட்டுடன் செய்து கொண்ட விமான படைக்கான விமான ஒப்பந்தத்திலும் கூட திரைமறைவில் பெரும் தவறு நடந்திருக்கிறது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்து மிகச்சிறப்பாக உரையாற்றியிருக்கிறார்.

    எண்ணிக்கை அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த 4½ ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கின்றனர் என்பதை கோடிக்கணக்கான மக்களுக்கு எடுத்து சொல்லுகின்ற விதத்தில் இந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் நடந்துள்ளது.

    இந்த தீர்மானத்தில் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் சேர்ந்து செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.

    தமிழகத்தில் பல வருமான வரி சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அதன் முடிவு என்ன? என்பது எதுவும் தெரியாமல் மூடுமந்திரமாக உள்ளது. இந்த வருமான வரி சோதனை குறித்து மக்கள் நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு மேல் நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் போராட்டக்காரர்களை குறும்படங்கள் மூலம் கொச்சைப்படுத்தி பேசுகின்றனர்.

    ஸ்டெர்லைட் நிறுவனம் என் வாதங்களை தடுக்க முயற்சி செய்கிறது. இது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும். நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிட வேண்டும் என் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் நம் தலையில் கல்லைப் போட்டு கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #ITRaid

    Next Story
    ×