search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illicit liquor"

    • 1200 லிட்டர் விஷ சாராயத்தை வாங்கியவர்கள் 5 லிட்டர் மரக்காணத்திலும், 3 லிட்டர் சித்தாமூரிலும் விற்பனை செய்துள்ளனர்.
    • விஷ சாராயம் பறிமுதல் செய்யப்படாமல் போயிருந்தால், இது பல ஊர்களுக்கும் சென்று பெருமளவில் உயிர் சேதம் ஏற்படுத்தியிருக்கும்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    விஷ சாராயம் தயாரிப்பதற்கு மெத்தனால் சப்ளை செய்த சென்னை கம்பெனியின் அதிபர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு கொலை வழக்காகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 13-ந்தேதி அன்று நடந்த விஷச்சாராய சம்பவத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 13 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் சென்னை வானகரம் 'ஜெய சக்தி பிரைவேட் லிமிடேட்' கம்பெனியின் அதிபர் இளையநம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த மெத்தனாலை செங்கல்பட்டு, சித்தாமூரில் விற்பனை செய்த அமாவாசை என்பவரும் மரக்காணத்தில் விற்பனை செய்த அமரன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இதோடு இவர்களுக்கு விற்பனை செய்த நபர்களை பற்றிய புலன் விசாரணை மேற்கொண்டதில் விஷசாராயம் 'ஜெய சக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிடேட்' என்ற கம்பெனியிலிருந்து கொண்டு வந்ததாக தெரியவந்தது.

    இந்த கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி இதை 2018-ம் ஆண்டு வாங்கி உள்ளார். கொரோனா காரணமாக இதை தொழிற்சாலையில் பயன்படுத்த இயலாமல் போய் உள்ளது. இதனால் இவரது தொழிற்சாலை திவாலாகி உள்ளது. இந்த நிலையில் 1,200 லிட்டர் விஷச்சாராயத்தை (200 லிட்டர் கொண்ட 6 பேரல்களில்) புதுச்சேரியை சேர்ந்த பரகதுல்லா என்ற ராஜா மற்றும் ஏழுமலை என்பவருக்கு கள்ளச்சந்தையில் ரூ.66 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். இவர்கள் மூலமாகவே மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு மரணம் ஏற்படுத்திய விஷச்சாராயம் கிடைத்திருப்பது தெரியவந்தது.

    மேலும், விஷ சாராய தொழிற்சாலையில் இருந்து மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு விஷ சாராயத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்ட விளாம்பூர் விஜி என்பவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 400 லிட்டர் விஷ சாராயம் வாங்கி அதை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார். இவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் மீது 6 திருட்டு வழக்குகளும், 5 மதுவிலக்கு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

    1200 லிட்டர் விஷ சாராயத்தை வாங்கியவர்கள் 5 லிட்டர் மரக்காணத்திலும், 3 லிட்டர் சித்தாமூரிலும் விற்பனை செய்துள்ளனர். மீதமிருந்த 1,192 லிட்டரை 48 மணி நேரத்தில் பல்வேறு நபர்களிடமிருந்து காவல்துறையினர் விரைந்து கைப்பற்றினர்.

    இந்த விஷ சாராயம் பறிமுதல் செய்யப்படாமல் போயிருந்தால், இது பல ஊர்களுக்கும் சென்று பெருமளவில் உயிர் சேதம் ஏற்படுத்தியிருக்கும்.

    வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. டாக்டர் கண்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பெரும் உயிர் சேதம் ஏற்படுவதை தடுத்துவிட்டனர்.

    உயிர் இழப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராயம், கிராமப் பகுதிகளில் காய்ச்சி வடிக்கப்பட்ட கள்ளச்சாராயம் அல்ல, தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் எரிச் சாராயமும் அல்ல. இது தொழிற்சாலைகளில் தின்னர் போன்ற பொருட்களைத் தயார் செய்ய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்பதாலும், இது மனிதர்களின் உயிர்களை பறிக்கும் தன்மையுள்ளது என்பதாலும் இவற்றை விற்பனை செய்த ஜெய சக்தி கெமிக்கல் கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி, பரகத்துல்லா என்கிற ராஜா, ஏழுமலை, விளாம்பூர் விஜி மற்றும் 13 பேர் மீது மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் சித்தாமூர் போலீஸ் நிலையங்களிலுள்ள வழக்குகள் கொலை வழக்காக மாற்றம் செய்யப்படுகிறது.

    தமிழ்நாட்டில் மொத்தம் 11 மெத்தனால் தயார் செய்யும் தொழிற்சாலைகள், 71 மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடைய துணையோடு ஆய்வுச் செய்து கையிருப்பு மெத்தனாலை சரிபார்க்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விளாம்பூர் விஜி பா.ஜ.க. நிர்வாகி ஆவார்.

    • 5 பேர் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சாராயம் விற்ற அமாவாசை என்பவரும் அந்த சாராயத்தை குடித்திருந்ததால் அவரது உடல்நிலை மோசமானது.

    சென்னை:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷச்சாராயம் குடித்ததில் 8 பேர் வரை பலியாகிவிட்டனர். இதில் 5 பேர் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் விஷச் சாராயத்தை விற்பனை செய்த கருக்கந்தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை, விளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் பனையூரை சேர்ந்த ராஜேஷ், ஒதியூரை சேர்ந்த வேலு, சந்துரு ஆகியோரை போலீசார் கைது செய்திருந்தனர்.

    இதில் அமாவாசை என்பவரும் அந்த விஷச்சாராயத்தை குடித்திருந்ததால் அவரது உடல்நிலை மோசமானது. இதனால் அவரை போலீசார் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்து இருந்தனர். இதனால் விஷச்சாராயம் குடித்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பட்டியலில் அமாவாசை பெயரையும் அதிகாரிகள் சேர்த்துவிட்டனர். இதை தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டுபிடித்து டுவிட்டரில் பதிவிட்டார். கள்ளச் சாராயம் விற்றவருக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

    இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இப்போது அமாவாசைக்கு வழங்கப்பட்ட ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை செங்கல்பட்டு கலெக்டர் ரத்து செய்து உள்ளார்.

    • கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ஏன் ரூ.10 லட்சம்.
    • தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது உதவி செய்யவில்லை ஏன்?

    தூத்துக்குடி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் காமராஜர் செய்த ஆட்சி சாதனையின் கால் தூசி அளவாவது செய்திருப்பார்களா?. இலவசங்களால் நாட்டை சீரழித்து வைத்துள்ளனர். கடற்கரையை கல்லறை ஆக்கி வைத்துள்ளனர். மகளிருக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி, படித்த மாணவிகளுக்கு ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை மக்கள் கேட்கவில்லை, ஆனால் அறிவித்தார்கள்.

    ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் மக்கள் பணி செய்து மக்கள் நல பணியாளர் 13,000 பேர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    நீங்கள் கள்ளச்சாராயத்தை குடித்து இறந்தவர்களுக்கு, குடிக்காதவர்களின் பணத்தை எடுத்து ரூ. 2 கோடியே 10 லட்சம் வழங்கி உள்ளீர்கள். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ஏன் ரூ.10 லட்சம். இது போன்று ராணுவ வீரர்களுக்கு இவர்கள் உதவி செய்யவில்லை ஏன்?.

    தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது உதவி செய்யவில்லை ஏன்? கள்ளச்சாராயத்தை குடித்து இறந்தவர்களை ஓடோடி சென்று பார்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இவர்களுடைய நடவடிக்கையால் இனி வேலை வெட்டிக்கு போகாதவர்கள் குடித்து செத்தால் ரூ. 10 லட்சம் கிடைக்கும் என குடிப்பார்கள், அப்போது என்ன செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் வேல்ராஜ், சுப்பையா பாண்டியன், மண்டல பொறுப்பாளர் ராஜசேகர் மற்றும் மகளிரணி இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

    • அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்ட நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வின் பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது.

    அ.தி.மு.க.வின் சட்ட விதிகள் திருத்தம் நிர்வாகிகள் மாற்றம் ஆகியவற்றையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதுடன் தனது இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது.

    இது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை 1½ கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்த எடுக்கப்பட்டு வரும் பணிகளை வேகப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

    உறுப்பினர் சேர்க்கை கடந்த காலங்களில் நடந்தது போல் இல்லாமல் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு வார்டு வாரியாக முகாம் போட்டு பணியை வேகப்படுத்த கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.

    முக்கியமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படுகிறது.

    பூத் கமிட்டியை வலுப்படுத்துவது மட்டுமின்றி ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளுடன் இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர்கள் இடம்பெறும் வகையில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது பற்றியும் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்குகிறார்.

    மதுரையில் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அ.தி.மு.க. தொண்டர்களின் பலத்தை காட்டும் வகையில் மிக பிரமாண்டமாக மாநாடாக நடத்துவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் விஷச்சாராயத்துக்கு 22 பேர் பலியாகி விட்ட நிலையில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்து அ.தி.மு.க. மாவட்டம் தோறும் போராட்டம் நடத்துவது குறித்தும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • ள்ளச்சாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 69 வாகனங்கள், 1,077 மோட்டார் சைக்கிள்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 20-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். இந்த ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உயிர் பலிக்கு காரணம் கள்ளச்சாராயம் இல்லை. மெத்தனால் கலந்த விஷச்சாராயம் என்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆய்வறிக்கையில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல. ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் என்பது தெரிய வந்துள்ளது.

    இந்த விஷச்சாராயத்தை ஓதியூரை சேர்ந்த சாராய வியாபாரி அமரன் விற்பனை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், முத்து என்பவரிடம் வாங்கி உள்ளார். முத்து புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் இருந்து வாங்கி இருக்கிறார்.

    சித்தாமூர், பெருக்கரணை, பேரம்பாக்கம் பகுதியில் விஷச்சாராயத்தை விற்பனை செய்த அமாவாசை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சாராயத்தை அருந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இவர், இந்த விஷச்சாராயத்தை ஓதியூரை சேர்ந்த வேலு, அவரது சகோதரர் சந்திரன் ஆகியோரிடம் இருந்து வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

    வேலு பனையூரை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் இருந்து வாங்கி உள்ளார். அவருக்கு இதனை விளம்பூரை சேர்ந்த விஜி என்பவர் விற்று இருக்கிறார். அவரும் இந்த விஷச்சாராயத்தை புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலையிடம் இருந்து வாங்கி உள்ளார். எனவே சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச்சாராயமும், மரக்காணத்தில் விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயமும் ஓரிடத்தில் இருந்து வந்திருப்பது புலனாகி உள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 649 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 697 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 37 ஆயிரத்து 217 லிட்டர் விஷச்சாராயம் கைப்பற்றப்பட்டு 2 ஆயிரத்து 957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த ஆண்டு இதுவரையில் 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55 ஆயிரத்து 173 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 4 ஆயிரத்து 534 பேர் பெண்கள். இந்த ஆண்டு இதுவரையில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 78 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதே போல் கள்ளச்சாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 69 வாகனங்கள், 1,077 மோட்டார் சைக்கிள்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    மேலும் கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும், அண்டை மாநிலங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாலும் சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில் தொழிற்சாலைகளில் இருந்து விஷசாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    எந்த தொழிற்சாலையில் இருந்து மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது. அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று தொடர்ந்து புலன் விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு விற்கப்பட்ட விஷச்சாராயத்தை பலர் வாங்கி குடித்துள்ளனர்.
    • மாரியப்பன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    செங்கல்பட்டு:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு விற்கப்பட்ட விஷச்சாராயத்தை பலர் வாங்கி குடித்துள்ளனர். இவர்களில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தனர்.

    உடனே அவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தபோதிலும் அன்று இரவே எக்கியார்குப்பத்தை சேர்ந்த எஸ்.சங்கர், சுரேஷ், தரணிவேல் ஆகிய 3 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    பின்னர் மறுநாள் (14-ந் தேதி) அதே ஊரைச்சேர்ந்த ராஜமூர்த்தி, மலர்விழி, மரக்காணம் மண்ணாங்கட்டி, எக்கியார்குப்பம் விஜயன் ஆகிய 4 பேரும், நேற்று முன்தினம் மரக்காணம் சங்கர், எக்கியார்குப்பம் கேசவவேலு, விஜயன், ஆபிரகாம், சரத்குமார் ஆகிய 5 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் விஷச்சாராயத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயா்ந்தது.

    இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த எக்கியார்குப்பத்தை சேர்ந்த ராஜவேலு (வயது 46) என்பவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதேபோல் கிளியனூர் அருகே கோவடியை சேர்ந்த சரவணன் (58) என்பவர் மரக்காணம் அரசு ஆஸ்பத்திாியில் இருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திாிக்கு செல்லும் வழியிலேயே இறந்தார்.

    இவர்களோடு சேர்த்து இதுவரை மரக்காணத்தில் விஷச்சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 58 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதேபோல் விஷச்சாராயம் குடித்ததால் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 34). அவரது மாமியார் வசந்தா (40) ஆகியோர் விஷ சாராயம் குடித்ததால் கடந்த சனிக்கிழமை பரிதாபமாக இறந்தனர்.

    சித்தாமூர் குறுவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெண்ணியப்பன் (65), சந்திரா (55) ஆகியோரும் விஷ சாராயம் குடித்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.

    நேற்று முன்தினம் மாரியப்பன் (60) என்பவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே விஷ சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பெருங்கரனை கிராமத்தை சேர்ந்த அஞ்சாலை (22), முத்து (64), தம்பு (60), சந்திரன் (48), சின்னக்கயப்பாக்கத்தை சேர்ந்த சங்கர் (40), செய்யூர் வட்டம் புத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜி (32) ஆகியோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சின்னக்கயப்பாக்கத்தை சேர்ந்த சங்கர், பெருங்கரனை கிராமத்தை சேர்ந்த தம்பு, முத்து ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

    செங்கல்பட்டு, மரக்காணத்தில் மேலும் 5 பேர் இறந்து இருப்பதால் விஷச்சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

    • விஷச்சாராயம் குடித்ததால் தான் உயிரிழந்தனர் என்பது கள்ளச்சாராயத்தை புனிதப்படுத்துவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.
    • டாஸ்மாக் மதுவும் ஆண்டுக்கு பல லட்சம் உயிர்களைப் பறிப்பதால் அதுவும் தடை செய்யப்பட வேண்டியது தான்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் எக்கியர்குப்பம், சித்தாமூர் பேருக்கரணை ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு காரணமானது கள்ளச்சாராயம் இல்லை என்றும், விஷச் சாராயம் தான் என்றும் காவல்துறை தலைமை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கம் வியப்பாகவும், நகைப்பாகவும் உள்ளது.

    கள்ளச்சாராயம் என்பதற்கு வரையறைகள் எதுவும் இல்லை. கள்ளச்சாராயம், காவல்துறை குறிப்பிடும் விஷச்சாராயம், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகள் அனைத்துமே உயிரிழப்பை ஏற்படுத்துபவை தான். அதற்கான கால அளவு மட்டும் தான் மாறுபடும். சட்டவிரோதமாக விற்கப்படும் சாராயம் தான் கள்ளச்சாராயம் என்றழைக்கப்படுகிறது. விஷச்சாராயம் குடித்ததால் தான் 21 உயிரிழந்தனர் என்பது கள்ளச்சாராயத்தை புனிதப்படுத்துவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்தது காவல்துறையின் தோல்வி தான். அதற்கு பொறுப்பேற்பதை விடுத்து வினோதமான விளக்கங்களை காவல்துறை அளிக்கக் கூடாது.

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டு விட்டதால் தான் சிலர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை திருடி விற்பனை செய்ததாக காவல்துறை கூறுவதும் உண்மைக்கு புறம்பானது. தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராம், மெத்தனால் கலவை சாராயம் என அனைத்து வகை சாராயங்களும் தடையின்றி கிடைக்கின்றன. அவற்றை ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    டாஸ்மாக் மதுவும் ஆண்டுக்கு பல லட்சம் உயிர்களைப் பறிப்பதால் அதுவும் தடை செய்யப்பட வேண்டியது தான். அதனால் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

    • நான்கு வாரத்தில் பதிலளிக்க தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் எத்தனால் கலந்த சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

    இந்த நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கள்ளச்சாராயம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதையடுத்து கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்துவதுடன், டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

    • மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்திற்கு இன்று அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர்.
    • விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேராக சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இன்று அதிகாலை வரையில் 13 பேர் பலியாகினர். 39-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர். விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேராக சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    அப்போது எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மரக்காணம் யூனியன் சேர்மன் தயாளன், துணைத் தலைவர் பழனி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பலியான 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் என ரூ.ஒரு கோடியே 30 லட்சம் வழங்கப்பட்டது.

    • திருவள்ளூர் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் 6 தனிப்படை போலீசார் தமிழகம், ஆந்திரா எல்லையோர கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கள்ளச்சாராயம், போலி மதுவிற்பனை குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறதா? என்று சோதனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டு உள்ளார்.

    இதையடுத்து திருவள்ளூர் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் 6 தனிப்படை போலீசார் தமிழகம், ஆந்திரா எல்லையோர கள்ளச்சாராய சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச்சாராயம் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் தமிழக - ஆந்திரா எல்லையோரம் உள்ள புதூர்மேடு, தேவலாபுரம், காட்டூர், பொன்பாடி, ஊத்துக்கோட்டை, நாகலாபுரம் ரோடு, சத்தியவேடு ரோடு, பொம்மராஜா குளம், ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுவிற்பனை குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம், கள்ளச்சாராயம், போலி மதுபானம், சில்லரை விலையில் மதுபானங்கள், கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 63799 04848, 9444005105 என்ற தொலைபேசி எண்ணிற்கு வாட்சப் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவே தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவிப்பவர்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை குறித்து போலீசுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்பவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டம் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.

    அவரது உறவினர்களிடம் உணவு, உடை, பழங்களை வழங்கினார். அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மரக்காணம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களுக்கு சிறுநீரக கோளாறு, கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விட்டார்கள். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது. ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல் பின்புலம் உள்ளவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி போலி மதுபானத்தை விற்பனை செய்ததின் மூலமாக அப்பாவி மக்கள் அதை குடித்ததில் மரக்காணம் பகுதியில் பலர் உயிர் இழந்து விட்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருந்தது. கள்ளச்சாராயம் விற்றவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தோம்.

    ஆனால் இந்த 2 ஆண்டு ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விட்டனர். போலி மதுபான விற்பனையாளர்கள் அதிகரித்து விட்டனர். இன்று 1,500 பேர் வரை கைதாகி இருக்கிறார்கள். அப்படி என்றால் கள்ளச்சாராய வியாபாரிகளை அரசுக்கு முன் கூட்டியே தெரிந்து உள்ளது.

    இதற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

    கள்ளச்சாராய பலிக்கு சமூக போராளிகளும், நடிகரும் குரல் கொடுக்கவில்லை. டாஸ்மாக் மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 சதவீதம் கமிஷன் பெறுகிறார்கள். கேட்டால் மேலிடத்துக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இது அனைத்து யூடியூப்களிலும் வெளிவந்துள்ளது.

    இந்த வகையில் கிடைத்த ரூ.30 ஆயிரம் கோடியை என்ன செய்வதென்றே தெரியவில்லை என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

    கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை குறித்து போலீசுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் இந்த விற்பனையில் ஈடுபடுபவர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர் கள்ளச்சாராயம், போலி மதுபான விற்பனையில் சம்பந்தப்பட்டுள்ளார்.

    இதனை கட்டுப்படுத்த தவறியதால்தான் தற்போது 18 உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம். விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் கிராமத்தில் 13 பேர் இறந்திருக்கிறார்கள்.

    செந்தில் பாலாஜி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளது. அந்த வழக்கு தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் காலதாமதம் ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் சிறப்பு வழக்கறிஞரை நியமித்து இந்த வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்று தீர்ப்பு வந்துள்ளதை உங்களிடம் கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாராயம் எளிதில் பற்றி எறியும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.
    • சரியான முறையில் தண்ணீர் கலக்கவில்லை என்றால் சாராயம் விஷத்தன்மையோடு இருக்கும்.

    சாராயத்தில் 4 வகை உண்டு. அதில் புதுச்சேரி சாராய தொழிற்சாலையில் தயாரிப்பது மில்லி, தமிழகத்தில் வெல்லம், கருவேலமர பட்டை, யூரியா, அழுகிய பழங்கள் போன்றவைகளை பேரல்களில் ஊறல் போட்டு தயாரிப்பது பட்ட சாராயம்.

    மில்லி புதுச்சேரியிலும், பட்ட சாராயம் தமிழ்நாட்டிலும், ஆர்.எஸ்., என்.எஸ்., ஆகியவை ஆந்திரா, கர்நாடகாவில் தயார் செய்யப்படுகிறது. உயிர் கொல்லி சாராயம். ஆர்.எஸ்., என்.எஸ். ஆகிய சாராயங்கள் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கலக்காமல் விஷத்தன்மையோடு டேங்கர் லாரிகளில் தமிழ்நாட்டிற்கு வருகிறது.

    இந்த சாராயம் எளிதில் பற்றி எறியும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. விற்பனை செய்யப்படுவதற்கு முன், ஒரு லிட்டருக்கு 3 அல்லது 4 மடங்கு தண்ணீர் கலக்க வேண்டும். அப்படி சரியான முறையில் தண்ணீர் கலக்கவில்லை என்றால் சாராயம் விஷத்தன்மையோடு இருக்கும்.

    ×