என் மலர்
நீங்கள் தேடியது "DGP Sylendra Babu"
சென்னை:
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு வர்த்தகம் அசுரவளர்ச்சி அடைந்து இருக்கிறது. 2021-22-ம் நிதியாண்டில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ.10,100 கோடி என அகில இந்திய கேமிங் சம்மேளமான பிக்கி தெரிவித்து இருந்தது. 2023-ல் ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருவது தொடர் கதையாகி உள்ளது. சிலர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-
ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி சமீப காலமாக அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல் ஆசையை தூண்டி விட்டு பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல. மோசடி ரம்மி.
ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்ப பிரச்சினை மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம்.
இந்த காணொலியை கண்ட பிறகும் விளையாடினால் நீங்கள் மிகப்பெரிய தவறை செய்கிறீர்கள். மிகப்பெரிய பேராசை உங்களிடம் இருக்கிறது. எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தயவு செய்து யாரும் ஈடுபட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இணைய தளங்கள், சமூக ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இணைய தளங்கள் மூலம் நடைபெறும் பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமூக ஊடகங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
உதாரணமாக சென்னையில் கடந்த 2011-ம் ஆண்டு சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் 748 வந்தன. ஆனால் 2021-ம் ஆண்டு 13,077 சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. இது கடந்த 10 ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள், 1,648 சதவீதம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.
இதனால் தமிழக காவல்துறையில் சைபர் குற்றப்பிரிவு தனியாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் சைபர் குற்றப்பிரிவு தனியாக உருவாக்கப்பட்டு, அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஏற்கனவே இருக்கும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தவிர்த்து புதிதாக 46 சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. இதேபோல 6 மாவட்டங்களில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சைபர் குற்றங்களை ஆரம்பத்திலேயே தடுத்திடும் வகையிலும், சைபர் குற்றத்தினால் ஏற்படும் பண இழப்பை முற்றிலும் தடுக்கும் வகையிலும், சைபர் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஏற்படும் தாமதத்தை தவிர்த்திடும் வகையிலும், சைபர் குற்றம் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களை மட்டும் விசாரிக்க தனிப்பிரிவு தொடங்கும்படி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் இந்த தனிப்பிரிவுக்கு ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு முதல் நிலை காவலர், ஒரு வரவேற்பாளர் தனியாக நியமிக்க வேண்டும் எனவும் சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த தனிப்பிரிவுக்கு நியமிக்கப்படும் போலீசார் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பெற்றவராகவும், அந்த குற்றங்களை கையாள தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இப்பிரிவில் உள்ள போலீசார், சைபர் குற்றங்கள் தொடர்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சைபர் குற்றத்தில் பணம் மோசடி குறித்து வரும் புகார்களை 1930 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் சைபர் குற்றப்பிரிவின் தலைமை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பண மோசடி தவிர்த்து பிற சைபர் குற்றங்கள் தொடர்பாக வரும் புகார்களை தேசிய சைபர் குற்றப்பிரிவு தகவல் மையத்துக்கு அனுப்பி உதவி பெறலாம்.
சைபர் குற்றம் தொடர்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக சமூக பதிவு சான்று (சி.எஸ்.ஆர்) வழங்க வேண்டும் எனவும் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
- டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பெரம்பூரைச் சேர்ந்த சிறுவன் தருண் போலீஸ் உடையில் சென்று மரியாதை செலுத்தினான்.
- சிறுவன் தருண் ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற ஆர்வத்துடன் உள்ளான்.
சென்னை:
நாடு முழுவதும் காவல்துறையில் பணிபுரிந்து உயிரிழக்கும் காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் 264 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மெரினா கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காவல் துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பெரம்பூரைச் சேர்ந்த சிறுவன் தருண் போலீஸ் உடையில் சென்று மரியாதை செலுத்தினான். சிறுவன் தருண் ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற ஆர்வத்துடன் உள்ளான்.
இதையொட்டி போலீஸ் தொடர்புடைய நிகழ்ச்சியில் அவன் அடிக்கடி பங்கேற்று வருகிறான். அந்த வகையில்தான் இன்று நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியிலும் பங்கேற்று மரியாதை செலுத்தியுள்ளான்.
இது தொடர்பாக சிறுவன் தருண் கூறும்போது, "காவல் துறை பணி சிறப்பானது. பெரிய ஆளான பிறகு நானும் ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆசைப்படுகிறேன்" என்று தெரிவித்தான்.
இந்த மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இன்று நடைபெற்றது. அந்தந்த மாநில போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
- தீபாவளி பண்டிகை 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- மோட்டார் சைக்கிளில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது.
சென்னை :
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும்.
* சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
* சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது.
* எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. மோட்டார் சைக்கிள், கார்கள் போன்ற வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட எரிபொருள் கிடங்குகள் அருகே பட்டாசுகளை வெடிக்க கூடாது.
* பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்க கூடாது.
* குடிசைகள், ஓலைக்கூரைகள் உள்ள இடங்களில் வாணவெடிகளையோ, எந்தவித பட்டாசு வகைகளையோ கொளுத்தக்கூடாது.
* பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தீ தடுப்பு உபகரணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
* ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், கோர்ட்டுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் (ஒலி எழுப்ப தடை செய்யப்பட்ட இடங்கள்) பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.
* பட்டாசு விற்கும் கடைகள் அருகே புகைப்பிடிப்பதோ, புகைத்த சிகரெட் துண்டுகளை வீசி எறிவதோ கூடாது.
* பட்டாசுகளை வெடிப்பதற்கு நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும்.
* கால்நடைகள் அருகே பட்டாசு வெடித்தால் அவைகள் மிரண்டு சாலையில் செல்வோரை தாக்கி விபத்துகளை ஏற்படுத்தலாம். எனவே கால்நடைகள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்க கூடாது.
* விதிமுறைகளை மீறி அல்லது உரிமம் இன்றி பட்டாசு விற்றால், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தால், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
* பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள் மற்றும் கடைவீதிகளில் தகுந்த குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளை விழிப்போடு பாதுகாக்க வேண்டும்.
* பட்டாசு பொருட்கள் பஸ், மோட்டார் சைக்கிள், ரெயில் போன்றவற்றில் எடுத்து செல்ல அனுமதி இல்லை.
* நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும். அதிவேகமாக செல்வதை தவிர்த்து விபத்தின்றி பயணம் செய்ய வேண்டும்.
* மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
* பட்டாசு மூலம் அல்லது வேறு ஏதேனும் விபத்து நேர்ந்தால் போலீஸ்துறை, தீயணைப்பு மட்டும் மீட்பு பணிகள் துறை அவசர உதவி எண்-100, 112 மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து குற்றங்கள் இல்லாத, விபத்தில்லாத தீபாவளியை உறுதி செய்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் இந்த தீபாவளியை கொண்டாட அனைத்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு யாரும் போகவேண்டாம்.
- வெளிநாட்டு வேலைக்குப் போக விருப்பம் உள்ளவர்கள் 044-28447701 என்ற தொலைபேசி எண்ணில் பேசலாம்.
சென்னை :
தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிய படிப்புக்கு ஏற்ற நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் வந்தன. அதை நம்பி தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏஜெண்டுகள் வாயிலாக சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுள்ளனர். அவர்களை பின்னர் மியான்மர் நாட்டுக்கு அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர். அந்த 18 பேரும் தமிழக அரசு உதவியுடன் மீண்டும் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.
அதேபோல கம்போடியா நாட்டுக்கும் சிலர் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டனர். அவர்களும் தமிழக அரசு மூலம் மீட்கப்பட்டுள்ளனர். தமிழக இளைஞர்களை குறிவைத்து இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக வேலை பார்த்த ஷாநவாஸ், முபாரக்அலி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு யாரும் போகவேண்டாம்.
வெளிநாட்டு வேலைக்குப் போக விருப்பம் உள்ளவர்கள், குறிப்பிட்ட நிறுவனத்தை அணுகினால் அதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்துகொள்ள 044-28447701 என்ற தொலைபேசி எண்ணில் பேசலாம். உரிய விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் 100 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளன.
- 822 மகளிர் போலீஸ் நிலையங்களில் தற்கொலை தடுப்பு தொடர்பான பயிற்சிகளை இன்ஸ்பெக்டர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குகிறார்கள்.
தஞ்சாவூர்:
தமிழக போலீஸ் டி,ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று தஞ்சை வந்தார். தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே தெற்கு போலீஸ் நிலையம் அருகே கண்காணிப்பு கேமரா நவீன கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.
பின்னர் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் 100 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 822 மகளிர் போலீஸ் நிலையங்களில் தற்கொலை தடுப்பு தொடர்பான பயிற்சிகளை இன்ஸ்பெக்டர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குகிறார்கள்.
மேலும் 1,480 போலீஸ் நிலையங்களில் ஒரு காவல் அதிகாரியை குழந்தைகள் நல அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்கொலையை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புகார்தாரர்களிடம் துன்புறுத்தும் வகையில் செயல்படுவது காவல் துறை மீதான நன்மதிப்பை குறைக்கும் என்பதை உணர வேண்டும்.
- காவல் துறைக்கான அதிகாரம் என்பது பொறுப்பு என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.
சென்னை:
போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் போலீஸ் நிலையங்களில் இருப்பவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். புகார்தாரர்களிடம் சரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்.
சில போலீஸ் அதிகாரிகள் எதிர்மறையான சிந்தனையுடன் உள்ளனர். புகார்தாரர்கள் சில நேரங்களில் உயர் அதிகாரிகளை அணுகி இருந்தால் அதனை அவர்களிடம் சுட்டிக்காட்டி பேசக்கூடாது.
புகார்தாரர்களிடம் துன்புறுத்தும் வகையில் செயல்படுவது காவல் துறை மீதான நன்மதிப்பை குறைக்கும் என்பதை உணர வேண்டும். காவல் துறைக்கான அதிகாரம் என்பது பொறுப்பு என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெளி மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்கள், டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் பேசிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சென்னை:
தமிழகம் முழுவதும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போதை பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.
இதையடுத்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் போதை பொருள் ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார். டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக் கண்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர்.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்கள், டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதன் மூலம் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும் என்று கூட்டத்தில் சைலேந்திரபாபு நம்பிக்கை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போதை பொருள் ஒழிப்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
- தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர்.
- பணம் மட்டுமின்றி உங்கள் மானமும் போய்விடும்.
சென்னை :
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பி புதிய வகை 'ஆன்லைன்' மோசடி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அவர் நேற்று விழிப்புணர்வு வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியிருப்பதாவது:-
ஆன்லைனில் புதிய வகை மோசடி வந்துள்ளது. நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பெரிய அதிகாரி, கலெக்டர், டி.ஜி.பி. போன்றவர்கள் செல்போனில் பேசுவது போன்று பேசி, நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன். அமேசான் பரிசு கூப்பன் தேவைப்படுகிறது. ஒரு கூப்பன் விலை ரூ.10 ஆயிரம். 10 கூப்பன் வாங்கி அனுப்புங்கள். நான் அப்புறம் பணம் கொடுத்து விடுகிறேன்.' என்று கூறுவார்கள்.
நீங்கள் பரிசு கூப்பன் வாங்க தெரியாது என்று சொன்னால், அந்த லிங்கை அனுப்பி வைப்பார்கள். நீங்கள் ரூ.1 லட்சத்துக்கு 10 கூப்பன் வாங்கி அனுப்பினால், அடுத்து உங்களுக்கு இந்த கூப்பன் போதாது. இன்னும் 20 பரிசு கூப்பன் கூடுதலாக வேண்டும் என்று குறுந்தகவல் வரும். இப்படி 50 கூப்பன் என்று சொன்னால் ரூ.5 லட்சம் ஆகும். இதெல்லாம் முடிந்த பின்னர், எங்கள் அதிகாரி இப்படி கேட்க மாட்டார். நான் ஏமாந்துவிட்டேன் என்பது உங்களுக்கு தெரியும்.
இதுபோன்ற மோசடி நடைபெற்றால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். காவலன் உதவி செயலியை உங்களுடைய செல்போனில் பதவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். இதில் ஆன்லைன் மோசடி என்பதை தொட்டாலே, 1930 என்ற எண்ணுக்கு அழைப்பு போய் விடும். இதன் மூலம் உங்களுடைய பணத்தை காப்பாற்றி கொள்ளலாம்.
தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு 'பாஸ் ஸ்கேம்' என்று பெயர் ஆகும். உங்களுக்கு வரும் அழைப்பை பார்த்தால் உங்கள் அதிகாரி பெயர், புகைப்படம், எண் போன்றே இருக்கும். ஆனால் அது அவர்கள் கிடையாது. எனவே மோசடி பேர்வழி தான் நம்மை தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். எனவே இது போன்ற மோசடியில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் விழுந்து உங்கள் பணத்தை இழந்துவிடாதீர்கள். பணம் மட்டுமின்றி உங்கள் மானமும் போய்விடும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு சீருடையில் இல்லாமல் கடற்கரையில் வலம் வந்துகொண்டிருந்தார்.
- பொதுமக்கள் போலீஸ் டி.ஜி.பி.க்கு பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை :
சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் மாலை நேரங்களில் காற்று வாங்க பொதுமக்கள் அதிகம் பேர் வருவார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாலை 6 மணி அளவில் சீருடையில் இல்லாமல் மக்களுடன் மக்களாக கடற்கரையில் வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் முகேஷ் (வயது 10) என்ற சிறுவன் கடலில் மூழ்கிவிட்டான். உடனே அவனது உறவினர்களும், அங்கு நின்றவர்களும் கூச்சல் போட்டனர்.
ஒரு சிலர் கடலுக்குள் குதித்து சிறுவன் முகேஷை மீட்டு வெளியே கொண்டுவந்தனர். ஆனால் அந்த சிறுவன் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தான். கூட்டம் கூடி நிற்பதை பார்த்து வேகமாக அங்கு வந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சிறுவனின் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். சிறுவன் லேசாக கண்ணைத் திறந்தான்.
அப்போது அங்கு நின்ற சிலர், சிறுவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க முயன்றனர். உடனே டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இந்த நேரத்தில் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கூறியதுடன், அந்த தண்ணீரை வாங்கி சிறுவனின் தலையில் ஊற்றினார்.
உடனே ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்யுமாறும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். சற்று நேரத்தில், கடற்கரை மணலிலும் பயணிக்கும் சிறியரக வாகனம் அங்கு வந்தது. உடனே அந்த சிறுவனை தானே கையில் தூக்கி, வாகனத்தில் சைலேந்திரபாபு ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக கூறினார்.
அப்போதுதான் பலருக்கு அவர் போலீஸ் டி.ஜி.பி. என்பதே தெரிந்தது. சிறுவனின் உறவினர்களும், பொதுமக்களும் போலீஸ் டி.ஜி.பி.க்கு பாராட்டு தெரிவித்தனர்.
- போலீசாருக்கு மட்டும் நேற்று ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்தார்.
- தகவல் கொடுக்கும் பொதுமக்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை:
ரூ.20 கோடி நகைகளுடன் தப்பிய கொள்ளையர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
அதேநேரம் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வங்கி ஊழியர் முருகனை பிடிக்க வசதியாக அவனது போட்டோ தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் போலீஸ் டி.ஜி.பி. அவசர தகவல் அனுப்பி இருக்கிறார். போலீஸ் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தும் படியும், வாகன சோதனை, சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடபட்டுள்ளது.
குறிப்பாக வடமாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் சந்தேகப்படும்படியாக நடமாட்டம் இருந்தால் பிடித்து விசாரிக்க வேண்டும்.
கொள்ளையர்களை பிடித்துக்கொடுக்கும் போலீசாருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
சைபர் கிரைம் போலீசார் வங்கி ஊழியர் முருகன் அவரது நண்பர்கள், உறவினர்கள் செல்போன் எண்ணை ரகசியமாக கண்காணிக்கிறார்கள்.
நேற்று போலீசாருக்கு மட்டும் ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்தார்.
தகவல் கொடுக்கும் பொதுமக்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






