என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்தியா முழுவதும் காவல் துறையில் உயிரிழந்த 284 காவலர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு மரியாதை
- டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பெரம்பூரைச் சேர்ந்த சிறுவன் தருண் போலீஸ் உடையில் சென்று மரியாதை செலுத்தினான்.
- சிறுவன் தருண் ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற ஆர்வத்துடன் உள்ளான்.
சென்னை:
நாடு முழுவதும் காவல்துறையில் பணிபுரிந்து உயிரிழக்கும் காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் 264 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மெரினா கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காவல் துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பெரம்பூரைச் சேர்ந்த சிறுவன் தருண் போலீஸ் உடையில் சென்று மரியாதை செலுத்தினான். சிறுவன் தருண் ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற ஆர்வத்துடன் உள்ளான்.
இதையொட்டி போலீஸ் தொடர்புடைய நிகழ்ச்சியில் அவன் அடிக்கடி பங்கேற்று வருகிறான். அந்த வகையில்தான் இன்று நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியிலும் பங்கேற்று மரியாதை செலுத்தியுள்ளான்.
இது தொடர்பாக சிறுவன் தருண் கூறும்போது, "காவல் துறை பணி சிறப்பானது. பெரிய ஆளான பிறகு நானும் ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆசைப்படுகிறேன்" என்று தெரிவித்தான்.
இந்த மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இன்று நடைபெற்றது. அந்தந்த மாநில போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.






