search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிஜிபி சைலேந்திரபாபு
    X
    டிஜிபி சைலேந்திரபாபு

    சைபர் குற்றங்களை விசாரிக்க போலீஸ் நிலையங்களில் தனிப்பிரிவு- டி.ஜி.பி. சைலேந்திரபாபு நடவடிக்கை

    சைபர் குற்றம் தொடர்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக சமூக பதிவு சான்று வழங்க வேண்டும் என சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் இணைய தளங்கள், சமூக ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

    இணைய தளங்கள் மூலம் நடைபெறும் பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமூக ஊடகங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    உதாரணமாக சென்னையில் கடந்த 2011-ம் ஆண்டு சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் 748 வந்தன. ஆனால் 2021-ம் ஆண்டு 13,077 சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. இது கடந்த 10 ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள், 1,648 சதவீதம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

    இதனால் தமிழக காவல்துறையில் சைபர் குற்றப்பிரிவு தனியாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் சைபர் குற்றப்பிரிவு தனியாக உருவாக்கப்பட்டு, அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

    இதையடுத்து ஏற்கனவே இருக்கும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தவிர்த்து புதிதாக 46 சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. இதேபோல 6 மாவட்டங்களில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் சைபர் குற்றங்களை ஆரம்பத்திலேயே தடுத்திடும் வகையிலும், சைபர் குற்றத்தினால் ஏற்படும் பண இழப்பை முற்றிலும் தடுக்கும் வகையிலும், சைபர் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஏற்படும் தாமதத்தை தவிர்த்திடும் வகையிலும், சைபர் குற்றம் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களை மட்டும் விசாரிக்க தனிப்பிரிவு தொடங்கும்படி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

    காவல் நிலையத்தில் இந்த தனிப்பிரிவுக்கு ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு முதல் நிலை காவலர், ஒரு வரவேற்பாளர் தனியாக நியமிக்க வேண்டும் எனவும் சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த தனிப்பிரிவுக்கு நியமிக்கப்படும் போலீசார் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பெற்றவராகவும், அந்த குற்றங்களை கையாள தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    இப்பிரிவில் உள்ள போலீசார், சைபர் குற்றங்கள் தொடர்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சைபர் குற்றத்தில் பணம் மோசடி குறித்து வரும் புகார்களை 1930 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் சைபர் குற்றப்பிரிவின் தலைமை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பண மோசடி தவிர்த்து பிற சைபர் குற்றங்கள் தொடர்பாக வரும் புகார்களை தேசிய சைபர் குற்றப்பிரிவு தகவல் மையத்துக்கு அனுப்பி உதவி பெறலாம்.

    சைபர் குற்றம் தொடர்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக சமூக பதிவு சான்று (சி.எஸ்.ஆர்) வழங்க வேண்டும் எனவும் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×