search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor kiran bedi"

    கவர்னர் கிரண்பேடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் உண்மை கண்டறியும் சோதனைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார். #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

    யூனியன் பிரதேசமான புதுவையில் யாருக்கு அதிகாரம்? என்பதில் தொடங்கிய மோதல் முற்று பெறாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தொழில் அதிபர்களை மிரட்டி சமூக பங்களிப்பு நிதியை கவர்னர் கிரண்பேடி வசூலிப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி புகார் கூறினார்.

    அதோடு விதிமுறைக்கு உட்படாமல் வசூலிக்கப்பட்டுள்ள சமூக பங்களிப்பு நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், நாராயணசாமி குற்றஞ்சாட்டினார். மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறினார்.

    இதற்கு கவர்னர் கிரண்பேடி தரப்பில் கவர்னர் மாளிகையில் எந்த பணபரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றும் புதுவையில் நீர் ஆதாரத்தை மேம்படுத்த ஒப்பந்ததாரர்களுக்கும், கொடையாளிகளுக்கும் இடையே கவர்னர் மாளிகை இணைப்பு பாலமாக மட்டுமே செயல்படுகிறது என்று மறுப்பு தெரிவித்தார்.

    அதோடு ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் சொல்வதால் பொய் உண்மையாகாது என்றும், தன் மீதான பொறாமையால் முதல்- அமைச்சர் நாராயணசாமி, தமக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார் என்றும் கூறினார்.


    இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் போல் நான் நாகரீகம் இல்லாமல் பொய் சொல்கிறார் என கூறமாட்டேன். ஆனால், கவர்னர் கிரண்பேடி உண்மைக்கு புறம்பாகவே பேசி வருகிறார் என்று கூறினார்.

    மேலும், அரசு சார்பு நிறுவனத்திற்கு சம்பளம் வழங்க கடன் கேட்ட கோப்பை கவர்னர் கிரண்பேடி திருப்பி அனுப்பி விட்டார். இதனால் அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

    இதனையும் கவர்னர் கிரண்பேடி மறுத்துள்ளார், அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் உண்மை கண்டறியும் சோதனைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சட்டசபை அங்கீகாரம் கொடுக்காத போது அரசு சார்பு நிறுவனத்துக்கு கடன் வழங்க கவர்னராலும் ஒப்புதல் அளிக்க முடியாது, இலவச அரிசிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பயன்பாட்டிற்கு திருப்ப முடியாது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி முழுமையான தகவல்களை மக்களுக்கு தரவில்லை. இப்போது என்னையும், முதல்-அமைச்சரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த சோதனை பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும், அதற்கு நான் தயார், முதல்- அமைச்சர் நாராயணசாமி தயாரா?

    இவ்வாறு டுவிட்டரில் கிரண்பேடி கூறியுள்ளார். #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    புதுவை சட்டக்கல்லூரியில் கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து மாணவர்கள் கேட்டை பூட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #PondicherryGovernor #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி தொழிற்சாலைகள், கல்வி நிலையங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா? என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

    அதன்படி பல்வேறு தொழிற்சாலைகள் பல்கலைக்கழகம், அரசு கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்துள்ளார்.

    காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் ஆய்வு செய்வதற்காக கிரண் பேடி இன்று வருவதாக அறிவித்து இருந்தார்.

    12.50 மணிக்கு அவர் கல்லூரிக்கு வருவதாக இருந்தது. ஆனால் முன் கூட்டியே 11.45 மணிக்கே சட்டக்கல்லூரிக்கு வந்தார்.

    முதல்வர் அறைக்கு சென்ற அவர், முதல்வர் மற்றும் பேராசிரியருடன் மழைநீர் சேகரிப்பு பற்றி பேசினார்.

    பின்னர் ஆய்வு செய்வதற்கு புறப்பட்டார். அப்போது ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டு கவர்னரை சந்திக்க வந்தனர்.

    அவர்கள் கல்லூரி விடுதியிலும், கல்லூரியிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவற்றை செய்து தரும்படி கவர்னரிடம் கேட்டுக்கொண்டனர்.

    அதற்கு கவர்னர் நான் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய வந்துள்ளேன் என்று கூறினார். அதற்கு மாணவர்கள் எங்களுடைய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.

    அதற்கு கவர்னர் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் மாணவர்கள் கோபம் அடைந்தனர்.

    கவர்னரிடம் அவர்கள் நீங்கள் எல்லா வி‌ஷயங்களிலும் தலையிடுகிறீர்கள். எங்கள் கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற ஏன் மறுக்கிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த போலீசார் மாணவர்களை கவர்னர் அருகே நெருங்க விடாமல் பார்த்து கொண்டனர்.

    மாணவர்கள் வாக்குவாதம் செய்ததால் கவர்னர் அங்கிருந்து புறப்பட தயார் ஆனார். உடனே மாணவர்கள் கேட் அருகே மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி கவர்னர் அங்கிருந்து சென்று விடாமல் தடுக்கும் வகையில் செய்தனர்.

    மேலும் சில மாணவர்கள் மெயின் கேட்டை இழுத்து மூடினார்கள். இதனால் கவர்னரால் கல்லூரியை விட்டு வெளியே வர முடியவில்லை.

    இதை தொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் மாணவர்கள் அவரை வெளியே செல்ல விடாமல் தடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.

    எனவே, மாணவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பின்னர் ஒரு வழியாக மாணவர்கள் சமாதானம் அடைந்தனர். அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் அப்புறப்படுத்தி கவர்னர் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தினார்கள்.

    பின்னர் மெயின் கேட்டின் ஒரு பகுதியை மட்டும் போலீசார் வலுக்கட்டாயமாக திறந்தனர். அதன் வழியாக கார் வெளியே சென்றது.

    இந்த சம்பவம் காரணமாக சட்டக்கல்லூரியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கடும் பரபரப்பு ஏற்பட்டது. #PondicherryGovernor #Kiranbedi
    மக்கள் விருப்பங்களை நிறைவேற்றவிடாமல் அரசுக்கு கவர்னர் தடையாக இருக்கிறார் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #Narayanasamy Kiranbedi
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    போலீஸ் துறையில் காலியாக உள்ள 300 இடங்களை நிரப்புவதற்கு எங்கள் அரசு முடிவு எடுத்தது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு போலீஸ் தேர்வு நடந்தபோது, அதிகபட்ச வயது வரம்பு 24 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    அதேபோல இப்போதும் 24 வயது உச்சவரம்பு நிர்ணயித்து தேர்வுக்கு ஏற்பாடுகளை செய்தோம். இதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளதால் அவருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.

    ஆனால் பாராளுமன்ற உள்துறை நிலைக்குழு போலீஸ் பணிக்கான ஆட்கள் தேர்வின் அதிகபட்ச வயது 22 என சிபாரிசு செய்திருந்ததை சுட்டிக்காட்டி 24 வயதுக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.

    தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களில் வயது வரம்பு 24 ஆக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியும், குரூப்-சி பிரிவு ஊழியர்களை தேர்வு செய்யும் விதிகளை உருவாக்குவதில் மாநில அரசுக்கே அதிகாரம் இருக்கிறது என்று கூறி மீண்டும் கோப்பு அனுப்பப்பட்டது. அதற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதனால் போலீஸ் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார்கள். கோர்ட்டு மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிடும்படி உத்தரவிட்டுள்ளது.


    இதனால் புதுவையில் போலீஸ் தேர்வு நடத்தும் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கி உள்ளது.

    வயது வரம்பு 24 ஆக இருக்க வேண்டும் என்பது புதுவை மக்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது எங்களுடைய கடமை. ஆனால் அதை செய்யவிடாமல் தடுத்துவிட்டனர்.

    பாராளுமன்ற உள்துறை நிலைக்குழு வயது வரம்பு 22 என சிபாரிசு தான் செய்திருக்கிறது. அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல மாநிலங்களில் பல்வேறு வயது வரம்பு நிலைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு முடிவை எடுத்து அதை நிறைவேற்றுவதற்கு முயற்சித்தபோது அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது மக்களின் பிரநிதியாக செயல்பட வேண்டும். ஆனால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு கவர்னர் தடையாக இருக்கிறார். அவருடைய செயல்பாட்டால் மக்கள் விரக்திக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryCM #Narayanasamy Kiranbedi
    கவர்னர் கிரண்பேடியின் செயலுக்கு அமைச்சர் துணை செல்வது ஏன்? என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார். #anbalaganmla #kiranbedi

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித்தலைவர் அன்பழகன் எம்எல்ஏ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது தொகுதியில் 2 நாட்களுக்கு முன் நடந்த அரசு விழாவில் எம்.எல்.ஏ.வான நான் கவர்னரால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கவர்னர் வெளியேற்றிய நிகழ்வை புதுவை அரசு திட்டமிட்டு திசைதிருப்பும் வகையில் செயல்படுகிறது.

    இதுதொடர்பாக சில விளக்கத்தை நான் கூற வேண்டியுள்ளது. அரசு விழாவில் என்னை பேச அழைத்தனர். அரசு செய்ய வேண்டிய கடமை, பொறுப்பு ஏழை எளிய மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள், திறந்தவெளி மலம் கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அவசரமாக அறிவிக்க வேண்டியது ஏன்? என கேள்வி எழுப்பினேன்.

    நான் பேச தொடங்கிய 7-வது நிமிடத்தில் துண்டு சீட்டு தரப்பட்டது. பேச்சை விரைவாக முடிக்கும்படி கூறியிருந்தனர். 5 நிமிடத்தில் பேசி முடிப்பதாக நான் கூறினேன். நான் பேசிய மேடைக்கும், கவர்னர் அமர்ந்திருந்த இடத்திற்கும் 10 அடி இடைவெளி இருக்கும். அங்கிருந்து எழுந்து வந்த கவர்னர் என் பேச்சை நிறுத்தும்படி கூறினார்.

    மக்கள் பிரச்சினையை நான் பேச வேண்டும் என நான் கூறியபோது மைக் இணைப்பை துண்டித்தனர். நான் கவர்னரிடம் இவ்வாறு நீங்கள் செய்யக்கூடாது? என கூறினேன். அதற்கு கவர்னர், ‘டோண்ட் ஸ்பீக், யூ கோ’ என்றார்.

    நான் எம்.பி.யிடம் இதை கூற சென்றேன். இருக்கையில் நான் அமரப்போவதாக நினைத்த கவர்னர் இரு கைகளையும் கூப்பி ‘யூ கோ’ என்று கூறினார். இதை அமைச்சர்களும் கண்டுகொள்ளவில்லை. அதிகார பலத்தின் உச்சக் கட்டத்தில் சென்று மேடையில் இருந்து வெளியேற்றுவதிலேயே கவர்னர் குறியாக இருந்தார். அங்கு நான் தர்ணாவில் ஈடுபட முயன்றேன்.

    இவ்வளவு நடந்தும் அமைச்சர்கள் தடுக்க முயற்சிக்கவில்லை. பொது இடத்தில் என்னை களங்கப்படுத்தியதை என்னால் தாங்க முடியவில்லை. இதனால் கவர்னரை ‘யூ கோ’ என்று கூறியபோதுதான் அமைச்சர் நமச்சிவாயம் எழுந்து என் கைகளை பிடித்து விடுங்கள் அண்ணா என்று கூறினார்.

    அவர் சகோதார முறையில்தான் என்னை பிடித்திருப்பார் என நினைக்கிறேன். அதே எண்ணத்தில்தான் அவரது கையை நான் தடுத்தேன். நான் சென்ற பிறகு மேடையில் அமைச்சர் நமச்சிவாயம் என்னை தரக்குறைவாக பேசியது தவறு. என்னை கண்டிக்கும் உரிமையை அவர் இழந்துவிட்டார். இது குறித்து சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளேன்.

    அமைச்சர் தனது ஆதரவாளர்கள் மூலம் அவர் தொகுதியில் என் கொடும்பாவியை எரித்துள்ளார். அமைச்சரிடம் நான் தவறான முறையில் நடந்துகொண்டதுபோல அவரது ஆதரவாளர்கள் சித்திரிக்கின்றனர். என் மீது தவறு இல்லை என்பது அமைச்சர் நமச்சிவாயத்திற்கு தெரியும். விழா மேடையின் கீழ் நாங்கள் நின்றிருந்தபோது நிகழ்ச்சி நிரலில் என் பெயர் பேசும் இடத்தில் இல்லை. இதுதொடர்பாக நான் கேட்டபோது, நமச்சிவாயம் துறை அமைச்சரான என் படத்தையே அவர்கள் போடவில்லை.

    எனக்கே இந்த நிலைமைதான் எனக்கூறி என்னை மேடைக்கு அழைத்து சென்றார். மேடையில் அவரை தாக்க வந்ததாக கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அவர் கவர்னருக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? வடநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு ஆதரவு அளித்து தமிழனான என்னை அவமானப்படுத்தியதன் பின்னணி என்ன? தமிழன் ஆன எனக்கு அமைச்சர் சிபாரிசு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வராதா? பிரச்சினையின் கடைசி சமயத்தில்தான் அமைச்சர் என்னை உரிமையோடு தடுத்தார்.

    தமிழர்களை வடநாட்டில் இருந்து வருபவர்கள் அடக்கி ஆள வேண்டும் என்பதற்கு அமைச்சர் ஏன் துதிபாடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் உள்ளிட்ட சிலர் கவர்னர் தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இந்த சம்பவத்தின்போது முதல்-அமைச்சர் இல்லை. சபாநாயகரிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் கவர்னரிடம் மனு அளிப்பது ஆட்சிக்கு அழகா? என தெரியவில்லை.

    ஒரு புறம் முதல்- அமைச்சர் கவர்னர் தவறானவர், அவர் தகுதியற்றவர் என கூறுகிறார். நானும் கவர்னருக்கு எதிராக பேசியுள்ளேன். இதற்காக கவர்னர் என்னை பழிவாங்குகிறாரா? கவர்னரின் செயலுக்கு அமைச்சர் துணை செல்வதற்கு முதல்- அமைச்சர் விளக்கம் தர வேண்டும்.

    சபாநாயகர் எங்கள் உரிமை மீறல் மீது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். நடவடிக்கை இல்லாவிட்டால் கட்சி தலைமையிடம் பேசி சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #anbalaganmla #kiranbedi

    விழாவில் அனுமதி இல்லாத நிலையில் பேசுவது அநாகரீகமான செயல் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. விவகாரம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார். #Kiranbedi #Anbalagan
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அறிவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

    விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக புதுவையை அறிவித்தார். விழாவில் தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் பேசினார்.

    ஒதுக்கிய நேரத்தைவிட கூடுதலாக அவர் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து கவர்னர் கிரண்பேடி தலையிட்டு பேச்சை முடித்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து அன்பழகன் பேசினார்.

    இதனால் கவர்னர் மைக் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார். இதனால் விழா மேடையிலேயே கவர்னரும், அன்பழகன் எம்.எல்.ஏ.வும் ஒருவருக்கொருவர் நீ வெளியேறு, நீ வெளியேறு என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது புதுவை மட்டுமின்றி, அகில இந்திய அளவில் பெரும் பரபரப்பான சம்பவமாக மாறியது.

    இந்நிலையில் கம்பன் கலையரங்கில் நடந்த சம்பவம் குறித்து புதுவை கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்-அப்பில் பதிவிட்டுள்ளார்.

    விழாவில் குறிப்பிடாத ஒருவரை பேச வைத்ததால் ஏற்படும் விளைவு என்ன? என்பதற்கு நேற்றைய சம்பவம் ஒரு பாடம். இந்த சம்பவம் நேரம் ஒதுக்கி விழாவிற்கு வந்திருந்த மக்களை மதிக்க தவறிய செயலாகிவிட்டது.

    மக்கள் கூடும் ஒரு விழாவிற்கு தொகுதியை சேர்ந்த முக்கிய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளை விழாவில் பேசுவதற்காகவோ, அல்லது விழாவின் பார்வையாளராகவோ விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பது வழக்கம்.


    அந்த விழா அமைப்பாளர்கள் ஏற்பாட்டின்படி பார்வையாளராகவோ, பேச்சாளராகவோ இருப்பதுதான் மரியாதை. அதை மீறுவது தவறு. மீறி பேச அனுமதித்தால் விழாவிற்கு வந்த மக்களின் நேரத்தை கருதி குறுகிய நேரத்தில் தங்களின் பேச்சை முடிக்க வேண்டும்.

    விழாவின் வழியாக மக்களுக்கு சென்றடைய வேண்டிய நல்ல கருத்திற்கு நேர்மறையான கருத்துக்களை பேசக்கூடாது. இவ்வாறு செய்வதால் விழாவின் நோக்கமே சீர்குலையும். இவ்வாறு பேசுவது தெரிந்து கொள்ள வேண்டிய பல வி‌ஷயங்களை மக்கள் இழப்பதற்கு வழி வகுக்கும். நேற்றைய சம்பவத்தில் விழா ஏற்பாட்டாளர்கள் எங்கே சென்றார்கள்? என்றே தெரியவில்லை.

    ஒரு விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், விழாவில் அனுமதி இல்லாத நிலையில் பேசுவது அநாகரீகம்.

    மற்ற வேலைகளை விட்டுவிட்டு விழாவிற்காக நேரம் ஒதுக்கி வரும் மக்களை நாம் மதிக்க கற்றுக்கொள்வது அவசியம். வருங்காலத்தில் விழா ஏற்பாட்டாளர்கள் இதை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Kiranbedi #Anbalagan
    காவலர் தேர்வு வயதை தளர்த்த கவர்னருக்கு அதிகாரம் இருந்தும் மறுத்து வருவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை காவல்துறை தேர்வில் வயது வரம்பை 24 ஆக உயர்த்த 3 தடவை கவர்னர் கிரண்பேடிக்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோப்பினை திருப்பி அனுப்பினார். மத்திய உள்துறை அமைச்சகம் வயது வரம்பில் தளர்வு கூடாது என பரிந்துரைத்திருப்பதாக கூறுகின்றனர் பரிந்துரை என்பது சட்டமாகாது.

    அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப வயது வரம்பு தளர்த்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரை இந்தியா முழுமைக்குமானது என்றால் அண்டை மாநிலமான தமிழகத்தில் வயது வரம்பு தளர்வு ஏன் அளிக்கப்படுகிறது.

    மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, வயது வரம்பு 24 ஆக இருப்பது ஏன்? மத்திய அரசே இதனை கடைப்பிடிக்கவில்லை. காவலர் பணியிடங்களை குரூப் ‘சி’ பிரிவில் தான் வருகிறது. வயது வரம்பை தளர்த்துவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறது. பணி நியமன விதிகளில் வயதை தளர்த்திக் கொள்ளலாம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5 நிமிடத்தில் முடிக்க வேண்டிய வேலைக்கு மத்திய அரசுவரை கவர்னர் கிரண்பேடி செல்ல வைத்து விட்டார்.

    புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வது, தேர்வு செய்யப்பட்ட அரசின் கடமை. இதற்காகத் தான் மத்திய உள்துறை வரை போராடி வருகிறோம்.

    எல்லாவற்றிலும் தனக்குத் தான் அதிகாரம் என அடிக்கடி கூறி வரும் கவர்னர் இந்த வி‌ஷயத்தில் தனக்கு அதிகாரம் இல்லை என கூறுவதை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryCM #Narayanasamy #KiranBedi
    முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக அரசு நிர்வாகத்தை தலையீடு செய்த கவர்னர் கிரண் பேடிக்கு கம்யூனிஸ்டுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு செலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், கம்யூனிஸ்டு (எம்.எல்.) செயலாளர் பால சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா ஆட்சி நாட்டு மக்கள் தலையில் பெரிய பொருளாதார சுமையை சுமத்தி இருக்கிறது. தாங்க முடியாத அளவில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை அறிவித்து இருக்கிறது.

    ஜனநாயக பாதையை விட்டு விட்டு எதேச்சதிகார, சர்வதிகார ஆட்சியை நடத்தி, நாட்டு மக்களுடைய வாழ்க்கையை சீரழித்து விட்ட 4ஆண்டு கால மோடியின் சீர்கெட்ட ஆட்சியை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஆதரவு அளித்த வணிக பெருமக்கள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து துறையினர், திரையரங்க உரிமையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

    இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக அரசு நிர்வாகத்தை தலையீடு செய்த கவர்னர் கிரண் பேடியின் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

    மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளின் இருந்த மீள்வதற்கு, மக்களே இந்த முழு அமைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து மோடி ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். #KiranBedi
    அஞ்சலக வங்கி சேவை வீடுதேடி வரும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
    புதுச்சேரி:

    பிரதமர் நரேந்திர மோடி மாவட்ட வாரியாக இந்தியா முழுவதும் உள்ள இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் (அஞ்சலக வங்கி) 650 கிளைகளை நேற்று தொடங்கிவைத்தார். அதன்படி புதுச்சேரி கிளை தொடக்க விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் வெங்கடேஸ்வரலு வரவேற்றார். விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு புதுச்சேரி அஞ்சலக வங்கி கிளையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் கடன், பொருட்கள் வாங்க உதவுகிற ‘கியூ’ அட்டைகளை வழங்கினார். விழாவில் எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    விழாவில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

    கல்விக்கடன், விவசாயக்கடன் என எந்தவொரு கடனுக்கும் வங்கியை தான் அணுக வேண்டிய நிலை இருந்தது. இதற்காக வங்கிகளுக்கு தொலை தூரம் செல்லும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தொடங்கப்பட்டு உள்ள அஞ்சலக வங்கி சேவை திட்டத்தின் மூலம் வங்கியே வீடுதேடி வரும். இது மிகச்சிறந்த திட்டமாகும்.

    அஞ்சலக வங்கி சேவைகள் தபால்காரர்கள் மூலம் நம்முடைய வீட்டிற்கே வந்து சேரும். இதன் மூலம் தொலைபேசி கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் பட்டுவாடா செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் புதுச்சேரி அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அகில் நாயர் நன்றி கூறினார். 
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். #PuducherryGovernor #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் குறித்து வார இறுதி நாட்களில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) கவர்னர் கிரண்பேடி உழவர்கரை நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிரதமர் மோடி செய்வார்.

    இருந்தபோதிலும் வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் மற்றும் அரசு ஊழியர்களும் தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும்.


    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ வேண்டும். கேரள மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர நாம் அனைவரும் சேர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    முப்படையை சேர்ந்த வீரர்கள் கேரளாவில் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாம் அனைவரும் கேரளாவை நேசிப்பதால் நம்மால் இயன்ற உதவிகளையும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார்.

    தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு கவர்னர் கிரண்பேடி பதிலளிக்கும் போது, புதுவையில் முதலில் போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியும் சட்டத்தை மதிக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இதன்மூலம் பொதுமக்களுக்கு தானாக விழிப்புணர்வு ஏற்படும் என்றார். #PuducherryGovernor #Kiranbedi
    அதிகார வரம்பை தவறாக பயன்படுத்தி வரும் கவர்னர் கிரண்பேடி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கொடுத்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், பாலன், ஜெயமூர்த்தி, தனவேலு, அனந்தராமன், விஜயவேணி ஆகியோர் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் ஒரு உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளனர்.

    புதுவை கவர்னர் சட்டப்பேரவையின் சுதந்திரத்தையும், மாண்பையும் குலைக்கும் வகையில் நீண்ட நாட்களாக பேசி வருகிறார்.

    மத்திய அரசு தன்னிச்சையாக 3 உறுப்பினர்களை நியமித்ததையடுத்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த உத்தரவைப்பற்றி கருத்து தெரிவிக்கையில், அந்த 3 பேரையும் நியமன உறுப்பினர்களாக அங்கீகரித்து சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்காவிட்டால் சட்ட சிக்கலையும், பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என சட்டப்பேரவைக்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அவர்கள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும்பட்சத்தில்தான் நிதி மசோதா தாக்கல் செய்ய அனுமதித்துள்ளேன் என நிபந்தனையும் விதித்திருப்பது சட்டப்பேரவையின் தனித்தன்மையை, சுதந்திர தன்மையை கேலிக்குரியதாக்கி தரம் தாழ்த்துவதாக உள்ளது.

    அதோடு சட்டத்தை இயற்றுபவர்களே சட்டத்தை மீறுபவர்கள் என்று பொதுமக்களின் மனதில் தவறான எண்ணத்தையும் உருவாக்கியுள்ளார்.

    இது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மாண்பையும், உரிமையையும் பாதிப்பிற்குள்ளாக்கி உள்ளது. ஒட்டுமொத்தமாக சபையின் கண்ணியத்தையும், மாண்பையும் வேண்டுமென்றே தாழ்த்தி அவதூறாக பேசியும் சபையை அவமதித்தும் வருகிறார்.

    நிலுவையில் உள்ள ஒரு வழக்கு பற்றி இடைக்கால உத்தரவில் தன் இஷ்டம்போல விளக்கம் அளிக்கிறார். சட்டசபையை தன் ஆளுகைக்கு கீழ் செயல்படும் ஒரு துறையை போல கருதி உத்தரவிடுவது சபையை அவமதிக்கும் செயலாகும்.

    எனவே உறுப்பினர்களின் புகாரை ஏற்று கவர்னர் மீது உரிமை மீறல் நடவடிக்கை மற்றும் சபை அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளனர்.
    அடாவடி நடவடிக்கையில் இறங்கும் கவர்னர் புதுவையை விட்டு வெளியேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண் பேடியின் செயல்பாடுகள் பா.ஜனதா கட்சியை வளர்ப்பது போன்ற நடவடிக்கையாக இருப்பதாகவும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மிரட்டும் வகையில் செயல்படுவதாகவும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

    நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் அங்கீகரிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவு பிறப்பித்ததற்கும் மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    அத்துமீறி அடாவடி நடவடிக்கையில் இறங்கும் கவர்னர் புதுவையை விட்டு வெளியேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நேருவீதி, மி‌ஷன் வீதி சந்திப்பில் புறப்பட்ட ஊர்வலத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் நிலவழகன், தமிழ்செல்வன், நகர கமிட்டி மதிவாணன், நடராஜன், சத்யா, ராமசாமி, அன்புமணி மற்றும் பலர் பங்கேற்றனர். ஊர்வலம் ஜென்மராக்கினி கோவில் வீதி வழியாக வந்தது. அவர்களை ஆம்பூர் சாலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கவர்னரை வெளியேறக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். #tamilnews
    பட்ஜெட் நிதி மசோதா பெறுவதற்கு வருகிற 31-ந் தேதி வரைதான் அனுமதி அளித்திருப்பதாக கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #PuducherryBudget #GovernorKiranBedi
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி பதவியேற்றது முதல் வார இறுதி நாட்களில் நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

    அதன்படி இன்று 178-வது வார ஆய்வினை மேற்கொண்டார். புதுவை புல்வார் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் தூய்மை நிலை மற்றும் பேனர்கள் தொடர்பாக சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வுக்கு பின் நிருபர்களிடம் கவர்னர் கிரண்பேடி கூறியதாவது:-

    வருகிற 31-ந் தேதிக்குள் நிதி மசோதாவுக்கு சட்டசபையில் அனுமதி பெறும்படி கூறியுள்ளேன். அதன்படி நாளையே சட்டமன்றத்தை கூட்டி நிதி மசோதாவுக்கு அனுமதி பெற்று என்னுடைய ஒப்புதலுக்கு அனுப்பினால் சற்றும் தாமதிக்காமல் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வேன்.

    3 நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்து தான் பேரவை நிகழ்வுகளை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சட்டத்தை உருவாக்குபவர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். சட்டப்பேரவை என்பது சட்டத்தை உருவாக்கும் இடம். சட்டத்தை உருவாக்குபவர்களே எப்படி சட்டத்திற்கு இணங்கி நடக்காமல் இருப்பார்கள்?

    இவ்வாறு கிரண்பேடி கூறினார்.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி பொதுப் பணித்துறை அதிகாரிகள், மற்றும் ஊழியர்களை கடற்கரை சாலையில் உள்ள சீகல்ஸ் ஓட்டலுக்கு வரவழைத்தார். அங்கு புல் தரையில் அமர்ந்து தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் அதற்கு முன்பாக வாய்க்கால்களை தூர்வாரி மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். #PuducherryAssembly #PuducherryBudget #GovernorKiranBedi
    ×