search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anbalagan mla"

    முதல்- அமைச்சர் நாராயணசாமி நாகரீகத்தோடு பேச வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து உப்பளம் தொகுதியில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வீதி, வீதியாக, வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

    உப்பளம் நேதாஜி நகர் 2 பகுதியில் தேசமுத்துமாரியம்மன் கோவில் அருகில் இருந்து இன்று அன்பழகன் பிரசாரத்தை தொடங்கினார். வீடு, வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்த என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமிக்கு ஜக்கு சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். முன்னதாக வில்லியனூரில் நடந்த பிரசாரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    எனது தரம் பற்றி முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியுள்ளார். தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து முதல்-அமைச்சரின் பேச்சு அநாகரீகத்தின் உச்சத்தில் உள்ளது. எங்களை சகட்டுமேனிக்கு வசை பாடியதோடு, அ.தி. மு.க.வினருக்கு சூடு, சொரணை இல்லையா? என கேட்டு அம்மா பேசிய வீடியோவை காண்பித்தார்.

    பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் புதுவையில் உள்ள பேயை ஓட, ஓட விரட்டி அடிப்பேன் என கவர்னரை வசைபாடினார். தேர்தலுக்குப்பிறகு ஆட்சி மாற்றம் என்ற மக்கள் எண்ணத்தை கூறினால் எங்களை உள்ளே பிடித்து போடுவேன் என அதிகார மமதையில் மிரட்டினார். முன்னாள் முதல்-அமைச்சர் என்று பாராமல் ரங்கசாமி பதவி வெறி பிடித்து அலைகிறார் என கூறியதொல்லாம் தரம் உயர்ந்த வார்த்தைகளா? எங்களை உள்ளே பிடித்து போடுவோம் என்று கூறியவருக்கு, எங்கள் கட்சித்தலைமை நினைத்தால் நீங்கள் கோட்டக்குப்பம் தாண்ட முடியாது என உங்கள் பாணியில் பதில் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? நான் ஒரு சாதராண எம்.எல்.ஏ. நீங்கள் மாநில முதல்-அமைச்சர்.

    கடந்த 3 ஆண்டு ஆட்சியில் உங்கள் சட்டமன்ற மற்றும் பொது இடத்தின் பேச்சுகளை நீங்களே சீர்தூக்கி பாருங்கள். நம் இருவரில் உங்கள் தரம் என்ன என்பது உங்களுக்கே புரியும். முதல்அமைச்சருக்கு பேச்சில் நாகரீகமும், பண்பும் இருக்க வேண்டும்.

    மோடி படத்தை ஏன் போடவில்லை? மோடிதான் பிரதமர் என ஏன் கூறவில்லை? என நமச்சிவாயம் கேட்கிறார். மோடி படத்தை நாங்கள் போடவில்லையா? இந்த நாட்டை உலக நாடுகள் வரிசையில் தலை நிமிர வைக்கவும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதத்தை தடுத்து நிறுத்த மோடியால் மட்டுமே முடியும்.

    தமிழக முதல்-அமைச்சரும், புதுவை மக்கள் முதல்வர் ரங்கசாமியும் தொடர்ந்து மோடியை பற்றி பேசி வருவது உங்களுக்கு கேட்கவில்லையா? நீங்கள் ஏன் முதல்-அமைச்சருடன் பிரசாரத்துக்கு செல்லாமல் தனியாக வாக்கு சேகரிக்க செல்கிறீர்கள்? நாராயணசாமி வந்தால் ஓட்டு விழாது என்பதுதான் காரணமா? இவை அனைத்தையும் மக்கள் புரிந்துகொண்டு என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் இளைஞர் டாக்டர் நாராயணசாமிக்கு ஜக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கவர்னர் கிரண்பேடியின் செயலுக்கு அமைச்சர் துணை செல்வது ஏன்? என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார். #anbalaganmla #kiranbedi

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித்தலைவர் அன்பழகன் எம்எல்ஏ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது தொகுதியில் 2 நாட்களுக்கு முன் நடந்த அரசு விழாவில் எம்.எல்.ஏ.வான நான் கவர்னரால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கவர்னர் வெளியேற்றிய நிகழ்வை புதுவை அரசு திட்டமிட்டு திசைதிருப்பும் வகையில் செயல்படுகிறது.

    இதுதொடர்பாக சில விளக்கத்தை நான் கூற வேண்டியுள்ளது. அரசு விழாவில் என்னை பேச அழைத்தனர். அரசு செய்ய வேண்டிய கடமை, பொறுப்பு ஏழை எளிய மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள், திறந்தவெளி மலம் கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அவசரமாக அறிவிக்க வேண்டியது ஏன்? என கேள்வி எழுப்பினேன்.

    நான் பேச தொடங்கிய 7-வது நிமிடத்தில் துண்டு சீட்டு தரப்பட்டது. பேச்சை விரைவாக முடிக்கும்படி கூறியிருந்தனர். 5 நிமிடத்தில் பேசி முடிப்பதாக நான் கூறினேன். நான் பேசிய மேடைக்கும், கவர்னர் அமர்ந்திருந்த இடத்திற்கும் 10 அடி இடைவெளி இருக்கும். அங்கிருந்து எழுந்து வந்த கவர்னர் என் பேச்சை நிறுத்தும்படி கூறினார்.

    மக்கள் பிரச்சினையை நான் பேச வேண்டும் என நான் கூறியபோது மைக் இணைப்பை துண்டித்தனர். நான் கவர்னரிடம் இவ்வாறு நீங்கள் செய்யக்கூடாது? என கூறினேன். அதற்கு கவர்னர், ‘டோண்ட் ஸ்பீக், யூ கோ’ என்றார்.

    நான் எம்.பி.யிடம் இதை கூற சென்றேன். இருக்கையில் நான் அமரப்போவதாக நினைத்த கவர்னர் இரு கைகளையும் கூப்பி ‘யூ கோ’ என்று கூறினார். இதை அமைச்சர்களும் கண்டுகொள்ளவில்லை. அதிகார பலத்தின் உச்சக் கட்டத்தில் சென்று மேடையில் இருந்து வெளியேற்றுவதிலேயே கவர்னர் குறியாக இருந்தார். அங்கு நான் தர்ணாவில் ஈடுபட முயன்றேன்.

    இவ்வளவு நடந்தும் அமைச்சர்கள் தடுக்க முயற்சிக்கவில்லை. பொது இடத்தில் என்னை களங்கப்படுத்தியதை என்னால் தாங்க முடியவில்லை. இதனால் கவர்னரை ‘யூ கோ’ என்று கூறியபோதுதான் அமைச்சர் நமச்சிவாயம் எழுந்து என் கைகளை பிடித்து விடுங்கள் அண்ணா என்று கூறினார்.

    அவர் சகோதார முறையில்தான் என்னை பிடித்திருப்பார் என நினைக்கிறேன். அதே எண்ணத்தில்தான் அவரது கையை நான் தடுத்தேன். நான் சென்ற பிறகு மேடையில் அமைச்சர் நமச்சிவாயம் என்னை தரக்குறைவாக பேசியது தவறு. என்னை கண்டிக்கும் உரிமையை அவர் இழந்துவிட்டார். இது குறித்து சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளேன்.

    அமைச்சர் தனது ஆதரவாளர்கள் மூலம் அவர் தொகுதியில் என் கொடும்பாவியை எரித்துள்ளார். அமைச்சரிடம் நான் தவறான முறையில் நடந்துகொண்டதுபோல அவரது ஆதரவாளர்கள் சித்திரிக்கின்றனர். என் மீது தவறு இல்லை என்பது அமைச்சர் நமச்சிவாயத்திற்கு தெரியும். விழா மேடையின் கீழ் நாங்கள் நின்றிருந்தபோது நிகழ்ச்சி நிரலில் என் பெயர் பேசும் இடத்தில் இல்லை. இதுதொடர்பாக நான் கேட்டபோது, நமச்சிவாயம் துறை அமைச்சரான என் படத்தையே அவர்கள் போடவில்லை.

    எனக்கே இந்த நிலைமைதான் எனக்கூறி என்னை மேடைக்கு அழைத்து சென்றார். மேடையில் அவரை தாக்க வந்ததாக கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அவர் கவர்னருக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? வடநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு ஆதரவு அளித்து தமிழனான என்னை அவமானப்படுத்தியதன் பின்னணி என்ன? தமிழன் ஆன எனக்கு அமைச்சர் சிபாரிசு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வராதா? பிரச்சினையின் கடைசி சமயத்தில்தான் அமைச்சர் என்னை உரிமையோடு தடுத்தார்.

    தமிழர்களை வடநாட்டில் இருந்து வருபவர்கள் அடக்கி ஆள வேண்டும் என்பதற்கு அமைச்சர் ஏன் துதிபாடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் உள்ளிட்ட சிலர் கவர்னர் தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இந்த சம்பவத்தின்போது முதல்-அமைச்சர் இல்லை. சபாநாயகரிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் கவர்னரிடம் மனு அளிப்பது ஆட்சிக்கு அழகா? என தெரியவில்லை.

    ஒரு புறம் முதல்- அமைச்சர் கவர்னர் தவறானவர், அவர் தகுதியற்றவர் என கூறுகிறார். நானும் கவர்னருக்கு எதிராக பேசியுள்ளேன். இதற்காக கவர்னர் என்னை பழிவாங்குகிறாரா? கவர்னரின் செயலுக்கு அமைச்சர் துணை செல்வதற்கு முதல்- அமைச்சர் விளக்கம் தர வேண்டும்.

    சபாநாயகர் எங்கள் உரிமை மீறல் மீது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். நடவடிக்கை இல்லாவிட்டால் கட்சி தலைமையிடம் பேசி சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #anbalaganmla #kiranbedi

    எம்.எல்.ஏ. பேசியபோது மைக்கை துண்டித்த கவர்னர் கிரண்பேடி பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #narayanasamy #kiranbedi

    புதுச்சேரி:

    சென்னை விமான நிலையத்தில் புதுவை மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் மழை புயல் வெள்ளம் வந்ததால் மக்களை பாதுகாக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றவும் சகஜ வாழ்க்கை பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. பேரிடர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் செயல்பட கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

    வருவாய் துறை அதிகாரிகள், மின்சாரத்துறை, போலீஸ் இணைந்து செயல் படுவார்கள். உள்ளாட்சி துறையினர் தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுப்பட வேண்டும். 24 மணி நேரமும் அதிகாரிகள் பணியில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். 7-ந்தேதி 25 செ.மீ. மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் புதுவை அதிகாரிகளுடன் பேசி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பாக மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு முன் திட்டத்தை அறிவித்தது. தமிழகத்தில் 2 இடங்களிலும், புதுவை- காரைக்கால் பகுதியிலும் எடுக்க அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதால் காரைக்கால் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் சிதம்பரம், நாகப்பட்டினம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டு இருப்பதாக தகவல் வந்து உள்ளன. இதனால் தமிழகத்திற்கு எந்தவிதமான பயனும் இல்லை. மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு தமிழகத்தில் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் பாரதீய ஜனதா கட்சி மீது வெறுப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அப்பகுதி மக்களை அழைத்து பேசி அவர்களது கருத்துக்களை கேட்டு ஒப்புதலுடன் செய்து இருக்க வேண்டும். எந்தவொரு திட்டத்தையும் மக்கள் மீது திணிக்க கூடாது.

    புதுவையில் திறந்த கழிப்பிடம் இல்லாத மாநிலம் என்று அறிவிக்கும் விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசும்போது கவர்னர் ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. பேசுவதை நிறுத்துமாறு சொல்லி மைக்கை அணைத்தால் அன்பழகன் ஆத்திரப்பட்டு பேசியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பற்றி பேசும்போது கவர்னர் வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். அவர் பேசியபின் பதிலளித்திருக்கலாம். மைக்கை அணைக்க கவர்னர் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

    ஆனாலும் மேடையில் அமைச்சர் நமச்சிவாயத்திடம் சட்டமன்ற உறுப்பினர் தவறாக நடந்து கொண்டதையும் ஏற்க முடியாது. இது சம்பந்தமாக விசாரித்து என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம். பொது இடங்களில் நடக்கும் விழாக்களில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

    சட்டமன்ற உறுப்பினருக்கு பேச உரிமை உண்டு. கவர்னர் தனது அதிகாரத்திற்குட்பட்டு செயல்பட வேண்டும். பேசகூடாது என்று மைக்கை அணைக்க கவர்னருக்கு எந்த உரிமையும் கிடையாது.

    ஒரு உறுப்பினர் தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசியிருக்க வேண்டும். அதிகமாக பேச நேரம் தந்திருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் உரிமையை யாரும் பறிக்க கூடாது. அதுப்போல் அமைச்சரின் மதிப்பை உறுப்பினர் குறைக்க கூடாது.

    சமுதாயத்தில் அவரவர் தங்கள் அதிகாரத்துக் குட்பட்டு செயல்பட்டால் எந்த பிரச்சனையும் வராது. பொது விழாக்களில் கவர்னர் தொடர்ந்து அதிகார எல்லையை மீறி செயல் படுகிறார். அதிகாரமில்லாத இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து தன்னிச்சையாக உத்தரவிடுவது. அமைச்சருக்கு தெரியாமல் அதிகாரிகளை தனியாக அழைத்து கூட்டம் போட்டு பேசுவது. கவர்னர் அதிகார எல்லை மீறல் பற்றி பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் சொல்லியிருக்கிறேன்.

    புதுவையில் காங்கிரஸ் அரசு இருப்பதால் தொல்லை தருவதற்காக இந்தம்மாவை அனுப்பி இருக்கிறார்கள். இவர் கவர்னர் பதவிக்கு தகுதி இல்லாதவர். அவரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமரிடம் சொல்லியிருக்கிறேன். இதில் பிரதமர் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.

    புதுவை மக்களுக்கு அவரால் எந்த பலனும் கிடையாது. எல்லா மக்களையும் துன்புறுத்தும் வேலையை தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு நிர்வாகம் தெரியவில்லை. ஒரு சில அதிகாரிகள் சொல்வதை கேட்டுக் கொண்டு நடக்கிறார்.


    புதுவை சின்ன அமைதியான மாநிலம். மக்கள் அமைதியும் வளர்ச்சியையும் விரும்புகிறார்கள். அதற்கான திட்டங்களை நாங்கள் நிறைவேற்றுகிறோம். அந்த திட்டங்களை நிறைவேற்றும் போது முட்டுக்கட்டையை தான் போடுகிறார். மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றும் எண்ணமே கிடையாது.

    விளம்பரம் வேண்டும், செய்திகளில் பெயர் வர வேண்டும், பிரதமருக்கு டுவிட்டரில் தகவல் அனுப்புவது மட்டும் தான் கவர்னர் வேலையாக இருக்கிறார்.

    சட்டமன்றம் இருக்க கூடிய யூனியன் பிரதேசங்களில் அன்றாட செயல்பாடு நிர்வாகத்தை நடத்த அந்தந்த துறை அமைச்சருக்கும், முதல்-அமைச்சருக்கும் அதிகாரம் உண்டு. கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரமும் கிடையாது. தன்னிச்சையாக எந்தவொரு உத்தரவும் போட முடியாது.

    கவர்னர் மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளை விக்க கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. நீதிமன்ற தீர்ப்பையும் மக்களையும் கவர்னர் அவமதிக்கிறார்.

    2 ஆண்டுகளாக புதுவை மாநிலத்தை பற்றி தெரியாமல் அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்டு அரசின் செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கிறார் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #narayanasamy #kiranbedi

    அரசு விழாவில் நடந்த மோதல் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் அன்பழகன் எம்எல்ஏ மனு அளித்துள்ளார். #anbalaganmla #kiranbedi

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று நடந்த அரசு விழாவில் அ.தி.மு.க. எம்.எல்.எ. அன்பழகன் பேசிக்கொண்டிருந்த போது பேச்சை நிறுத்தும்படி கவர்னர் கிரண்பேடி கூறினார். அவர் தொடர்ந்து பேசியதால் மைக்கை துண்டிக்க உத்தரவிட்டார். இதனால் அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்பழகன் எம்.எல்.ஏ. விழாவை புறக்கணித்து விட்டு வெளியேறினார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் இன்று சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கவர்னர் கிரண்பேடி மீது உரிமை மீறல் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நேற்றைய தினம் காந்தியின் பிறந்தநாளையொட்டி புதுவை அரசின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக புதுவை மாநிலத்தை அறிவிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நானும் பங்கேற்றேன்.

    சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முதலில் என்னை பேச அழைத்தனர். நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது கவர்னர் கிரண்பேடி தனது இருக்கையில் இருந்து நான் பேசும் இடத்திற்கு வந்து நீங்கள் இதற்கு மேல் பேசக்கூடாது உங்கள் பேச்சை நிறுத்துங்கள் என்று தனது பணியாளர்களுக்கு உத்தரவிடுவது போல் கூறினார்.

    அதற்கு நான் தயவு செய்து உங்கள் இருக்கையில் அமருங்கள். நீங்கள் இந்த மாநிலத்தின் கவர்னர் நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எல்லோரும் பார்க்கிறார்கள் என்று கூறினேன்.

    அதற்குள் அங்கிருந்த மைக் இணைப்பாளரிடம் எனது மைக் இணைப்பை துண்டிக்க கவர்னர் உத்தரவிட்டார். அவரும் எனது மைக் இணைப்பை துண்டித்தார்.

    இதனால் நான் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். அப்போது கவர்னர் தனது இருக்கையில் அமராமல் என்னை மேடையை விட்டு ‘யூ கோ ’என்று ஒருமையில் பேசி என்னை வெளியேறுமாறு சொன்னார். நான் என் பேச்சை நிறுத்திவிட்டு என் இருக்கையில் அமர சென்றபோது என்னை தனது இரண்டு கைகளாலும் அகல விரித்து என்னை மறித்து வெளியே போ எனக் கோபமாகக் கூறினார்.

    அப்போது நான் மக்கள் பிரதிநிதி என்னை வெளியில் போகச் சொல்லும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. நீங்கள் வேண்டுமானால் வெளியில் போங்கள் என கூறினேன் அதற்கு பிறகும் என்னை அவர் இருக்கையில் அமர விடாமல் தடுத்தார்.

    இதனை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் இதற்கு மேலும் இங்கிருப்பது எனது மரியாதைக்கு இழுக்கு என்று நினைத்து மேடையிலிருந்து நான் வெளியேறி விட்டேன் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்த விழாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணெதிரில் நடந்தது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான என்னை விழா மேடையில் பேச விடாமல் தடுத்ததோடு என்னை விழா மேடையில் இருந்து கவர்னர் என்ற அதிகாரத்தில் வெளியேற கூறியது எனது உரிமையை பறிக்கும் செயலாகும். கவர்னரின் இந்த நடவடிக்கை என்னை திட்டமிட்டு களங்கப்படுத்தும் செயலாகும். எனவே கவர்னர் மீது உரிமை மீறல் விதியின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

    அவருடன் அ.தி.முக. எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர் வையாபுரி மணிகண்டன் அசனா ஆகியோரும் சென்றனர். #anbalaganmla #kiranbedi

    விழாவில் அனுமதி இல்லாத நிலையில் பேசுவது அநாகரீகமான செயல் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. விவகாரம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார். #Kiranbedi #Anbalagan
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அறிவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

    விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக புதுவையை அறிவித்தார். விழாவில் தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் பேசினார்.

    ஒதுக்கிய நேரத்தைவிட கூடுதலாக அவர் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து கவர்னர் கிரண்பேடி தலையிட்டு பேச்சை முடித்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து அன்பழகன் பேசினார்.

    இதனால் கவர்னர் மைக் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார். இதனால் விழா மேடையிலேயே கவர்னரும், அன்பழகன் எம்.எல்.ஏ.வும் ஒருவருக்கொருவர் நீ வெளியேறு, நீ வெளியேறு என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது புதுவை மட்டுமின்றி, அகில இந்திய அளவில் பெரும் பரபரப்பான சம்பவமாக மாறியது.

    இந்நிலையில் கம்பன் கலையரங்கில் நடந்த சம்பவம் குறித்து புதுவை கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்-அப்பில் பதிவிட்டுள்ளார்.

    விழாவில் குறிப்பிடாத ஒருவரை பேச வைத்ததால் ஏற்படும் விளைவு என்ன? என்பதற்கு நேற்றைய சம்பவம் ஒரு பாடம். இந்த சம்பவம் நேரம் ஒதுக்கி விழாவிற்கு வந்திருந்த மக்களை மதிக்க தவறிய செயலாகிவிட்டது.

    மக்கள் கூடும் ஒரு விழாவிற்கு தொகுதியை சேர்ந்த முக்கிய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளை விழாவில் பேசுவதற்காகவோ, அல்லது விழாவின் பார்வையாளராகவோ விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பது வழக்கம்.


    அந்த விழா அமைப்பாளர்கள் ஏற்பாட்டின்படி பார்வையாளராகவோ, பேச்சாளராகவோ இருப்பதுதான் மரியாதை. அதை மீறுவது தவறு. மீறி பேச அனுமதித்தால் விழாவிற்கு வந்த மக்களின் நேரத்தை கருதி குறுகிய நேரத்தில் தங்களின் பேச்சை முடிக்க வேண்டும்.

    விழாவின் வழியாக மக்களுக்கு சென்றடைய வேண்டிய நல்ல கருத்திற்கு நேர்மறையான கருத்துக்களை பேசக்கூடாது. இவ்வாறு செய்வதால் விழாவின் நோக்கமே சீர்குலையும். இவ்வாறு பேசுவது தெரிந்து கொள்ள வேண்டிய பல வி‌ஷயங்களை மக்கள் இழப்பதற்கு வழி வகுக்கும். நேற்றைய சம்பவத்தில் விழா ஏற்பாட்டாளர்கள் எங்கே சென்றார்கள்? என்றே தெரியவில்லை.

    ஒரு விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், விழாவில் அனுமதி இல்லாத நிலையில் பேசுவது அநாகரீகம்.

    மற்ற வேலைகளை விட்டுவிட்டு விழாவிற்காக நேரம் ஒதுக்கி வரும் மக்களை நாம் மதிக்க கற்றுக்கொள்வது அவசியம். வருங்காலத்தில் விழா ஏற்பாட்டாளர்கள் இதை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Kiranbedi #Anbalagan
    புதுவையில் பெண் அதிகாரிகள் அதிகமாக இருந்தும் சுற்றுலா வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அன்பழகன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நாளைய தினம் காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளனர். காங்கிரஸ் நடத்தும் இந்த போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது. போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை.

    நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் பெட்ரோல்- டீசல் விற்பனை வரியை 5 சதவீதம் குறைக்கலாம். பெட்ரோல்- டீசல் விலை ஏற்றத்தை நாங்களும் (அ.தி. மு.க.) எதிர்க்கிறோம்.

    கடந்த 15 நாட்களாக புதுவையில் அதிகார மோதல் இல்லாமல் இருந்தது. நேற்றைய தினம் காரைக்காலில் கவர்னர் கிரண்பேடி பேசும் போது தரமான அரிசியும், முறையான டெண்டரும் இல்லாததால் இலவச அரிசி வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இனி வருங்காலத்தில் இலவச அரிசி தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுப்ப தாகவும் அவர் கூறி உள்ளார்.

    இந்த காங்கிரஸ் அரசு கடந்த 26 மாதங்களில் 10 மாதங்கள் மட்டுமே இலவச அரிசி வழங்கி உள்ளது. பட்ஜெட்டின் போது இலவச அரிசி திட்டங்களுக்கு ரூ.200 கோடிக்கு பதில் ரூ.120 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளனர்.

    இது கண்டிக்கத்தக்கது. கவர்னர் கிரண்பேடி காரைக்காலில் பேசியது அமைச்சர் கந்தசாமியை மிரட்டுவதற்காக இருக்கலாம். இலவச அரிசிக்கு முறைகேடாக டெண்டர் விட்டதிலும், தரமற்ற அரிசி கொள்முதல் செய்த அரசு அதிகாரிகள் மீதும் கவர்னர் நடவடிக்கை எடுப்பாரா?

    புதுவையில் கடந்த சில மாதங்களாக சுற்றுலா துறையின் தவறான கொள்கை முடிவால் கலாச்சாரம் சீரழிந்து வருகிறது. பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் பெண் ஊழியர்கள் மானபங்கம், மாமூல் கேட்டு மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனது தொகுதியில் மது அருந்தும் பாருடன் கூடிய 3 ஓட்டல்கள் உள்ளன.

    நேற்றைய தினம் ஒரு ஓட்டலில் நடந்த இரவு நடனத்தில் பங்கேற்ற 2 வடமாநில பெண்களை அவர்களது ஆண் நண்பர்களை அடித்து உதைத்து விரட்டி விட்டு அந்த பெண்களை சிலர் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். அந்த பெண்கள் அலறியடித்து கொண்டு இதுபற்றி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    போலீஸ் துறையை கையில் வைத்துள்ள முதல்- அமைச்சர் சட்டம்-ஒழுங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. இந்த அரசு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தடை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவையில் பெண் அதிகாரிகள் அதிகமாக உள்ளனர். கவர்னர், போலீஸ் டி.ஜி.பி., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டு என பெண்களே உள்ளனர். இவ்வளவு பேர் இருந்தும் புதுவை சுற்றுலா வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவை காவல்துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லையா? என்பதை நாராயணசாமி தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்பழகன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார். #Narayanasamy

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் ஆளும் காங்கிரஸ் அரசின் தவறான பணி நியமன விதியில் திருத் தம் செய்ததால் காவலர் பணியில் சேருவதில் சிக்கல் ஏற்பட்டு இளைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது. காவலர் பணிக்கான வயது வரம்பு 24 வயது என்பதை 2 வருடம் குறைத்து அறிவித்துள்ளதால் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத விரக்தியில் உள்ளனர்.

    புதுவையில் அரசு பணி என்பது காணல் நீராக இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் வயது வரம்பில் 2 வருடம் குறைக்கப்பட்ட செயல் தேவையற்ற ஒன்றா கும். பணி நியமன விதியில் திருத்தம் செய்து புதுவையில் மட்டும் அனைத்து பிரிவினருக்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இதனால் காவலர் பணியில் சேரலாம் என காத்திருந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் காவலர் பணிக்கான வயது வரம்பு பொதுப் பிரிவுக்கு 24, ஓ.பி. சி.க்கு 27 வயது, எஸ்.சி.க்கு 29 என்ற நிலை உள்ளது. ஆனால் புதுவையில் மட்டும் 2 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளதை புதுவை முதல் - அமைச்சர் நாராயணசாமி ஏற்றுக் கொள்கிறாரா? இது சம்பந்தமாக பல்வேறு எதிர்ப்புகள் படித்த இளை ஞர்கள் மத்தியில் எழுப்பப்பட்ட பிறகு வயது வரம்பை திருத்தம் செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பேன் என்பது தேவையற்ற ஒன்றாகும்.

    வயது வரம்பை குறைக்கும் முடிவினை முதல்- அமைச்சருக்கு தெரியாமல் துறை அதிகாரிகள் எடுத்தார்களா? அல்லது கவர்னர் இதற்காக உத்தர விட்டாரா? முதல்-அமைச்சருக்கு தெரியாமல் வயது வரம்பு குறைக்கப்பட்டதால் காவல் துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லையா? என்பதை முதல்-அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

    எனவே புதுவை மாநில படித்த இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு குறைக்கப்பட்ட வயது வரம்பை மீண்டும் 24 ஆக மாற்ற முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும். அதே போன்று மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய 4 சதவீத இடஒதுக்கீட்டையும் இதில் சேர்த்து அறிவிக்க முதல்-அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.  #Narayanasamy 

    பட்ஜெட்டுக்கு அனுமதி பெறாமலேயே சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டியது சட்டமன்ற நடைமுறைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று அன்பழகன் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சட்டமன்றத்தின் மாண்புகளையும், மரியாதைகளையும், ஜனநாயக நடை முறைகளையும் போட்டி போட்டுக்கொண்டு ஆளும் காங்கிரஸ் அரசும், கவர்னரும் காலில் போட்டு மிதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பட்ஜெட்டுக்கு அனுமதி பெறாமலேயே சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டியது சட்டமன்ற நடைமுறைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்காக காரணமின்றி சட்டமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைத்ததையும் அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    கவர்னர், முதல்-அமைச்சர் தொடர் மோதலால் புதுவை அரசின் நிர்வாகத்தை முடக்கம் செய்ய சதியாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் கவர்னர் மீதே ஆளும்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சட்டமன்றத்தை கவர்னர் முடக்கம் செய்வது பலிக்காது என பேசியுள்ளார்.

    பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைக்காததற்கு தலைமை செயலாளரும், நிதி செயலாளரும் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு கவர்னர் விளக்கம் தர வேண்டும்.

    புதுவை மாநிலத்தின் வரி சலுகையை பயன்படுத்தி சில வியாபாரிகள் மாநிலத்தை கடத்தல் மாநிலமாக மாற்றியுள்ளனர். மது, பெட்ரோல், டீசல், சிகரெட், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு குடோன் அமைத்து தமிழகத்திற்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் புதுவை கடத்தல் மாநிலமாக மாறியுள்ளது.

    இதனால் புதுவை மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஒவ்வொரு ஆட்சியிலும் அவர்களுக்கு வேண்டியவர்கள் இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனர். தற்போது மணல் பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது. கடத்தி கொண்டுவரப்படும் மணலை அனுமதிக்கும் வகையில் அமைச்சர் சட்டமன்றத்தில் பேசினார். இது அமைச்சர் பதவிக்குரிய மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.

    மத்திய அரசின் சட்டப்படி மணலை குடோவுனில் வைத்திருப்பதும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதும் சட்டப்படி குற்றம். புதுவையில் உள்ள சட்டப்படியும் மணலை எடுத்து வருவது குற்றமாகும். அப்படியிருக்க தமிழகத்திலிருந்து கடத்தி கொண்டுவரும் மணலை அரசு அதிகாரிகள் சட்டப்படிதான் பிடிக்கின்றனர். இந்த பிரச்சினையை சட்டரீதியாக தீர்க்க அரசு முன்வர வேண்டும். ஆனால் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்படக் கூடாது.

    புதுவை மணல் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசோடு சுமூக போக்கை கடைபிடிக்க வேண்டும். அதைவிடுத்து மோதல் போக்கை கடைபிடித்துக் கொண்டு சட்டசபையில் உண்மைக்கு மாறான தகவல்களை நாராயணசாமி தெரிவித்தார். அவர் தென்மாநில மாநாட்டில் பங்கேற்றபோது மணல் பிரச்சினை பற்றி தமிழக அமைச்சரோடு பேசியதாக கூறினார்.

    அப்போது அவர் முதல்-அமைச்சராக இருந்தாரா? தமிழகத்தை உரிய முறையில் அணுகி மணல் பிரச்சினையை தீர்க்க வழி காண வேண்டும். வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப் போவதாக நாராயணசாமி கூறியுள்ளார். இதற்கு கவர்னர் அனுமதி தருவாரா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் துறைமுகம் செயல்படவே கவர்னர் அனுமதிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரை 23 நாள் நடத்த வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    அன்பழகன் எம்.எல்.ஏ. சபாநாயகரிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    இவ்வாண்டின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கி உரைக்கு நன்றி கூட தெரிவிக்காமல் அவசர அவசரமாக ஒரு நாளிலேயே முடித்து வைக்கபட்டுள்ளது. அன்றைய தினமே 3 மாத அரசின் முக்கிய செலவினங்களுக்கு முன் அனுமதியும் வழங்கப்பட்டது.

    தற்போது இவ்வாண்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 4-ந் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனநாயக ரீதியில் துறை வாரியாக விவாதம் செய்து நடத்த போதிய கால அவகாசம் கடந்த காலங்களில் வழங்கப்படவில்லை.

    தற்போது தமிழகத்தில் நடைபெறும் சட்ட மன்ற கூட்டத்தொடர் வரும் 29-ந் தேதி தெடங்கி 23 அமர்வு நாட்கள் நடைபெற உள்ளது. புதுவையிலும் நடைபெற இருக்கும் சட்ட மன்ற கூட்டத் தொடரை 23 அமர்வு நாட்களுக்கு குறைவில்லாமல் நடத்திட தாங்கள் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தல், பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவித்தல், துறை ரீதியான விவாதங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கால நிர்ணயம் செய்ய உடனடியாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை ஒன்றிரண்டு தினங்களுக்குள் கூட்ட பேரவை தலைவர் உரிய ஏற்பாட்டை செய்திட வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

    தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுவை மாநில அ.தி.மு.க. சட்டசபை கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டசபை கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசின தவறான கல்விக் கொள்கையால் பள்ளி மாணவர்களும் உயர் படிப்பு கல்வி பயிலும் மாணவர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரி தொடங்கும் போது 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனற உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. புதுவையில் உள்ள 4 நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஒரு இடம் கூட எம்.பி.பி.எஸ். பெற முடியாத சூழலையை அரசு திட்டமிட்டு உருவாக்கியது.

    அதே போல் புதுவை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 3 மருத்துவ கல்லூரியில் மொத்தம் 115 முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடம் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த இடங்களுக்கு நாளை அரசின் மூலம் மாஆப் கவுன்சிலிங் நடைபெற உள்ளது.

    இதில் புதுவையை சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதன் பிறகு அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியிலில் உள்ள மாணவர்களுக்கு சீட் வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அரசு காலம் கடந்து வெளியிட்டது. நிர்வாக கோட்டா முழுவதும் அகில இந்தி மாணவர்களை கொண்டு நிரப்பப்படுவதால் புதுவையை சேர்ந்தவர்களுக்கு ஒரு இடம் கூடம் கிடைக்கப்பெற வாய்ப்பு இல்லை. இந்த நிலை மாற்றப்பட்டு மாஆப் கவுன்சில் நிர்வாக கோட்டாவிற்கு புதுவையை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்க கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவையில் சுயநிதி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஒரு விளம்பரம் செய்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக நிறைவேற்றாத ஒரே மாநிலம் புதுவைதான். தற்போது கல்வி கட்டணம் நிர்ணயம் செய்துள்ள நிலையில் அரசிடம் தங்களது குறைகளை தெரிவிக்காமல் விளம்பரம் செய்துள்ளனர். இது மதரீதியான கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது.

    மேலும், அரசுக்கு சவால் விடும் விதத்திலும் அமைந்துள்ளது. ஆட்சியாளர்கள் ஒருவரின் தூண்டுதல் பேரில் இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அரசு மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உடனடியாக அரசு இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி தனியார் பள்ளிகள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். அரசு தங்களின் கோரிக்கைளை ஏற்கவில்லையென்றால் ஜுன் மாதம் முதல் பள்ளிகளை மூடுவோம் என்று அரசுக்கு மிரட்டல் விடுத்த்துள்ளது கண்டிக்கத்தக்கது அவ்வாறு மூடும் பள்ளிகளை அரசு கையகப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    ×