search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரண்பேடி கவர்னர் பதவிக்கு தகுதி இல்லாதவர்- நாராயணசாமி கடும் தாக்கு
    X

    கிரண்பேடி கவர்னர் பதவிக்கு தகுதி இல்லாதவர்- நாராயணசாமி கடும் தாக்கு

    எம்.எல்.ஏ. பேசியபோது மைக்கை துண்டித்த கவர்னர் கிரண்பேடி பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #narayanasamy #kiranbedi

    புதுச்சேரி:

    சென்னை விமான நிலையத்தில் புதுவை மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் மழை புயல் வெள்ளம் வந்ததால் மக்களை பாதுகாக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றவும் சகஜ வாழ்க்கை பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. பேரிடர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் செயல்பட கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

    வருவாய் துறை அதிகாரிகள், மின்சாரத்துறை, போலீஸ் இணைந்து செயல் படுவார்கள். உள்ளாட்சி துறையினர் தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுப்பட வேண்டும். 24 மணி நேரமும் அதிகாரிகள் பணியில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். 7-ந்தேதி 25 செ.மீ. மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் புதுவை அதிகாரிகளுடன் பேசி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பாக மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு முன் திட்டத்தை அறிவித்தது. தமிழகத்தில் 2 இடங்களிலும், புதுவை- காரைக்கால் பகுதியிலும் எடுக்க அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதால் காரைக்கால் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் சிதம்பரம், நாகப்பட்டினம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டு இருப்பதாக தகவல் வந்து உள்ளன. இதனால் தமிழகத்திற்கு எந்தவிதமான பயனும் இல்லை. மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு தமிழகத்தில் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் பாரதீய ஜனதா கட்சி மீது வெறுப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அப்பகுதி மக்களை அழைத்து பேசி அவர்களது கருத்துக்களை கேட்டு ஒப்புதலுடன் செய்து இருக்க வேண்டும். எந்தவொரு திட்டத்தையும் மக்கள் மீது திணிக்க கூடாது.

    புதுவையில் திறந்த கழிப்பிடம் இல்லாத மாநிலம் என்று அறிவிக்கும் விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசும்போது கவர்னர் ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. பேசுவதை நிறுத்துமாறு சொல்லி மைக்கை அணைத்தால் அன்பழகன் ஆத்திரப்பட்டு பேசியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பற்றி பேசும்போது கவர்னர் வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். அவர் பேசியபின் பதிலளித்திருக்கலாம். மைக்கை அணைக்க கவர்னர் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

    ஆனாலும் மேடையில் அமைச்சர் நமச்சிவாயத்திடம் சட்டமன்ற உறுப்பினர் தவறாக நடந்து கொண்டதையும் ஏற்க முடியாது. இது சம்பந்தமாக விசாரித்து என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம். பொது இடங்களில் நடக்கும் விழாக்களில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

    சட்டமன்ற உறுப்பினருக்கு பேச உரிமை உண்டு. கவர்னர் தனது அதிகாரத்திற்குட்பட்டு செயல்பட வேண்டும். பேசகூடாது என்று மைக்கை அணைக்க கவர்னருக்கு எந்த உரிமையும் கிடையாது.

    ஒரு உறுப்பினர் தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசியிருக்க வேண்டும். அதிகமாக பேச நேரம் தந்திருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் உரிமையை யாரும் பறிக்க கூடாது. அதுப்போல் அமைச்சரின் மதிப்பை உறுப்பினர் குறைக்க கூடாது.

    சமுதாயத்தில் அவரவர் தங்கள் அதிகாரத்துக் குட்பட்டு செயல்பட்டால் எந்த பிரச்சனையும் வராது. பொது விழாக்களில் கவர்னர் தொடர்ந்து அதிகார எல்லையை மீறி செயல் படுகிறார். அதிகாரமில்லாத இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து தன்னிச்சையாக உத்தரவிடுவது. அமைச்சருக்கு தெரியாமல் அதிகாரிகளை தனியாக அழைத்து கூட்டம் போட்டு பேசுவது. கவர்னர் அதிகார எல்லை மீறல் பற்றி பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் சொல்லியிருக்கிறேன்.

    புதுவையில் காங்கிரஸ் அரசு இருப்பதால் தொல்லை தருவதற்காக இந்தம்மாவை அனுப்பி இருக்கிறார்கள். இவர் கவர்னர் பதவிக்கு தகுதி இல்லாதவர். அவரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமரிடம் சொல்லியிருக்கிறேன். இதில் பிரதமர் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.

    புதுவை மக்களுக்கு அவரால் எந்த பலனும் கிடையாது. எல்லா மக்களையும் துன்புறுத்தும் வேலையை தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு நிர்வாகம் தெரியவில்லை. ஒரு சில அதிகாரிகள் சொல்வதை கேட்டுக் கொண்டு நடக்கிறார்.


    புதுவை சின்ன அமைதியான மாநிலம். மக்கள் அமைதியும் வளர்ச்சியையும் விரும்புகிறார்கள். அதற்கான திட்டங்களை நாங்கள் நிறைவேற்றுகிறோம். அந்த திட்டங்களை நிறைவேற்றும் போது முட்டுக்கட்டையை தான் போடுகிறார். மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றும் எண்ணமே கிடையாது.

    விளம்பரம் வேண்டும், செய்திகளில் பெயர் வர வேண்டும், பிரதமருக்கு டுவிட்டரில் தகவல் அனுப்புவது மட்டும் தான் கவர்னர் வேலையாக இருக்கிறார்.

    சட்டமன்றம் இருக்க கூடிய யூனியன் பிரதேசங்களில் அன்றாட செயல்பாடு நிர்வாகத்தை நடத்த அந்தந்த துறை அமைச்சருக்கும், முதல்-அமைச்சருக்கும் அதிகாரம் உண்டு. கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரமும் கிடையாது. தன்னிச்சையாக எந்தவொரு உத்தரவும் போட முடியாது.

    கவர்னர் மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளை விக்க கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. நீதிமன்ற தீர்ப்பையும் மக்களையும் கவர்னர் அவமதிக்கிறார்.

    2 ஆண்டுகளாக புதுவை மாநிலத்தை பற்றி தெரியாமல் அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்டு அரசின் செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கிறார் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #narayanasamy #kiranbedi

    Next Story
    ×