search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold smuggling"

    • கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
    • தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து மதுரை வரும் பயணிகள் வரி ஏய்ப்புக்காக தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களின் உடமைகளிலும் சுங்கா இலாகாவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த மணிவேல் மனைவி கீதா (வயது 42) என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சல்லடை போட்டு சோதித்தனர். இதில் கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் ரூ.27 லட்சத்து 86 ஆயிரத்து 930 மதிப்பில் 458 கிராம் எடையுள்ள தங்கம் என தெரிய வந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து அந்த பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்திறங்கிய விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளில் அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினார்கள்.
    • ஒட்டுமொத்தமாக 3 கிலோ 200 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. அந்த தங்கத்தை அதிகாரிகள் மீட்டனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு அருகே தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்திறங்கிய விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளில் அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது எந்த பயணிகளிடமும் தங்கம் கிடைக்கவில்லை. இதற்கிடையில் மாலத்தீவில் இருந்து வந்த ஒரு விமானத்தின் கழிவறையில் தங்கம் கிடப்பதை ஊழியர்கள் பார்த்தனர்.

    இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் அங்கு சென்று கழிவறையில் கிடந்த தங்கத்தை கைப்பற்றி விசாரித்தனர். ஒட்டு மொத்தமாக 3 கிலோ 200 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. அந்த தங்கத்தை அதிகாரிகள் மீட்டனர்.

    அவற்றின் மதிப்பு ரூ.1¾ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாலத்தீவில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்று பயந்து கழிவறையிலேயே மர்மநபர்கள் விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 7½ கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 315 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    சென்னை:

    வெளிநாடுகளில் இருந்து கடல் வழியாகவும், விமானம் மூலமாகவும் தங்கத்தை மறைத்து கடத்தி எடுத்து வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரையில் சுமார் 100 கிலோ அளவுக்கு கடத்தல் தங்கம் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    சென்னை ஐகோர்ட் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரில் கடத்தப்பட்ட 11 கிலோ தங்கம் மற்றும் ரூ.2லட்சத்து 30 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செயப்பட்டன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுகார்பேட்டை பகுதியில் நகை பட்டறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அட்டை பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3½ கிலோ தங்க கட்டிகள் பிடிபட்டன.

    திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 7½ கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அன்று சென்னை விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் மலேசிய பயணிகளிடம் இருந்து 3 கிலோ தங்கம் பிடிப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.73 கோடியாகும்.

    இப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 315 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதன்படி இந்த ஆண்டு இதுவரையில் 100 கிலோ சென்னையில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருவாய் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் கொண்டு வந்த உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கன்னவரம் விமான நிலையத்திற்கு நேற்று ஷார்ஜாவில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.

    விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர்.

    அதில் 1.4 கிலோ எடையுள்ள கால் கொலுசுகள், செயின்கள், மோதிரம், வளையல் உள்ளிட்ட வெளிநாட்டு தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விஜயவாடா வருவதற்கு முன்பு கோவாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானத்தில் சென்று உள்ளனர். பின்னர் அங்கிருந்து தங்க நகைகளை கடத்தி வந்ததக தெரிவித்தனர்.

    • வெளிநாடுகளில் இருந்து வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறையினர் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகி வருகிறது.
    • பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் 1.69 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு இண்டிகோ, மலிந்தோ, ஸ்ரீலங்கன், ஏர் ஏசியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமான சேவை நடைபெற்று வருகிறது.

    இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறையினர் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகி வருகிறது.

    நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த சாதிக் அலி(வயது 40), அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் காலணியில் மறைத்து எடுத்து வந்த ரூ.1.08 கோடி மதிப்பிலான 1.872 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்து வந்த, புதுக்கோட்டையைச் சேர்ந்த செங்குட்டுவன்(வயது 37) என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 61.21 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்களில் மட்டும், திருச்சி விமான நிலையத்தில் 2.15 கிலோ கடத்தல் தங்கம், வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் 1.69 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

    • கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • காசர்கோடு பேக்கல் பகுதியைச் சேர்ந்த தம்ஜித் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் வழியாக அரபு நாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கம் கடத்தி வருவதும் அதனை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கண்ணூர் சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது காசர்கோடு பேக்கல் பகுதியைச் சேர்ந்த தம்ஜித் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், தனியாக அழைத்துச் சென்று உடமைகளை சோதனை செய்தனர். இதில் அவர் தாள் பெட்டிக்குள் ஓட்டி வைத்து 973.5 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.56 லட்சத்து 32 ஆயிரம் ஆகும்.

    அதனை மீட்ட போலீசார், தம்ஜித்தையும் கைது செய்தனர். அவர் அபுதாபியில் இருந்து தங்கத்தை கடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இதே விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து மட்டனூரைச் சேர்ந்த முசாபிர் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ..49½ லட்சம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொச்சி நெடும்பசேரி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • 2 பெண்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில விமான நிலையங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனை சுங்கத்துறையினர் அடிக்கடி கைப்பற்றி தங்கம் கடத்துவோரை கைது செய்தும் வருகின்றனர்.

    இந்த நிலையில் கொச்சி நெடும்பசேரி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது கனரக உடமைகள் இல்லாத 2 பெண்கள், கிரீன் சேனல் வழியாக வேகமாக செல்ல முயன்றனர்.

    அவர்களை சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். ஆனால் 2 பெண்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் தனியாக அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அந்த பெண் ஆயிரத்து 266 கிராம் எடை உள்ள 4 தங்க கேப்சூல்களை துபாயில் இருந்து கடத்தி வந்துள்ளார். அவரை கைது செய்து தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் மலப்புரத்தை சேர்ந்த உமைபா என்ற பெண், தனது உள்ளாடையில் (காமிசோல்) உள்ள அடுக்குகளுக்கு இடையே 763 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் வைத்து தைத்து கடத்தி வந்துள்ளார். அதனையும் சுங்க இலாகாவினர் கைப்பற்றினர். தொடர்ந்து உமைபா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 80 கிராம் தங்க ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் ஒவ்வொருவராக பரிசோதனை செய்யப்பட்டனர்.
    • தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தீவிர சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் ஒவ்வொருவராக பரிசோதனை செய்யப்பட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக 4 பயணிகள் இருந்தனர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தொப்பி, முழங்கால் மற்றும் உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் 4 பேரிடம் இருந்து 3 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.77 கோடி ஆகும். தங்கம் கடத்தி வந்த 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை.

    • கரிப்பூர் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 6 பயணிகளும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது கரிப்பூர் விமான நிலையம். சர்வதேச விமான நிலையமான இது, கோழிக்கோட்டுக்கு அருகே இருக்கிறது. சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது.

    இதனால் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பரபரப்பான விமான நிலையமாக திகழ்ந்து வருகிறது. அரபு நாடுகளில் இருந்து விமானம் வருவதால் அங்கிருந்து தங்கத்தை கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அதனை கண்காணிக்கும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரிப்பூர் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதனடிப்படையில் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 6 பயணிகள் சிக்கினர்.

    துபாயில் இருந்து பயணம் செய்து வந்த கோழிக்கோடு கொடுவள்ளி பகுதியை சேர்ந்த முகம்மது மித்லாஜ் (வயது21) என்பவர் தனது பையில் தாள் வடிவில் 985 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார். அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதேபோன்று கொடு வள்ளி பகுதியை சேர்ந்த பஷீர்(40), கோழிக்கோடு சவுர்காடு பகுதியை சேர்ந்த அஜீஸ் (45), மலப்புரத்தை சேர்ந்த சமீர்(34), அப்துல் சக்கீர்(34), லிகீஷ்(40) ஆகிய 5 பேர் கேப்சூலுக்குள் தங்கத்தை வைத்து விழுங்கி வயிற்றுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தனர்.

    ஸ்கேன் செய்தபோது, அவர்களது குடலுக்குள் கேப்சூல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை வெளியே எடுத்து சோதனை செய்தபோது கேப்சூலுக்குள் தங்கம் இருந்தது தெரியவந்தது. பஷீரிடம் 619 கிராம், அஜீசிடம் 970 கிராம், சமீரிடம் 1,277 கிராம், சக்கீரிடம் 1,066 கிராம், லிகீசிடம் 543 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 6 பயணிகளும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 5.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றின் மதிப்பு ரூ.3கோடி ஆகும்.

    • சுங்கத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே சொல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை ஓட்டுனர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்.
    • பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 56 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட் , ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமானங்களை இண்டிகோ, ஸ்கூட்டர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மலிந்தோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகிறது.

    இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது விமான நிலையத்தில் சுங்கத்துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த குமார் என்பவர் வேகமாக வெளியேறுவதை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை வெளியே எடுத்து செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த அறந்தாங்கி சேர்ந்த நடராஜன் (வயது 43) பயணி கொண்டு வந்த ஒரு கிலோ தங்கத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவி செய்ததாக தெரிய வருகிறது.

    மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல முடியாத சோதனை மையத்தை சுங்கத்துறையின் ஓட்டுநர் தாண்டிச் சென்று பயணியிடமிருந்து தங்கத்தை பெற்று வெளியே கொண்டு செல்ல முயன்றபோது பிடிபட்டுள்ளார்.

    இந்த தங்கத்தை விமான நிலையத்தில் வெளியே பார்க்கிங் பகுதியில் காத்திருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டேனியல் மைக்கேல் என்பரிடம் கொடுப்பதற்கு முற்பட்டதாக தெரிய வருகிறது.

    இதனைத் தொடர்ந்து தங்கத்தை பெறுவதற்காக காத்திருந்த டேனியல் மைக்கையும் சுங்கத்துறையினர் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிநாடுகளில் இருந்து பலமுறை தங்கத்தை கொண்டு வந்து ஓட்டுநரின் உதவியுடன் வெளியே கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்ததாக தெரிய வருகிறது.

    மேலும் சுங்கத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே சொல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை ஓட்டுனர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் எனவும்,

    இந்த கடத்தலுக்கு அதிகாரிகள் யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? எனவும் சுங்கத்துறையின் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த கடத்தலில் பங்கு பெற்ற மூவரையும் கைது செய்ய சுங்கதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் சுங்கத்துறை ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் தெரிய வருகிறது.

    நேற்று இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 56 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தங்கக்கடத்தலில் ஈடுபடும் நபருக்கு கடத்தும் தங்கத்தின் அளவைப் பொறுத்து டிரிப் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கூலி கொடுப்பதாக சொல்கிறார்கள்.
    • விமான நிலையங்களில் பல கட்ட கண்காணிப்பு, சோதனைகள் இருந்த போதிலும் கடத்தல் தங்கம் தொடர்ச்சியாக பிடிபடுவது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணி மறைத்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கம் பிடிபட்டது. சென்னை விமான நிலையத்தில் ஸ்க்ரூ, கம்பி, பேட்டரியில் மறைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 1 கிலோ 200 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இது போன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது. கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலைமுடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்சம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.

    இவர்கள் "ரூம் போட்டு யோசிப்பாங்களோ?"னு வடிவேலு பாணியில்தான் கேட்கத் தோன்றுகிறது.

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 264 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ. 3 கோடியே 16 லட்சத்து 12 ஆயிரமாகும்.

    கடந்த 2020 முதல் 2023 பிப்ரவரி வரையிலான மூன்றாண்டு காலத்தில் மட்டும் நாடு முழுவதும் தங்கம் கடத்தல் தொடர்பாக சுமார் 9, 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் 8, 956.49 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு விமான நிலையங்கள் வழியே தங்கம் கடத்தப்படுவதில் கேரளம் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கிறது.

    3-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இவை மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சௌத்ரி வழங்கிய அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள். நமது பாரத தேசத்தின் தங்க தேவை ஆண்டொன்றுக்கு 800 டன் என்கிறார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு தங்கம் விமானம் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருவதாக கவலையுடன் குறிப்பிடுகிறது உலக தங்க கவுன்சில்.

    தங்கம் இறக்குமதி தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள், விதிக்கப்படும் அளவுக்கு அதிகமான வரிகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. தற்போது இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி. என 18.45 சதவீதம் வரை தங்கத்திற்கு வரி விதிக்கப்படுகிறது.

    கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு ஆண்டில் தங்க கடத்தலின் அளவு அதிகரித்திருப்பதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 12.5% லிருந்து 7.5% ஆக குறைக்க மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

    திருச்சி, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு அதிகம் விமானங்கள் இயக்கப்படுகிறது.

    மேற்கண்ட நாடுகளில் தங்கத்தின் மச்சம் (தரம்) சரியாக இருக்கும் என்பதாலேயே அதிகளவில் தங்கம் வளைகுடா நாடுகளிலிருந்து கடத்தி வரப்படுகிறது.

    முழுக்க முழுக்க இத்தகைய தங்கக்கடத்தல் என்பது உள்ளூர் மார்க்கெட்டை சார்ந்து தான் நடைபெறுகிறது.

    இதற்கென்று பாரம்பரியமான வலை பின்னலை மிகக்கச்சிதமாக கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்.

    ஒரு முறை தங்கக்கடத்தலுக்காக பயணிக்க குருவி (கடத்தல்காரர்) ஒருவருக்கு மிகக்குறைந்தபட்சம் 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை செலவு செய்கிறார்கள்.

    தங்கக்கடத்தலில் ஈடுபடும் நபருக்கு கடத்தும் தங்கத்தின் அளவைப் பொறுத்து டிரிப் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கூலி கொடுப்பதாக சொல்கிறார்கள்.

    இதில் தினமும் சிக்குவது சிறிய வியாபாரிகள். பெரிய திமிங்கலங்கள் சத்தம் இல்லாமல் தப்பி சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பொதுவாக இருக்கிறது.

    கல்லூரி மாணவர்கள் தங்களின் ஆடம்பர செலவுகளுக்காக குருவிகளாக மாறி கடத்தலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கடத்தலில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டால் அதன் உரிமையாளர்கள் கடத்தல் தங்கத்திற்கான முழு வரியையும் செலுத்தி தங்கத்தையும் மாணவனையும் மீட்டு விடுகிறார்கள்.

    இதனை சாதாரணமாக சில மாணவர்கள் பகுதி நேர வேலையாக தொடர்ச்சியாக பார்த்து வருகிறார்கள்.

    விமான நிலையங்களில் பல கட்ட கண்காணிப்பு, சோதனைகள் இருந்த போதிலும் கடத்தல் தங்கம் தொடர்ச்சியாக பிடிபடுவது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது. விமான நிலையங்களில் பிடிபடும் தங்கத்தை விட கடத்தப்படும் தங்கத்தின் அளவு பல மடங்கு அதிகம் என சொல்கிறார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு சப்தமில்லாமல் நடக்கிறது. அதிகாரிகள் நேர்மையாக இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
    • பையில் களிமண் போன்ற பொருளுடன் தங்க துகள்கள் கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    மதுரை:

    சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    எனவே அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தினர். ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், அவர் கொண்டு வந்த உடைமைகளையும் பரிசோதித்தனர்.

    அப்போது அவர் கொண்டு வந்த பையில் களிமண் போன்ற பொருளுடன் தங்க துகள்கள் கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது. களிமண்ணில் இருந்து தங்கத்துகள்களை அதிகாரிகள் பிரித்து எடுத்தபோது, ரூ.59 லட்சத்து 28 ஆயிரத்து 210 மதிப்புள்ள 995 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×