search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வளைகுடா நாடுகளில் இருந்து தொடர்ந்து கிலோ கணக்கில் கடத்தி வரப்படும் தங்கம்
    X

    வளைகுடா நாடுகளில் இருந்து தொடர்ந்து கிலோ கணக்கில் கடத்தி வரப்படும் தங்கம்

    • தங்கக்கடத்தலில் ஈடுபடும் நபருக்கு கடத்தும் தங்கத்தின் அளவைப் பொறுத்து டிரிப் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கூலி கொடுப்பதாக சொல்கிறார்கள்.
    • விமான நிலையங்களில் பல கட்ட கண்காணிப்பு, சோதனைகள் இருந்த போதிலும் கடத்தல் தங்கம் தொடர்ச்சியாக பிடிபடுவது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணி மறைத்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கம் பிடிபட்டது. சென்னை விமான நிலையத்தில் ஸ்க்ரூ, கம்பி, பேட்டரியில் மறைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 1 கிலோ 200 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இது போன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது. கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலைமுடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்சம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.

    இவர்கள் "ரூம் போட்டு யோசிப்பாங்களோ?"னு வடிவேலு பாணியில்தான் கேட்கத் தோன்றுகிறது.

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 264 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ. 3 கோடியே 16 லட்சத்து 12 ஆயிரமாகும்.

    கடந்த 2020 முதல் 2023 பிப்ரவரி வரையிலான மூன்றாண்டு காலத்தில் மட்டும் நாடு முழுவதும் தங்கம் கடத்தல் தொடர்பாக சுமார் 9, 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் 8, 956.49 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு விமான நிலையங்கள் வழியே தங்கம் கடத்தப்படுவதில் கேரளம் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கிறது.

    3-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இவை மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சௌத்ரி வழங்கிய அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள். நமது பாரத தேசத்தின் தங்க தேவை ஆண்டொன்றுக்கு 800 டன் என்கிறார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு தங்கம் விமானம் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருவதாக கவலையுடன் குறிப்பிடுகிறது உலக தங்க கவுன்சில்.

    தங்கம் இறக்குமதி தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள், விதிக்கப்படும் அளவுக்கு அதிகமான வரிகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. தற்போது இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி. என 18.45 சதவீதம் வரை தங்கத்திற்கு வரி விதிக்கப்படுகிறது.

    கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு ஆண்டில் தங்க கடத்தலின் அளவு அதிகரித்திருப்பதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 12.5% லிருந்து 7.5% ஆக குறைக்க மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

    திருச்சி, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு அதிகம் விமானங்கள் இயக்கப்படுகிறது.

    மேற்கண்ட நாடுகளில் தங்கத்தின் மச்சம் (தரம்) சரியாக இருக்கும் என்பதாலேயே அதிகளவில் தங்கம் வளைகுடா நாடுகளிலிருந்து கடத்தி வரப்படுகிறது.

    முழுக்க முழுக்க இத்தகைய தங்கக்கடத்தல் என்பது உள்ளூர் மார்க்கெட்டை சார்ந்து தான் நடைபெறுகிறது.

    இதற்கென்று பாரம்பரியமான வலை பின்னலை மிகக்கச்சிதமாக கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்.

    ஒரு முறை தங்கக்கடத்தலுக்காக பயணிக்க குருவி (கடத்தல்காரர்) ஒருவருக்கு மிகக்குறைந்தபட்சம் 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை செலவு செய்கிறார்கள்.

    தங்கக்கடத்தலில் ஈடுபடும் நபருக்கு கடத்தும் தங்கத்தின் அளவைப் பொறுத்து டிரிப் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கூலி கொடுப்பதாக சொல்கிறார்கள்.

    இதில் தினமும் சிக்குவது சிறிய வியாபாரிகள். பெரிய திமிங்கலங்கள் சத்தம் இல்லாமல் தப்பி சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பொதுவாக இருக்கிறது.

    கல்லூரி மாணவர்கள் தங்களின் ஆடம்பர செலவுகளுக்காக குருவிகளாக மாறி கடத்தலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கடத்தலில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டால் அதன் உரிமையாளர்கள் கடத்தல் தங்கத்திற்கான முழு வரியையும் செலுத்தி தங்கத்தையும் மாணவனையும் மீட்டு விடுகிறார்கள்.

    இதனை சாதாரணமாக சில மாணவர்கள் பகுதி நேர வேலையாக தொடர்ச்சியாக பார்த்து வருகிறார்கள்.

    விமான நிலையங்களில் பல கட்ட கண்காணிப்பு, சோதனைகள் இருந்த போதிலும் கடத்தல் தங்கம் தொடர்ச்சியாக பிடிபடுவது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது. விமான நிலையங்களில் பிடிபடும் தங்கத்தை விட கடத்தப்படும் தங்கத்தின் அளவு பல மடங்கு அதிகம் என சொல்கிறார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு சப்தமில்லாமல் நடக்கிறது. அதிகாரிகள் நேர்மையாக இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×