search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "evks elangovan"

    • அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி வேட்பாளராக வருவார்.
    • தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தலில் பயம் வந்துவிட்டது

    சென்னை :

    சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாடுபடுவோம். அடுத்து கர்நாடகாவில் தேர்தல் வருகிறது. அங்கு எனக்கு தேர்தல் குழு பணி கட்சி சார்பில் போடப்பட்டுள்ளது.

    இருந்தாலும், ஈரோட்டில் அதிக நேரத்தை செலவிடுவதாக எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனிடம் தெரிவித்திருக்கிறேன். அந்தவகையில் ஈரோடுக்குத்தான் முன்னுரிமை அளிப்பேன். இலங்கை பயணத்தை முடித்த பிறகு களத்தில் இறங்குவேன். நிச்சயமாக பிப்ரவரி 27-ந்தேதி வாக்குப்பதிவின் போது பார்ப்பீர்கள். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி வேட்பாளராக வருவார். அதில் எங்களுக்கு கடுகளவு கூட சந்தேகம் இல்லை. கூட்டணி தர்மத்தின்படி, கட்சி வேட்பாளரை களம் இறக்கியுள்ளோம். அவரை வெற்றி பெறச்செய்ய வைப்பது தார்மீகக்கடமை. அதனை பா.ஜ.க. நிச்சயம் செய்யும்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில்தான் தி.மு.க.வினர் அனைவரும் உட்கார்ந்து இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஆளுங்கட்சி பயந்து, ஒரு இடைத்தேர்தலை தமிழக வரலாற்றில் இதுபோல் சந்தித்தது கிடையாது. இதன் மூலம் தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தலில் பயம் வந்துவிட்டது என்றே தெரிகிறது.

    ஈரோட்டில் தி.மு.க. கூட்டணி சார்பில் நிற்கும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாயைத்திறந்தால் போதும், நமக்கு ஓட்டு அதிகரித்துக்கொண்டே வரும். அந்தவகையில் எங்கள் கூட்டணிக்கு பிரசார பீரங்கியே அவர்தான். இளையராஜாவை திட்டிவிட்டார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை திட்டிவிட்டார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை திட்டிவிட்டார். அவரால் சும்மா இருக்கமுடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்னுடைய பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
    • மக்களின் தேவைகளை நான் பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்திருக்கிறது.

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மாலை மலர் யூடியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

    என் மகன் மறைந்த திருமகன் ஈவெரா, சட்டமன்ற உறுப்பினராக இருந்து தொகுதி மக்களுக்கு நல்ல காரியங்களை செய்துள்ளார். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த பணிகளை நான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற முனைப்பில் போட்டியிடுகிறேன். என்னுடைய பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

    இங்கே மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் இங்கே இருக்கின்றன. அந்த பணிகளை செய்வதற்கு வாய்ப்பை தாருங்கள் என்று மக்களோடுதான் பேசிக்கொண்டிருக்கிறேனே தவிர, சீமான் போன்றவர்கள் சொல்லும் கருத்துக்கெல்லாம் நான் முக்கியத்துவம் தருவதில்லை.

    என்னைப் பொருத்தவரை அதிமுவில் அவர்கள் பிரிந்து இருந்தாலும் சரி, இணைந்து இருந்தாலும் சரி ஒன்றுதான். ஈரோடு மக்களின் தேவைகளை நான் பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்திருக்கிறது. எனவே, எதிரணியில் எப்படி போட்டியிட்டாலும் எனக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    கிருஷ்ணம்பாளையம், வைராபாளையம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    * மாதாந்திர மின்கட்டணம் விரைவில் நடைமுறைக்கு வரும்.

    * மின்கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

    * ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    * ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனது மகன் பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் 30 ஆயிரம் பேரை புதிதாக இணைத்துள்ளார்கள் என்று புகார் அளித்துள்ளார்.

    ஈரோடு:

    தி.மு.க. கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். என்னை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டிட்டு வெற்றி பெறுவதை அதிகமாக விரும்புகிறேன்.

    எனது மகன் பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நமது முதல்-அமைச்சர் ஈரோட்டுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்காக நான் பாடுபடுவேன். இதற்காக அமைச்சர் முத்துசாமி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து செயல்படுவேன்.

    இந்த தேர்தலில் நிச்சயமாக நாங்கள் மிக பெரும் வெற்றியை பெறுவோம். ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாடுபடுவேன். இதேப்போல் சாய கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பாடுபடுவேன்.

    தி.மு.க.வினர் தேர்தல் பணிகளை சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு ஆகியோர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் மிக பெரிய வெற்றியை பெறுவோம்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. இரு அணிகளையும் இணைக்க முயற்சி செய்து வருகிறாரே என்ற கேள்விக்கு,

    அண்ணாமலையை பொறுத்தவரை அவர் என்னை விட பெரிய மனிதர். நான் அவரை விட சின்ன மனிதர். அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. மேலும் எதை பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன்.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் 30 ஆயிரம் பேரை புதிதாக இணைத்துள்ளார்கள் என்று புகார் அளித்துள்ளார். அது குறித்து கேட்டதற்கு, அவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உங்களுக்கு உழைக்கவே எனது வாழ்க்கையின் இறுதி லட்சியமாக இருக்கும்.
    • நல்லவன் என்று சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கெட்டவன் என்று சொல்கின்ற அளவிற்கு நடக்க மாட்டேன்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதன் முதலில் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார். மாணிக்கம்பாளையம் பகுதியில் முதல் நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

    எனது மகன் திருமகன் ஈ.வெ.ரா 1½ ஆண்டுகளாக இந்த பகுதி மக்களுக்காக உழைத்திருக்கிறார். திருமகன் ஈ.வெ.ரா மறைந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் துக்கத்தில் துடித்துக்கொண்டிருந்த எனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் ஊக்கமும் கொடுத்தார்.

    நான் போட்டியிட முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் விருப்பம் தெரிவித்ததால் நான் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    ஈரோடு நகர் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து இருக்கிறது. அதனை தீர்க்க வேண்டும். தற்போது அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து ஈரோட்டு மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன் என உறுதி அளிக்கிறேன். ஈரோட்டில் கடந்த ஒரு வாரங்களாக கூட்டணி கட்சியினர் முத்துசாமி தலைமையில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து கொண்டிருக்கிறேன்.

    முதல் முதலாக முத்துசாமியுடன் உங்களை சந்திப்பது இங்கு தான் என்றும். எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ நீங்கள் நம்புகின்ற விஷயம் என்பதால் சொல்கிறேன் "பிள்ளையார் சுழியை இங்குதான் போட்டிருக்கிறேன்.

    மேலும் என்னை உங்களுக்காக உழைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு உழைக்கவே எனது வாழ்க்கையின் இறுதி லட்சியமாக இருக்கும். நல்லவன் என்று சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கெட்டவன் என்று சொல்கின்ற அளவிற்கு நடக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா முதலில் நாம் தமிழர் கட்சியில் இணைவதாக இருந்ததாக சீமான் பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சீமான் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர் என்றும், அவர் மீது பாசம் உள்ளது. ஆனால் அடிக்கடி சொன்னதையே மாற்றி மாற்றி சொல்லக்கூடியவர்.

    சீமான் எனது பாசத்திற்கு உரியவர் என்றார். மேலும் என்னை இகழ்ந்தாலும், எனது மகனை பற்றி சொன்னாலும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன். அன்பின் மிகுதியால் சொல்கிறார் என எடுத்துக்கொள்வேன் என்றார்.

    • ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கென்று தேர்தல் அலுவலகமும் திறந்துள்ளனர்.
    • அமைச்சர்களிடம் சமுதாயம் சார்ந்த ஓட்டுகள் எவ்வளவு உள்ளது என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் மத சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக தி.மு.க.வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, ஏ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சக்கர பாணி, மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கயல்விழி செல்வராஜ் ஆகிய 11 அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் 31 பேர்களை தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற செய்து தி.மு.க. மேலிடம் பணியாற்றி வருகிறது.

    ஈரோடு தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கான வார்டுகளை பிரித்து தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

    ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கென்று தேர்தல் அலுவலகமும் திறந்துள்ளனர். அமைச்சர்களிடம் சமுதாயம் சார்ந்த ஓட்டுகள் எவ்வளவு உள்ளது என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அந்த பட்டியலுக்கு ஏற்ப கட்சி நிர்வாகிகளை அனுப்பி ஓட்டு கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அங்கு சென்றுள்ள அமைச்சர்கள் முதற்கட்டமாக உள்ளூர் கட்சிக்காரர்கள்-கூட்டணி கட்சிக்காரர்களிடம் ஆலோசனை நடத்தி அதற்கேற்ப ஏரியாவை பிரித்து கட்சி நிர்வாகிகளை பணியாற்ற நியமித்துள்ளனர்.

    இவர்களிடம் வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியலும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலை வைத்து வீடு வீடாக வாக்காளர் பட்டியலை கட்சி நிர்வாகிகள் சரி பார்த்து வருகிறார்கள்.

    யாரும் வீடு மாறி இருக்கிறார்களா? அல்லது அதே முகவரியில் வசிக்கிறார்களா? என்பதை உறுதிபடுத்தி வருகின்றனர். இதை வைத்துதான் ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளுக்கு எவ்வளவு ஓட்டு என்று கணிக்கப்படும்.

    இந்த பணிகளை வேகப்படுத்துவதற்காக மேலும் பல அமைச்சர்கள் ஈரோடு தொகுதிக்கு வந்துள்ளனர். அதுமட்டுமின்றி தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் ஈரோடு தொகுதிக்கு செல்ல வேண்டும் என்று தலைமையில் இருந்து உத்தரவு வந்ததால் அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர்.

    இவர்கள் அமைச்சர்கள் சொல்லும் கட்டளையை நிறைவேற்றும் செயல் வீரர்களாக பணியாற்றி வருகிறார்கள். எம்.எல்.ஏ.க்களுடன் அவரது ஆதரவாளர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

    இதேபோல் கூட்டணி கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இதனால் லாட்ஜ், அனைத்தும் நிரம்பி விட்டது. அங்கு இடம் கிடைக்காதவர்கள் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். தனி வீட்டையும் வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.

    ஈரோட்டில் இடம் கிடைக்காதவர்கள் அருகில் உள்ள பவானிக்கு சென்று தங்கி அங்கிருந்து ஈரோட்டுக்கு வந்து செல்கின்றனர்.

    • வேட்புமனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடக்கிறது.
    • 10-ந் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவரிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

    வேட்புமனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடக்கிறது. 8-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 10-ந் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வருகிற 3-ந் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். அவர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மனுத்தாக்கல் செய்கிறார்.

    • நாம் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
    • வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பேன்.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை ஈரோடு பெருந்துறைரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று நடந்த இதன் திறப்பு விழாவில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி, அழகிரி ஆகியோருக்கும், என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் அதிக பாசத்தை பொழிந்து வரும், தமிழ் மக்களின் காவலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் பெயர் அறிவிப்புக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு எதையும் எதிர்பாராமல் பிரசாரத்தை தி.மு.க.வினர் ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் என்ற வேறுபாடுகள் கிடையாது. எல்லோரும் மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்கள்.

    இந்த தேர்தலில் மதச்சார்பற்ற அணியின் வேட்பாளராக போட்டியிடும் போது, தனிப்பட்ட முறையில் துக்கம் அதிகமாக இருந்தாலும் எனது மகன் விட்டுச்சென்ற பணிகளை தொடா்ந்து செய்ய வேண்டும் என்ற ஆவலில் தான் ஒப்புக்கொண்டேன்.

    தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு, தமிழ் கலாசாரத்துக்கு காவலனாக போர் வீரராக காத்து கொண்டு இருப்பவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது கரத்தை பலப்படுத்தும் வகையில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும்கூட, நாம் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதுதான் மு.க.ஸ்டாலினுக்கும், ராகுல்காந்திக்கும் சூட்டுகின்ற மகுடமாக இருக்கும்.

    எனது மகனைபோல், எனது தந்தையைபோல், எனது தாத்தா பெரியாரைபோல், வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பேன்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவை இப்போது சொல்ல முடியாது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. களம் இறங்குகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டார்.

    அப்போது கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்துக்கு நேரில் சென்ற காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் நேரில் ஆதரவு கேட்டார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கமல்ஹாசன், காங்கிரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுப்போம் என்று அறிவித்திருந்தார்.

    இதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று கமல்ஹாசன் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டது.

    கூட்டம் முடிந்த பிறகு கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரிப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பெரியாரின் பேரனும், எனது நண்பருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக, செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் கட்சி செய்யும்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி அருணாசலம் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    இன்றைய அரசியல் சூழ்நிலையில் மதவாத சக்திகள் முழுபலத்தோடு எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மக்கள் நீதி மய்யத்திற்கு எள்முனையளவும் கருத்து வேறுபாடு இல்லை.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனைகள் அற்ற ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளோம்.

    இந்தியாவின் பன்முகத்துவத்துவமும் இறையாண்மையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிறது. மொத்த தேசத்தையும் ஒற்றை பண்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென துடிக்கிறார்கள். மக்களின் உணவு, உடை, மொழி, கலாச்சாரம் என ஒவ்வொன்றிலும் ஊடுருவ முயற்சிக்கிறார்கள்.

    ஜனநாயக சக்திகளின் குரல்வளைகள், கருத்துரிமைகள் ஒடுக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சுதந்திரமாக செயல்படவிடாமல் கொல்லைப்புறம் வழியாக நுழைந்து மாநில உரிமைகளில் தலையிடுவதும், இடையூறு செய்வதும் தொடர்கிறது.

    இந்த ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டிய வரலாற்று கடமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது.

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெற செய்து, மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று இப்போது எதுவும் கூற முடியாது.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈரோடு இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி தி.மு.க.வின் நல்லாட்சிக்கு பரிசாக அமையும்.
    • பிரச்சாரத்துக்கு வருமாறு வைகோவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்தார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

    அதன் பிறகு அங்கிருந்து தி.நகரில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், என்.குணசேகரன் உடன் இருந்தனர்.

    இதன் பிறகு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசனை அவரது அலுவலகத்துக்கு சென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து ஆதரவு கேட்டார்.

    பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசி ஆதரவு கேட்டார். இரு வரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது திருமாவளவன் கூறுகையில், "ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று" என்று கூறினார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், "ஈரோடு இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி தி.மு.க.வின் நல்லாட்சிக்கு பரிசாக அமையும்" என்றார்.

    அதன் பிறகு எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகம் சென்றார். அங்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து ஆதரவு கோரினார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரத்துக்கு வருமாறு வைகோவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திக்க சென்றார்.

    அவருடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் கோபண்ணா, செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட தலைவர், மாநில பொதுச்செயலாளர், தமிழக காங்கிரஸ் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.
    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதல்முறையாக கடந்த 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    இந்த இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அல்லது அவரது 2-வது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இடைத்தேர்தலில் தான் போட்டியிடவில்லை. தனது 2-வது மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்தார்.

    இதனால் சஞ்சய் சம்பத் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தந்தை பெரியாரின் பேரன் ஆவார். இவர் பெரியாரின் அண்ணன் மகன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வி.கே.சம்பத்- சுலோச்சனா சம்பத்தின் மகன் ஆவார். 21.11.1948-ம் ஆண்டு பிறந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தற்போது 75 வயது ஆகிறது.

    இவர் ஆரம்ப கல்வியை ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் பயின்றார். பின்னர் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் படித்தார். தொடர்ந்து சென்னை மாநில கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.

    கல்லூரியில் படிக்கும்போதே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி செயலாளராக இருந்தார். தொடர்ந்து ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட தலைவர், மாநில பொதுச்செயலாளர், தமிழக காங்கிரஸ் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதல்முறையாக கடந்த 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தொடர்ந்து 2004-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவுத்துறை இணை அமைச்சராகவும் தொடர்ந்து வணிகம் மற்றும் தொழில்கள் துறை இணை அமைச்சராகவும், ஜவுளி துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

    2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருப்பூரிலும், 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன் அதற்கு பின்பு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடாமல் பாராளுமன்ற தேர்தலில் மட்டுமே போட்டியிட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா. மறைவின் காரணமாக 38 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் சட்டமன்ற தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனது மனதில் பட்டதை தைரியமாக சொல்லும் குணாதிசயம் படைத்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இளையமகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
    • ஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்தை சேர்ந்தவர்களே மீண்டும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    அதிலும் குறிப்பாக இளங்கோவன் போட்டியிடுவதையே கட்சினர் விரும்புகிறார்கள். இதற்காக நிர்வாகிகள் பலர் நேரில் வற்புறுத்தியும் வருகிறார்கள்.

    ஆனால் இளங்கோவன் போட்டியிட தயங்குவதாகவும் அவரது இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனக்கு உடல்நிலையும் சரியில்லை. மனநிலை பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. இடைத்தேர்தலில் இளைஞர் ஒருவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும்.

    எனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்து உள்ளேன். வேறு சிலரும் வேட்பாளர் தேர்வில் இருந்தாலும் கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன். காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தால் எனது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடுவார்.

    காங்கிரஸ் வேட்பாளரை இன்னும் 2 நாளில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இளங்கோவன் போட்டியிட விரும்பாததால் சஞ்சய் சம்பத் களம் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    42 வயதாகும் சஞ்சய் சம்பத் இதுவரை தீவிர அரசியலில் ஈடுபட்டதில்லை. பள்ளிப் படிப்பை கோத்தகிரியிலும், சென்னையிலும் முடித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. பட்டப்படிப்பையும், சென்னை ஐ.ஐ.டி.யில் மனித வளத்துறை படிப்பும் படித்துள்ளார். புதுடெல்லியில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.

    தேர்தல் நேரங்களில் காங்கிரசுக்காக பணியாற்றியும், காங்கிரஸ் சமூக வலைத்தளபிரிவில் பணியாற்றியும் அனுபவம் பெற்றவர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட மறுத்துள்ளது தி.மு.க. தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×