என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
ஆதரவு கேட்டு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு
- ஈரோடு இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி தி.மு.க.வின் நல்லாட்சிக்கு பரிசாக அமையும்.
- பிரச்சாரத்துக்கு வருமாறு வைகோவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்தார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு அங்கிருந்து தி.நகரில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், என்.குணசேகரன் உடன் இருந்தனர்.
இதன் பிறகு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசனை அவரது அலுவலகத்துக்கு சென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து ஆதரவு கேட்டார்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசி ஆதரவு கேட்டார். இரு வரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது திருமாவளவன் கூறுகையில், "ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று" என்று கூறினார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், "ஈரோடு இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி தி.மு.க.வின் நல்லாட்சிக்கு பரிசாக அமையும்" என்றார்.
அதன் பிறகு எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகம் சென்றார். அங்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து ஆதரவு கோரினார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரத்துக்கு வருமாறு வைகோவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திக்க சென்றார்.
அவருடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் கோபண்ணா, செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.








