search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode East By Poll"

    • வெயிலின் தாக்கம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வாக்குசாவடி மையங்கள் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களை சுற்றி அரசியல் கட்சியினருக்கு தடைவிதித்து 200 மீட்டர் தொலைவில் கோடு போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

    பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக சாய்வு தளம், அவர்களுக்கு வீல் சேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரோட்டில் காலையில் பனி தாக்கம் இருந்தாலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது.

    வெயிலின் தாக்கம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வாக்குசாவடி மையங்கள் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களை சுற்றி அரசியல் கட்சியினருக்கு தடைவிதித்து 200 மீட்டர் தொலைவில் கோடு போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த பகுதிக்குள் வெளி நபர்கள் வரக்கூடாது என்பதற்காக கோடு போடப்பட்டு வருகிறது. 33 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது.

    இதேபோல் 238 வாக்குச்சாவடி மையங்களிலும் வீடியோ மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. இது தவிர நுண்பார்வையாளர்களும் வாக்குப்பதிவை கண்காணிக்கின்றனர்.

    • இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளும், நடவடிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் அதாவது வரும் திங்கட்கிழமை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் மதுக்கடைகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2-ந்தேதி மட்டும் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    விடுமுறை நாட்களில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த கோரிய சுயேட்சை வேட்பாளர் கண்ணனின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
    • நாம் தமிழர் கட்சி புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வே.ரா. மறைவு காரணமாக இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 27-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த கோரிய சுயேட்சை வேட்பாளர் கண்ணனின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    மேலும், நாம் தமிழர் கட்சி புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 725 புகார்கள் பெறப்பட்டுள்ளது.
    • போலீஸ் தரப்பில் 75 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலை கண்காணிப்பு குழு சார்பில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாளை மாலை 5 மணியுடன் அரசியல் கட்சியினர் தங்களது பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும். அதேபோல் அரசியல் கட்சியினருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனைகளை நாளை மாலை 5 மணிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு எந்த ஒரு தேர்தல் தொடர்பான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. மிக முக்கியமாக நாளை மாலை 5 மணிக்கு பிறகு இந்த தொகுதிக்கு சம்பந்தமில்லாத அரசியல் கட்சியினர், பிரதிநிதிகள் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.

    வேட்பாளர்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடியில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு ஏற்கனவே 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களுக்கு அனைத்து பொருட்களும் அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.

    மேலும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணியும் நடந்து வருகிறது. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 4 நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இது தொடர்பாக புகார் வந்த போது சம்பவ இடத்திற்கு நிலை கண்காணிப்பு குழுவினர் சென்று விசாரணை நடத்தினர்.

    தலைமை தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சுமூகமாக நடத்தும் வகையில் பல்வேறு அறிவுரைகள் வழங்கி உள்ளன. அவர்கள் ஆலோசனைப்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

    ஏற்கனவே இது தொடர்பாக கூட்டம் நடைபெற்றுள்ளது. மீண்டும் ஒரு கூட்டம் இது தொடர்பாக நடைபெறும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 725 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    இதில் போலீஸ் தரப்பில் 75 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலை கண்காணிப்பு குழு சார்பில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குக்கர் பட்டுவாடா தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக புகார் வந்தபோது சம்பந்தப்பட்ட இடத்திற்கு எங்கள் நிலை கண்காணிப்பு குழுவினர் சென்று விசாரித்த போது அந்த பகுதி பொதுமக்கள் நாங்கள் குக்கர் வாங்கவில்லை, எங்கள் சொந்த காசில் தான் வாங்கினோம் என்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு பதற்றமான வாக்குச்சாவடி என்பது ஒரே பகுதியில் 6 வாக்குச்சாவடி மையங்கள் இருப்பதால் ஒரே நேரத்தில் 6 ஆயிரம் பேர் வரை கூடுவார்கள்.

    அதனை ஆராய்ந்து பதட்டமான வாக்குச்சாவடி என்று கூறியுள்ளோம். மற்றபடி சட்ட ஒழுங்கு ஏற்படும் வகையில் இங்கு பதட்டமான வாக்குச்சாவடிகள் இல்லை.

    அ.தி.மு.க. சார்பில் இதுவரை 13 புகார்கள் தரப்பட்டுள்ளன. அதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்த புகாரில் 20 ஆயிரம் ஓட்டுகள் இல்லை என தெரிவித்துள்ளார். அதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் கமிஷனரான எனது ஓட்டும், எனது மனைவி ஓட்டும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

    உண்மையில் அப்படி இல்லை. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது இத்தொகுதியில் தான் நான் வாக்களித்தேன். எனக்கு ஓட்டு உள்ளது.

    தேர்தல் பணியில் ஈடுபட்ட 12 பேர் அலட்சியமாக பணியாற்றியதாக நோட்டீஸ் கொடுத்துள்ளோம். நாம் தமிழர் கட்சி பிரசாரத்திற்கு தடை ஏதும் விதிக்கவில்லை. இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வெயில் காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் சாமியானா பந்தல் போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மற்றும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.

    அதேபோல் வரும் 26-ந் தேதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்தும் உபகரணங்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படும். வேட்பாளர்கள் 40 லட்சத்திற்குள் தான் செலவு செய்கிறார்களா என்பதை கண்காணிக்க தேர்தல் கணக்கு குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி நாளையும் ஈரோடு தொகுதியில் இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
    • அரசியல் கட்சித்தலைவர்கள் ஈரோட்டில் நாளை முகாமிடுவதால் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வே.ரா. மறைவு காரணமாக இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் வருகிற 27-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.), மேனகா நவநீதன் (நாம் தமிழர்), ஆனந்த் (தே.மு.தி.க.) உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தாலும் அவர்களைவிட தி.மு.க.வினர் தான் அதிகம் பேர் முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மேயர்கள், வாரியத் தலைவர்கள், அணிகளின் நிர்வாகிகள், வட்ட பகுதி கழக செயலாளர்கள் என ஏராளமானோர் சென்று முகாமிட்டு கடந்த ஒரு மாதமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னணி பேச்சாளர்கள் பிரசாரம் செய்திருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

    இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதிவீதியாக சென்று வாக்கு கேட்கிறார்.

    நாளை காலை 9 மணி அளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து பிரசார வேனில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு பஸ்நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி வழியாக சென்று சம்பத் நகர் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

    அதன் பிறகு கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக சென்று காந்தி சிலை அருகே பிரசார வேனை நிறுத்தி அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே பேசுகிறார்.

    இதன்பிறகு பூம்புகார் நகர், காந்திநகர், வல்லரசம்பட்டி வழியாக அக்ரஹாரம் சென்று பிரசாரம் செய்கிறார். அத்துடன் காலை பிரசாரத்தை முடித்துக் கொண்டு மதிய சாப்பாட்டுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மாலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    மாலை 3 மணி அளவில் சம்பத் நகர், அம்மு மெஸ் பிரிவு, சின்னமுத்து வீதி வழியாக சென்று முனிசிபல் காலனி அருகே வேனில் இருந்தபடி பேசுகிறார்.

    அதன்பிறகு மேட்டூர் ரோடு, பன்னீர் செல்வம் பூங்கா வழியாக சென்று பெரியார் நகரில் பிரசாரம் செய்து 'கை' சின்னத்துக்கு ஓட்டு கேட்கிறார். அத்துடன் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கிருந்து பின்னர் சென்னை புறப்படுகிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளும் தீவிரமாக களம் இறங்கி ஓட்டு கேட்டு வந்தாலும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பலமுறை ஈரோடு சென்று இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டார்.

    இன்று காலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை ராயப்பேட்டை தலைமை கழகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி பழனிசாமி மதியம் விமானம் மூலம் புறப்பட்டு கோவை செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று இன்று பிரசாரம் செய்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி நாளையும் ஈரோடு தொகுதியில் இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரம் செய்கிறார். அரசியல் கட்சித்தலைவர்கள் ஈரோட்டில் நாளை முகாமிடுவதால் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

    27-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் வெளியூரில் இருந்து பிரசாரத்துக்கு வந்தவர்கள் நாளை மாலை 6 மணிக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

    ஆனாலும் ஈரோட்டில் முகாமிட்டிருக்கும் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் தொகுதிக்கு பக்கத்தில் உள்ள ஊர்களில் முகாமிட்டு அங்கிருந்தபடி தேர்தல் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால் ஈரோடு தொகுதிகளில் மோதல் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    • தமிழக தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படும் புகார்கள் குறித்து விளக்கம் கேட்டு எங்களுக்கு அனுப்பப்படுகிறது.
    • நாங்களும் புகார்கள் மீது தீவிர விசாரணை நடத்தி அதன் விளக்கத்தை இ-மெயில் மூலம் உடனுக்குடன் அனுப்பி வைத்து வருகிறோம்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், குக்கர், வெள்ளி கொலுசு, பட்டுபுடவை, சிக்கன், மட்டன் கறி, பிரியாணி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றது.

    மேலும் அரசியல் கட்சியினர் பல்வேறு தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் சென்றது.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி நிலவரம் குறித்து இந்திய தேர்தல் கமிஷனின் துணை தேர்தல் கமிஷனர் அஜய் தலைமையில் நேற்று மாலை காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல் ஈரோட்டில் இருந்து மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், தேர்தல் செலவின பார்வையாளர் கவுதம்குமார், காவல் பார்வையாளர் சுரேஷ்குமார் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்து கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு கூறும் போது, தேர்தல் தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து இருப்பதாகவும், இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாருக்கான விளக்கமும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்கப்பட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் கமிஷனின் துணை தேர்தல் கமிஷனர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வாக்கு சாவடி ஏற்பாடுகள், மின்னணு எந்திரம் கொண்டு செல்லும்வழி, பாதுகாப்பு ஏற்பாடுகள், ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணும் மையத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு செல்லுதல், பதற்றமான வாக்குசாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் தமிழக தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படும் புகார்கள் குறித்து விளக்கம் கேட்டு எங்களுக்கு அனுப்பப்படுகிறது. நாங்களும் புகார்கள் மீது தீவிர விசாரணை நடத்தி அதன் விளக்கத்தை இ-மெயில் மூலம் உடனுக்குடன் அனுப்பி வைத்து வருகிறோம்.

    இந்த ஆலோசனை கூட்டம் முழுக்க, முழுக்க தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தே நடத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எதற்காக தி.மு.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு இடம் விட்டு கொடுத்தது என்றால் தமிழக முழுவதும் தி.மு.க.விற்கு எதிராக எதிர்ப்பலை உருவாகியுள்ளது.
    • ஆளும் கட்சியினர் இடைத்தேர்தலில் தோற்றால் பெரிய அவமானம் என்பதால் காங்கிரசுக்கு ஒதுக்கி பலி ஆடு ஆக்கியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை விந்தியா 2-வது நாளாக பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். தி.மு.க.வினர் பிரசாரத்தை உற்று பார்த்தால் அவர்கள் எப்போதுமே உண்மை பேச மாட்டார்கள் என்பது நன்றாக தெரியும்.

    ஒட்டுமொத்த தி.மு.க. அமைச்சர்களும் ஈரோட்டில் உள்ளனர். இவர்களை தேர்தல் சமயத்தில் மட்டும் தான் பார்க்க முடியும். மற்ற நேரங்களில் அலுவலகத்தில் சென்றால் கூட அவர்களை பார்க்க முடியாது.

    இளங்கோவன் எம்.எல்.ஏ.வானால் அவர் பொதுமக்களை திரும்பி கூட பார்க்க மாட்டார். அவர் அமைதிப்படை அமாவாசை மாதிரி பதவிக்காக மாறி மாறி பேசுவார். அவரது தாத்தா பெரியார் காங்கிரசை எதிர்த்தார். அவரது அப்பா சம்பத் தி.மு.க.வை எதிர்த்தார்.

    ஆனால் இன்று அவரோ தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். இளங்கோவன் இதற்கு முன்னாடி கருணாநிதி, ஸ்டாலினை திட்டி தீர்த்து உள்ளார். அது பற்றி ஒரு புத்தகமே போடலாம்.

    இளங்கோவனை நம்பாதீர்கள். இதுதான் எனக்கு கடைசி தேர்தல். எனக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என்று கூறி தேர்தலில் நின்று வருகிறார்.

    எதற்காக தி.மு.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு இடம் விட்டு கொடுத்தது என்றால் தமிழக முழுவதும் தி.மு.க.விற்கு எதிராக எதிர்ப்பலை உருவாகியுள்ளது. ஆளும் கட்சியினர் இடைத்தேர்தலில் தோற்றால் பெரிய அவமானம் என்பதால் காங்கிரசுக்கு ஒதுக்கி பலி ஆடு ஆக்கியுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 2 அறைகளில் 16 மேஜைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஒரு அறையில் 10 மேஜைகளும், மற்றொரு அறையில் 6 மேஜைகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் தேர்தலில் ஒரு வாக்கு சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு மார்ச் மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இந்த நிலையில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, பொதுப்பார்வையாளர் ராஜ்குமார்யாதவ், கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 2 அறைகளில் 16 மேஜைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு அறையில் 10 மேஜைகளும், மற்றொரு அறையில் 6 மேஜைகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா மாநில தலைவர்அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் பிரசாரம்செய்தனர்.
    • எடப்பாடி பழனிசாமி நாளை தனது 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (25-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். மேலும் தொகுதியில் 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதே போல் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், துரை வைகோ ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்தனர்.

    இதே போல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா மாநில தலைவர்அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் பிரசாரம்செய்தனர். எடப்பாடி பழனிசாமி நாளை தனது 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.

    மேலும் 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். நடிகை விந்தியாவும் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தார். இன்று மாலை அவர் 3-வது நாளாக அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரமேலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். இதே போல் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமானும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    பிரசாரம் நாளை மறுநாள் (25-ந்தேதி) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் பிரசாரத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்களுடன் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

    தொகுதியில் அனைத்து கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் முற்றுகையிட்டு இறுதி கட்ட பிரசாரம் செய்து வருவதால் மோதல் ஏதும் ஏற்படாத வகையில் பல்வேறு இடங்ளில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவனத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் தேர்தல் பிரிவு அதிகாரிகளும் பிரசாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தேர்தல் விதிமுறை மீறல்கள் இருக்கிறதா? என்று அவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    தேர்தல் பிரசாரம் முடிந்ததும் மாலை 5 மணிக்கு மேல் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மாலை 5 மணிக்கு மேல் கிழக்கு தொகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், லாட்ஜிகளில் வெளியூர்காரர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய தயார் நிலையில் போலீசார் வைக்கப்பட்டு உள்ளனர்.

    • அண்ணாமலை தனது பிரசாரத்தின் போது தானும் ஒரு செங்கலை எடுத்து காட்டினார்.
    • உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை செங்கல் காட்டி மாறி, மாறி பிரசாரம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் தி.மு.க.-பா.ஜனதா தொண்டர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.

    தலைவர்கள் முற்றுகையால் ஈரோடு தேர்தல் களம் அனல் பறக்கிறது. நேற்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசும் போது, கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்த போது ரூ.3 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்தார். அந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.300 கோடி செலவு செய்ததாக அறிவித்து இருக்கிறார்கள். ரூ.300 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இது தான் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் பொட்டல் காடாக காட்சி அளிக்கும் அந்த இடத்தின் படத்தை காட்டினார்.

    மேலும் அங்கு இருந்தது ஒரே ஒரு செங்கல் தான். அதையும் நான் எடுத்து வந்து விட்டேன் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் செங்கலை காட்டினார். இது தான் பா.ஜனதாவும் அ.தி.மு.க.வும் மதுரைக்கு கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறினார்.

    இதற்கு பதிலடியாக நேற்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது பிரசாரத்தின் போது தானும் ஒரு செங்கலை எடுத்து காட்டினார். அப்போது 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தர்மபுரியில் சிப்காட் அமைக்கப்படும் என்று கூறினீர்களே 14 ஆண்டுகளாகியும் அங்கு ஒரு செங்கலை கூட காணவில்லை. எனவே இந்த ஒரு செங்கலை உதயநிதி ஸ்டாலினுக்கு பார்சல் அனுப்பி வைப்பேன் என்றார்.

    உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை செங்கல் காட்டி மாறி, மாறி பிரசாரம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் தி.மு.க.-பா.ஜனதா தொண்டர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.

    • தேர்தலில் தற்காலிகமாக அனுமதி பெறாமல் இயங்கி வந்த 8 பணிமனைகள் அகற்றப்பட்டன.
    • 14 பணிமனைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதில் அனுமதி பெற்று 4 பணிமனைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து வருகிற 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம்தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு மாதிரி ஓட்டுப்பதிவும் நடத்தப்பட்டு, ஓட்டுப்பதிவுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு முந்தைய நாளான 26-ந் தேதி மின்னணு எந்திரங்கள் வாக்கு சாவடிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.

    தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். காலை 6 மணிக்கு தொடங்கும் பிரசாரம் இரவு 10 மணி வரை நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் ஈரோட்டுக்கு வந்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் பிரசாரம் வருகிற 25-ந் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்கு பதிவிற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் ஏற்கனவே விழிப்புணர்வு நாடகமும் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மஞ்சள் பையும் வழங்கப்பட்டது.

    தேர்தலில் தற்காலிகமாக அனுமதி பெறாமல் இயங்கி வந்த 8 பணிமனைகள் அகற்றப்பட்டன. 14 பணிமனைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதில் அனுமதி பெற்று 4 பணிமனைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தற்போது கிழக்கு தொகுதியில் இருக்கும் பணிமனைகள் அனைத்தும் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக, கட்டுப்பாட்டு அறைக்கு 455 புகார்கள் வந்துள்ளன. இதில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இன்று போலீசாருக்கான தபால் ஓட்டு பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 58 போலீசார் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    வரும் 25-ந் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு பிறகு ஈரோட்டில் தங்கியிருக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்காக வந்திருக்கும் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

    அன்று மாலை 5 மணிக்கு மேல் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஈரோட்டில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள்.

    அப்போது யாரேனும் தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்க்கு மேல் கொண்டு வரப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நட்சத்திர பேச்சாளர்களும், சினிமா பிரபலங்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
    • நடிகை விந்தியா இன்று மாலை பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சியின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர் அணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று முதல் நாள் பிரசாரத்தை மேற்கொண்டார். கிட்டத்தட்ட 9-க்கும் மேற்பட்ட இடங்களில் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து இன்று மாலை 2-வது நாளாக தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5 மணிக்கு எஸ்.கே.சி.ரோடு அர்ஜுனா சுவிட்ஸ் கடை அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து ஆலமரத்து மெயின் ரோடு சமாதானபுரத்தில், அண்ணா டெக்ஸ்மேடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

    இதேபோல் தே.மு.தி.மு.க. சார்பில் போட்டிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 2 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் மத்தியிலும் பேசினார். இந்நிலையில் 3-வது நாளான இன்று மாலையும் பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். குமலன் குட்டை மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து சம்பத் நகர் பகுதியில் பேசுகிறார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே தனது முதல் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று மாலை தனது 2-வது கட்ட பிரசாரத்தை ஜி.கே.வாசன் மேற்கொள்கிறார். வெட்டுக்காட்டு வலசு, நாராயண வலசு, டவர் லைன் காலனி, சம்பத் நகர், பெரிய வலசு நால்ரோடு, இடையன்காட்டு வலசு, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், பெரியார் நகர் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நட்சத்திர பேச்சாளர்களும், சினிமா பிரபலங்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று மாலை நடிகை விந்தியா பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் என தொடர்ந்து 3 நாட்கள் நடிகை விந்தியா அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இறுதி கட்ட பிரசாரம் நெருங்கி வருவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

    ×