search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசியல் கட்சியினர் தற்காலிக பணிமனைகளை நாளை மாலை 5 மணிக்குள் அகற்ற வேண்டும்- தேர்தல் அதிகாரி பேட்டி
    X

    அரசியல் கட்சியினர் தற்காலிக பணிமனைகளை நாளை மாலை 5 மணிக்குள் அகற்ற வேண்டும்- தேர்தல் அதிகாரி பேட்டி

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 725 புகார்கள் பெறப்பட்டுள்ளது.
    • போலீஸ் தரப்பில் 75 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலை கண்காணிப்பு குழு சார்பில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாளை மாலை 5 மணியுடன் அரசியல் கட்சியினர் தங்களது பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும். அதேபோல் அரசியல் கட்சியினருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனைகளை நாளை மாலை 5 மணிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு எந்த ஒரு தேர்தல் தொடர்பான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. மிக முக்கியமாக நாளை மாலை 5 மணிக்கு பிறகு இந்த தொகுதிக்கு சம்பந்தமில்லாத அரசியல் கட்சியினர், பிரதிநிதிகள் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.

    வேட்பாளர்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடியில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு ஏற்கனவே 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களுக்கு அனைத்து பொருட்களும் அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.

    மேலும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணியும் நடந்து வருகிறது. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 4 நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இது தொடர்பாக புகார் வந்த போது சம்பவ இடத்திற்கு நிலை கண்காணிப்பு குழுவினர் சென்று விசாரணை நடத்தினர்.

    தலைமை தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சுமூகமாக நடத்தும் வகையில் பல்வேறு அறிவுரைகள் வழங்கி உள்ளன. அவர்கள் ஆலோசனைப்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

    ஏற்கனவே இது தொடர்பாக கூட்டம் நடைபெற்றுள்ளது. மீண்டும் ஒரு கூட்டம் இது தொடர்பாக நடைபெறும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 725 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    இதில் போலீஸ் தரப்பில் 75 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலை கண்காணிப்பு குழு சார்பில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குக்கர் பட்டுவாடா தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக புகார் வந்தபோது சம்பந்தப்பட்ட இடத்திற்கு எங்கள் நிலை கண்காணிப்பு குழுவினர் சென்று விசாரித்த போது அந்த பகுதி பொதுமக்கள் நாங்கள் குக்கர் வாங்கவில்லை, எங்கள் சொந்த காசில் தான் வாங்கினோம் என்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு பதற்றமான வாக்குச்சாவடி என்பது ஒரே பகுதியில் 6 வாக்குச்சாவடி மையங்கள் இருப்பதால் ஒரே நேரத்தில் 6 ஆயிரம் பேர் வரை கூடுவார்கள்.

    அதனை ஆராய்ந்து பதட்டமான வாக்குச்சாவடி என்று கூறியுள்ளோம். மற்றபடி சட்ட ஒழுங்கு ஏற்படும் வகையில் இங்கு பதட்டமான வாக்குச்சாவடிகள் இல்லை.

    அ.தி.மு.க. சார்பில் இதுவரை 13 புகார்கள் தரப்பட்டுள்ளன. அதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்த புகாரில் 20 ஆயிரம் ஓட்டுகள் இல்லை என தெரிவித்துள்ளார். அதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் கமிஷனரான எனது ஓட்டும், எனது மனைவி ஓட்டும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

    உண்மையில் அப்படி இல்லை. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது இத்தொகுதியில் தான் நான் வாக்களித்தேன். எனக்கு ஓட்டு உள்ளது.

    தேர்தல் பணியில் ஈடுபட்ட 12 பேர் அலட்சியமாக பணியாற்றியதாக நோட்டீஸ் கொடுத்துள்ளோம். நாம் தமிழர் கட்சி பிரசாரத்திற்கு தடை ஏதும் விதிக்கவில்லை. இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வெயில் காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் சாமியானா பந்தல் போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மற்றும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.

    அதேபோல் வரும் 26-ந் தேதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்தும் உபகரணங்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படும். வேட்பாளர்கள் 40 லட்சத்திற்குள் தான் செலவு செய்கிறார்களா என்பதை கண்காணிக்க தேர்தல் கணக்கு குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×