என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை அமைதியாக நடத்த ஏற்பாடு- தேர்தல் நடத்தும் அதிகாரி பேட்டி
- தமிழக தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படும் புகார்கள் குறித்து விளக்கம் கேட்டு எங்களுக்கு அனுப்பப்படுகிறது.
- நாங்களும் புகார்கள் மீது தீவிர விசாரணை நடத்தி அதன் விளக்கத்தை இ-மெயில் மூலம் உடனுக்குடன் அனுப்பி வைத்து வருகிறோம்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், குக்கர், வெள்ளி கொலுசு, பட்டுபுடவை, சிக்கன், மட்டன் கறி, பிரியாணி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றது.
மேலும் அரசியல் கட்சியினர் பல்வேறு தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் சென்றது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி நிலவரம் குறித்து இந்திய தேர்தல் கமிஷனின் துணை தேர்தல் கமிஷனர் அஜய் தலைமையில் நேற்று மாலை காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல் ஈரோட்டில் இருந்து மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், தேர்தல் செலவின பார்வையாளர் கவுதம்குமார், காவல் பார்வையாளர் சுரேஷ்குமார் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்து கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு கூறும் போது, தேர்தல் தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து இருப்பதாகவும், இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாருக்கான விளக்கமும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் கமிஷனின் துணை தேர்தல் கமிஷனர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வாக்கு சாவடி ஏற்பாடுகள், மின்னணு எந்திரம் கொண்டு செல்லும்வழி, பாதுகாப்பு ஏற்பாடுகள், ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணும் மையத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு செல்லுதல், பதற்றமான வாக்குசாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் தமிழக தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படும் புகார்கள் குறித்து விளக்கம் கேட்டு எங்களுக்கு அனுப்பப்படுகிறது. நாங்களும் புகார்கள் மீது தீவிர விசாரணை நடத்தி அதன் விளக்கத்தை இ-மெயில் மூலம் உடனுக்குடன் அனுப்பி வைத்து வருகிறோம்.
இந்த ஆலோசனை கூட்டம் முழுக்க, முழுக்க தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தே நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.






