search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EPS"

    • அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி ஈபிஎஸ் இடையீட்டு மனு.
    • மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை களம் இறக்கி உள்ளார். எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு போட்டியிடும் நிலையில், ஓ.பி.எஸ். அணி செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த 30-ந் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை ஏற்றுக் கொண்டு சின்னத்தை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக ஓ.பன்னீர்செல் வம் தரப்பினரும், தேர்தல் ஆணையமும் 3 நாளில் பதில் அளிக்க உத்தரவிட்டது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை பிப்ர வரி 3-ந் தேதி (நாளை) நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது. இதன்படி இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை ஏற்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் 24 பக்கத்தில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள அந்த மனுவில் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் தான் சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி மனுதாக்கல் செய்து உள்ளார்.

    பொதுக்குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில் அனைத்து சரத்துக்கள் மற்றும் விவரங்களும் அடங்கி உள்ள நிலையில், இடையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு என்பது விசாரணைக்கு உகந்தது கிடையாது.

    ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதியாகிவிட்டது என்பதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு மூலமே மேற்கண்ட பதவிகள் ரத்தாகிவிட்டனவா என்பது முடிவாகும், அதுவரை எடப்பாடிக்கு கட்சியில் அதிகாரத்தை உரிமை கோர முடியாது.

    மேலும் தற்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிமன்ற நடவடிக்கையை தவறாக பயன்படுத்துவது ஆகும். தற்போதைய கோரிக்கையை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். எந்தவொரு முந்தைய வழக்கிலும் தேர்தல் ஆணையம் ஒரு பிரதியாக இல்லாத நிலையில் தற்போது எவ்வாறு அதனை ஒரு கட்சியாக சேர்க்க வேண்டும் என கோர முடியும்?

    அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஓ.பி.எஸ். பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 7ம் தேதி கடைசி நாளாகும். அதற்கு இன்னும 4 நாட்களே இருக்கும் நிலையில் தான் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கிறது.

    இந்த வழக்கு விசாரணைக்கு முட்டுக் கட்டை போடும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்திருக்கும் பதில் மனு எடப்பாடி பழனிசாமி அணியினரை கலக்கம் அடைய செய்துள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தொடங்கி இரட்டை இலை சின்னம் விவகாரம் வரையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஐகோர்ட்டில் தொடங்கிய ஓ.பன்னீர் செல்வத்தின் சட்ட போராட்டம் சுப்ரீம் கோர்ட்டு வரை நீண்டுள்ளது. இதையடுத்து இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நாளை எந்த மாதிரியான தீர்ப்பை வழங்கப்போகிறது என்பது அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியின் மனுவுக்கு தேர்தல் அணையம் இன்று பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளது.

    இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வேகம் காட்டி இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    இரு தரப்பும் முட்டி மோதுவதால் இரட்டை இலை சின்னம் விவகா ரத்தில் இருவரும் தேர்தல் ஆணையத்தை நாடி தீர்வு காணவே உத்தரவிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் ஆபத்தும் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். ஒரு வேளை அப்படி ஒரு நிலமை ஏற்பட்டால் இரு அணியினரும் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பொது சின்னத்தில் போட்டியிடவும் தயாராகி வருகிறார்கள்.

    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு.
    • பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற கோரிக்கை.

    புதுடெல்லி:

    அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதிக்ககோரி நீதிபதிகளிடம்  இன்றுமுறையீடு செய்யப்பட்டது.

    அதில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

    தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் பதிவேற்றப்படும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிவிடுவார். சின்னமும் கிடைத்துவிடும் என்ற நோக்கில் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, திங்கட்கிழமை முறையிடும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    • எதிர்க்கட்சி துணை தலைநராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பவும் அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்து பேசியுள்ளனர்.

    இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் இருந்தனர்.

    அப்போது, எதிர்க்கட்சி துணை தலைநராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பவும் அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டார்.
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நன்பகல் 12 மணிக்கு தனி விமானம் மூலம் அகமதாபாத்திற்கு செல்கிறார்.

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து பிரதமர் மோடியின் தாயாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நன்பகல் 12 மணிக்கு தனி விமானம் மூலம் அகமதாபாத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தும் வகையில், முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித் தனி விமானம் மூலம் இன்று நன்பகல் 12 மணியளவில் அகமதாபாத் புறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது.
    • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு.

    பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தலை' செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

    அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு கருத்து கேட்கும் பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இந்த சூழ்நிலையில், சட்ட ஆணையம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அதனால் ஈபிஎஸ்க்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    • ஈபிஎஸ், ஓபிஎஸ்-சை டெல்லி இணைத்து வைத்தது தவறான முடிவு.
    • தவறை உணர்ந்து என்னை பார்க்க வந்த ஓபிஎஸ்-சை நட்பு ரீதியாக சந்தித்தேன்.

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சதி செய்வதாக அமமுக. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டி உள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது:

    நான்கரை ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபோது உதவிகரமாக இருந்த கட்சியை,(பாஜகவை) இன்றைக்கு, உதாசீனபடுத்தி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் அவர்கள்(பாஜக) ஜெயிச்சா என்ன, தோற்றால் என்ன, இன்னும் சொல்லப் போனால் பாஜக தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட வரவிடாமல் செய்வதற்கான வேலைகளில் இறங்க சதி செய்கிறார்கள்.

    2017 ஆண்டு என்னை பன்னீர் செல்வம் சந்தித்த போது, முதலமைச்சராக ஆதரவு அளித்தேன். ஏனென்றால் அவர்( எடப்பாடி பழனிசாமி) தப்பான பாதையில் போகிறார் என்று தெரிவித்தேன். பன்னீர் செல்வம் கோபத்தில் எனக்கு எதிராக தவறான முடிவை எடுத்தார். தவறை உணர்ந்து என்னை பார்க்க வந்தார்.

    பழைய நட்பு ரீதியாக அவரை சந்தித்தேன். பன்னீர்செல்வத்துடன், எடப்பாடி பழனிசாமியை டெல்லி இணைத்து வைத்தது தவறான முடிவு. எங்களை தவறானவர்கள் என்று நினைத்து செய்தார்களா அல்லது எடப்பாடி பழனிசாமியை நல்லவர் என்று நினைத்து செய்தார்களா என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    • புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் விடியவிடிய மழை பெய்து வருகிறது.
    • சாலைகளில் சூழ்ந்துள்ள மழைநீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தலைநகர் சென்னை தொடங்கி குமரி வரை பரவலாக மழை கொட்டி வருகிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் விடியவிடிய மழை பெய்து வருகிறது.

    இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர் பொறுத்தவரை முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டாலும் சில இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்க்க முடிகிறது.

    இவற்றை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை, ஆலந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட உள்ளார்.

    • மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது.
    • ஒன்றுபட்ட அதிமுக குறித்து ஓ.பி.எஸ் பேச உள்ளதாகவும் கூறுப்படுகின்றது.

    மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஓய்வெடுப்பதற்காக தங்கினார்.

    திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடியை ஈபிஸ் மற்றும் ஓபிஎஸ் சந்தித்தனர்.

    தொடர்ந்து இன்று அமித்ஷாவையும் இருவரும் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில், அமித்ஷாவை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இன்று சந்திக்க இருப்பது உறுதியாகி உள்ளது.

    அதன்படி, இன்று காலை 11.05 மணிக்கு ராஜ்பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு 11.25 மணிக்கு வருகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.50 வரை நடக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2.05 மணிக்கு அவர் புறப்பட்டு தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு 2.20 மணிக்கு வருகிறார். பிற்பகல் 3.25 மணிவரை அங்கிருந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

    இதனிடையே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது. அதன்படி, இன்று பிற்பகல் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஒன்றுபட்ட அதிமுக குறித்து ஓ.பி.எஸ் பேச உள்ளதாகவும் கூறுப்படுகின்றது.

    • பிரதமருக்கு வரவேற்பு மற்றும் வழி அனுப்பும் நிகழ்ச்சிகளில் ஆதரவாளர்களுடன் இருவரும் பங்கேற்பு.
    • நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை.

    தமிழகம் வந்த பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். அதேபோல் ஓ.பன்னீர் செல்வமும் தமது ஆதரவாளர்களுடன் பிரதமரை வரவேற்றார். அதிமுகவின் இரு தலைவர்களும் ஒன்றாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பட்டமளிப்பு விழா நிறைவுக்கு பின்னர் மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியிலும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இருவரும் அருகருகே நின்றபடி பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    பிரதமரை வழி அனுப்பும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, ராஜன் செல்லப்பா, நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், மதுரை மேயர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

    பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி சிரித்தப்படி பூங்கொத்துக் கொடுத்து வழி அனுப்புவதும், அருகில் ஓ.பன்னீர் செல்வம் சிரித்தபடி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. பிரதமருக்கான வரவேற்பு நிகழ்ச்சியை போலவே வழி அனுப்பும் நிகழ்ச்சியிலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இன்று இரவு சென்னை வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை, ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • இந்த சம்பவம் தற்செயலாக நிகழ்ந்த விபத்தா? அல்லது சதிவேலையா? என்ற கோணங்களில் விசாரணை
    • தமிழக அரசு காவல்துறையை முழு சுதந்திரத்துடன் பணியாற்ற அனுமதிப்பதில்லை என எடப்பாடி குற்றச்சாட்டு

    சென்னை:

    கோவையில் கார் வெடித்து ஒருவர் இறந்தது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    "23.10.2022 அன்று காலை கோவை நகரில் உக்கடம் கோட்டைமேடு பகுதியில்,சங்கமேஷ்வரர் திருக்கோயில் அருகே அதிகாலை 4.10 மணியளவில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாகவும், காரில் இருந்த ஒரு நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. மேலும், தமிழ்நாடு காவல்துறை தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவித்தன. காவல்துறை தலைவர் நேற்றைய பேட்டியின்போது, சம்பவ இடத்தை தடய அறிவியல்துறை நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினர் மற்றும் வெடிகுண்டு பிரிவினர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருவதாகவும், காரின் உரிமையாளர் யார் என்பது குறித்தும், சிலிண்டர் வாங்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார். மேலும், இந்த சம்பவம் தற்செயலாக நிகழ்ந்த விபத்தா? அல்லது சதிவேலையா? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் பேட்டியளித்துள்ளார்.

    இறந்த நபரின் பெயர் ஜமேஷா முபின் என்றும், இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசிய பாதுகாப்பு படையினரால் விசாரணை செய்யப்பட்டவர் என்றும், அவரது வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்து பொருட்கள் இருந்ததாகவும் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

    "கோவையில் கார் வெடிகுண்டு வெடித்துள்ளது. வெடிகுண்டு வைத்த காரை இயக்கி, மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் வெடிக்கவைத்து, பல உயிர்களை பலி வாங்க சதி செய்த நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது" என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், விபத்து நடந்த இடத்தில் அபாயகரமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஆணிகள்,கோலி குண்டுகள், இரும்பு குண்டுகள் (பால்ரஸ்) போன்றவை சிதறிக் கிடந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

    இது உண்மையிலேயே மிகப் பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது. இறந்த முபின் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவன் என்று தெரியவில்லை என பேட்டியின்போது காவல்துறை தலைவர் கூறியுள்ளார். அனைத்து நிலைகளிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போதும், தொடர்ந்து அதிமுக அரசு ஆட்சி செய்த போதும் அமைதியான மாநிலமாக காட்சியளித்த தமிழ்நாட்டில், எப்போதெல்லாம் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம், குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள் என்பது சர்வசாதாரணமாக நடைபெறும் நிகழ்வாக உள்ளது.தொடர்கதையாகவும் உள்ளது.

    இந்த குண்டு வெடிப்பு குறித்து உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிர்வாகத் திறமையற்ற ஆட்சியின் முதல்வர் என்ன பதில் கூறப்போகிறார்? உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையை விளக்குவதாகவே இது பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் நிர்வாகத் திறமையற்ற, தவறு செய்பவர்களை கண்டிக்கும் சட்டப்படியான அதிகாரத்தை காவல்துறைக்குத் தராமல், காவல்துறையை தங்களுடைய பொய்யான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகபயன்படுத்திக்கொள்ளும் ஒரு ஏவல்துறையாக, இந்த அரசு நடத்துவதே, இப்படிப்பட்ட உளவுத்துறை மற்றும் காவல்துறையின் வீழ்ச்சிக்குக் காரணம்.

    நான் பலமுறை எனது அறிக்கைகளின் வாயிலாகவும், பேட்டிகளின்போதும் அம்மாவின் அரசு எப்படி காவல்துறையை சட்டப்படி, நேர்மையாக செயலாற்ற அனுமதித்ததோ, அப்படி இந்த அரசும் காவல்துறையை சுதந்திரமாக, சட்டத்தின்படிசெயலாற்ற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். ஆனால், நிர்வாகத் திறமையற்ற இந்த அரசு, பொய்யான காரணங்களுக்காக எதிர்கட்சிகளை பழிவாங்க காவல்துறையை, ஏவல்துறையாக பயன்படுத்துகிறதே தவிர, காவல்துறையை முழு சுதந்திரத்துடன், சட்டப்படி நேர்மையாக பணியாற்ற அனுமதிப்பதில்லை.

    எனவே, இந்த கார் குண்டு வெடிப்பு என்பது தற்செயலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? அல்லது ஏதேனும் சதி வேலையா? என்றும், அப்படியெனில் இதன் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் இருக்கின்றனரா என்று காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாமல் சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளையும், பின்னணியில் உள்ளவர்களையும் கண்டுபிடிக்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    • எல்லாரும் ஒருங்கிணைந்து போக வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறார்.
    • எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இணைந்து செயல்பட அழைப்பு விடுப்பேன்.

    திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் சென்னையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 


    தமிழக நலனை நினைத்தே எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை சிறப்பாக வழி நடத்தினார்கள். மக்களுக்கு எல்லா விஷயங்களை எம்ஜிஆர் நல்லபடியாக செய்தார். ஜெயலலிதாவும் அவரது பாதையில் நல்லது செய்து வந்தார். அதன் பின்னர் ஒபிஎஸ் வந்தார். அதற்கு பிறகு எடப்பாடி வந்தார். திருஷ்டி பரிகாரம் போல் கட்சிக்கு சோதனை வந்துள்ளது. அதிமுகவுக்கு இப்போது ஏற்பட்டுள்ள சோதனை நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    எல்லாரும் ஒருங்கிணைந்து போக வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறார். நானும் அதையே சொல்லி வருகிறேன். எம்ஜிஆர் பெயரையும், கட்சியையும் காப்பாற்ற என்னால் முடிந்த பணிகளை ஆற்றுவேன். எல்லாரும் ஒன்று சேருவார்கள். எல்லாம் நல்லபடியாக வரும். கொஞ்ச காலம் பிடிக்கும்.

    மீண்டும் எல்லாரும் ஒன்றுபட்டு பழையபடி இந்த கட்சி பலம் பெற நானும் பணியாற்ற தயாராக இருக்கிறேன். இதற்காக முறையாக கட்சியில் இணைந்து செயல்படுவேன். தேவை ஏற்பட்டால் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவேன். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இணைந்து செயல்பட அழைப்பு விடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • இல்லந்தோறும் தேசிய கொடியை ஏற்றி வைக்க பிரதமர் கேட்டுக் கொண்டார்.
    • தமிழகமெங்கும் அதிமுகவினர் தேசிய கொடி ஏற்ற எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.

    அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடக்கூடிய வகையில், இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதனையொட்டி, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகமெங்கும் கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் 13.8.2022 முதல் 15.8.2022 வரை, அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அதன்படி, தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் இன்று (13.8.2022) இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    ×