search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interlocutory petition"

    • அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி ஈபிஎஸ் இடையீட்டு மனு.
    • மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை களம் இறக்கி உள்ளார். எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு போட்டியிடும் நிலையில், ஓ.பி.எஸ். அணி செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த 30-ந் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை ஏற்றுக் கொண்டு சின்னத்தை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக ஓ.பன்னீர்செல் வம் தரப்பினரும், தேர்தல் ஆணையமும் 3 நாளில் பதில் அளிக்க உத்தரவிட்டது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை பிப்ர வரி 3-ந் தேதி (நாளை) நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது. இதன்படி இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை ஏற்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் 24 பக்கத்தில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள அந்த மனுவில் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் தான் சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி மனுதாக்கல் செய்து உள்ளார்.

    பொதுக்குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில் அனைத்து சரத்துக்கள் மற்றும் விவரங்களும் அடங்கி உள்ள நிலையில், இடையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு என்பது விசாரணைக்கு உகந்தது கிடையாது.

    ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதியாகிவிட்டது என்பதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு மூலமே மேற்கண்ட பதவிகள் ரத்தாகிவிட்டனவா என்பது முடிவாகும், அதுவரை எடப்பாடிக்கு கட்சியில் அதிகாரத்தை உரிமை கோர முடியாது.

    மேலும் தற்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிமன்ற நடவடிக்கையை தவறாக பயன்படுத்துவது ஆகும். தற்போதைய கோரிக்கையை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். எந்தவொரு முந்தைய வழக்கிலும் தேர்தல் ஆணையம் ஒரு பிரதியாக இல்லாத நிலையில் தற்போது எவ்வாறு அதனை ஒரு கட்சியாக சேர்க்க வேண்டும் என கோர முடியும்?

    அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஓ.பி.எஸ். பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 7ம் தேதி கடைசி நாளாகும். அதற்கு இன்னும 4 நாட்களே இருக்கும் நிலையில் தான் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கிறது.

    இந்த வழக்கு விசாரணைக்கு முட்டுக் கட்டை போடும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்திருக்கும் பதில் மனு எடப்பாடி பழனிசாமி அணியினரை கலக்கம் அடைய செய்துள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தொடங்கி இரட்டை இலை சின்னம் விவகாரம் வரையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஐகோர்ட்டில் தொடங்கிய ஓ.பன்னீர் செல்வத்தின் சட்ட போராட்டம் சுப்ரீம் கோர்ட்டு வரை நீண்டுள்ளது. இதையடுத்து இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நாளை எந்த மாதிரியான தீர்ப்பை வழங்கப்போகிறது என்பது அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியின் மனுவுக்கு தேர்தல் அணையம் இன்று பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளது.

    இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வேகம் காட்டி இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    இரு தரப்பும் முட்டி மோதுவதால் இரட்டை இலை சின்னம் விவகா ரத்தில் இருவரும் தேர்தல் ஆணையத்தை நாடி தீர்வு காணவே உத்தரவிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் ஆபத்தும் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். ஒரு வேளை அப்படி ஒரு நிலமை ஏற்பட்டால் இரு அணியினரும் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பொது சின்னத்தில் போட்டியிடவும் தயாராகி வருகிறார்கள்.

    ×