search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக தலைமை அலுவலகம்"

    • சோதனையின்போது வெளியில் இருந்து யாரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.
    • 40 நாட்கள் கடந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

    அ.தி.மு.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி சென்னை வானகரத்தில் நடந்தபோது ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் திடீரென சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் அங்கு குவிந்து இருந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்கினார்கள். அப்போது உருட்டு கட்டைகளால் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு அ.தி.மு.க. தொண்டருக்கு கத்திக்குத்தும் விழுந்தது.

    இதற்கிடையே அ.தி.மு.க. தலைமை அலுவலக நுழைவு வாயிலை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அடித்து உடைத்து திறந்தனர். அதன்பிறகு ஓ.பன்னீர் செல்வமும், அவருடன் வந்த தலைவர்களும் தலைமை கழகத்துக்குள் சென்றனர்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. தலைமைக்கழகம் சூறையாடப்பட்டது. அறைகளில் இருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. ஆவணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. ரொக்க பணமும் திருடப்பட்டதாக கூறப்பட்டது.

    இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீசில் அ.தி.மு.க. சார்பில் புகார் செய்யப்பட்டது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மேல்சபை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். போலீசார் விசாரணை நடத்தாமல் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக தனது மனுவில் கூறி இருந்தார்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. தலைமைக்கழகம் சூறையாடப்பட்டது தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு இருப்பதாக டி.ஜி.பி. தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 200 பேர் மீதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    மேலும் இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிலர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் 3 பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளாகும்.

    குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. அறிவித்தது. இதனால் வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்து இருந்தார்.

    ஆனால் 40 நாட்கள் கடந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் நேற்று சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர், "இதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவ இடத்திற்கு வரவே இல்லை. ஆதாரங்களையும் சேகரிக்கவே இல்லை. எனவே அ.தி.மு.க. அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்று கூறி இருந்தார்.

    அவரது மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் ஏற்றுக் கொண்டார். இன்று (புதன்கிழமை) மனு மீது விசாரணை நடத்துவதாக அவர் அறிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை 8.15 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.க்கள் வெங்கடேசன், ராஜபூபதி தலைமையில் சுமார் 20 போலீசார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு செய்தனர்.

    ஒவ்வொரு அறையில் இருந்தும் ஆவணங்கள், பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பது பற்றி கணக்கு எடுத்தனர். அறைகள் சூறையாடப்பட்டு கிடக்கும் விதத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து பதிவு செய்தனர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் ஆய்வு செய்யும் காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. போட்டோவும் எடுக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் சில அறைகளில் நீண்ட நேரம் ஆய்வு செய்தனர். சில அறைகளில் ஏற்கனவே என்னென்ன பொருட்கள் இருந்தன என்று கேட்டறிந்து குறித்து கொண்டனர்.

    சில அறைகளில் அ.தி.மு.க. அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இதற்கு முன்பு தேர்தல் சமயத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், அறிக்கைகள் அனைத்தும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.

    அவை அனைத்தும் மாயமாகிவிட்டதை சோதனையின்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனையிட்டபோது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும் உடன் இருந்தார். அவர் சூறையாடப்பட்ட அறைகளில் காணாமல் போன பொருட்கள் பற்றி தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது வெளியில் இருந்து யாரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.

    அறைகளை ஆய்வு செய்து முடித்த பிறகு அடுத்த கட்ட விசாரணையையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். அ.தி.மு.க. தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் உள்பட சிலரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்து கொண்டனர். சம்பவம் தொடர்பாக பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மோதல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

    • இல்லந்தோறும் தேசிய கொடியை ஏற்றி வைக்க பிரதமர் கேட்டுக் கொண்டார்.
    • தமிழகமெங்கும் அதிமுகவினர் தேசிய கொடி ஏற்ற எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.

    அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடக்கூடிய வகையில், இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதனையொட்டி, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகமெங்கும் கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் 13.8.2022 முதல் 15.8.2022 வரை, அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அதன்படி, தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் இன்று (13.8.2022) இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    • விசாரணை நடைபெற்று வருவதால் முன் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு.
    • இரு தரப்பு மோதலில் ரூ.19,35,834 மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாக தகவல்.

    சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே நிகழ்ந்த மோதல் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200பேர், ஒ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் என மொத்தம் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 43 பேரும், ஒ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 27 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் முன் ஜாமீன் வழங்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

    அதிமுக இரு தரப்பு மோதலில் ரூ.19,35,834 மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜராம், விருகை ரவி, தியாகராயநகர் சத்யா, அசோக் உள்ளிட்ட 43 பேர் மற்றும் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் 27 பேர் என மொத்தம் 70 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • வெள்ளி வேல், செங்கோல்கள் உள்பட ஜெயலலிதாவின் மாயமான பரிசு பொருட்களை மீட்க எடப்பாடி பழனசாமி அணியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
    • அலுவலகத்தில் இருந்த பொருட்களில் எவையெல்லாம் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்துக் செல்லப்பட்டு உள்ளன என்பதை கண்டறிந்து கணக்கெடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி வானகரத்தில் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதலில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அப்போது அ.தி.மு.க. அலுவலக பூட்டை உடைத்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.

    இந்த மோதலை தொடர்ந்து போலீசார், வருவாய் துறையினர் உதவியுடன் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கட்சி அலுவலகத்தை திறந்து சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து நேற்று அ.தி.மு.க. அலுவலக சீல் அகற்றப்பட்டு பூட்டு திறக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தின் சாவி மகாலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மகாலிங்கம் ஆகியோர் உள்ளே சென்று பார்த்தனர்.

    அங்கு நாற்காலிகள் உடைக்கப்பட்டு கிடந்தன. அறைகளில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோக்களும் கீழே தள்ளிவிடப்பட்டு கிடந்தது. 2-வது மாடியில் கணக்கு அலுவலக அறை உள்ளது. அந்த அறையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட நினைவு பரிசுகள் இருந்தன. ஜெயலலிதாவின் வெள்ளி சிலை, வாள், செங்கோல்கள் போன்றவை இருந்ததாகவும், அவை காணாமல் போய் விட்டதாகவும் கூறப்படுகிறது.

    தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் கட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.

    அலுவலகத்தில் தற்போதைய நிலையை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிலையில் வெள்ளி வேல், செங்கோல்கள் உள்பட ஜெயலலிதாவின் மாயமான பரிசு பொருட்களை மீட்க எடப்பாடி பழனசாமி அணியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அலுவலகத்தில் இருந்த பொருட்களில் எவையெல்லாம் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்துக் செல்லப்பட்டு உள்ளன என்பதை கண்டறிந்து கணக்கெடுத்து வருகிறார்கள்.

    அதன் அடிப்படையில் போலீசில் புகார் கொடுக்கவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்து உள்ளனர்.

    இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகள் நிறைய இருந்தது. அதை எடுத்து சென்று விட்டனர். அந்த உறுப்பினர் அட்டைகள் கம்ப்யூட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது. அவற்றை அதில் இருந்து எடுத்து விடுவோம். கணக்கு ஆவணங்கள் இருந்த பைல்கள் மற்றும் கம்ப்யூட்டர் டிஸ்க்குகளையும் எடுத்து சென்று விட்டனர். மாயமான பொருட்களை மீட்க போலீசில் புகார் செய்ய உள்ளோம் என்றார்.

    • அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்த பிறகு வழக்கு விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் நடைபெறுமா? இல்லை வேறு கோர்ட்டில் நடைபெறுமா? என்பது தெரிய வரும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். வருகிற 25-ந்தேதி இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

    இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண் நேற்று காலை நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஆஜராகி, அ.தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற கோரி மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டார்.

    இதே போன்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வக்கீல் ராஜலட்சுமியும் நீதிபதி சதீஷ்குமாரிடம் முறையிட்டார். இந்த 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் வக்கீல் முகமது ரியாஸ் இன்று காலை நீதிபதி சதீஷ்குமாரிடம் முறையிட்டார். அப்போது அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட வழக்கு பட்டியலிடப்படாமல் உள்ளது என்றும், பிற்பகலில் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதி சதீஷ்குமார், மனுதாரர் எம்.எல்.ஏ.வாக இருப்பதால் தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற்றே விசாரணைக்கு எடுக்க முடியும் என்று தெரிவித்தார். இதற்கான மனு முறைப்படி தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    இதனால் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்த பிறகு வழக்கு விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் நடைபெறுமா? இல்லை வேறு கோர்ட்டில் நடைபெறுமா? என்பது தெரிய வரும்.

    ×