search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk head office"

    • சோதனையின்போது வெளியில் இருந்து யாரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.
    • 40 நாட்கள் கடந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

    அ.தி.மு.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி சென்னை வானகரத்தில் நடந்தபோது ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் திடீரென சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் அங்கு குவிந்து இருந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்கினார்கள். அப்போது உருட்டு கட்டைகளால் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு அ.தி.மு.க. தொண்டருக்கு கத்திக்குத்தும் விழுந்தது.

    இதற்கிடையே அ.தி.மு.க. தலைமை அலுவலக நுழைவு வாயிலை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அடித்து உடைத்து திறந்தனர். அதன்பிறகு ஓ.பன்னீர் செல்வமும், அவருடன் வந்த தலைவர்களும் தலைமை கழகத்துக்குள் சென்றனர்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. தலைமைக்கழகம் சூறையாடப்பட்டது. அறைகளில் இருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. ஆவணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. ரொக்க பணமும் திருடப்பட்டதாக கூறப்பட்டது.

    இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீசில் அ.தி.மு.க. சார்பில் புகார் செய்யப்பட்டது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மேல்சபை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். போலீசார் விசாரணை நடத்தாமல் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக தனது மனுவில் கூறி இருந்தார்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. தலைமைக்கழகம் சூறையாடப்பட்டது தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு இருப்பதாக டி.ஜி.பி. தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 200 பேர் மீதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    மேலும் இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிலர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் 3 பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளாகும்.

    குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. அறிவித்தது. இதனால் வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்து இருந்தார்.

    ஆனால் 40 நாட்கள் கடந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் நேற்று சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர், "இதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவ இடத்திற்கு வரவே இல்லை. ஆதாரங்களையும் சேகரிக்கவே இல்லை. எனவே அ.தி.மு.க. அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்று கூறி இருந்தார்.

    அவரது மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் ஏற்றுக் கொண்டார். இன்று (புதன்கிழமை) மனு மீது விசாரணை நடத்துவதாக அவர் அறிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை 8.15 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.க்கள் வெங்கடேசன், ராஜபூபதி தலைமையில் சுமார் 20 போலீசார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு செய்தனர்.

    ஒவ்வொரு அறையில் இருந்தும் ஆவணங்கள், பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பது பற்றி கணக்கு எடுத்தனர். அறைகள் சூறையாடப்பட்டு கிடக்கும் விதத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து பதிவு செய்தனர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் ஆய்வு செய்யும் காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. போட்டோவும் எடுக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் சில அறைகளில் நீண்ட நேரம் ஆய்வு செய்தனர். சில அறைகளில் ஏற்கனவே என்னென்ன பொருட்கள் இருந்தன என்று கேட்டறிந்து குறித்து கொண்டனர்.

    சில அறைகளில் அ.தி.மு.க. அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இதற்கு முன்பு தேர்தல் சமயத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், அறிக்கைகள் அனைத்தும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.

    அவை அனைத்தும் மாயமாகிவிட்டதை சோதனையின்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனையிட்டபோது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும் உடன் இருந்தார். அவர் சூறையாடப்பட்ட அறைகளில் காணாமல் போன பொருட்கள் பற்றி தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது வெளியில் இருந்து யாரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.

    அறைகளை ஆய்வு செய்து முடித்த பிறகு அடுத்த கட்ட விசாரணையையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். அ.தி.மு.க. தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் உள்பட சிலரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்து கொண்டனர். சம்பவம் தொடர்பாக பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மோதல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

    ×