search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity bill"

    • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
    • ஆதாரை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

    புதுடெல்லி :

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ஆதாரை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் வக்கீல் ரவி, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த டிசம்பர் 21-ந்தேதி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து வக்கீல் ரவி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    • ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும்.

    சென்னை :

    மின்சார இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வக்கீல் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், ''ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்தபின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும். ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்க எந்த ஒரு சட்டத்திலும் இடமில்லை. எனவே, இதுதொடர்பான அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ''இந்த அரசாணை முறையாக பிறப்பிக்கப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன், வாடகைக்கு குடியிருப்பவரின் ஆதார் எண்ணை இணைத்து, மின்சார மானியம் பெறுவது என்பது வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைதாரர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை'' என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 19-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

    • இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்.
    • நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை :

    தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

    மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது.

    நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து வருகின்றனர். இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

    ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மின்சார வாரியம் அறிவித்துள்ள போதிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர் அவை அனைத்துக்கும் தங்களது ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்வதால் ஏதேனும் சிக்கல் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

    இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் பலர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க முன்வருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இதனை கருத்தில் கொண்ட மின்வாரியம் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற வகையில் திடீர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முயன்ற மின் நுகர்வோருக்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது குறித்து தெரிவிக்கப்படுகிறது.

    பின்னர், ஆதாரை இணைக்கும் பக்கத்துக்கு தானாகவே சென்று ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடும்படி அறிவுறுத்தப்படுகிறது. தேவையான விவரங்களை பதிவு செய்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்தும் பக்கத்திற்கு செல்லும் வகையில் அந்த இணையதளத்தில் மின்வாரியம் மாறுதல்களை செய்துள்ளது.

    அதேபோன்று கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் மின் கட்டணத்தை செலுத்த முயற்சி மேற்கொள்பவர்களுக்கும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி குறுஞ்செய்தி அனுப்ப மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

    இதன்மூலம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற நிலையை மின்வாரியம் ஏற்படுத்தி உள்ளது. மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி நாளில் இணையதளம் மூலம் கட்டணத்தை செலுத்த முயன்ற பலர் ஆதார் எண்ணை இணைக்காததால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்வாரியத்தின் இந்த திடீர் நடவடிக்கை நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்த பிறகும் மின் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

    அதாவது, ஆதார் எண்ணை இணைத்த சிலருக்கு மீண்டும் ஆதார் எண்ணை இணைக்கும்படி கேட்பதாகவும், இன்னும் சிலருக்கு தங்களது ஆதார் பதிவு ஏற்கப்படவில்லை, மீண்டும் முயற்சிக்கவும் என பதில் வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறும்போது, 'இணையதளம் மூலம் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஆதார் எண்ணை அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்பே இணைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு சில நாட்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக ஆதாரை இணைக்கும் போது உடனடியாக இணைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

    ஆதார் இணைப்பு தொடர்பான மின் நுகர்வோரின் தொழில்நுட்ப புகார்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்யப்படுகிறது. மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு அவசியம் என்பது போன்று ஒரு கெடு விதிக்கப்படாதபோது ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை அடையாது' என்றார்.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு அதன்மூலம் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட அதிகபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.

    மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க உரிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும், ஆதாரை இணைத்தால்தான் மின் கட்டணமே செலுத்த முடியும் என்ற கெடுபிடியை தளர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

    * ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியை தொடங்குவதற்கு முன்பாக தங்களது ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    * ஆதார் அட்டையின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் 300 'கே.பி.' அளவுக்கு அதனை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    * தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tangedco.gov.in என்ற இணையதள பக்கத்திற்கோ அல்லது https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கோ சென்று ஆதாரை இணைக்கும் பணியை தொடங்க வேண்டும்.

    * முதலில் மின் இணைப்பு எண், அதன்பின்பு செல்போன் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும். இதன்பின்பு செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதனை பதிவிட வேண்டும்.

    * அடுத்த பக்கத்தில் உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா அல்லது வாடகைதாரரின் ஆதார் எண்ணா என்று விவரமும் கேட்கப்படும். சரியான தகவலை அளித்து, ஆதார் எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஆதார் எண்ணில் இருக்கும் பெயரை பதிவிட வேண்டும்.

    * இதன்பின்பு தயாராக வைத்திருக்கும் 300 'கே.பி.' அளவுள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    * பின்னர், கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என சான்றளித்து 'சப்மிட்' செய்ய வேண்டும். இதன்பிறகு உங்களது ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டது. விரைவில் இணைப்பு உறுதி செய்யப்படும் என்ற பதில் வரும். இத்தோடு ஆதாரை இணைக்கும் பணி முடிவடையும்.

    * வாடகை வீட்டில் குடியிருப்போர் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாடகைக்கு குடியிருப்போர் ஆதார் எண்ணை இணைக்கும் போது சம்பந்தப்பட்ட நபர் தங்களது வீட்டில்தான் வாடகைக்கு குடியிருக்கிறாரா என வீட்டின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் உறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • இலங்கையைச் சேர்ந்தவர்களை உடனடியாகநாடு கடத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர் ப.கோபி தலைமையில் நடந்தது. 

    கூட்டத்தில் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சட்டத்தின் படி அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்ற கூற்றை ஏற்றுக் கொண்டோம்.கொலை குற்றவாளிகளை பொதுத்தலங்களில் உலாவிடுவது சரியல்ல. அவர்களை குறிப்பாக இலங்கையைச் சேர்ந்தவர்களை உடனடியாகநாடு கடத்த வேண்டும். மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரித்து நியாயம் வழங்க வேண்டும்.

    சிறு குறு தொழில் நிறுவனங்களை வயிற்றில் அடிப்பது போல் மின்சார கட்டண உயர்வு மிகப்பெரிய அளவிலே பாதிப்பைஏற்படுத்தி இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவினாசி -அத்திக்கடவு நீர் திட்டத்தை விரைவாக நிறைவு செய்து முழுமையான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளித்திட வேண்டும்.

    காங்கேயம் பகுதி மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான காங்கேயம் பசுமாடுகளுக்கான என ஒரு ஆராய்ச்சி மையத்தை அரசாங்கமே நிறுவ வேண்டும் என்பதைஇந்த கூட்டத்தின் வாயிலாககேட்டுக் கொள்ளப்படுகிறது.திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மின்வாரியத்திலிருந்து குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது.
    • பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை :

    சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமீப காலமாக 'சைபர் கிரைம்' குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும். சென்ற மாத பில் கட்டணம் 'அப்டேட்' செய்யப்படவில்லை. உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு செல்போன் எண்ணையும் சேர்த்து குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்புவார்கள்.

    பொதுமக்களிடம் அவர்கள் செல்போனில் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன்களான Quick Support அல்லது Any Desk போன்ற செயலிகளை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய சொல்லுவார்கள். அதன் மூலம் எதிர்முனையில் இருக்கும் பொதுமக்களின் செல்போனில் உள்ள விவரங்களை 'சைபர்' குற்றவாளிகள் எளிதாக பார்க்க முடியும். பின்னர் ரூ.10-க்கு குறைந்த அளவில் 'ரீசார்ஜ்' செய்ய சொல்லுவார்கள். அப்போது பொதுமக்கள் உள்ளிடும் வங்கி தொடர்பான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தங்களுக்கு தேவையான வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பிவிடுவார்கள்.

    இந்த செயலிகள் மூலம் பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. எண்களையும் குற்றவாளிகளால் எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பார்கள். எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்திலிருந்து இதுபோன்ற குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முகமது பாத்து அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார்.
    • வீட்டில் 2 அறைகளும், 2 பல்புகளும் தான் இருக்கிறது.

    வள்ளியூர் :

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பாத்து (வயது40). இவர் தனது தந்தை உதுமான் கனியுடன் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது பாத்து செல்போனுக்கு மின்வாரியத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் 2 மாதத்திற்கான மின்கட்டண தொகை 91 ஆயிரத்து 139 ரூபாய் என்றும், இதற்கு வருகிற 5-ந்தேதி கடைசி நாள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த முகமது பாத்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.

    இதுகுறித்து அவர் நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டார். அப்போது, வழக்கமாக எனது வீட்டிற்கு ரூ.65 மட்டுமே மின்கட்டணம் வரும். வீட்டில் 2 அறைகளும், 2 பல்புகளும் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ரூ.91 ஆயிரத்து 139 மின்கட்டணம் எப்படி வரும் என்று அதிகாரிகளிடம் புலம்பி தீர்த்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம். 2 நாட்களில் உண்மையான கட்டண ரசீது வந்துவிடும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறி சமாதானப்படுத்தி முகமது பாத்துவை அனுப்பி வைத்தனர்.

    நேற்று முன்தினம் மின்வாரியம் சார்பில் முகமது பாத்து செல்போன் எண்ணுக்கு புதிய கட்டணம் குறித்து குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதில் மின்கட்டணம் ரூ.122 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பின்னரே அதிர்ச்சியில் இருந்து முகமது பாத்து மீண்டுள்ளார்.

    • நெசவு தொழிலில் அடுத்து வரக்கூடிய பெரிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
    • சிறு அளவில் தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சங்கம், அமைப்புகள் இல்லை.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூரை சேர்ந்த பெரிய தொழிலதிபர்கள், தொழில்துறை சங்கத்தினர், விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என அமைச்சர், அரசு அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. எவ்வித கட்டண குறைப்பும் இல்லாமல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்தது. தற்போது மின் கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. புதிய மின் கட்டணத்தை பார்த்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டணத்தை செலுத்த முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சிறு, குறு தொழில் முனைவோர் கூறியதாவது:-

    பெரிய நிறுவனங்கள் தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகளுடன் சேர்ந்து போராடி அரசிடம் சலுகைகளை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், 'ஜாப் ஒர்க்' மற்றும் கூலி அடிப்படையில் வேலை செய்யும் சிறு நிறுவனங்கள் குறைவாக உள்ளன. ஆனால் இவற்றை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. சிறு அளவில் தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சங்கம், அமைப்புகள் இல்லை.

    மின் கட்டண உயர்வால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் காணாமல் போகும் அபாயம் உள்ளது. அனைத்து தரப்பு தொழில்துறையினரையும் அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பாரதிய கைத்தறி சங்க மாநில தலைவர் ஸ்ரீபாபுலால் பேசுகையில், ''பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரும், 15 ஆண்டுகளில் கைத்தறி துணிகளின் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நெசவுத்தொழில் வளர்ச்சி பெறும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் தேவை. நெசவு தொழிலில் அடுத்து வரக்கூடிய பெரிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

    • குண்டடம் மற்றும் ருத்ராவதி ஆகிய பகுதிகளில் நிா்வாக காரணங்களுக்காக மின் அளவீடு மேற்கொள்ள முடியவில்லை.
    • கணக்கீட்டுப் பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை அக்டோபா் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் கோட்டம், குண்டடம் மற்றும் ருத்ராவதி பகுதி மக்கள் கடந்த ஆகஸ்ட் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.காா்த்திகேயன் (பொறுப்பு) விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

    தாராபுரம் கோட்டம், வடக்கு குண்டடம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட குண்டடம் மற்றும் ருத்ராவதி ஆகிய பகுதிகளில் நிா்வாக காரணங்களுக்காக மின் அளவீடு மேற்கொள்ள முடியவில்லை.எனவே, இப்பகுதி மின் நுகா்வோா் கடந்த ஆகஸ்ட் மாதம் கணக்கீட்டுப் பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை அக்டோபா் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம்.
    • மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

    திருப்பூர் :

    மின் கட்டண உயர்வு அமலான நிலையில், இரண்டாயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனையை, 'ஆன்லைன...வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையை, ரொக்கமாக செலுத்த முடியாது.ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

    • பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை மின்நுகர்வோர் அக்டோபர் மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • மின் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்திய மின் அளவீடு நிர்வாகக் காரணத்தினால் மேற்கொள்ள முடியவில்லை.

    தாராபுரம்:

    தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டத்தில் மானூர்பாளையம் பிரிவு அலுவலகதிற்குட்பட்ட காசிலிங்கபாளையம்,நிறையூர் மேற்கு சடையபாளையம் ஆகிய மின் பகிர்மான அலுவலகத்திற்குட்ட பகுதி மின் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்திய மின் அளவீடு நிர்வாகக் காரணத்தினால் மேற்கொள்ள முடியவில்லை. ஆகையால் கடந்த ஆகஸ்டு மாதம் கணக்கீட்டு பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை மின்நுகர்வோர் அக்டோபர் மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சொத்து வரி, வீட்டு வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர், அக்.12-

    மின் கட்டணத்தை குறைக்க வேண்டும், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், சொத்து வரி, வீட்டு வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் இன்று தஞ்சை ரயில் நிலையம் முன்பு அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ப.ராஜேஸ்வரன், அமைப்பு செயலாளர் எஸ்.கே. தேவதாஸ், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அணி செயலாளர் நல்ல துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் கீதா சேகர், தெற்கு ஒன்றிய செயலாளர்

    கோவி. மனோகரன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் விளார் செந்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர், இலக்கிய அணி செயலாளர் ரவிச்சந்திரன், பூக்காரத் தெரு பகுதி செயலாளர் செந்தில் பல்லவராயர், மாநகராட்சி கவுன்சிலர் கண்ணுகினியாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கான அறிவிப்பு ஆணை இருந்தால் காண்பியுங்கள்.
    • பாதாள சாக்கடை மேன்ஹாலை கண்டுபிடித்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு :-

    கவுன்சிலர் சரவணன்:

    சீனிவாசபுரம் ராஜாஜி ரோடு பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.

    கவுன்சிலர் கோபால்:

    4 ராஜ வீதிகளிலும் பாதாள சாக்கடை பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பல நாட்களாகியும் பணி முடியவில்லை.

    இதன் காரணமாக பலர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்தித்து வருகின்றனர். உடனடியாக இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்.

    கவுன்சிலர் கண்ணுக்கினியாள்:

    மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.

    கவுன்சிலர் ஜெய் சதீஷ்:

    மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கான அறிவிப்பு ஆணை இருந்தால் காண்பியுங்கள். மத்திய அரசு ஒருபோதும் மின் கட்டணத்தை உயர்த்துமாறு கூறவில்லை.

    மாநில அரசுதான் உயர்த்தி உள்ளது.

    எனது வாடுக்கு உட்பட்ட பழைய ராமேஸ்வரம் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளது.

    உடனடியாக பாதாள சாக்கடை மேன்ஹாலை கண்டுபிடித்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

    இதே போல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டுக்கு உட்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    முன்னதாக கூட்டத்தில் ஏற்கனவே 22 கவுன்சிலர்கள் கொண்டு வந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மேயர் சண் .ராமநாதன் பேசும்போது:-

    மத்திய அரசு மானியம் உள்ளிட்ட நிதிகளை தர மாட்டோம் என கூறியதாலும், அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் தான் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவுதான். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் பரீசிலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×