என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
- ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும்.
சென்னை :
மின்சார இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வக்கீல் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், ''ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்தபின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும். ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்க எந்த ஒரு சட்டத்திலும் இடமில்லை. எனவே, இதுதொடர்பான அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ''இந்த அரசாணை முறையாக பிறப்பிக்கப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன், வாடகைக்கு குடியிருப்பவரின் ஆதார் எண்ணை இணைத்து, மின்சார மானியம் பெறுவது என்பது வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைதாரர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை'' என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 19-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.






