search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul"

    திண்டுக்கல் அருகே பெண் சத்துணவு ஊழியரிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே செம்பட்டி பச்சமலையான் கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி பழனியம்மாள். கணவர் இறந்து விட்டதால் மகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் செல்லாயிபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பச்சமலையான் கோட்டை பிரிவு அருகே செல்போன் அழைப்பு வந்ததால் சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பழனியம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தங்க சங்கிலியுடன் தப்பி சென்றனர்.

    இது குறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தாவூத்உசேன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இப்பகுதியில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் வெளியே வர அச்சம் அடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி நகை பறிக்கும் கொள்ளை கும்பலை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 சிறுமிகளுக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள எரியோட்டை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்யப்போவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சமூக நலத்துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த அலுவலர்கள் அங்கு சென்றனர்.

    அவர்கள் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை உறுதி செய்து அதனை தடுத்து நிறுத்தினர். இதேபோல் திண்டுக்கல் அருகில் உள்ள காமலாபுரம் பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி, தர்மத்துப்பட்டியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி, பெருமாள்கோவில் பட்டியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி,

    ஆத்தூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி, குள்ளனம்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி என ஒரே நாளில் 6 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    இதில் 16 வயது சிறுமிக்கு 35 வயது வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். திருமண ஏற்பாடுகள் செய்த பெற்றோர்களை அழைத்து பேசி மீண்டும் இதுபோன்ற முயற்சி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து எழுதி வாங்கினர்.

    குழந்தை திருமணங்களை நடத்துவதும் அது குறித்த தகவல் அறிந்தால் சமூக நலத்துறை, சைல்டு லைன் அமைப்பினருக்கு தெரிவிக்கவும் அதிகாரிகள் கூறினர்.
    திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபர் ஆன்லைனில் பதிவு செய்திருந்த செல்போனுக்கு பதிலாக கூரியர் மூலம் சோப்பு கட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Onlineshopping #Cheating
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் வெற்றி (வயது 25). ஓட்டல் ஊழியர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் செல்போன் வாங்குவதற்காக ஒரு தனியார் நிறுவன இணையதள முகவரியில் பதிவு செய்திருந்தார். ரூ.8 ஆயிரத்து 500 மதிப்புள்ள அந்த செல்போனை கூரியர் மூலம் பெறுவதற்காக தனது வீட்டு முகவரியையும் கொடுத்திருந்தார்.

    அதன்படி, அவருடைய வீட்டுக்கு நேற்று முன்தினம் கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதனை திறந்து பார்த்த வெற்றி அதிர்ச்சி அடைந்தார். செல்போனுக்கு பதிலாக ஒரு சலவை சோப்பு கட்டி வைக்கப்பட்டிருந்தது. செல்போனுக்குரிய சார்ஜர், ஹெட்போன் ஆகியவை மட்டும் சரியாக இருந்தன. உடனே, கூரியர் நிறுவன ஊழியரை அழைத்து விவரத்தை கூறினார்.

    மேலும், தான் மோசடி செய்யப்பட்டதாக கூறி, அந்த நிறுவனத்தின் மீது புகார் அளிக்க போவதாகவும் வெற்றி தெரிவித்தார். இதையடுத்து, அந்த கூரியரை பெற்றுக்கொண்ட அந்த ஊழியர் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தினார். இதனால், வெற்றி எங்கும் புகார் அளிக்கவில்லை. இதேபோல, ஏராளமான ஆன்லைன் மோசடிகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  #Onlineshopping #Cheating
    திண்டுக்கல் அருகே போலி மது குடித்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து மதுபானங்களை விற்பனை செய்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #LiquorDeaths
    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 48). சாண்டலார்புரத்தைச் சேர்ந்தவர் சாய்ராம் (60), பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்தவர் தங்கம் (50). கூலித் தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் இன்று காலை பள்ளப்பட்டி அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது வாங்கி குடித்தனர்.

    பின்னர் தங்கள் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்த போது அடுத்தடுத்து 3 பேரும் மயங்கி விழுந்தனர். அப்பகுதி வழியே வந்தவர்கள் போதையில் கிடக்கலாம் என நினைத்து விட்டு சென்று விட்டனர்.

    ஆனால் சிறிது நேரத்திலேயே அவர்கள் வாயில் நுரை தள்ளியது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது முருகன் அதே இடத்தில் இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிய மற்ற 2 பேர்களையும் ஆம்புலன்சில் ஏற்றி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வரும் வழியிலேயே சாய்ராம் உயிரிழந்தார். இதனையடுத்து தங்கம் என்பவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொழிலாளர்கள் வாங்கி குடித்த மது போலியானதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். பெட்டிக்கடைகளில் பதுக்கி மது பானங்கள் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இது போன்ற கடைகளில் மது பானத்தில் கலப்படம் செய்தும், அதிக போதைக்காக மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்படுவதும் உண்டு. எனவே அது போன்ற மதுபானங்களை இவர்கள் வாங்கி குடித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மது பானங்களை விற்பனை செய்தது யார்? அவர் எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் அந்த கடையில் இருந்து வேறு யாரேனும் மது பானங்கள் வாங்கி குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி மது குடித்து அடுத்தடுத்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  #LiquorDeaths

    திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தேடப்பட்ட 2 பேர் பிடிபட்டனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே முத்தழகு பட்டியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் அந்தோணி, தாமஸ் செல்வம். இவர்களது உறவினரை கடந்த 2016-ம் ஆண்டு கொலை செய்ததாக வழக்கு திண்டுக்கல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. 2 பேரையும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆஜராகாமல் தலை மறைவாக இருந்த அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பதுங்கி இருந்த சுரேஷ் அந்தோணி மற்றும் தாமஸ் செல்வன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் நாற்காலிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK #AdministratorsMeeting
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை வகித்து பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை பார்த்து கூட்டுறவு சங்க தேர்தலில் முக்கியமானவர்களுக்கு பதவி கொடுத்து விடுகிறீர்கள், சத்துணவு துறையில் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை கிடைத்துவிடுகிறது. ஆனால் கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. நாங்கள் வேலை செய்வதற்கு மட்டும்தானா? எங்களுக்கு பதவிகள் கிடைக்காதா? என பேச தொடங்கினார்.

    உடனே அதிர்ச்சி அடைந்த மருதராஜ், இதுபோன்ற தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். ஏதேனும் பேச வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறலாம் என தெரிவித்தார்.

    இருந்தபோதும் அவர் தொடர்ந்து பேசியவாரே இருந்தார். அவரை மற்ற நிர்வாகிகள் சமாதானம் செய்ய முயன்றனர். இதனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் நாற்காலிகளை வீசி மோதிக்கொண்டனர்.

    உடனடியாக தகராறில் ஈடுபட்டவர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கூட்டம் அமைதியாக நடந்தது.

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், இடைத்தேர்தலில் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியை பெற வேண்டும். எக்காரணம் கொண்டும் நம்மில் வேற்றுமையை ஏற்படுத்தி வெற்றி வாய்ப்பை தவற விடக்கூடாது என்று பேசினார். #ADMK #AdministratorsMeeting

    திண்டுக்கல்லில் ஓடும் ரெயிலில் பயணியிடம் பணம்- நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    சென்னையைச் சேர்ந்தவர் முத்து நதியா (வயது 25). இவர் மதுரை செல்வதற்காக தனது சகோதரருடன் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் கைப்பை வைத்திருந்தார். அதில் 4 பவுன் நகை மற்றும் பணமும் வைத்திருந்தார்.

    திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்த போது கைப்பையை பார்த்தார். அப்போது நகை மற்றும் பணம் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை மர்ம நபர் துணிகரமாக அபேஸ் செய்துள்ளார்.

    இது குறித்து முத்து நதியா திண்டுக்கல் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    அதிகாரிகள் டார்ச்சரால் அரசு போக்குவரத்துக் கழக வளாகத்தில் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). இவர் திண்டுக்கல்லில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். திண்டுக்கல் - சென்னை வழித்தடத்தில் ஓட்டுனராக இருந்து வருகிறார்.

    ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த ஒரு வாரம் ஓய்வு இல்லாமல் பணியில் இருந்து வந்த ராம்குமாருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் தனக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குமாறு ராம்குமார் கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் விடுப்பு அளிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது.

    இதனால் நேற்று போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலகத்துக்கு வந்த ராம்குமார் தான் கொண்டு வந்திருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ராம்குமார் கூறுகையில், கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை திண்டுக்கல் - திருச்சி வழித்தடத்தில் பஸ்சை ஓட்டி வந்தேன். 21-ந் தேதி ஓய்வும், 22-ந் தேதி வார விடுமுறையும் தர வேண்டும். இது குறித்து நான் கேட்டபோது அதற்கு மறுத்து தொடர்ந்து பணிக்கு வருமாறு வற்புறுத்தினர். இதனால் மன வேதனையடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என்றார். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில் டிரைவர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
    திண்டுக்கல் அருகே பைக் விபத்தில் அரசு அதிகாரி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு கோட்டைபட்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி( வயது 38). இவர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    திண்டுக்கல்லுக்கு வந்துவிட்டு சொந்த ஊர்திரும்புவதற்காக வத்தலக்குண்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சித்தையன்கோட்டை பிரிவு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் சுந்தரபாண்டி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே சுந்தரபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உழைப்பு மற்றும் சுயமரியாதையை கருணாநிதியிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். #DMK #MKAlagiri
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி கலந்து கொண்டார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அழகிரி கூறியதாவது;

    கருணாநிதியிடம் உழைப்பு, சுயமரியாதை ஆகியவற்றை கற்றுக் கொண்டேன். பல சதிகளால் திமுகவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன்

    தேர்தல் வரும்வரை நாம் காத்திருப்போம். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் நமது உழைப்பு மற்றும் திறமையை வெளிக்காட்டுவோம். பதவி ஆசை காட்டி, தனது ஆதரவாளர்களை ஸ்டாலின் தரப்பினர் இழுக்க முயல்கிறது.

    தொண்டர்களுக்காக பேசிய என்னை தி.மு.க.வில் இருந்து வெளியேற்றினார்கள், பதவிக்கு ஆசைப்பட்டவர்களே ஸ்டாலினுடன் உள்ளனர் என தெரிவித்துள்ளார். #DMK #MKAlagiri
    துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நாளை வருகை தருவதை முன்னிட்டு காந்தி கிராமத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    சின்னாளபட்டி:

    காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்காக இந்திய துணை ஜனாதிபதி வெங்கையநாயுடு வருகை தருகிறார்.

    கோவையில் இருந்து தனி விமானம் மூலம் நாளை அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் காந்திகிராம பல்கலைக்கழகம் வந்தடைகிறார்.

    மதியம் 3.30 மணிக்கு பல்நோக்கு அரங்கில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் 1300 பேருக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

    மேலும் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்களுக்கு தங்க பதக்கங்களையும் 2 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களையும் வழங்க உள்ளார்.

    துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இன்று காலை முதல் அம்பாத்துரை முதல் காந்திகிராம பல்கலைக்கழகம் வரை 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்காக திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், நெல்லை ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள் அடையாள அட்டையை காட்டிய பிறகே உள்ளே அனுமதிக்கப் பட்டனர்.

    வெளிநபர்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து அண்ணாநகர் உள்பட சில கிராம மக்கள் சென்று வருவது வழக்கம். அவர்களுக்கும் அனுமதி இல்லாததால் 2 கி.மீ. தூரம் சுற்றி வரும் நிலை ஏற்பட்டது.

    பல்கலைக்கழக வளாகம் முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல் குதிரையாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami #KuthiraiyarDam
    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குதிரையாறு அணையில் இருந்து  பாசனத்துக்காக நாளை முதல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குதிரையாறு அணையில் இருந்து நாளை முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை என மொத்தம் 22 நாள்களுக்கு பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.



    பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரால் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #KuthiraiyarDam
    ×