search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhinakaran"

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். #TTVDhinakaran #Parliamentelection
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் சென்னை அசோக்நகர் டாக்டர் நடேசன் சாலையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது.

    இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதி பொறுப்பாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

    மேலும் ஆலோசனை கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் ஜூலை 30-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது. #TTVDhinakaran #Parliamentelection

    தமிழகத்தில் அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்று டிடிவி. தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Dhinakaran

    கும்பகோணம்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த நிலையில் கும்பகோணம் சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதி தங்கியிருந்த தினகரன் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபகாலமாக முட்டையில் முறைகேடு, மதிப்பெண்ணில் முறைகேடு, கோவில் சிலைகளில் முறைகேடு என ஏராளமான முறைகேடுகள் மற்றும் ஊழலில் தமிழகம் சிக்கியுள்ளது. அம்மாவின் பேரைச் சொல்லிக் ஏமாற்றும் இந்த ஆட்சி அம்மாவின் கொள்கையில் இருந்து தடம் மாறிச் செல்கின்றனர். இந்த சுயநல கும்பலின் ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். எனவே தேர்தலின் மூலம் இந்த ஆட்சி அகற்றப்பட்டு விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைதொடர்ந்து ரகுபதி கமி‌ஷன் கலைக்கப்பட்டது குறித்து நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து தினகரன் கூறுகையில் , ‘‘இந்த ஆட்சியில் எதுவும் நடக்கும்’’ என்றார் .

    இதன் பின்னர் சுவாமிமலையில் இருந்து மன்னார்குடி பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார். #Dhinakaran

    குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி என டிடிவி தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Dhinakaran #EdappadiPalaniswami

    கரூர்:

    கரூரில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    அ.தி.மு.க.வின் பரிணாம வளர்ச்சிதான் அ.ம.மு.க., அம்மாவின் உண்மையான கட்சி என்பதை தொண்டர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இப்போது ஒரு கோடிக்கும் மேலாக உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் 2 கோடியை எட்டி விடுவோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணி சேரும் உணர்வில் நிறைய கட்சிகள் இருக்கின்றன. சிலர் தொடர்பிலேயே இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

    வால்டர் தேவாரம், ஐ.ஜி.அருள் ஆகியோர் மாதிரி ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் நேர்மையானவர், நடுநிலையானவர். யாரையோ காப்பாற்ற எதையோ மறைக்க, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு உதவியாக சி.பி.ஐ. செயல் படுவதற்கு உத்தரவிட்டிருக்கலாம்.

    காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா ஆகியோர் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாண்பை மறந்து பேசி கொண்டிருக்கிறார். நாலாந்திர அரசியல்வாதி போன்று இருக்கும் அவரது செயல்பாட்டினால் தமிழக மக்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. எதிர் கட்சி தலைவர்களையும் ஒருமையில் பேசி வருகிறார். ஆசிரியர்களுக்கு ஏதோ இவர் சம்பளம் வழங்குவது போன்று பேசுகிறார். குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்னும் ஓரிரு மாதங்களில் ஆட்சி முடிவுக்கு வரும். அதன் பின்னர் மக்களாட்சி வரும்.

     


    அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஐ.ஜி. பொன்மாணிக்க வேலை வைத்து சிலை கடத்தல் வழக்கு விசாரிக்கப்படும். அ.தி.மு.க.வின் செல்வாக்கு தமிழகத்தில் எங்கும் உயரவில்லை. பாகிஸ்தானில் வேண்டு மென்றால் உயர்ந்திருக்கலாம். திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அ.ம.மு.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார். ஆர்.கே.நகர் தேர்தலை போன்று 50ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

    இந்த ஆட்சியில் சாலை, பாலம் அமைப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்திகள் சம்பந்தப்பட்டிருப்பதால் அதில் அர்வம் காட்டுகின்றனர். அமைச்சர்கள் என்ன பேச வேண்டும்என்று தெரியாமலேயே பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் எம்.பி. அன்பழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ஓ.பி.எஸ். மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Dhinakaran #Panneerselvam

    ராமேசுவரம்:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ராமேசுவரம் வந்தார்.

    அப்துல்கலாம் அண்ணன் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்த தினகரன் அங்கு நிரூபர்களிடம் கூறியதாவது:-

    அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த வருவேன். அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.

    அப்துல்கலாம் நினைவிடத்தில் தேசிய அறிவியல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அவரது நினைவு நாளில் மாணவர்கள் இந்தியாவை வல்லரசாக்குவோம் என உறுதியேற்க வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட வழக்கில் விரைவில் நியாயமான தீர்ப்பு வரும். அப்போது தமிழக அரசு கவிழும். அது விரைவில் நடக்கும். அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும்.

    ஓ.பி.எஸ். மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhinakaran #Panneerselvam

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மேலும் 3 சட்டசபை தொகுதி வேட்பாளர்களை தினகரன் அறிவித்துள்ளார். #Dhinakaran #Assemblyelection

    அரூர்:

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் போட்டியிடுவார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் அறிவித்து இருந்தார்.

    தற்போது தருமபுரி, அரூர் உள்பட 3 தொகுதி வேட்பாளர்களை தினகரன் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் தருமபுரி மாவட்டம், அரூரில் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில், வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையை ஏற்கும் தி.மு.க. தவிர, மதசார்பற்ற எந்த கட்சியும் எங்களின் கூட்டனிக்கு வரலாம். தமிழகத்தில் நல்லாட்சி மலர, நாங்கள் அனைத்து கட்சியினரையும் வரவேற்கிறோம்.

    தமிழகத்தில் எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தருமபுரி சட்டசபை தொகுதியில் டி.கே.ராஜேந்திரன், பாப்பிரெட்டிப்பட்டியில் பி.பழனியப்பன், அரூர் (தனி)தொகுதியில் ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும்.

    மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்கியிருக்க வேண்டும். தற்போது அணைக்கு நீர்வரத்து இருப்பதால் தூர்வாரும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் குறையும், இதேபோல் தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளையும் அரசு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மழை காலங்களில் மழைநீரை சேமிக்க அரசு விரைவான நடவடிக்கை எடுத்து விவசாயப் பணிகளை மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில் வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெறும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhinakaran #Assemblyelection

    தேர்தலுக்கு 3 ஆண்டுகள் உள்ள நிலையில் தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Dhinakaran #Assemblyelection

    திருச்சி:

    திண்டுக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் நிரூபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் விரோத, ஊழல் ஆட்சி நடை பெற்று வருகிறது. இதை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா கூறினால் ஏற்றுக் கொள்கிறீர்கள். இந்தியாவிலேயே ஊழலில் முதலிடம் பெற்ற மாநிலமாகத்தான் தமிழகம் திகழ்கிறது. சாதாரண மக்களை கேட்டால் கூட இதனைத் தான் கூறுவார்கள்.

    தமிழகத்தில் லோக்பால் கொண்டு வருவது என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பாகும். பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேர வைக்கும் தேர்தல் வரும். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி தமிழகத்தில் மலரும். அப்போது உண்மையான லோக்பால் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்படும். யாரால் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். கைகோர்த்தார்களோ? அவர்களாலேயே அது பிரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் திண்டுக்கல்லுக்கு காரில் புறப்பட்டு சென்றார். ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியில் செல்லும்போது அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது டி.டி.வி.தினகரன் பேசும் போது, துரோகத்தை கருவறுக்க வேண்டும் என்பார்கள். அது போலத்தான் இப்போது தமிழகத்தில் நடக்கும் துரோக ஆட்சிக்கு கரு உள்ள முட்டையின் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சசிகலாவின் ஆசி பெற்ற வேட்பாளர் மனோகரன் போட்டியிடுவார். அரசு தலைமை கொறடாவாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்து மக்கள் பணியாற்றிய அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து அவர் திண்டுக்கல் புறப்பட்டு சென்றார்.

    தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் ஆட்சி முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Dhinakaran #Assemblyelection

    டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-



    டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. கட்சியின் அடிப்படை உறுப்பினரே அல்ல. கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக அவருக்கு அவசர அவசரமாக உறுப்பினர் அட்டையும், துணை பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.

    டி.டி.வி.தினகரன் தொடர்ச்சியாக கட்சியில் பிரிவினைகளை உருவாக்கி வந்தார். கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டார். அதனால் கட்சி விதிமுறைகளின் அடிப்படையில் அவரை பதவிநீக்கம் செய்ய அனைத்து அதிகாரமும் கட்சிக்கு உண்டு.

    அவர் பிரிவினைவாதியாக செயல்பட்டது மட்டுமின்றி அ.தி.மு.க. கட்சிக்கு எதிராக புதிய கட்சியையும் தொடங்கி இருக்கிறார். ஒருவர் அடிப்படை உறுப்பினரே அல்லாத போது அவர் எப்படி கட்சிக்கும், கட்சியின் சின்னத்துக்கும் உரிமை கொண்டாட முடியும்?

    கட்சி மற்றும் கட்சியின் சின்னத்தின் மீது உரிமை கொண்டாட டி.டி.வி.தினகரனுக்கும், அவரை சேர்ந்தவர்களுக்கும் எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர், கட்சி சின்னம் ஒதுக்கீடு தொடர்பான தேர்தல் கமிஷன் விதிமுறைகள், அ.தி.மு.க. கட்சியின் விதிமுறைகள், கட்சி பதிவு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை கோர்ட்டில் வாசித்துக் காட்டினார்.

    அவற்றை கேட்டறிந்த நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு (அதாவது இன்று) ஒத்திவைப்பதாக கூறினர். 
    90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ADMK #Dhinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- 8 வழிச் சாலையை எதிர்த்து பேசிய வைகோ, தொல்.திருமாவளவன், திருநாவுக்கரசர் போன்ற தலைவர்கள் தற்போது மக்களைக் கேட்டு முடிவு செய்வோம் என்று சொல்வதன் மூலம் பின் வாங்குவதாக தெரிகிறதே?

    பதில்:- பின்வாங்குற செயலாக தெரியலை. அரசாங்கத்திடம் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க. மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களைப் பார்க்கும் போதே தெரிகிறது. மக்களிடம் கருத்து கேளுங்க. அதுதான் சரி என்று சொல்லி இருக்கலாம்.

    கேள்வி:- 8 வழிச்சாலையின் தலைவர்களின் வீரியம் குறைந்தது போல் தெரிகிறதே?

    பதில்:- வீரியம் எல்லாம் குறையவில்லை. 6-ந்தேதி திருவண்ணாமலையிலும், 9-ந்தேதி அரூரிலும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக அனுமதி கேட்டிருக்கிறோம். போலீஸ் அனுமதி கொடுக்க வில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம். நீதிமன்றத்தின் மூலம் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். போராட்டம் நடக்கும்.


    கேள்வி:- காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டு செல்ல வேண்டும் என்று கர்நாடகத்தில் அனைத்துக் கட்சி சார்பாக முடிவெடுத்திருக்கிறார்கள். தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரியும், தமிழக அரசு சார்பாக இதுவரை எந்த ஒரு பதிலும் சொல்லவில்லையே?

    பதில்:- தமிழக அரசு இதுவரை என்னதான் செய்திருக்கிறது? நீதிமன்றம் சரியா முடிவெடுக்கறதால காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கு. தொடர்ந்து பார்ப்போம். தமிழகத்தில் அரசு ஒன்று இருக்கிறதா? நீங்கதான் நினைக்கிறீங்க. மக்கள் யாரும் அரசு ஒன்று இருப்பதாக பொருட்படுத்தவில்லை. இருக்கிற அரசாங்கமும் மக்களை கஷ்டப்படுத்த தான் இருக்கிறது என்பது மக்களோடு எண்ணம். விரைவில் இந்த அரசாங்கத்துக்கு நல்ல முடிவு வரும்.

    கேள்வி:- தொடர்ந்து நீங்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டுவர்றீங்க. போற இடங்களில் எல்லாம் உங்களுக்கு எப்படி வரவேற்பு இருக்கு?

    பதில்:- வரவேற்பை பற்றி நீங்கள்தான் சொல்லணும்?

    கேள்வி:- போற இடங்களில் எல்லாம் அ.தி.மு.க.வோட அடிமட்ட தொண்டர்கள் எல்லாம் உங்கள் பக்கம் இருப்பதாக சொல்லப்படுதே?

    பதில்:- உண்மைதான். தொன்னூறு சதவீதத்துக்கு மேலே அம்மாவோட தொண்டர்கள் எங்கக் கூட தான் இருக்காங்க. ஆட்சி அதிகாரத்துல இருக்கிற தால அ.தி.மு.க. என்கிற கட்சி ஓடிக்கிட்டு இருக்கு. ஆட்சியை விட்டு இறங்கினால் அது முழுவதும் எங்களிடம் வந்து விடும்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #ADMK #Dhinakaran

    துணை முதலைச்சர் ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. #SC
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்தன. எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ. பன்னீர் செல்வம் அணியும் எதிரெதிராக நின்றன. அப்போது அமைக்கப்பட்ட எடப்பாடி தலைமையிலான ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பன்னீர் செல்வம் உட்பட 7 எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.

    இதையடுத்து, பன்னீர் செல்வமும், எடப்பாடியும் ஒரு அணியாக இணைந்த பிறகு, தினகரன் அணி என 3-ம் அணி உருவானது. அந்த அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனவும், முதல்வரை மாற்றுமாறும் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.



    இதனைத் தொடர்ந்து தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தினகரன் தரப்பு போட்டாபோட்டியாக, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு வழக்கு தொடரப்பட்டது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தினகரன் தரப்புக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பு இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். #SC 
    அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை தினகரன் தரப்புக்கு வழங்க எழும்பூர் கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #TTVDhinakaran #Foreigncurrencycase

    சென்னை:

    இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்து அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, டி.டி.வி.தினகரன் மீது 1996-ம் ஆண்டு அமலாக்க பிரிவு வழக்கு தொடர்ந்தது.

    எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், லண்டன் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனது தரப்பு சாட்சிகள் 17 பேரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும், இந்த வழக்கு குறித்து விசாரணை அதிகாரி, லண்டன் இந்திய தூதரகத்திற்கு அனுப்பிய ஆவணங்களை தனக்கு வழங்கவேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் பொருளாதார கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதை எதிர்த்து தினகரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், தினகரன் தரப்பு கோரிய ஆவணங்களை எல்லாம் எழும்பூர் கோர்ட்டு வழங்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக விசாரணையில் உள்ள வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


    அப்போது, டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல் குறுக்கிட்டு, ‘ஒரே பரிவர்த்தனை தொடர்பாக 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த 2 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 2 வழக்குகளையும் விசாரிக்க தடை விதித்துள்ளது’ என்று கூறினார்.

    இதையடுத்து 6 மாதங்களுக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை மட்டும் நீதிபதி ரத்து செய்தார். #TTVDhinakaran #Foreigncurrencycase

    தினகரனை ஆதரித்த அ.தி.மு.க. கூட்டணி எம். எல்.ஏ.க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி இப்போது தனித்தனி நிலைப்பாட்டை எடுத்து செயல்படுகின்றனர். #TTVDhinakaran

    சென்னை:

    தினகரனை ஆதரித்த அ.தி.மு.க. கூட்டணி எம். எல்.ஏ.க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி இப்போது தனித்தனி நிலைப்பாட்டை எடுத்து செயல்படுகின்றனர்.

    முக்குலத்தோர் புலிப்படை எம்.எல்.ஏ. கருணாஸ் எடப்பாடி பழனிசாமி அரசை தற்போது கடுமையாக வசைபாடுகிறார்.

    டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் இவர் அண்ணா அறிவாலயத்தில் சமீபத்தில் தி.மு.க. நடத்திய போட்டி சட்டமன்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார். சட்ட சபையில் எடப்பாடி பழனிசாமி அரசை ஆதரித்து பேசுவதும் இல்லை.

    கொங்கு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ. தனியரசு ஆரம்பத்தில் தினகரன் பக்கம் இருந்தாலும் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். தமிமுன் அன்சாரி மற்றும் கருணாசுடன் கூட்டு சேராமல் தனித்து செயல்படுகிறார்.


    மனித நேய ஜனநாயக மக்கள் கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி சமீபத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

    இதுபற்றி அவரிடம் கேட்டபோது ரம்ஜான் நோன்பு கஞ்சி இலவச அரிசி வழங்குவது குறித்து பேசியதாக தெரிவித்தார். கட்சி வி‌ஷயங்கள் குறித்து பேசவில்லை என்றார்.

    எடப்பாடி பழனிசாமி - தினகரன் அணி இரண்டும் இணைய வேண்டும் என்று பாடுபட்டதாகவும் அது சாத்தியமில்லாததால் தான் ஒதுங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாகவே கருத்து சொல்லி வந்தனர். ஆனால் இப்போது 3 பேரும் தனித்தனி நிலைப்பாட்டை எடுத்து செயல்படுகின்றனர். இந்த போக்கு தினகரனுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    அது மட்டுமல்ல தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜி, பழனியப்பனை தவிர மற்ற 16 எம்.எல்.ஏ.க்களும் நமது நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று மனம் வெறுத்துபோய் உள்ளனர்.

    எம்.எல்.ஏ.வாக இல்லாததால் தொகுதியில் வலம் வர முடியவில்லை. சட்டசபைக்கு போகாததால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தில் உள்ளனர். தீர்ப்பு வரும் என்று காத்திருந்து காலம் விரயமானது தான் மிச்சம் என்று புலம்பி வருகின்றனர். #TTVDhinakaran

    சாராய ஆலை குற்றச்சாட்டு தொடர்பாக டி.டி.வி. தினகரன் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டசபையில் இருந்து அவர் வெளிநடப்பு செய்தார்.
    சென்னை:

    சட்டசபையில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. ஒரு பிரச்சினையை முன்வைத்து பேசினார்.

    2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 6,672 மதுக்கடைகளை குறைப்பேன் என்று மறைந்த ஜெயலலிதா குறிப்பிட்டு இருந்தார். அதன்படி பதவி ஏற்றதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார்.

    பிப்ரவரி மாதம் பிறந்த நாளன்று 500 மதுக்கடைகளை மூடினார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது 3.866 கடைகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    கடந்த மே 21-ந்தேதி வெளியிடப்பட்ட அரசாணைப்படி 810 கடையை மீண்டும் திறக்க இந்த அரசு முயற்சிக்கிறது. அம்மா வழியில் நடப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்த அரசு மீண்டும் மதுக்கடைகளை திறக்க முயற்சி செய்வது சரியா? இதற்கு காரணம் என்ன என்றார்.

    உடனே அ.தி.மு.க. உறுப்பினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். ஒரு உறுப்பினர் “உர்..ர்.. என்று சத்தம் எழுப்பினார். தொடர்ந்து டி.டி.வி. தினகரன் பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது சபாநாயகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    சபாநாயகர்:- யாரும் உங்கள் பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை. பொதுவாக சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்க வாய்ப்பு கொடுக்க முடியாது. மதுவிலக்கு மற்றும் துறை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சரிடம் பதில் இருந்தால் விளக்கம் அளிப்பார்.

    (அதன் பிறகு தினகரன் மீண்டும் பேச எழுந்தார். அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கவில்லை.)



    அமைச்சர் தங்கமணி:- 2016 தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து பூரண மது விலக்கு கொண்டு வருவதுதான் நமது கொள்கை என்று அம்மா அறிவித்தார். அதன்படி 23.5.2016-ல் 500 மதுக்கடையை மூட கையெழுத்திட்டார். அதன் பிறகு அம்மா பிறந்த நாளில் 500 கடைகள் மூடப்பட்டது. இப்போது 3.866 கடைகள் உள்ளன. பக்கத்து மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் வந்து விடக் கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமுடன் உள்ளது. 2002-ல் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளுக்கு 25 சதவீதம் மது பானம் சப்ளை செய்தது யாருடைய ஆலையில் இருந்து அவர்களது குடும்பத்தை சார்ந்ததுதானே. மது விலக்கை பற்றி பேசுபவர்கள் அவர்களது மதுபான ஆலையை அப்போது மூடசொல்லி இருக்க வேண்டியதுதானே.

    இவ்வாறு அவர் கூறியதும் தினகரன் பதில் அளிக்க முற்பட்டார். சபாநாயகர் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. மைக் இல்லாமலேயே சிறிது நேரம் பேசினார். வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். மைக் இல்லாமல் பேசிய பேச்சு அவை குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் கூறினார்.

    இதையடுத்து தினகரன் வெளிநடப்பு செய்தார். சட்டசபைக்கு வெளியே வந்த தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த அரசு 810 மதுக்கடையை புதிதாக திறக்க முயற்சி செய்கிறது என்று கூறினால் நிதானம் இல்லாமல் பேசுவதாக என்னைப் பார்த்து கூறுகிறார்கள். எனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மது ஆலை இருப்பதாக கூறுகிறார்கள். எனக்கு எந்த சாராய ஆலையும் கிடையாது. என் குடும்பம் என்றால் நானும் என் மனைவியும்தான். ஒரு வேளை எங்கள் உறவினர் குடும்பத்தினருக்கு மது ஆலை இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அந்த ஆலையில் இருந்து மது வாங்க மாட்டோம் என்று இவர்களால் சொல்ல முடியவில்லை.

    கோவை அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இவர்களுக்குத்தான் நிறைய பங்கு உள்ளது. இந்த ஆட்சி போகும் போது தொழிற்சாலைகளில் யார்-யார் பினாமி என்பது தெரிந்துவிடும். ஹவாலா பணத்தை காட்டி நான் ஜெயித்ததாக அமைச்சர் கூறுகிறார்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.6,000 வீதம் ஓட்டுக்கு பணம் கொடுத்து ரூ.180 கோடி வரை செலவு செய்தது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

    நாங்கள் ரூ.20 நோட்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. வாக்குறுதி கொடுத்து இருந்தாலும் அதை நிறைவேற்றுவோம். மதுசூதனன் ஆட்கள்தான் ரூ.20 நோட்டை காட்டி மக்களை தூண்டி விடுகிறார்கள்.

    தனக்கு போன் மூலம் மிரட்டல் வருவதாக அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார். இவர்கள் ஆட்கள்தான் இவரை மிரட்டி இருப்பார்கள். எங்கள் கட்சி ஆட்கள் இவரை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. யார் மிரட்டினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×