search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Salem green expressway"

    தஞ்சையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் மற்றும் திவாகரன் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்து பேசினர். #Dhivakaran #MKStalin
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று நடந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிட கழக பொதுச்செயலாளருமான திவாகரன் கலந்து கொண்டார். இதே திருமணத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    அப்போது இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்து பேசினர். இதைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்று விட்டார்.

    பின்னர் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-


    சென்னை- சேலத்துக்கு 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் தமிழக அரசு விடாப்பிடியாக செயல்படுவது ஏன் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக முதல்- அமைச்சருக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். அதில் மக்கள் கருத்தை கேட்டு மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்றும் படி தெரிவித்துள்ளேன். இந்த திட்டம் தொடர்பாக மக்களிடம் பேசிவிட்டு மக்களின் சம்மதத்தை பெற்று செயல்படுத்த வேண்டும்.

    மேலும் எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதனை சரியாக ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும். 8 வழிச்சாலை திட்டத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுவதால் அவர்களின் கருத்தை கேட்டு அதன்படி அரசு செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்வது முறையற்ற செயல் ஆகும். காவல்துறை முதல்வரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. இது தொடர்பாக முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்டம் தோறும் அண்ணா திராவிடர் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் தேர்வு நடந்து வருகிறது. மீனவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி அண்ணா திராவிடர் கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். இதில் எனது மகன் ஜெயானந்த் கலந்து கொள்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhivakaran #MKStalin #ChennaiSalemGreenExpressWay
    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை தொடர்பாக மக்கள் முடிவின்படி திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்று தே.மு.தி.க. மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார். #ChennaiSalemGreenExpressway #PremalathaVijayakanth
    தூத்துக்குடி:

    தே.மு.தி.க. மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் கடந்த முறை தூத்துக்குடிக்கு வந்தபோது அ.குமரெட்டியாபுரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்றேன். அந்த தண்ணீர் குடிக்க தகுதியானதா? இல்லையா? என்பதை பரிசோதனை செய்து தெரிவிப்பேன் என்று கூறினேன். அதன்படி அந்த தண்ணீர் ஆய்வகத்தில் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

    அந்த தண்ணீர் குடிப்பதற்கோ, கட்டுமான பணிகளுக்கோ, விவசாயத்துக்கோ தகுதியில்லாதது என்று சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆகையால் நிச்சயமாக ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்களுடைய போராட்டம் நியாயமானது. ஆனால் 13 அப்பாவி உயிர்களை இழந்தது மிகவும் பரிதாபமானது. மக்களின் போராட்டம் மூலமே அந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு உள்ளது.



    சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை தொடர்பாக மக்களின் கருத்தை கேட்க வேண்டும். மக்கள் முடிவின்படி திட்டங்களை கொண்டு வரவேண்டும். மக்கள் கருத்தை கேட்டு, அவர்களின் ஒத்துழைப்போடு செய்ய வேண்டும்.

    எல்லா திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தால் தமிழ்நாடு முன்னேறுவதில் மிகப்பெரிய கேள்விக்குறி வரும். ஆனால் இந்த ரோடு அவசியமா? என்பதை அந்த பகுதி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் எவ்வளவு என்பதையும் பார்க்க வேண்டும். ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகள் அந்த பகுதியில் அதிகம் உள்ளது.

    விவசாயிகளின் நிலம் எடுக்கப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சேலம் வளர்ச்சி பெற விமான நிலையம் தேவை. சேலத்தில் விமான நிலையம் நிச்சயம் வரவேண்டும். அதற்காக எடுக்கப்படும் நிலத்துக்கான இழப்பீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiSalemGreenExpressway #PremalathaVijayakanth

    சென்னை-சேலம் 8 வழி சாலையை 90 சதவீத மக்கள் வரவேற்றுள்ளதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. தெரிவித்தார். #ChennaiSalemGreenExpressWay
    ராஜபாளையம்:

    பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. ராஜபாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை-சேலம் 8 வழி சாலையை 90 சதவீத மக்கள் வரவேற்றுள்ளனர். மக்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. சாலை அமைக்க எடுக்கும் இடங்களில் விவசாய நிலங்கள் குறைவு.


    அந்த நிலத்தின் மதிப்புக்கு அதிகமான நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் சிலர் பிரச்சனையை தூண்டுகிறார்கள்.

    தி.மு.க.வின் முதல் வார்த்தையான திராவிடம், 2-ம் வார்த்தையான முன்னேற்றம் என்பது அர்த்தமற்றதாகி விட்டது. வெறும் கழகம் மட்டுமே உள்ளது.

    ஜி.எஸ்.டி வெற்றிகரமாக ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த வரியால் எதிர் பார்த்த அளவுக்கு அதிகமாக வருமானம் கிடைத்துள்ளது.

    ஜி.எஸ்.டி இன்னும் முழுமை அடையவில்லை. அதிகமான வரி உள்ள பொருட்களுக்கு இன்னும் வரி குறையும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் ஜி.எஸ்.டி.க்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

    ராஜ்ய சபாவில் வாய்ப்பு கிடைத்த போது பட்டாசு தொழிலுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு குறித்து பேசினேன். வரி விலக்கு கிடைத்தால் பட்டாசு தொழில் மேம்படுவதுடன் அன்னிய செலாவணியும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiSalemGreenExpressWay  #BJP #LaGanesan
    பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. #ChennaiSalemGreenExpressway #EightLaneExpressway
    சென்னை:

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் 2013ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், 8 வழிச் சாலைத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

    நிலத்திற்கு உரிமையாளர் இலலாத ஒருவர் வழக்கு தொடர்ந்திருப்பது ஏற்புடையது அல்ல என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தன. மேலும், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட 3 முதல் 4 மடங்கு வரை கூடுதல் இழப்பீடு வழங்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு கருத்துக்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.  #ChennaiSalemGreenExpressway #EightLaneExpressway
    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலையால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் விளைபொருளின் உற்பத்தியும் பாதிக்கப்படும். உணவு உற்பத்தி குறைந்து விலைவாசி அதிகரிக்கும். உணவு பஞ்சமும் ஏற்படக்கூடும். #ChennaiSalemGreenExpressway
    வேலூர்:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    இத்திட்டம் வனவிலங்குகளை கொன்று பசுமை நிறைந்த காடு மற்றும் மலைகள், விளை நிலங்கள், நீர் நிலைகளை அழித்து இயற்கைக்கும், மக்களுக்கும் பெரும் சுமையாக இருக்கும். திருவண்ணாமலை உள்பட 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்து விரைவு சாலை போடுவதற்கு என்ன அவசியம், அவசரம் ஏற்பட்டுள்ளது.

    திட்டங்கள் மக்கள் நலன் சார்ந்தவையாக இருக்க வேண்டும். மக்கள் வேண்டாம் என்று கருதும் திட்டத்தை அடக்கு முறையோடு செயல்படுத்துவது எந்த வகையில் நியாயம். ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் இருக்கிறது. கருத்து தெரிவிப்பவர்களை சமூக விரோதிகள் என்றும் திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளையும் கைது செய்வது கண்டத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.

    பசுமை சாலை அமைந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    எக்ஸ்பிரஸ் பசுமை சாலை திட்டத்தால் கஞ்சமலை, ஜருகுமலை, கல்வராயன் மலை, கவுத்திமலை, வேடியப்பன் மலை மற்றும் தீர்த்த மலை என மீண்டும் உருவாக்க முடியாத 8 மலைகள் பாதிக்கப்படுகின்றன.

    இத்திட்டத்தால் ஆறுகள், ஏரிகள், கிணறுகள், கண்மாய் போன்ற பல நீர்நிலைகள் அழிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. தற்போது உணவு பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை போல நீரையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படும்.



    இந்தியாவில் விவசாயம் அழிந்து வரும் நிலையில் இத்திட்டத்தால் நிறைய விவசாய நிலங்கள் அழிக்கப்படும். 5 மாவட்டங்களிலும் விவசாய தொழிலை நம்பி வாழக்கூடிய விவசாயிகள், விவசாய கூலிகள், விவசாய தொழிலை சார்ந்து வாழக் கூடிய சார்பு நிலை தொழிலாளர்கள் என சுமார் 2 லட்சம் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

    இத்திட்டத்தால் அதிகளவு விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் விளைபொருளின் உற்பத்தியும் பாதிக்கப்படும். இதனால் உணவு உற்பத்தி குறைந்து விலைவாசி அதிகரிக்கும். உணவு பஞ்சம் ஏற்படக்கூடும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாத மாநிலமாக தமிழகம் மாறும்.

    கனிம வளங்கள் இல்லாத நிலம் பாலைவனம் என்பதை போல கஞ்சமலை, கவுத்தி மலை, வேடியப்பன் மலையில் உள்ள இரும்பு தாதுகளும், தர்மபுரி மாவட்டத்தில் பிளாட்டின பாறைகளும், கல்வராயன் மலை, ஜருகு மலையில் உள்ள கருங்கற்களும் பாதிக்கப்படுவதோடு நிலத்தடியில் உள்ள கனிமங்களும் பாதிக்கும்.

    பசுமை வழி சாலையின் இரு புறமும் சுற்றுச்சுவர் கட்டுவதால் உறவுகள் போல் ஒட்டி இருந்த கிராமங்கள் தொடர்புகளே இல்லாமல் பிரிக்கப்படும். இச்சாலையில் தொடக்கமே 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டியிருப்பதால் சாதாரண வாகனங்கள் செல்ல முடியாது. இச்சாலை 10 ஆயிரம் கோடியில் உருவாக்கப்படுவதால் டோல்கேட் கட்டணம் குறைந்தது ஒரு கிலோ மீட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் இருக்கும்.

    இதனால் ஏழை, நடுத்தர மக்கள் இச்சாலையில் பயணம் செய்ய முடியாது. ஆரணி, போளூர், செங்கம், திருவண்ணாமலை அரூர் போன்ற பகுதிகளில் 23 கிலோ மீட்டர் வனப்பகுதி கையகப்படுத்தப்படுவதால் வன உயிரினங்களின் வழித்தடங்கள் அழிக்கப்படுவதோடு அவற்றின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

    இயற்கையை காக்க உலக நாடுகள் முன்வரும் நிலையில் இத்திட்டத்தால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகிறது. அதற்கு பதிலாக 4 மடங்கு மரங்கள் நட்டாலும் அது சம நிலை செய்ய முடியாது. மரங்கள் அழிக்கப்பட்டால் கார்பன்டை ஆக்சைடு அதிகரிக்கும். ஆக்சிஜன் குறையும். கார்பன்டை ஆக்சைடு குறைந்தால் வெப்ப மயமாதல் அதிகரிக்கும் என்றனர். #ChennaiSalemGreenExpressway
    ‘8 வழி சாலை அமைத்தால் இந்த அரசு காணாமல் போய் விடும்’ என்று சேலத்தில் அருள்வாக்கு கூறிய பக்தரால் அங்கு பரபரப்பு நிலவியது. #ChennaiSalemGreenExpressway
    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 277 கி.மீ. தூரத்திற்கு 8 வழி விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது.

    இந்த சாலைக்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதி அளிக்கப்பட உள்ளதால் பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் 36.3 கி.மீ. தூரம் அமைக்கப்படும் இந்த சாலைக்கு 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 366 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான நில அளவீடு கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி நிறைவு பெற்றது.

    அப்போது விவசாயிகள் பொதுமக்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் எதிர்ப்பை தெரிவித்து கண்ணீர் விட்டு கதறினர். ஆனாலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நில அளவீடு பணியை அரசு முடித்துள்ளது.



    இந்தநிலையில் நேற்று 8 வழி சாலை திட்டம் குறித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டினத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். அப்போது விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கண்ணீர் விட்டு கதறினர்.

    இந்த நிலையில் சேலம் அருகே உள்ள பேளூர் மெயின் ரோட்டில் உள்ள குள்ளம்பட்டி பஸ் நிறுத்தத்தை அடுத்துள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு விவசாயிகளும், பெண்களும் கருப்பு பட்டை அணிந்து கோரிக்கை மனுக்களுடன் வந்தனர்.

    அந்த கோரிக்கை மனுவில் 8 வழி பசுமை சாலை திட்டப்பணியால் விவசாய நிலங்கள் அழிந்து போகும் நிலை உள்ளதால் இந்த திட்டப்பணியை நிறுத்த அம்மன் அருள் புரிய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுக்களை கோவில் பூசாரியிடம் கொடுத்து அம்மன் பாதத்தில் வைத்தும் பொங்கலிட்டும் அவர்கள் வழிபட்டனர்.

    அப்போது அங்கு வழிபாட்டுக்கு வந்த பார்வதி என்ற பக்தர் சாமியாடிய படி அருள் வாக்கு கூறினார். யாருடைய நிலத்தையும் நான் எடுக்க விட மாட்டேன். அனைவருக்கும் நிலத்தை மீட்டு தருவேன், இது சத்தியம். 8 வழி சாலை அமைத்தால் இந்த அரசு காணாமல் போய் விடும் என கூறினார். இதனையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை வேண்டினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    அப்போது அங்கிருந்த பெரும்பாலான பக்தர்கள் 8 வழி சாலைக்கு எதிராக சாமியே அருள்வாக்கு கூறி உள்ளதால் விவசாய நிலங்களின் வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? என்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். #ChennaiSalemGreenExpressway
    சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் ஆட்சியாளர்கள், சர்வாதிகாரியை போல நடந்து கொள்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். #kanimozhi #tamilisai #chennaisalem8wayroad

    கோவை:

    தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க. என அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?

    பதில்:- முரண்பாடுகளுடன் வாழ்றது தான் வாழ்க்கை. அதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் முரண்பாடுகளே ஒரு கட்சியாக இன்றைக்கு நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் அவர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டவர்கள் இன்று ஒன்றாக இருக்கிறார்கள்.

    மேடையில் ஏறி ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பற்றி ஒரு அமைச்சர் பேசக்கூடிய அளவுக்கு முரண்பாடுகள் இருக்கக் கூடிய கட்சி எது என்று அவர்களுக்கே தெரியும்.

    கேள்வி:- சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிராக போராடும் மக்கள் தூத்துக்குடி சம்பவம் போல நடந்து விடும் என அச்சப்படுகிறார்களே?

    பதில்:- தூத்துக்குடி சம்பவமே, போராட்டங்கள் நடக்கக் கூடாது என மக்களை அச்சுறுத்த வேண்டும், போராளிகளை அச்சுறுத்த வேண்டும் என்று நடத்தப்பட்ட ஒரு நாடகம் தான். அதில் 13 பேர் கொலை செய்யப்பட்டது முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை.

    இன்றைக்கு யார் வாயை திறந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள். ஒரு ஆரம்ப சாத்தியக்கூறுகள் கூட செய்யாத ஆட்சி இன்று நடந்து கொண்டிருக்கிறது. 8 வழிச்சாலை அமைக்க என்ன செய்யப் போகிறார்கள் என்று மக்களுக்கு தெளிவாக தெரிவித்து விட்டு மக்களுடன் கலந்து பேசி, பிறகு அதை அமைப்பதில் யாருக்கும் எந்த எதிர்ப்பும் இருக்கப் போவதில்லை. அதை எல்லாம் செய்யாமல் ஒரு சர்வாதிகாரியை போல இன்று இருக்கக் கூடிய ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள்.

    கேள்வி:-தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக தமிழிசை சவுந்தர் ராஜன் கூறி உள்ளாரே?


    பதில்:- ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா இரண்டும் போய் விட்டால் இருக்கக் கூடிய தீவிரவாத அமைப்புகள் எல்லாம் போய் விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #tamilisai #chennaisalem8wayroad 

    சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் வீடுகள், விவசாய நிலங்களில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    சேலம்:

    சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை சென்னையில் இருந்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் வழியாக சேலத்துக்கு 277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் 36.3 கிலோ மீட்டரும், தர்மபுரியில் 56 கிலோ மீட்டரும், திருவண்ணாமலையில் 123 கிலோ மீட்டரும், காஞ்சிபுரத்தில் 59 கிலோ மீட்டரும் என பசுமை சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்காக 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விளை நிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகள் கையகப் படுத்துவதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    நிலம் அளவிடும் பணி நடக்கும்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் உதவியுடன் அளவிடும் பணி நடந்து வருகிறது. அப்போது சில பெண்கள் கண்ணீர் விட்டு அழுது புரண்டனர். சிலர் தீக்குளிக்க முயற்சியும் செய்தனர். ஆனாலும் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் 36.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலம் அளவீடு செய்யும் பணி நேற்று மாலையில் நிறைவு பெற்றது.

    இந்த திட்டத்தை கைவிடக்கோரி 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலம் அளவீடு செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டும் போராட்டம் இன்று முதல் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தது.



    அதன்படி சேலம் மாவட்டத்தில் நிலம் அளவீடு செய்யப்பட்ட பகுதிகளான ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், கீரிப்பட்டி, குள்ளப்பட்டி, ராமலிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டது. வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றினர்.

    தருமபுரி மாவட்டத்தில் 54.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலங்களை அளவிடும் பணி நடந்து முடிந்தது.

    இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை அடுத்த கோம்பூர், சின்னமஞ்ச வாடி, பெரிய மஞ்சவாடி, மாளகாபாடி, கொக்காரப்பட்டி, இருளப்பட்டி ஆகிய கிராமங்களில் 100-க்கும்மேற்பட்ட விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய சுற்று வட்டார பகுதி கிராமங்களில் நார்த்தம் பூண்டி, முத்தரசம்பூண்டி, நயம்பாடி, நம்மியந்தல், நீப்பந்துறை உள்பட 92 கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

    அடுத்த மாதம் 6-ந் தேதி 8 வழிச்சாலை அறிவிப்பு அரசாணையை எரித்து போராட்டம் நடத்தவும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

    மேலும் ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், கலெக்டர் மற்றும் நில எடுப்பு வருவாய்த்துறை அலுவலர் ஆகியோருக்கு ஆட்சேபனை மனுக்களை நேரடியாகவும், பதிவு தபால் மற்றும் மின் அஞ்சலில் அனுப்பவும் 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த சாலை 59 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.

    தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் தொடங்கும் சாலை படப்பை, குருவன்மேடு, பாலூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர் வழியாக காஞ்சீபுரம் மாவட்ட எல்லையான பெருநகர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் செல்கிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்படவில்லை. எனினும் விவசாய நிலங்கள் அதிக அளவில் கையகப்படுத்தப்படும் என்பதால் ஆரம்ப கட்டத்திலேயே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் 525 ஹெக்டேர் நிலங்கள் (1300 ஏக்கர்) கையகப்படுத்தப்பட உள்ளன. 8 வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இருந்தனர்.

    உத்திரமேரூர் தாலுகா பகுதியில் மணல்மேடு, ஒழுகரை, வெங்கூர், அனுமந்த தண்டலம், சித்தேரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள், விவசாய நிலங்களில் விவ சாயிகள் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு கூறும் போது, “பசுமை வழிச்சாலையால் விவசாயிகள் நிலம் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள விழுப்புரம்-சேலம் சாலையை விரிவுபடுத்தினாலே போதும்.

    2013 நில எடுப்பு சட்ட மசோதாபடி விவசாயிகளின் கருத்து கேட்ட பின்பே விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டும். ஆனால் இப்போது விவசாயிகளிடம் கருத்து கேட்காமலேயே நிலம் எடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 6-ந் தேதி 5 மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படுகிறது” என்றார்.

    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் உள்ள 92 கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
    வேலூர்:

    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச் சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோ மீட்டரில் அமையும் இந்த சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    5 மாவட்டங்களிலும் விளைநிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகளை என இயற்கை வளங்களை அழித்து பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தங்கள் கண்ணெதிரிலேயே நிலம் பறிபோவதை பார்த்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    தர்மபுரி மாவட்ட விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டம் ஒரு புறம் நடந்து வந்தாலும் மறுபுறம் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    5 மாவட்டத்திலும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. அவசர கதியில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது. போலீஸ் படையுடன் வரும் அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்து குறியீடு கற்களை பதிக்கின்றனர். பசுமையை அழித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்து போடப்படும் பசுமை சாலை திட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாகவே விவசாயிகள் சங்கம் புகார் கூறுகிறது.

    சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் 92 கிலோ மீட்டரில் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.

    இதற்கான நிலம் அளவீட்டு பணிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. தர்மபுரியில் நேற்று முன்தினம் பணிகள் முடிந்தது. சேலம் மாவட்டத்தில் 7-வது நாளாக நடந்த அளவீட்டு பணிகள் நேற்று முடிந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 124 கிலோமீட்டர் தொலைவு சாலை அமைகிறது. சாலையின் அகலம் 110 மீட்டர் என முதலில் கணக்கிடப்பட்டது. தற்போது, 70 மீட்டர் அகலத்தில் அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் அரசுக்கு சொந்தமான 153 ஹெக்டர் நிலம், 18 ஹெக்டர் வன பரப்பு, 690 ஹெக்டர் தரிசு நிலம், 141 ஹெக்டர் விளை நிலம் உள்பட 861 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

    திருவண்ணாமலையில் சுமார் 92 கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரம் குடும்பம் பாதிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை செங்கம், கலசப்பாக்கம் தாலுகாவில் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு சர்வே முடிந்துவிட்டது. 261 சிறு விவசாயிகள், 158 குறு விவசாயிகள், 35 பெரு விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    செங்கம் அடுத்த மண்மலை, காத்தமடுவு கிராமங்களில் நில அளவீடு பணி இன்று நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் அதிகாரிகள் நில அளவீடு பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பசுமை சாலையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இன்று கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய சுற்று வட்டார பகுதி கிராமங்களில் நார்த்தம் பூண்டி, முத்தரசம்பூண்டி, நயம்பாடி, நம்மியந்தல், நீப்பந்துறை உள்பட 92 கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

    அடுத்த மாதம் 6-ந் தேதி 8 வழிச்சாலை அறிவிப்பு அரசாணையை எரித்து போராட்டம் நடத்தவும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

    மேலும் ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், கலெக்டர் மற்றும் நில எடுப்பு வருவாய்த்துறை அலுவலர் ஆகியோருக்கு ஆட்சேபனை மனுக்களை நேரடியாகவும், பதிவு தபால் மற்றும் மின் அஞ்சலில் அனுப்பவும் 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    பசுமை வழி சாலை அமைக்கப்படுவதால் பாதகங்கள் குறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில்:-

    பசுமை சாலை திட்டத்தால் கஞ்சலை, ஜருகு மலை, கல்வராயன் மலை, வேடியப்பன் மலை, தீர்த்த மலை என மீண்டும் உருவாக்க முடியாத 8 மலைகள் பாதிக்கப்படுகின்றன.

    நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதிப்படையும். உணவு பொருட்களை வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை போல நீரையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படும். உணவு பஞ்சம் ஏற்படும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி விடும் என்று கூறினர்.


    சென்னை-சேலம் பசுமை சாலைக்காக வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக உள்ள புகழ் பெற்ற வெள்ளையப்பன் கோவில் பகுதியில் நிலம் அளக்கும் பணி நடைபெற்றது.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

    கடந்த சில நாட்களாக 8 வழி சாலைக்கு நிலம் அளக்கும் பணி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மஞ்சவாடி பகுதியில் நடைபெற்றது. இந்த பகுதியில் புகழ் பெற்ற மஞ்சவாடி தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு அனைத்து பொதுமக்களும் சாதி மத வேறுபாடுகள் இன்றி தங்கள் குறைகளை கூறி வேண்டி சென்றால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

    இதற்காக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது தமிழகம், கேரளம், கர்நாடகம், பாண்டிச்சேரி மற்றும் ஆந்திராவில் இருந்து வந்து செல்வார்கள். இதனால் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு தொழுகையும் நடைபெறும்.

    8 வழிச்சாலைக்காக நிலம் எடுக்கும் திட்டத்தில் 4 ஏக்கர் பரப்பில் உள்ள 3 ஏக்கர் நிலம் பறிபோகும் நிலை உள்ளது. இதில் இந்த தர்காவை நிறுவிய ஹரத்சையத்தில் சார் அலிசா பாபா மற்றும் 5 பேரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபடும் இடமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மஞ்சவாடி கணவாய் பகுதியில் உள்ள சேர்வராயன் மலை, கல்வராயன் மலை பகுதிகளில் வாழும் காட்டெருமை, பன்றி, முள்ளம் பன்றி, குரங்கு, சிறுத்தை, கரடி, மான்கள் என்று தண்ணீர் தேடி வரும் 40 ஏக்கர் பரப்பில் உள்ள செங்குட்டை ஏரியில் நிலம் எடுக்கும்படி உள்ளது.

    இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து 8 வழி சாலை அமைத்தால் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வரும் சூழல் ஏற்படும். எனவே இந்த பாதிப்பை எப்படி சரி செய்வார்கள் என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    மஞ்சவாடி கணவாயில் உள்ள வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக உள்ள புகழ் பெற்ற வெள்ளையப்பன் கோவில் பகுதியில் நிலம் அளக்கும் பணி நடைபெற்றது.

    இந்த கோவில் மிகவும் பழமையானது. இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பயணிகளின் காவல் தெய்வமாக வெள்ளையப்பன் உள்ளார். இந்த கோவிலில் வேண்டி பூஜை செய்து வாகன சக்கரங்களில் எலுமிச்சை வைத்துவிட்டு வாகனத்தை செலுத்தினால் பாதுகாப்புடன் வெள்ளையப்பன் நம்மை காப்பார்.

    இங்கு வேண்டுதலில் பயன் அடைந்தவர்கள் தினமும் தனது உறவினர்களுடன் வந்து நேர்த்தி கடன் செலுத்தி ஆடு, கோழி, பலியிட்டு சாப்பிடுவது வழக்கம். ஞாயிற்றுக் கிழமைகளிலும், அஷ்டமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் சேதமின்றி பாதுகாக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு பக்தர்கள் கூறினர்.

    வன பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அரிய வகை வாகை, புங்கன், தேக்கு, மூங்கில் மற்றும் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் சாலை பணிக்காக வெட்டப்படுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    சேலம்-சென்னை 8 வழி சாலை தொடர்பாக வாட்ஸ்-அப்பில் தவறான தகவலை பரப்பிய சென்னையை சேர்ந்த செல்வராஜை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 8 வழி சாலை திட்டத்திற்கு நில அளவீடு பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

    நில அளவீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தியதாகவும், போராட்டக்காரர்களை ஒடுக்க காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் வாட்ஸ்-அப், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரபரப்பு தகவல் பரவியது.

    போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அது பொய்யான தகவல் என தெரிய வந்தது. மேலும் தவறான தகவலை அந்த நபர் சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் இருந்து பரப்பியது தெரிய வந்ததால் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர் சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரில் வசித்து வரும் செல்வராஜ் (வயது 43) என்பது தெரியவந்தது. உடனே சென்னைக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரை சேலம் மாவட்டத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தினர். தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வன்முறையை தூண்டுதல் உள்பட (500, 504, 505 (ஐ)) 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர். இன்று பிற்பகல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கிறார்கள். செல்வராஜின் சொந்த ஊர் கரூர் மாவட்டம் ஆகும்.

    இது போன்று அவதூறு மற்றும் பொய்யான, நடக்காத நிகழ்வை நடந்தது போன்று வேண்டும் என்றே சித்தரித்து அவதூறு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் வாட்ஸ்-அப், மின் அஞ்சல், ஊடகம் வழியாக பரப்புவது சட்டப்படி குற்றம்.அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே பொதுமக்கள் அவ்வாறான செய்திகளை நம்ப வேண்டாம். அவ்வாறு வரும் செய்திகளை வேறு நபர்களுக்கு அனுப்பினாலும் சட்டப்படி குற்றம் என்பதால் பொது மகம்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார் கேட்டு கொண்டுள்ளார்.

    பசுமை வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஹெக்டேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு என்பது ஏமாற்று வேலை என்று டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் கலெக்டர் ரோகிணி, பசுமை சாலைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.9.04 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால் இது அப்பட்டமான பொய் ஆகும். பசுமை சாலை திட்டத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு சாத்தியக் கூறு அறிக்கையில் இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்களே இதை நிரூபிக்க போதுமானவை ஆகும்.

    அதன்படி பார்த்தால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு சராசரியாக ரூ.1.87 கோடி முதல் ரூ.3 கோடி வரையும், சேலம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ.62.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கிடைக்கும். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஹெக்டேருக்கு ரூ.22.50 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.17.50 லட்சம் முதல் ரூ.28 லட்சம் வரையும் மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும்.

    இந்த விலை கூட நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கான இழப்பீட்டையும் சேர்த்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் உண்மை நிலை எனும்போது எங்கு, எந்த நிலத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.9.04 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளது என்பதை பினாமி ஆட்சியாளர்களோ, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரோ விளக்கத் தயாரா?.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×