search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு - வீடுகளில் கருப்பு கொடி போராட்டம்
    X

    பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு - வீடுகளில் கருப்பு கொடி போராட்டம்

    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் உள்ள 92 கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
    வேலூர்:

    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச் சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோ மீட்டரில் அமையும் இந்த சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    5 மாவட்டங்களிலும் விளைநிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகளை என இயற்கை வளங்களை அழித்து பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தங்கள் கண்ணெதிரிலேயே நிலம் பறிபோவதை பார்த்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    தர்மபுரி மாவட்ட விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டம் ஒரு புறம் நடந்து வந்தாலும் மறுபுறம் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    5 மாவட்டத்திலும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. அவசர கதியில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது. போலீஸ் படையுடன் வரும் அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்து குறியீடு கற்களை பதிக்கின்றனர். பசுமையை அழித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்து போடப்படும் பசுமை சாலை திட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாகவே விவசாயிகள் சங்கம் புகார் கூறுகிறது.

    சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் 92 கிலோ மீட்டரில் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.

    இதற்கான நிலம் அளவீட்டு பணிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. தர்மபுரியில் நேற்று முன்தினம் பணிகள் முடிந்தது. சேலம் மாவட்டத்தில் 7-வது நாளாக நடந்த அளவீட்டு பணிகள் நேற்று முடிந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 124 கிலோமீட்டர் தொலைவு சாலை அமைகிறது. சாலையின் அகலம் 110 மீட்டர் என முதலில் கணக்கிடப்பட்டது. தற்போது, 70 மீட்டர் அகலத்தில் அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் அரசுக்கு சொந்தமான 153 ஹெக்டர் நிலம், 18 ஹெக்டர் வன பரப்பு, 690 ஹெக்டர் தரிசு நிலம், 141 ஹெக்டர் விளை நிலம் உள்பட 861 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

    திருவண்ணாமலையில் சுமார் 92 கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரம் குடும்பம் பாதிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை செங்கம், கலசப்பாக்கம் தாலுகாவில் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு சர்வே முடிந்துவிட்டது. 261 சிறு விவசாயிகள், 158 குறு விவசாயிகள், 35 பெரு விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    செங்கம் அடுத்த மண்மலை, காத்தமடுவு கிராமங்களில் நில அளவீடு பணி இன்று நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் அதிகாரிகள் நில அளவீடு பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பசுமை சாலையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இன்று கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய சுற்று வட்டார பகுதி கிராமங்களில் நார்த்தம் பூண்டி, முத்தரசம்பூண்டி, நயம்பாடி, நம்மியந்தல், நீப்பந்துறை உள்பட 92 கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

    அடுத்த மாதம் 6-ந் தேதி 8 வழிச்சாலை அறிவிப்பு அரசாணையை எரித்து போராட்டம் நடத்தவும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

    மேலும் ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், கலெக்டர் மற்றும் நில எடுப்பு வருவாய்த்துறை அலுவலர் ஆகியோருக்கு ஆட்சேபனை மனுக்களை நேரடியாகவும், பதிவு தபால் மற்றும் மின் அஞ்சலில் அனுப்பவும் 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    பசுமை வழி சாலை அமைக்கப்படுவதால் பாதகங்கள் குறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில்:-

    பசுமை சாலை திட்டத்தால் கஞ்சலை, ஜருகு மலை, கல்வராயன் மலை, வேடியப்பன் மலை, தீர்த்த மலை என மீண்டும் உருவாக்க முடியாத 8 மலைகள் பாதிக்கப்படுகின்றன.

    நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதிப்படையும். உணவு பொருட்களை வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை போல நீரையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படும். உணவு பஞ்சம் ஏற்படும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி விடும் என்று கூறினர்.


    Next Story
    ×