search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழி சாலை அமைத்தால் இந்த அரசு காணாமல் போய் விடும் - அருள்வாக்கு கூறிய பக்தரால் பரபரப்பு
    X

    8 வழி சாலை அமைத்தால் இந்த அரசு காணாமல் போய் விடும் - அருள்வாக்கு கூறிய பக்தரால் பரபரப்பு

    ‘8 வழி சாலை அமைத்தால் இந்த அரசு காணாமல் போய் விடும்’ என்று சேலத்தில் அருள்வாக்கு கூறிய பக்தரால் அங்கு பரபரப்பு நிலவியது. #ChennaiSalemGreenExpressway
    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 277 கி.மீ. தூரத்திற்கு 8 வழி விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது.

    இந்த சாலைக்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதி அளிக்கப்பட உள்ளதால் பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் 36.3 கி.மீ. தூரம் அமைக்கப்படும் இந்த சாலைக்கு 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 366 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான நில அளவீடு கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி நிறைவு பெற்றது.

    அப்போது விவசாயிகள் பொதுமக்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் எதிர்ப்பை தெரிவித்து கண்ணீர் விட்டு கதறினர். ஆனாலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நில அளவீடு பணியை அரசு முடித்துள்ளது.



    இந்தநிலையில் நேற்று 8 வழி சாலை திட்டம் குறித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டினத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். அப்போது விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கண்ணீர் விட்டு கதறினர்.

    இந்த நிலையில் சேலம் அருகே உள்ள பேளூர் மெயின் ரோட்டில் உள்ள குள்ளம்பட்டி பஸ் நிறுத்தத்தை அடுத்துள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு விவசாயிகளும், பெண்களும் கருப்பு பட்டை அணிந்து கோரிக்கை மனுக்களுடன் வந்தனர்.

    அந்த கோரிக்கை மனுவில் 8 வழி பசுமை சாலை திட்டப்பணியால் விவசாய நிலங்கள் அழிந்து போகும் நிலை உள்ளதால் இந்த திட்டப்பணியை நிறுத்த அம்மன் அருள் புரிய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுக்களை கோவில் பூசாரியிடம் கொடுத்து அம்மன் பாதத்தில் வைத்தும் பொங்கலிட்டும் அவர்கள் வழிபட்டனர்.

    அப்போது அங்கு வழிபாட்டுக்கு வந்த பார்வதி என்ற பக்தர் சாமியாடிய படி அருள் வாக்கு கூறினார். யாருடைய நிலத்தையும் நான் எடுக்க விட மாட்டேன். அனைவருக்கும் நிலத்தை மீட்டு தருவேன், இது சத்தியம். 8 வழி சாலை அமைத்தால் இந்த அரசு காணாமல் போய் விடும் என கூறினார். இதனையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை வேண்டினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    அப்போது அங்கிருந்த பெரும்பாலான பக்தர்கள் 8 வழி சாலைக்கு எதிராக சாமியே அருள்வாக்கு கூறி உள்ளதால் விவசாய நிலங்களின் வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? என்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். #ChennaiSalemGreenExpressway
    Next Story
    ×