search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழி பசுமை சாலைக்கு நிலம் அளவிடும் பணி - வெள்ளையப்பன் கோவில் தப்புமா?
    X

    8 வழி பசுமை சாலைக்கு நிலம் அளவிடும் பணி - வெள்ளையப்பன் கோவில் தப்புமா?

    சென்னை-சேலம் பசுமை சாலைக்காக வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக உள்ள புகழ் பெற்ற வெள்ளையப்பன் கோவில் பகுதியில் நிலம் அளக்கும் பணி நடைபெற்றது.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

    கடந்த சில நாட்களாக 8 வழி சாலைக்கு நிலம் அளக்கும் பணி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மஞ்சவாடி பகுதியில் நடைபெற்றது. இந்த பகுதியில் புகழ் பெற்ற மஞ்சவாடி தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு அனைத்து பொதுமக்களும் சாதி மத வேறுபாடுகள் இன்றி தங்கள் குறைகளை கூறி வேண்டி சென்றால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

    இதற்காக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது தமிழகம், கேரளம், கர்நாடகம், பாண்டிச்சேரி மற்றும் ஆந்திராவில் இருந்து வந்து செல்வார்கள். இதனால் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு தொழுகையும் நடைபெறும்.

    8 வழிச்சாலைக்காக நிலம் எடுக்கும் திட்டத்தில் 4 ஏக்கர் பரப்பில் உள்ள 3 ஏக்கர் நிலம் பறிபோகும் நிலை உள்ளது. இதில் இந்த தர்காவை நிறுவிய ஹரத்சையத்தில் சார் அலிசா பாபா மற்றும் 5 பேரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபடும் இடமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மஞ்சவாடி கணவாய் பகுதியில் உள்ள சேர்வராயன் மலை, கல்வராயன் மலை பகுதிகளில் வாழும் காட்டெருமை, பன்றி, முள்ளம் பன்றி, குரங்கு, சிறுத்தை, கரடி, மான்கள் என்று தண்ணீர் தேடி வரும் 40 ஏக்கர் பரப்பில் உள்ள செங்குட்டை ஏரியில் நிலம் எடுக்கும்படி உள்ளது.

    இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து 8 வழி சாலை அமைத்தால் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வரும் சூழல் ஏற்படும். எனவே இந்த பாதிப்பை எப்படி சரி செய்வார்கள் என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    மஞ்சவாடி கணவாயில் உள்ள வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக உள்ள புகழ் பெற்ற வெள்ளையப்பன் கோவில் பகுதியில் நிலம் அளக்கும் பணி நடைபெற்றது.

    இந்த கோவில் மிகவும் பழமையானது. இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பயணிகளின் காவல் தெய்வமாக வெள்ளையப்பன் உள்ளார். இந்த கோவிலில் வேண்டி பூஜை செய்து வாகன சக்கரங்களில் எலுமிச்சை வைத்துவிட்டு வாகனத்தை செலுத்தினால் பாதுகாப்புடன் வெள்ளையப்பன் நம்மை காப்பார்.

    இங்கு வேண்டுதலில் பயன் அடைந்தவர்கள் தினமும் தனது உறவினர்களுடன் வந்து நேர்த்தி கடன் செலுத்தி ஆடு, கோழி, பலியிட்டு சாப்பிடுவது வழக்கம். ஞாயிற்றுக் கிழமைகளிலும், அஷ்டமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் சேதமின்றி பாதுகாக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு பக்தர்கள் கூறினர்.

    வன பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அரிய வகை வாகை, புங்கன், தேக்கு, மூங்கில் மற்றும் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் சாலை பணிக்காக வெட்டப்படுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    Next Story
    ×