search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம்-சென்னை 8 வழி சாலை தொடர்பாக வாட்ஸ்-அப்பில் தவறான தகவலை பரப்பியவர் கைது
    X

    சேலம்-சென்னை 8 வழி சாலை தொடர்பாக வாட்ஸ்-அப்பில் தவறான தகவலை பரப்பியவர் கைது

    சேலம்-சென்னை 8 வழி சாலை தொடர்பாக வாட்ஸ்-அப்பில் தவறான தகவலை பரப்பிய சென்னையை சேர்ந்த செல்வராஜை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 8 வழி சாலை திட்டத்திற்கு நில அளவீடு பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

    நில அளவீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தியதாகவும், போராட்டக்காரர்களை ஒடுக்க காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் வாட்ஸ்-அப், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரபரப்பு தகவல் பரவியது.

    போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அது பொய்யான தகவல் என தெரிய வந்தது. மேலும் தவறான தகவலை அந்த நபர் சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் இருந்து பரப்பியது தெரிய வந்ததால் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர் சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரில் வசித்து வரும் செல்வராஜ் (வயது 43) என்பது தெரியவந்தது. உடனே சென்னைக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரை சேலம் மாவட்டத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தினர். தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வன்முறையை தூண்டுதல் உள்பட (500, 504, 505 (ஐ)) 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர். இன்று பிற்பகல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கிறார்கள். செல்வராஜின் சொந்த ஊர் கரூர் மாவட்டம் ஆகும்.

    இது போன்று அவதூறு மற்றும் பொய்யான, நடக்காத நிகழ்வை நடந்தது போன்று வேண்டும் என்றே சித்தரித்து அவதூறு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் வாட்ஸ்-அப், மின் அஞ்சல், ஊடகம் வழியாக பரப்புவது சட்டப்படி குற்றம்.அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே பொதுமக்கள் அவ்வாறான செய்திகளை நம்ப வேண்டாம். அவ்வாறு வரும் செய்திகளை வேறு நபர்களுக்கு அனுப்பினாலும் சட்டப்படி குற்றம் என்பதால் பொது மகம்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார் கேட்டு கொண்டுள்ளார்.

    Next Story
    ×