search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Committee"

    கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்தனர். இன்று தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். #gajacycloneaffected
    சென்னை:

    கஜா புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசி, நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு குழு ஒன்றை அனுப்பி அறிக்கை கேட்க முடிவு செய்தது.

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் மத்திய நிதித்துறை (செலவீனங்கள்) அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் (ஐதராபாத்) இயக்குனர் (பொறுப்பு) பி.கே.ஸ்ரீவத்சவா,

    மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக துணைச் செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர் ஆதாரத்துறை இயக்குனர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் நேற்று இரவு 8 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள் நேற்றிரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கினர். அந்த ஓட்டலில் குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் இரவில் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர்களின் பயணத்திட்டம் பற்றி முடிவு செய்யப்பட்டது.

    இன்று (சனிக்கிழமை) காலை 10.15 மணியளவில் சென்னை தலைமை செயலகத்துக்கு குழுவினர் வருகின்றனர். 10.30 மணிக்கு அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுகின்றனர். பின்னர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

    இந்த சந்திப்பின்போது வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வருவாய் துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட முக்கிய அரசு துறைகளின் செயலாளர்கள் மத்திய குழுவினருடன் ஆலோசனை செய்வார்கள்.

    அதன் பிறகு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய குழுவினர் திருச்சிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் முதலில் புதுக்கோட்டைக்கு சென்று கஜா புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளில் (25 மற்றும் 26-ந் தேதிகளில்) வரிசையாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். புயல் அதிகமாக பாதித்த இந்த 4 மாவட்டங்களை மட்டும் அவர்கள் பார்வையிடுவதாக தெரிகிறது.

    26-ந் தேதி மாலை அவர்கள் சென்னை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்திக்கும் அவர்கள், பின்னர் டெல்லி திரும்புகின்றனர்.

    கஜா புயல் ஏற்படுத்திய சேதாரத்தை கணக்கிட்டு சில நாட்களில் மத்திய அரசுக்கு மத்திய குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். #gajacycloneaffected #edappadipalanisamy #CentralCommittee
    தமிழகத்தில் உருவான கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் இன்று இரவு சென்னை வந்தடைந்தனர். #GajaCyclone #TamilNadu #CentralCommittee
    சென்னை:

    கஜா புயலால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்பட 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும்படி கோரிக்கை மனு கொடுத்தார்.

    புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினார். அதை ஏற்று மத்திய குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த குழுவில் மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு, நிதித்துறை ஆலோசகர் (செலவினம்) ஆர்.பி.கால், விவசாய கூட்டுறவுத் துறை இயக்குனர் பி.கே.ஹவச்தவா, ஊரக வளர்ச்சி துறை துணை இயக்குனர் மானிக் சந்திரபண்டிட், மின்வாரிய முதன்மை என்ஜினீயர் வந்தனா சிங்கால், நீர்வளத்துறை இயக்குனர் ஹர்ஷா, நெடுஞ்சாலை, போக்குவரத்து கண்காணிப்பு என்ஜினீயர் இளவரசன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் இன்று இரவு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர். நாளை காலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள்- அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர்.

    அதன்பிறகு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் 2 பிரிவாக திருச்சி சென்று புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 3 நாட்கள் சேதங்களை மதிப்பீடு செய்கின்றனர். வரும் 27-ம் தேதி சென்னை திரும்பும் குழுவினர் மீண்டும் அதிகாரிகளுடன் ஆலோசித்து விட்டு டெல்லி புறப்படுகின்றனர். #GajaCyclone #TamilNadu #CentralCommittee
    தமிழகத்தில் உருவான கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் நாளை வருகின்றனர். #GajaCyclone #TamilNadu #CentralCommittee
    புதுடெல்லி:

    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இன்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார்.

    அந்த சமயத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினார். புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய  மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.  அவருக்கு பதிலளித்த பிரதமரும்  மத்திய ஆய்வு குழுவை அனுப்புவதாக  உறுதி அளித்து இருந்தார்.

    இந்நிலையில், கஜா புயலால் ஏற்பட்ட சேத பகுதிகளைப் பார்வையிட மத்திய குழு நாளை வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மத்திய  பேரிடர் மேலாண்மை இயக்குனர் தலைமையில்  4 பேர் கொண்ட குழு நாளை தமிழகம் வருகிறது. முதல் அமைச்சருடன் ஆலோசனை நடத்தும் இந்த  குழு பின்னர் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்  வெளியாகிறது. #GajaCyclone #TamilNadu #CentralCommittee
    மத்திய குழு புயல் சேதங்களை நேரில் ஆய்வு செய்து உடனடியாக நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #GajaCyclone #MakkalNeedhiMaiam #KamalHaasan
    திருச்சி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார்.

    பின்னர் அவர் தனியார் ஓட்டலில நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சேதமும் இவ்வளவு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கவில்லை. முதலில் சேதம் குறித்து சரியான தகவல் தெரியவில்லை. கடந்த 6 நாட்களாக எங்கள் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் கிராமங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அவர்கள் நிவாரண பணிகளை தொடர்ந்தபோது தான் சேதம் குறித்த முழுமையான தகவல் தெரிய வந்தது. அதிகாரிகள் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளதை விட அதிக சேதம் ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

    மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் இதுவரை ரூ.60 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். இன்று மேலும் 70 வாகனங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல உள்ளோம். அவர்களுடன் நானும் செல்ல உள்ளேன்.

    ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை பொருட்களாக வழங்கி வருகிறோம். இன்னும் பல மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை பணமாக இல்லாமல் பொருட்களாக பெற்று வருகிறோம். அதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து வழங்குவோம்.

    இதுவரை நிவாரண உதவிகள் சென்று சேராத, நிவாரண பொருட்கள் கிடைக்காத குக்கிராமங்களுக்கும் நாங்கள் சென்று வழங்க உள்ளோம். தேவைப்பட்டால் நான் அங்கேயே தங்கி பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன்.

    நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கும் செல்லும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை மக்கள் விரட்டி அடிப்பதாகவும், அரசு வாகனங்களை தீ வைத்து எரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. அவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இதனை சரியாக புரிந்து கொண்டு அரசும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும்.

    அமைச்சர்களுக்கு எதிராக மக்களை போராட எதிர்க்கட்சி தூண்டி விடுகிறதா என்பது பற்றி எனக்கு தெரியாது. நிவாரண பணிகள் மக்களிடம் கொண்டு சேர விடாமல் சிலர் தடுக்கிறார்கள் என்று கூறப்படுவதை நான் நேரில் சென்று பார்த்த பிறகுதான் கூறமுடியும்.

    புயல் சேத பாதிப்பு, மக்கள் பாதிப்பு ஒரு புறம் இருந்தாலும் வருடந்தோறும் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானவர்கள் குடிசை வாசிகள். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. பசுமையை காப்போம் என்று அரசு கூறுவதை போல், குடிசைகளையும், ஏழ்மையையும் காப்போம் என நினைக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.

    நான் புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்த்த பின்பு அங்கு இன்னும் நிறைய சேதம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஐ.நா. அமைப்பில் இருந்து ஏற்கனவே உலகம் முழுவதுக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுத்திருந்தனர். இயற்கையால் பேரழிவு ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

    உலக வெப்பமயமாதலில் ஒரு டிகிரி உயர்ந்தால் கூட என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று அவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதுபோன்றது இந்த கஜா புயல். இனியும் இதுபோன்று பேரழிவுகள் வரும், அது பேரிடியாக இருக்கும். எனவே இதுபோன்ற பேரழிவுகளில் இருந்து காப்பாற்றி கொள்வது குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கவேண்டும்.

    தற்போது கஜா புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதத்தை முழுமையாக கணக்கிட வேண்டும். தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் மற்றும் இழப்பீடு போதுமானதாக இல்லை. தென்னைக்கு ரூ.1,100 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது போதுமானது கிடையாது.

    கஜா புயலால் இன்னும் 4 ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. இதனை அரசு கணக்கில் கொண்டு நிவாரணம் வழங்கவேண்டும். அதே போல் புயலால் உயிரிழந்தவர்களுக்கு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் நிவாரண தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும்.

    இதுபோன்ற புயல் பாதிக்கப்பட்ட நேரங்களில் வெளி மாநிலங்களில் எவ்வாறாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதோ, அதேபோல் தமிழக அரசும் வழங்கவேண்டும். புயல் பாதித்து கடந்த 7 நாட்கள் ஆகியும் மத்திய அரசிடம் இருந்து சேதத்தை பார்வையிடவோ, மதிப்பிடவோ யாரும் வரவில்லை.

    மத்திய அரசு தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவேண்டும். மத்திய புயல் நிவாரண குழு தமிழகத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து உடனடியாக நிவாரண நிதியை வழங்கவேண்டும். இன்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமரை சந்தித்து நிவாரண உதவி கோருகிறார்.

    அப்போது தமிழகத்தின் நிலைமையை தெளிவாக எடுத்துக்கூறி வலியுறுத்த வேண்டும். மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும்.

    சாய்ந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு, மேஸ்திரி வேலை பார்ப்பது போல புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை கையாளக்கூடாது. அது சரியல்ல, பாதிப்பின் தன்மையை உணர்ந்து மக்களுக்கு உதவவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

    கே: புயலால் பாதித்த மக்களுக்கு நடிகர்-நடிகைகள் ஒன்று செய்யாமல் இருக்கிறார்களே? நடிகர் சங்கமும் ஒன்றும் செய்யவில்லையே?

    ப: நடிகர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள், நடிகர் சங்கமும் செய்யும்.

    கே: தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம், புயல் பாதித்த மக்களுக்கு நடிகர்கள் உதவ முன்வராதது குறித்து கேட்ட கேள்விக்கு, நடிப்பது அவர்கள் தொழில். நடப்பது அரசியல் என்று பதில் அளித்துள்ளாரே?


    ப: அவர் நன்றாக பேசுவார்.

    கே: புயல் சேத நிவாரண பணிகளின் போது அமைச்சர்கள்-அதிகாரிகள் விரட்டப்படுகிறார்கள். வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது போன்ற காரணங்களால் நிவாரண பணிகள் பாதிக்கப்படுகிறதே?

    ப: மக்களுக்கு சரியான நேரத்தில் நிவாரண பணிகள், உதவிகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம்தான் அது. சரியான முறையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கே : தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிவாரண பணிகளை படிப்படியாகத்தான் செய்ய முடியும் என்று கூறியிருக்கிறாரே?

    ப: நிவாரண பணிகளை தேவைப்படும் நேரத்தில் உடனடியாக செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MakkalNeedhiMaiam #KamalHaasan
    புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Gajastorm

    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்றும், நாளையும் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூற இருக்கிறோம்.

    புயலின் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து இருக்கிறார்கள். தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது.

    பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் குடிநீர் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    புயலால் பல குடிசைகள் இடிந்துள்ளன. மீனவர்களின் படகுகளை சரி செய்ய உடனடியாக நிதி உதவி அளிக்க வேண்டும். உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி போதாது. இதனை ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

    தமிழக அரசு குழு அமைத்து மாவட்டம் வாரியாக சென்று உயிர் இழப்பு மற்றும் உடமைகளை இழந்தவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு வேண்டிய நிதி உதவி அளிக்க வேண்டும்.

    இதற்கு மாதக்கணக்கு எடுத்துக் கொள்ளாமல் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். புயல் பாதித்த இடங்களில் அடிப்படை தேவைகள் கிடைக்கவில்லை என்பதால்தான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    உடனடியாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதித்த இடங்களை பார்வையிட வேண்டும். வழக்கம்போல மத்திய அரசு மெத்தனமாகவே இருக்கிறது. தமிழ்நாடு ஒரு தனிநாடா என்று தெரியவில்லை.

    மத்திய அரசு உடனடியாக நிவாரண உதவிக்கு ஒரு கணிசமான தொகையை வழங்க வேண்டும். மேலும் ஒரு குழு அமைத்து புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

    முதலில் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்- அமைச்சர் சென்று பார்க்கப்படும். பின்னர் மத்திய அமைச்சர்கள் பார்க்கட்டும். அதன் பின்னர் ராகுல்காந்தி வருவதை பற்றி பேசலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #Gajastorm

    புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை உடனே அனுப்ப வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். #gajacyclone #pchidambaram #CentralCommittee

    காரைக்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி. இங்கு மரங்கள், மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    பாதிப்புகள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ராமசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது. இது பாராட்டுக்குரியது.

    உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை குறைவாக இருந்தாலும் அது நல்ல தொகை தான்.


    புயல் பாதிப்பு குறித்து மாநில அரசு அறிக்கை அனுப்பிய பிறகே மத்திய அரசு குழுவை அனுப்பி வைக்கும். அந்த குழு சேத மதிப்பீட்டை கணக்கீட்டு அறிக்கை அளிக்கும். அதன் படி நிவாரணம் வழங்கப்படும்.

    ஆனால் மத்திய குழுவை தற்போது உடனே அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். தமிழக அரசும் இதனை வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #gajacyclone #pchidambaram #CentralCommittee 

    ×