search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birds"

    • சரணாலயத்தில் வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.
    • நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.

    வேதாரண்யம்:

    கோடியக்கரை வனவிலங்கு சரணா லயத்தில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் அமிஷேக் தோமர் ஆலோசனையின் பேரில், திருச்சி மண்டல வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள். வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் முறைகள் குறித்த பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.

    பயிற்சியை நாகப்பட்டி னம் வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான், மாயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி உதவி பேராசிரியர்கள் பாண்டி யன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கணக்கெடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.

    • வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் காஞ்சிபுரம் ஏரிகளுக்கு அதிகளவு வருவது உண்டு.
    • நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளை வேட்டையாடினால் அவற்றின் வருகை குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் பெரும்பாலானவை பாசனத்துக்கு கை கொடுப்பதாக உள்ளன.

    இந்த ஏரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளி நாடுகளில் இருந்து அரிய வகை பறவைகள் வந்து செல்வது வழக்கம். உணவு மற்றும் இன பெருக்கத்துக்காக வரும் இந்த பறவைகள் சில மாதங்கள் ஏரிகளில் தங்கி இருந்துவிட்டு மீண்டும் பறந்து சென்று விடும்.

    தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 6 ஏரிகளில் அதிகளவு வெளிநாட்டு பறவைகள் வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவை கள் காஞ்சிபுரம் ஏரிகளுக்கு அதிகளவு வருவது உண்டு.

    அந்த வகையில் வந்துள்ள இந்த பறவைகள் வழக்கத்தை விட கூடுதல் ஏரிகளில் தங்கி உள்ளன. ஒரகடம், நாவலூர், மணிமங்கலம், ஆதனூர் ஏரிகளிலும் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்திருப்ப தை பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    வெளிநாட்டு பறவைகளில் எந்தெந்த வகை பறவைகள் தற்போது வந்துள்ளன என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப் போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு 190-க்கும் மேற்பட்ட அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    நாவலூர் ஏரியில் வெளிநாட்டு வகை வாத்துக்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு புதிய வகை பறவைகள் வந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளுக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை சில கிராம மக்கள் பிடிப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு பறவை ஆராய்ச்சியாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளை வேட்டையாடினால் அவற்றின் வருகை குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர். சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில கிராமங்களில் அரிய வகை பறவைகளை பிடித்து கூண்டுகளில் அடைத்து சிலர் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப் பட்டது. அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை இன ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சுமார் 200 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
    • பறவைகள் சிறகடித்து பறப்பது பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

    பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கபடும் கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு

    ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு சுமார் 200 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

    தற்போது காலநிலை மாற்றுவதனாலும் ஆர்டிக் பிரதேசத்தில் நிலவும் குளிரை போக்கவும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் இறுதியில் வரவேண்டிய பறவைகள் முன்கூட்டியே ஆயிரக்க ணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது.

    தற்போது சரணால யத்திற்கு கூழைகிடா, பூநாரை, கடல் ஆலா, உள்ளான் வகை பறவைகள் ள்ளிட்ட பறவைகள் வரத் துவங்கி உள்ளது. பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்து இரைதேடுவதையும் ,பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும் பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

    இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு , நெடுந்தீவு, உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் எனவும் , படிப்படியாக பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

    • இயற்கையிலேயே பறவைகளை ரசிக்கும் ஆர்வம் கொண்ட சேகர் வீட்டு மொட்டை மாடியில் நின்று பறவைகளுக்கு தண்ணீர், உணவு பொருட்களையும் வைத்துள்ளார்.
    • பறவைகள் எல்லாம் சேகர் வீட்டுக்கு வந்தால் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரத் தொடங்கி உள்ளது.

    சென்னை ராயப்பேட்டை பாரதி தெருவில் பொழுது சாயும் நேரத்தில் ஒரு வித்தியாசமான காட்சியை பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் பார்த்து வந்தார்கள்.

    கிரீச்... கிரீச்... என்ற சத்தத்துடன் பறந்து செல்லும் ஒன்றிரண்டு பச்சைக் கிளிகளை பார்த்தாலே மனம் பரவசப்படும். அதுவே நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்தால்...

    அதேபோல் புறாக்கள், சிட்டுக்குருவிகள், மைனாக்கள், காகங்கள் என்று பல வகை பறவைகளும் நூற்றுக்கணக்கில் சிறகடித்து பறந்து வந்தால்...

    பார்ப்பது கண் கொள்ளா காட்சியாக இருக்குமே. அப்படித்தான் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் கண்கொள்ளா காட்சியாக மக்கள் பார்த்து ரசித்து வந்தார்கள்.

    இனி அந்த பறவைகளை பார்க்க முடியாது. ரசிக்க முடியாது. என்ன ஆச்சு அந்த பறவைகளுக்கு? என்ற எண்ணம் எல்லோரிடமும் எழுவது இயல்புதான்.

    தனி ஒரு மனிதனுக்கு வந்த சோதனை ஆயிரக்கணக்கான பறவைகளையும் பிடித்துக் கொண்டதுதான் சோகத்திலும் சோகம்.

    சேகர். 40 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தருமபுரி மாவட்டத்தில் இருந்து குடும்பத்தை பிரிந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.

    படித்திருந்தது 6-ம் வகுப்பு என்ன வேலை கிடைக்கும்? அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. என்ன வேலை கிடைத்தாலும் பார்க்க தயார் என்று டி.வி., ரேடியோ பழுது பார்க்கும் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    வேலை பார்த்துக்கொண்டே மின்னணு பொருட்கள் பழுதுபார்க்கும் 2 ஆண்டு பட்டய படிப்பையும் படித்து முடித்தார்.

    மின்னணு தொழில் நுட்பத்தில் கேமராக்கள் அறிமுகமான அந்த கால கட்டத்தில் பழுது நீக்கும் தொழில் தெரிந்த சேகருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. நல்ல வருவாயும் கிடைத்தது.

    அப்போதுதான் ராயப்பேட்டை பாரதி தெருவில் வாடகை வீட்டில் குடியேறி இருக்கிறார். இயற்கையிலேயே பறவைகளை ரசிக்கும் ஆர்வம் கொண்ட இவர் வீட்டு மொட்டை மாடியில் நின்று பறவைகளுக்கு தண்ணீர், உணவு பொருட்களையும் வைத்துள்ளார்.

    இதனால் ஆரம்பத்தில் ஒன்றிரண்டாக வந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கி இருக்கிறது. சேகரும் அதற்கேற்ப உணவு பொருட்களையும் அதிக அளவில் வாங்கி போட தொடங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்துள்ளன.

    வந்த பறவைகள் எல்லாம் சேகர் வீட்டுக்கு வந்தால் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரத் தொடங்கி உள்ளது. தினமும் மாலையில் 4 ஆயிரம் பறவைகள் வந்து சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் சென்றுள்ளது.

    இந்த மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் 25 ஆண்டுகளாக அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்றுவிட முடிவு செய்துள்ளார்.

    இதையடுத்து வீட்டை விட்டு காலி செய்தவர் வழக்கம்போல் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது பறவைகள் உணவுக்காக தவித்தபடி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்ததை பார்த்து வேதனை அடைந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இயற்கையிலேயே எனக்கு பறவைகளின் மீது ஈர்ப்பு அதிகம். எனவே நான் தங்கி இருந்த வீட்டின் மாடியில் பறவைகளுக்கு நீரும், இரையும் வைக்கத் தொடங்கினேன். தினமும் 4 ஆயிரம் பறவைகள் இரை தேடி வருகின்றன. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றுள்ளனர்.

    நான் 25 ஆண்டுகளாக தங்கி இருந்த கட்டிடத்தை உரிமையாளர் விற்க முயன்ற நிலையில் இயற்கை ஆர்வலர்கள் பலர் அதை வாங்கி எனக்கு வழங்க விரும்பினர். ஆனால் உரிமையாளர் எங்களிடம் விற்க முன்வரவில்லை. அதனால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.

    எனது குடும்பத்துக்கு செலவிடுவதைவிட இந்த பறவைகளுக்குக்காகவே எனது வருவாயில் பெருமளவு செலவிட்டு வந்தேன். கடந்த இரண்டு நாட்களாக பறவைகள் மாலை நேரத்தில் இரைதேடி வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை பார்க்கும்போது மனம் வேதனைப்படுகிறது.

    இவ்வாறு கூறிய அவர், பூட்டிய வீட்டின் முன்பு கலங்கிய கண்களுடன் வானத்தை வெறித்து பார்த்தபடி நின்றார்.

    • உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.
    • டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.

    நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்,கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக திருப்பூர் இயற்கை கழக பிரதிநிதி ராம்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில் :- அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை காக்க உலகம் முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய பறவை. கோடை காலங்களில் பறவைகளுக்கு தினமும் தண்ணீர் வைக்க வேண்டும், குருவிகளுக்கு தண்ணீர் வைப்பது பெருமையல்ல அது நம்முடைய கடமை, மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது எனறு கூறி சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்காக செயற்கை முறையில் கூட்டை எப்படி உருவாக்க வேண்டும், அதன் அளவுகளை எவ்வாறு கணக்கீடு செய்யவேண்டும் என்று கூறினார். பிறகு பறவை ஆர்வலர் கீதாமணி,கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மாணவச் செயலர்கள் சுந்தரம்,பூபதி ராஜா, ரமேஷ்,மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் 55 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டு இயற்கையை காப்பாற்ற சிட்டுக்குருவிகள் அவசியம் என்பதை உணர்ந்து சிட்டுக்குருவி தினத்தன்று அனைவரும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.
    • பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை ஜி.ராஜ சரவணன் இந்த சின்னஞ்சிறு குருவியை மீட்டெடுப்போம் எனக் கூறி இலவசமாக சிட்டுக்குருவிக் கூண்டை அனைவருக்கும் வழங்கி வருகிறார்.

    ஆண்டு தோறும் மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக்குருவி தினமாக உலகம் எங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த இனத்திற்குப் பிறகு இந்த குருவிகள் ஆனது தனது இனத்தை பெருக்கும் கால சூழலுக்கு வருகிறது.

    அதனால் இந்த தேதியை தொடங்கி நம் சிட்டுக்குருவி தினமாக நாம் கடைபிடித்து வருகிறோம்.

    இந்த சின்னஞ்சிறு சிட்டுக்குருவியை மீட்டெடுப்பதற்கான ஒரு முறையை கண்டுபிடித்து அந்த முறையில் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறையே இந்த சின்னஞ்சிறு குருவிக்கு கூடு அமைத்து கொடுக்கும் முறையாகும்.

    இந்த முறையை பயன்படுத்தி கடந்த ஓராண்டாக ஸ்ரீ ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளுக்கான கூண்டு அமைத்து அதில் அந்த குருவி இனங்கள் குடியேறி தனது இனத்தை பெருக்கிக் கொண்டது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

    நாகப்பட்டினத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ ஆறுவடை தர்ம சிந்தனை அறக்கட்டளை இதன் இயற்கை சார்ந்த விஷயங்களுக்காக ஸ்ரீ அறுபடை பசுமைச் சிறகுகள் என்ற அமைப்பினை செயல்படுத்தி வருகிறோம்.

    இந்த அமைப்பின் மூலமாக சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.

    இதில் 60% க்கு மேலான கூண்டுகளில் இந்த குருவிகள் குடியேறிய தன் இனத்தை பெருக்கிக் கொண்டு உள்ளது.

    தன்னார்வலர்கள் எங்களை அணுகி கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக இந்த சின்னஞ்சிறு குருவிக்கான கூட்டினை பெற்று செல்லலாம். 10 ஆயிரம் கூண்டுகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

    வரும் கோடை காலத்தை மனதில் கொண்டு சிட்டுக்குருவிகளுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் வைப்பதற்கு என மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.

    இந்த பாத்திரம் வழங்குவதில் மூன்று விதமான உள்நோக்கம் எங்களுடன் உள்ளது ஒன்று பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல். குருவி இனங்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் ஏதுவாக இந்த பாத்திரங்களை அமைத்தல்.

    அழிந்து வரும் ஒரு தொழிலான மண்பானை செய்யும் தொழிலே ஊக்கப்படுத்துதல் என்ற மூன்று விதமான கருத்துக்களை மனதில் கொண்டு இந்த திட்டத்தினை தொடங்கி இருக்கிறோம்.

    இயற்கை ஆர்வலர்கள் தங்களுக்கு சிட்டுக்குருவிக்கான கூண்டு, பறவைகளுக்கான நீர் வைக்கும் பாத்திரம் தேவையெனில் எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது முகவரியினை பதிவு செய்து இந்த இரண்டு பொருட்களையும் கட்டணம் இல்லாமல் இலவசமாக பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்.

    இந்த சின்னஞ்சிறு குருவினை மீட்டெடுப்போம்.

    • 182 வகை பறவையினங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
    • இயற்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும்.

    திருப்பூர் :

    திருப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார நகர, கிராமப்புறங்களில், புதிது, புதிதாய் பறவையினங்கள் தென்படுகின்றன' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தமிழகத்தில், ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. காடுகள், காடுகளை ஒட்டிய நகர, கிராமப்புறங்களில், அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறையினர் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தொழில் நகரான திருப்பூரில், திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா தலைமையில், வனக்காப்பாளர் கணபதி செல்வம், மான் காப்பாளர்கள் சிவமணி, வெங்கேடஸ்வரன், திருப்பூர் இயற்கை கழகத்தினர், கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.திருப்பூர் நஞ்சராயன் குளத்தில், வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் மற்றும் நம் நாட்டை தாயகமாக கொண்ட பறவைகள் என, 182 வகை பறவையினங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

    அதே போன்று, ஊத்துக்குளி கைத்தமலை கிராமப்புறங்கள், அவிநாசி நகர்ப்புறம், கலெக்டர் அலுவலக வளாகம், கூலிப்பாளையம் சுற்றுவட்டார கிராமப்புறங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதுகுறித்து ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது:-நஞ்சராயன் குளத்தில், பறவை வலசை வருவது, அதிகரித்து வருகிறது. இதுவரை காணக்கிடைக்காத பறவைகளை கூட, கணக்கெடுப்பில் பார்க்க முடிந்தது. ஆண்டுக்காண்டு பறவைகளின் வருகை, எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது, இயற்கை, இயல்பு மாறாமல் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறி தான். எனவே, நீர்நிலைகளில் ரசாயன கலப்பு தவிர்ப்பது, மரம், செடி, கொடிகளை பாதுகாத்து வளர்ப்பது என, இயற்கையை பாதுகாக்கும் விஷயங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் பட்சத்தில், பறவைகளின் வருகை மேலும் அதிகரிக்கும். இது, இயற்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார். 

    • பறவைகள் கணக்கெடுப்பானது இரு நாட்கள் நடந்தது.
    • கணக்கெடுப்பு பணி காலை, 6.30 மணி முதல், 11.00 மணி வரை நடைபெற்றது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் ஒருங்கிணைந்த நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பா னது, வனப்பகுதி மற்றும் வனத்தை ஒட்டிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் போன்ற பகுதிகளில், இரு நாட்கள் நடந்தது. நில வாழ் பறவைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உடுமலை பகுதியில் நடந்த, கணக்கெடுப்பு பணியில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனத்தினரின் குழுவும் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    கணக்கெடுப்பு பணி காலை, 6.30 மணி முதல், 11.00 மணி வரை நடைபெற்றது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வனப்பகுதி களுக்கு அருகிலுள்ள கிராமப்பகுதிகளில் மற்றும் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் போன்றவற்றிலும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில், உயிரியலாளர் மகேஷ்கு மார்,- பறவைகள் ஆர்வலர் பிளஸ்சோயேசுடியான்-, வனக்காவலர் லட்சுமணன்-, வேட்டை தடுப்பு காவலர் பிரகாஷ்- ஆகியோர் கொண்ட குழு திருமூர்த்திமலை முதல் பொன்னாலம்மன் சோலை வரை உள்ள பகுதியில் கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    இதில், 31 வகையான நிலவாழ் பறவைகள் பதிவு செய்யப்பட்டது. செந்தலைப்பஞ்சுருட்டான், நீலவால் பஞ்சுருட்டான், பச்சை பஞ்சுருட்டான், வெள்ளைப்புருவ சின்னான், வால் காகம், பட்டாணி குருவி, நீல முக செண்பகம், கொண்டை பாம்பு கழுகு, வல்லூறு, பனை உழவாரன், மைனா, வெண்புருவ வாலாட்டி, வெண் கண்ண குக்குறுவான், பச்சை சிட்டு, மரம் கொத்தி, காட்டு சிலம்பன்கள், தையல்காரி, செண்பகம், தேன் சிட்டு, அக்காகுயில் மற்றும் தேன் பருந்து ஆகிய பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டன.

    • சிவகாசி அருகே இனப்பெருக்கத்திற்காக குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகளை கிராம மக்கள் கண்டு மகிழ்கின்றனர்.
    • அவைகளை வேட்டையாடாமல் பாதுகாப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோட்டையூர் கண்மாய் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து செங்கால் நாரை, நீர் கோழிகள் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன.

    அவைகள் இங்குள்ள புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களில் நூற்றுக்கணக்கில் கூடு கட்டி தங்கியுள்ளன. அவைகள் குஞ்சு பொறித்து வளரும் தருவாயில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தாய் நாட்டிற்கு திரும்பி செல்ல தொடங்கும்.

    அதுவரை இங்குள்ள கண்மாயில் மீன்களைப் பிடித்து உண்டு வாழும். பறவைகள் எழுப்பும் சத்தத்தையும், அவைகளின் அழகையும் காண்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள்.

    ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வரும் வெளிநாட்டு பறவைகளை இப்பகுதியை சேர்ந்தவர்கள் துன்புறுத்துவதில்லை. அவர்கள் பறவைகளை தங்களது அழையாத விருந்தாளிகளாகவே கருதுகின்றனர்.

    பறவைகள் தங்கி இருக்கும் சமயத்தில் தீபாவளி பண்டிகை வந்தாலும் வேறு ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்கள் மரங்களில் தங்கியிருக்கும் பறவைகளை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வெடிக்க மாட்டார்கள். அவைகளை வேட்டையாடாமல் பாதுகாப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபிராமம் பகுதியில் இரை தேடி சரணாலய பறவைகள் வருகின்றன.
    • வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்பிச் செல்வது வழக்கம்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சித்தி ரங்குடி கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்பிச் செல்வது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் போதிய பருவமழை பெய்யாததால் சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு பறவை கள் வரத்து குறைந்து வெறிச்சோடி காணப் பட்டது.

    பெரும்பாலும் இங்கு வரும் பறவைகள் 150 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இரைதேடும். கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் இரை கிடைக்காததால் கொக்கு உள்ளிட்ட பறவைகள் இங்கு அறுவடை முடிந்த வயல்களில் பருத்தி, மிளகாய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது புழு, பூச்சிகளை இரையாக தின்று வருகின்றன. அபிராமம் பகுதியில் உள்ள வயல்களிலும் கொக்குகள் கூட்டம், கூட்டமாக வந்து இரை தேடி வருகின்றன.

    • 20 இடங்களிலும் நீர் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 நாட்களும் மும்முரமாக நடந்து வந்தது.
    • அதிகபட்சமாக பெத்திக்குட்டை பகுதியில் 89 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    கோவை:

    தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கும்.

    நீர் பறவைகள் மற்றும்நில பறவைகள் என 2 கட்டங்களாக இந்த கணக்கெடுப்பானது நடை பெற்று வருகிறது.

    நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது, ஜனவரி 28 மற்றும் 29-ந் தேதிகளிலும், நில பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் 4, 5-ந் தேதிகளில் நடத்தப்படுகிறது.

    இதில் முதலில் கடந்த 28 மற்றும் 29-ந் தேதிகளில் நீர்பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.

    கோவை மாவட்டத்தில் வாளையார், செம்மேடு உக்குளம், பேரூர், உக்கடம், குறிச்சி, செங்குளம், கிருஷ்ணாம்பதி, வெள்ளலூர், சிங்காநல்லூர், பள்ளிபாளையம், கண்ணம்பாளையம், ஆச்சான்குளம், சூலூர், பெத்திக்குட்டை, செல்வம்பதி, நரசம்பதி, இருகூர்குளம், வேடப்பட்டி, காளப்பட்டி என 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

    இந்த 20 இடங்களிலும் நீர் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 நாட்களும் மும்முரமாக நடந்து வந்தது. இதில் பறவை ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறை பணியாளர்கள் என 5 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.

    இந்த கணக்கெடுப்பில் சராசரியாக 55 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. கோவையில் உள்ள குளங்களுக்கு மொத்தமாக 9,500 பறவைகள் வந்துள்ளன. இதனை கணக்கெடுப்பு குழுவினர் பார்வையிட்டு கணக்கெடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    கிளி, கழுகு, வாத்து, ஹார்ன்பில், பஞ்சுருட்டான், காமன் டெர்ன், மீன்கொத்தி, நாரை வகைகள், தூக்கணாங்குருவி என பல வகையான பறவைகள் பார்த்துள்ளனர். அதிகபட்சமாக பெத்திக்குட்டை பகுதியில் 89 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    இதில் அரிய வகை பறவை இனங்களில் வாளையார் பகுதியில் கிரே ஹார்ன்பில் எனப்படும் சாம்பல் நிற இருவாச்சியும், பெத்திக்குட்டையில் ஆஸ்ப்ரே கழுகு வகையும் கண்டறியப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    7 நாட்கள் சிறப்பு முகாம் கடந்த 28 ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாக தத்தெடுத்த கிராமமான கருமாபாளையத்தில் 7 நாட்கள் சிறப்பு முகாம் கடந்த 28 ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    அதன்படி 4ம் நாளான இன்று கிராமத்தில் உள்ள பறவைகளை கணக்கீடு மற்றும் கண்டறிதல் நிகழ்வு நடைபெற்றது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கலந்து கொண்டார். அவரின் வழிகாட்டுதலின் படி மாணவர்கள் பறவைகளை கண்டறிய கிராமத்தின் உட்புறம் கிட்டதட்ட 2.5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து 29 வகையான பறவைகளை கண்டறிந்தனர்.

    ×