search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறவை"

    • சிறிது நேரத்தில் அதே சாலையில் சைரன் ஒலியுடன் வாகனம் செல்வது போன்று சத்தம் கேட்டது.
    • பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    மனிதர்கள் மிமிக்ரி செய்வது போல பறவைகளும் சைரன் ஒலி சத்தம் எழுப்பிய வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில் கார்கள் பழுதடைந்தது போன்று சப்தம் கேட்டது. உடனே போலீசார் அங்கு சென்ற போது சாலையில் எந்த வாகனங்களும் இல்லை. சிறிது நேரத்தில் அதே சாலையில் சைரன் ஒலியுடன் வாகனம் செல்வது போன்று சத்தம் கேட்டது. அப்போது போலீசார் சுற்றிலும் பார்த்த போது அங்குள்ள மரத்தில் பறவைகள் சைரன் ஒலி சத்தம் எழுப்பியது தெரிய வந்தது.

    ஸ்டார்லிங் என்று அடையாளம் காணப்பட்ட பறவைகள் எந்திரங்களின் ஒலிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற விஷயங்களை பின்பற்றுவது இதன் சிறப்பாக உள்ளது. இந்த ஒலி சத்தத்தால் போலீசார் குழப்பம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சிட்டுக்குருவிகள் ஓடு, குடிசை வீடுகளின் விட்டங்களிலும், தாழ்வாரங்களிலும் கூடு கட்டி வசிக்கும்.
    • 13 ஆண்டுகள் ஆயுளை கொண்ட சிட்டுக்குருவிகள் தற்போது 5 ஆண்டுகளுக்குள் தன் வாழ்நாளை முடித்துக் கொள்கிறது

    உலக சிட்டுக் குருவிகள் தினம் 2010 -ம் ஆண்டு முதல் மார்ச் 20 - ந்தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.பறவை இனமான சிட்டுக்குருவிகள் தற்போது அழியும் நிலையில் உள்ளது.

    பொது மக்களிடம் இதுகுறித்துசுற்றுச் சூழலியலாளர்கள்,மற்றும் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேன்'….,

    "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு"..

    என்ற வரிகளில் தொடங்கும் சினிமா பாடல்கள் அனைவரது காதிலும் ஒலிக்கும் வகையில் சிட்டுக்குருவிகள் குறித்து கவிஞர்கள் பாடல் எழுதி உள்ளனர்.





    சிட்டுக்குருவிகள் வீட்டு வாசல்களில் கட்டித்தொங்க விடப்பட்டிருக்கும் நெற்கதிர்களை கொத்திவிட்டு, ஆள் அரவம் கேட்வுடன் பறந்து செல்லும் ஒரு சிறிய பறவைதான் இந்த சிட்டுக்குருவி. 

    சிட்டுக்குருவிகள் ஓடு, குடிசை வீடுகளின் விட்டங்களிலும், தாழ்வாரங்களிலும் கூடு கட்டி வசிக்கும். அவை எழுப்பும் சிறிய 'கீச்'ஒலி அனைவரையும் சிலிர்க்க செய்யும்.

    தற்போது நாகரீக காலத்தில் வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிர் சாதன வசதி செய்யட்டப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளில், சிட்டுக்குருவிகள் கூடு கட்டி குடியிருக்க முடியாமல் போய் விட்டது.


     


    இன்று (மார்ச் - 20) உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் 160 கோடி சிட்டுக் குருவி இனங்கள் உள்ளன. இந்தியாவில் லட்சக்கணக்கான சிட்டுக்குருவிகள் உள்ளன.

    "உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. அதனால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வழிவகை செய்திடல் வேண்டும் "ராமலிங்க அடிகளார் கூறி உள்ளார்.

    தினந்தோறும் சிட்டுக்குருவிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக 2010 -ம் ஆண்டு முதல் சிட்டுக் குருவிகள் தினம் மார்ச் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

    பலசரக்குகடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.




     

    வீட்டுத்தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. மேலும் டிராக்டர்கள் பயன்படுத்தி வயல்களில் உழவுப்பணிகள் நடைபெறுவதாலும் மண்ணில் உள்ள சிறுசிறு உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் குருவிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சுகளால் குருவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.சிட்டுக்குருவிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வியப்பை தருகின்றன.

    மனிதனோடு மனிதனாக பின்னி பிணைந்து குடும்பத்தில் ஒருவராக வாழ்கிற பறவை இனமாக சிட்டுக்குருவிகள் உள்ளன. மேலும் மனித இனத்னோடு அடைக்கலம் ஆவதால், அவற்றை அடைக்கலாங் கூருவி என்றும் கூறுவர்.

    சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற அசாத்திய நம்பிக்கை இன்றளவும் கிராம மக்களின் நம்பிக்கையாக அமைந்து இருக்கிறது.சிட்டுக்குருவிகள் வீடுகளில் உள்ள பரண், மாடம், விட்டம் மற்றும் ஓடுகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளிகளில் கூடு கட்டி வசிக்கும் தன்மை கொண்டது.




     

    மேலும் நகர் புறங்களில் கான்கிரீட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரிக்கத் தொடங்கியதால் வெளிக்காற்று வீட்டுக்குள் வராத வகையில் குளிர்சாதன வசதியை பயன்படுத்துவதால், சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய வசதிகள் இல்லாமல் போய்விட்டது.

    கடந்த 20ஆண்டுகளில் சிட்டுக்குருவிகள் 60சதவிகிதம் அழிந்துவிட்டது என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவர தகவல் வெளியாகி உள்ளது.2010- ம் ஆண்டு மார்ச் 20- ம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக ஐ.நா. அங்கீகரித்தது.

    13 ஆண்டுகள் ஆயுளை கொண்ட சிட்டுக்குருவிகள் தற்போது 5 ஆண்டுகளுக்குள் தன் வாழ்நாளை முடித்துக் கொள்கிறது. எனவே சிட்டுக்குருவிகளை அழிவுப்பாதையில் இருந்து மீட்டெடுக்க உலக சிட்டுக்குருவி நாளில் நாம் அனைவரும் ஒன்று இணைந்து உறுதியேற்போம்.

    • விமானத்தில் இருந்த பயணி ஒருவர் எஞ்சினில் இருந்து தீ விபத்து.
    • விமானத்தை ஆய்வு செய்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஜப்பானில் இருந்து 122 பயணிகளுடன் போயிங் 737-800 ரக விமானம் கடந்த புதன்கிழமை அன்று காலை சுமார் 9.30 மணியளவில் தென் கொரியாவில் உள்ள இன்சியோன் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு பறவை ஸ்டார்போர்டு என்ஜினுக்குள் மோதி சிக்கி கொண்டது.

    இதைதொடர்ந்து, கட்டுப்பாட்டு குழு விமானத்தை பராமரிக்க முயன்றபோது, எஞ்சினிலிருந்து தீப்பிழம்பு உருவாகி, போயிங் 737-800ன் வால் பகுதியை கிட்டத்தட்ட நெருங்கி இருக்கிறது. 

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறப்பட்டபோது, "பயணிகள் ஏதோ எரியும் வாசனையை உணர்ந்ததால், பணியாளர்கள் விமானத்தை தரையிறக்க முயற்சிக்குமாறு கட்டாயப்படுத்திவுள்ளனர்.

    விமானத்தில் இருந்த பயணி ஒருவர் எஞ்சினில் இருந்து தீப்பிடிப்பதையும், வெடிப்பதையும் படம் பிடித்துள்ளார் மற்றும் தரையில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு காட்சியில், புகைபிடித்த விமானம் விமான நிலையத்தை நோக்கி வேகமாக இறங்கியது.

    இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விமானத்தை ஆய்வு செய்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • வட இந்திய மாநிலங்களிலும் இந்த பறவை இனங்கள் வர தொடங்கியுள்ளன.
    • குளிர்காலம் என்பதால் இறைதேடி தெலுங்கானா மாநிலத்திற்கு வந்துள்ளன.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் மோமின் பேட்டை மண்டலத்தில் உள்ள வனப்பகுதியில் அரிய வகை பறவை ஒன்று தென்பட்டது.

    இந்த பறவை மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் வாழக்கூடியதாகவும். தற்போது வட இந்திய மாநிலங்களிலும் இந்த பறவை இனங்கள் வர தொடங்கியுள்ளன.

    தற்போது குளிர்காலம் என்பதால் இறைதேடி தெலுங்கானா மாநிலத்திற்கு வந்துள்ளன. கடந்த 2023-ம் ஆண்டில் தெலுங்கானாவில் காணப்பட்ட பறவைகளின் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களின் உள்ளம் நிச்சயமாக நல் உள்ளம் தான்.
    • 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று தீபாவளி பண்டிகைக்கு வெடி என்பது அறவே வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.

    சென்னிமலை:

    தீபாவளி என்றாலே அனைவரது நினைவிலும் முன் நிற்பது பட்டாசு தான். தீபாவளி பட்டாசுகள் பல கோடிகள் வரை விற்கப்படுகின்றன. கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை எதற்காக கரியாக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு.

    ஆனால் பணம் போனால் போகிறது என்று ரோடு நிறைய குப்பைகள் நிறைய பட்டாசுகளை வெடிப்பவர்களும் ஒரு ரகம். தனக்கென இல்லாமல் மற்றவர்களுக்குக்காக தனது மகிழ்ச்சியை தியாகம் செய்து வாழும் மக்களை காண்பதே அரிது.

    மனிதர்களுக்கு உதவிடும் தன்மையே இருந்து கொண்டிருக்கிறது என்று அனைவரும் நினைக்கும் இந்த வேளையில் 5 அறிவு உயிரினங்களை கூட தொல்லை செய்யக்கூடாது என்று பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களின் உள்ளம் நிச்சயமாக நல் உள்ளம் தான்.

    அப்படி நல் உள்ளம் படைத்தவர்கள் சென்னிமலை அடுத்துள்ள வடமுகம் வெள்ளோடு கிராம பஞ்சாயத்து உட்பட்ட வி.மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரை வழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி, கொங்கு நகர், கருங்கங்காட்டு வலசு ஆகிய கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று தீபாவளி பண்டிகைக்கு வெடி என்பது அறவே வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.

    இப்படிதான் கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளியை இந்த கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் தான். இந்த வெள்ளோடு மேட்டுப்பாளையம் பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு பறவைகள் தங்கி உள்ளது.

    அவ்வப்போது வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்லும். அமைதியை தேடி வரும் இங்கு வரும் பறவைகளுக்கு வெடி தொந்தரவாக இருக்க கூடாது என்பதற்காக இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இன்றும் தீபாவளிக்கு பட்டாசு வெடி வெடிப்பதை மக்கள் தியாகம் செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். ஆனால் வெள்ளோடு சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டும் புத்தாடை அணிந்து இனிப்பு வழங்கி பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடினர்.

    சிறுவர்கள் மகிழ்ச்சிக்காக கம்பி மத்தாப்பூ, தரைச க்கரம், புஸ்வானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்தனர். இப்பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என வனத்துறை சார்பாக கிராம மக்களுக்கு வேண்டு கோளும் விடப்பட்டுருந்தது.

    • வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் காஞ்சிபுரம் ஏரிகளுக்கு அதிகளவு வருவது உண்டு.
    • நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளை வேட்டையாடினால் அவற்றின் வருகை குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் பெரும்பாலானவை பாசனத்துக்கு கை கொடுப்பதாக உள்ளன.

    இந்த ஏரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளி நாடுகளில் இருந்து அரிய வகை பறவைகள் வந்து செல்வது வழக்கம். உணவு மற்றும் இன பெருக்கத்துக்காக வரும் இந்த பறவைகள் சில மாதங்கள் ஏரிகளில் தங்கி இருந்துவிட்டு மீண்டும் பறந்து சென்று விடும்.

    தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 6 ஏரிகளில் அதிகளவு வெளிநாட்டு பறவைகள் வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவை கள் காஞ்சிபுரம் ஏரிகளுக்கு அதிகளவு வருவது உண்டு.

    அந்த வகையில் வந்துள்ள இந்த பறவைகள் வழக்கத்தை விட கூடுதல் ஏரிகளில் தங்கி உள்ளன. ஒரகடம், நாவலூர், மணிமங்கலம், ஆதனூர் ஏரிகளிலும் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்திருப்ப தை பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    வெளிநாட்டு பறவைகளில் எந்தெந்த வகை பறவைகள் தற்போது வந்துள்ளன என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப் போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு 190-க்கும் மேற்பட்ட அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    நாவலூர் ஏரியில் வெளிநாட்டு வகை வாத்துக்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு புதிய வகை பறவைகள் வந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளுக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை சில கிராம மக்கள் பிடிப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு பறவை ஆராய்ச்சியாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளை வேட்டையாடினால் அவற்றின் வருகை குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர். சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில கிராமங்களில் அரிய வகை பறவைகளை பிடித்து கூண்டுகளில் அடைத்து சிலர் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப் பட்டது. அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை இன ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கடந்த 30 ஆண்டுகளாக பாம்பே நேசுரல் ஹிஸ்டரி சொசைட்டி கண்காணித்து வருகிறது.
    • 60 வகையான வலசை வரும் பறவைகள் ஆண்டுக்கு 2 லட்சம் வந்து ஓய்வெடுப்பதற்கும் பயன்படுத்துகின்றன.

    நாகர்கோவில், மே.10-

    குமரி மாவட்ட வனத் துறை மற்றும் பாம்பே இயற்கை வரலாற்று கழகம் இணைந்து தயாரித்த குமரி மாவட்ட உப்பள பறவைகள் பற்றிய ஆராய்ச்சி குறிப்பு புத்தகம் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதா் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், வன அதிகாரி இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.

    பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியபோது கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் உப்பளங்கள் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் உள்ளன. இந்த உப்பளங்களுக்கு வரும் பறவை இனங்களின் எண்ணிக்கை, பறவைகள் வந்து தங்கிச் செல்லும் முறைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை கடந்த 30 ஆண்டுகளாக பாம்பே நேசுரல் ஹிஸ்டரி சொசைட்டி கண்காணித்து வருகிறது.

    இந்தியாவின் தென்கோடி யிலுள்ள குமரி கடற்கரையில் அமைந்துள்ளதால் பூமியின் வடபாதியிலுள்ள ஆர்டிக் பகுதியிலிருந்தும், மத்திய மேற்காசிய நாடுகளிலிருந்தும் பறவைகள் பூமியின் தென்பாதியிலுள்ள வெப்ப நாடுகளுக்கு வலசை செல்லும் போது இங்கு வந்து தங்கி ஓய்வெடுக்கின்றன.

    நெடுந்தூர பயணத்திற்கான சக்தியை சேமித்துவிட்டு வேணிற்காலம் தொடங்கியதும் தனது பிறப்பிடமான ஆர்டிக் பகுதிகளுக்கு திரும்பி செல்கின்றன. குமரி மாவட்ட உப்பாளங்களுக்கு இந்தியாவில் காணப்படும் அனைத்து நீர்பறவை குழுமங்களையும் சார்ந்த பறவைகள் வந்துச் செல்கின்றன. இங்கு 60 வகையான வலசை வரும் பறவைகள் ஆண்டுக்கு 2 லட்சம் வந்து ஓய்வெடுப்பதற்கும் பயன்படுத்துகின்றன.

    இதில் அதிக எண்ணிக்கையில் ஆலாக்கள் (10 இனங்கள்) வருகை புரிகின்றன. அதிலும் மூன்று வகையான ஆலாக்கள் பல்லாயிர கணக்கில் வருகின்றன.

    25 வருடங்களுக்கு முன்பாக சில எண்ணிக்கையில் வர தொடங்கிய பூ நாரைகள் சில ஆயிரங்களில் வந்துச் செல்கின்றன. ஆர்டிக் பகுதியிலிருந்து வலசை வரும் உள்ளான்கள் என்று அழைக்கப்படும் 28 வகையான கரையோர பறவைகளும் மற்றும் 6 வகையான வாத்து இனங்களும் இந்த உப்பளங்களுக்கு ஆண்டு தோறும் வந்துச் செல்கின்றன.

    இதுபோக நாட்டு பறவைகளான கூழக்கிடா, செங்கால் நாரை, கரண்டி வாயன், அரிவாள் மூக்கன் போன்றவை கணிசமான எண்ணிக்கையில் ஆண்டு முழுவதும் தங்குகின்றன.

    சாட்டிலைட் டிரான்ஸ் மீட்டர் மூலம் ஆராய்ந்ததில் இங்கே வரும் பூ நாரைகள் தென்னிந்தியா மற்றும் வட இலங்கைக்குள் தான் சுற்றித்திரிவதாக கண்டறியப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பறவைகளை ஈர்க்கும் சிறப்பு வாய்ந்த பல உப்பளங்கள் உப்பு உற்பத்தி செய்யாமல் கைவிடப்பட்டன. அதில் சில பெரிய உப்பளங்களை ஒப்பந்தக்கரர்களின் உதவியோடு அவர்களுடைய உள்கட்டமைப்புகளை பயன்படுத்தி நீர்நிலைகளை சீராக்கி பறவைகள் வந்து தங்கி உணவு உண்டு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தியதால் பறவைகளின் வருகை பன்மடங்காக அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.
    • டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.

    நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்,கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக திருப்பூர் இயற்கை கழக பிரதிநிதி ராம்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில் :- அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை காக்க உலகம் முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய பறவை. கோடை காலங்களில் பறவைகளுக்கு தினமும் தண்ணீர் வைக்க வேண்டும், குருவிகளுக்கு தண்ணீர் வைப்பது பெருமையல்ல அது நம்முடைய கடமை, மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது எனறு கூறி சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்காக செயற்கை முறையில் கூட்டை எப்படி உருவாக்க வேண்டும், அதன் அளவுகளை எவ்வாறு கணக்கீடு செய்யவேண்டும் என்று கூறினார். பிறகு பறவை ஆர்வலர் கீதாமணி,கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மாணவச் செயலர்கள் சுந்தரம்,பூபதி ராஜா, ரமேஷ்,மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் 55 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டு இயற்கையை காப்பாற்ற சிட்டுக்குருவிகள் அவசியம் என்பதை உணர்ந்து சிட்டுக்குருவி தினத்தன்று அனைவரும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • 182 வகை பறவையினங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
    • இயற்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும்.

    திருப்பூர் :

    திருப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார நகர, கிராமப்புறங்களில், புதிது, புதிதாய் பறவையினங்கள் தென்படுகின்றன' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தமிழகத்தில், ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. காடுகள், காடுகளை ஒட்டிய நகர, கிராமப்புறங்களில், அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறையினர் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தொழில் நகரான திருப்பூரில், திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா தலைமையில், வனக்காப்பாளர் கணபதி செல்வம், மான் காப்பாளர்கள் சிவமணி, வெங்கேடஸ்வரன், திருப்பூர் இயற்கை கழகத்தினர், கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.திருப்பூர் நஞ்சராயன் குளத்தில், வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் மற்றும் நம் நாட்டை தாயகமாக கொண்ட பறவைகள் என, 182 வகை பறவையினங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

    அதே போன்று, ஊத்துக்குளி கைத்தமலை கிராமப்புறங்கள், அவிநாசி நகர்ப்புறம், கலெக்டர் அலுவலக வளாகம், கூலிப்பாளையம் சுற்றுவட்டார கிராமப்புறங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதுகுறித்து ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது:-நஞ்சராயன் குளத்தில், பறவை வலசை வருவது, அதிகரித்து வருகிறது. இதுவரை காணக்கிடைக்காத பறவைகளை கூட, கணக்கெடுப்பில் பார்க்க முடிந்தது. ஆண்டுக்காண்டு பறவைகளின் வருகை, எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது, இயற்கை, இயல்பு மாறாமல் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறி தான். எனவே, நீர்நிலைகளில் ரசாயன கலப்பு தவிர்ப்பது, மரம், செடி, கொடிகளை பாதுகாத்து வளர்ப்பது என, இயற்கையை பாதுகாக்கும் விஷயங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் பட்சத்தில், பறவைகளின் வருகை மேலும் அதிகரிக்கும். இது, இயற்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார். 

    • பறவைகள் கணக்கெடுப்பானது இரு நாட்கள் நடந்தது.
    • கணக்கெடுப்பு பணி காலை, 6.30 மணி முதல், 11.00 மணி வரை நடைபெற்றது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் ஒருங்கிணைந்த நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பா னது, வனப்பகுதி மற்றும் வனத்தை ஒட்டிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் போன்ற பகுதிகளில், இரு நாட்கள் நடந்தது. நில வாழ் பறவைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உடுமலை பகுதியில் நடந்த, கணக்கெடுப்பு பணியில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனத்தினரின் குழுவும் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    கணக்கெடுப்பு பணி காலை, 6.30 மணி முதல், 11.00 மணி வரை நடைபெற்றது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வனப்பகுதி களுக்கு அருகிலுள்ள கிராமப்பகுதிகளில் மற்றும் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் போன்றவற்றிலும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில், உயிரியலாளர் மகேஷ்கு மார்,- பறவைகள் ஆர்வலர் பிளஸ்சோயேசுடியான்-, வனக்காவலர் லட்சுமணன்-, வேட்டை தடுப்பு காவலர் பிரகாஷ்- ஆகியோர் கொண்ட குழு திருமூர்த்திமலை முதல் பொன்னாலம்மன் சோலை வரை உள்ள பகுதியில் கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    இதில், 31 வகையான நிலவாழ் பறவைகள் பதிவு செய்யப்பட்டது. செந்தலைப்பஞ்சுருட்டான், நீலவால் பஞ்சுருட்டான், பச்சை பஞ்சுருட்டான், வெள்ளைப்புருவ சின்னான், வால் காகம், பட்டாணி குருவி, நீல முக செண்பகம், கொண்டை பாம்பு கழுகு, வல்லூறு, பனை உழவாரன், மைனா, வெண்புருவ வாலாட்டி, வெண் கண்ண குக்குறுவான், பச்சை சிட்டு, மரம் கொத்தி, காட்டு சிலம்பன்கள், தையல்காரி, செண்பகம், தேன் சிட்டு, அக்காகுயில் மற்றும் தேன் பருந்து ஆகிய பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டன.

    • அபிராமம் பகுதியில் இரை தேடி சரணாலய பறவைகள் வருகின்றன.
    • வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்பிச் செல்வது வழக்கம்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சித்தி ரங்குடி கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்பிச் செல்வது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் போதிய பருவமழை பெய்யாததால் சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு பறவை கள் வரத்து குறைந்து வெறிச்சோடி காணப் பட்டது.

    பெரும்பாலும் இங்கு வரும் பறவைகள் 150 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இரைதேடும். கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் இரை கிடைக்காததால் கொக்கு உள்ளிட்ட பறவைகள் இங்கு அறுவடை முடிந்த வயல்களில் பருத்தி, மிளகாய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது புழு, பூச்சிகளை இரையாக தின்று வருகின்றன. அபிராமம் பகுதியில் உள்ள வயல்களிலும் கொக்குகள் கூட்டம், கூட்டமாக வந்து இரை தேடி வருகின்றன.

    • வன அதிகாரி இளையராஜா தகவல்
    • கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் 3 கட்ட மாக பறவைகள் கணக் கெடுக்கப்படுகிறது.முதல் கட்டமாக நீர் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்திலும் நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் 50 வன ஊழியர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். புத்தளம், தேரூர் சுசீந்திரம், வேம்பனூர், அச்சன்குளம், இறச்சகுளம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட 20 இடங்களில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்தது.

    கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .இதனை வனத்துறை ஊழியர்கள் குறிப்பெடுத்துக் கொண்ட னர். கணக்கெடுப்பு பணியினை புத்தளம் மற்றும் தேரூர் பகுதியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை பறவைகள் வரத்து அதிகமாக காணப்படும்.புத்தளம், சாமிதோப்பு, தேரூர், வேம்பனூர், ராஜாக்கமங்கலம், புத்தளம் பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடந்தது. பறவை ஆர்வலர்கள், வன அதிகாரிகள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புத்தளம் பகுதியில் வழக்கத்தை விட குறைவான பறவைகள் தென்பட்டது. அங்கு பூநாரை பறவைகள் அதிக அளவு உள்ளது. சுசீந்திரம் பகுதியில் கூலகடா மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள் தென்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22 வகையான பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இருந்து பறவைகள் தற்போது இடம்பெற தொடங்கி உள்ளன. ராமேசுவரம் போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து உள்ளன. தற்போது நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    அடுத்த கட்டமாக மார்ச் மாதம் வனப் பகுதியில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நகர் பகுதியில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். மொத்தம் 3 கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×