search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டை காலி செய்ததால் 4 ஆயிரம் பறவைகள் தவிப்பு- வட்டமிடும் கிளிகளை பார்த்து கண்கலங்கும் பறவை மனிதர்
    X

    வீட்டை காலி செய்ததால் 4 ஆயிரம் பறவைகள் தவிப்பு- வட்டமிடும் கிளிகளை பார்த்து கண்கலங்கும் பறவை மனிதர்

    • இயற்கையிலேயே பறவைகளை ரசிக்கும் ஆர்வம் கொண்ட சேகர் வீட்டு மொட்டை மாடியில் நின்று பறவைகளுக்கு தண்ணீர், உணவு பொருட்களையும் வைத்துள்ளார்.
    • பறவைகள் எல்லாம் சேகர் வீட்டுக்கு வந்தால் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரத் தொடங்கி உள்ளது.

    சென்னை ராயப்பேட்டை பாரதி தெருவில் பொழுது சாயும் நேரத்தில் ஒரு வித்தியாசமான காட்சியை பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் பார்த்து வந்தார்கள்.

    கிரீச்... கிரீச்... என்ற சத்தத்துடன் பறந்து செல்லும் ஒன்றிரண்டு பச்சைக் கிளிகளை பார்த்தாலே மனம் பரவசப்படும். அதுவே நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்தால்...

    அதேபோல் புறாக்கள், சிட்டுக்குருவிகள், மைனாக்கள், காகங்கள் என்று பல வகை பறவைகளும் நூற்றுக்கணக்கில் சிறகடித்து பறந்து வந்தால்...

    பார்ப்பது கண் கொள்ளா காட்சியாக இருக்குமே. அப்படித்தான் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் கண்கொள்ளா காட்சியாக மக்கள் பார்த்து ரசித்து வந்தார்கள்.

    இனி அந்த பறவைகளை பார்க்க முடியாது. ரசிக்க முடியாது. என்ன ஆச்சு அந்த பறவைகளுக்கு? என்ற எண்ணம் எல்லோரிடமும் எழுவது இயல்புதான்.

    தனி ஒரு மனிதனுக்கு வந்த சோதனை ஆயிரக்கணக்கான பறவைகளையும் பிடித்துக் கொண்டதுதான் சோகத்திலும் சோகம்.

    சேகர். 40 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தருமபுரி மாவட்டத்தில் இருந்து குடும்பத்தை பிரிந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.

    படித்திருந்தது 6-ம் வகுப்பு என்ன வேலை கிடைக்கும்? அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. என்ன வேலை கிடைத்தாலும் பார்க்க தயார் என்று டி.வி., ரேடியோ பழுது பார்க்கும் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    வேலை பார்த்துக்கொண்டே மின்னணு பொருட்கள் பழுதுபார்க்கும் 2 ஆண்டு பட்டய படிப்பையும் படித்து முடித்தார்.

    மின்னணு தொழில் நுட்பத்தில் கேமராக்கள் அறிமுகமான அந்த கால கட்டத்தில் பழுது நீக்கும் தொழில் தெரிந்த சேகருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. நல்ல வருவாயும் கிடைத்தது.

    அப்போதுதான் ராயப்பேட்டை பாரதி தெருவில் வாடகை வீட்டில் குடியேறி இருக்கிறார். இயற்கையிலேயே பறவைகளை ரசிக்கும் ஆர்வம் கொண்ட இவர் வீட்டு மொட்டை மாடியில் நின்று பறவைகளுக்கு தண்ணீர், உணவு பொருட்களையும் வைத்துள்ளார்.

    இதனால் ஆரம்பத்தில் ஒன்றிரண்டாக வந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கி இருக்கிறது. சேகரும் அதற்கேற்ப உணவு பொருட்களையும் அதிக அளவில் வாங்கி போட தொடங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்துள்ளன.

    வந்த பறவைகள் எல்லாம் சேகர் வீட்டுக்கு வந்தால் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரத் தொடங்கி உள்ளது. தினமும் மாலையில் 4 ஆயிரம் பறவைகள் வந்து சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் சென்றுள்ளது.

    இந்த மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் 25 ஆண்டுகளாக அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்றுவிட முடிவு செய்துள்ளார்.

    இதையடுத்து வீட்டை விட்டு காலி செய்தவர் வழக்கம்போல் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது பறவைகள் உணவுக்காக தவித்தபடி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்ததை பார்த்து வேதனை அடைந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இயற்கையிலேயே எனக்கு பறவைகளின் மீது ஈர்ப்பு அதிகம். எனவே நான் தங்கி இருந்த வீட்டின் மாடியில் பறவைகளுக்கு நீரும், இரையும் வைக்கத் தொடங்கினேன். தினமும் 4 ஆயிரம் பறவைகள் இரை தேடி வருகின்றன. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றுள்ளனர்.

    நான் 25 ஆண்டுகளாக தங்கி இருந்த கட்டிடத்தை உரிமையாளர் விற்க முயன்ற நிலையில் இயற்கை ஆர்வலர்கள் பலர் அதை வாங்கி எனக்கு வழங்க விரும்பினர். ஆனால் உரிமையாளர் எங்களிடம் விற்க முன்வரவில்லை. அதனால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.

    எனது குடும்பத்துக்கு செலவிடுவதைவிட இந்த பறவைகளுக்குக்காகவே எனது வருவாயில் பெருமளவு செலவிட்டு வந்தேன். கடந்த இரண்டு நாட்களாக பறவைகள் மாலை நேரத்தில் இரைதேடி வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை பார்க்கும்போது மனம் வேதனைப்படுகிறது.

    இவ்வாறு கூறிய அவர், பூட்டிய வீட்டின் முன்பு கலங்கிய கண்களுடன் வானத்தை வெறித்து பார்த்தபடி நின்றார்.

    Next Story
    ×