search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banwarilal Purohit"

    அரசுக்கு எதிராக வெறுப்பையும் உணர்ச்சியையும் எழுத்தால் தூண்டி விடுவதாக நக்கீரன் கோபால் மீது கவர்னர் மாளிகை புகார் அளித்ததின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். #NakkeeranGopal
    சென்னை:

    நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார்.

    அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலை கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.


    இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி கவர்னர் மாளிகை சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாகவே நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஸ் அவுஸ் ஜானிஜான்கான் தெருவில் நக்கீரன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது 124-ஏ ஐ.பி.சி. (ராஜதுரோக குற்றம்) சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசுக்கு எதிராக வெறுப்பையும் உணர்ச்சியையும் எழுத்தால் தூண்டி விடுவதாக நக்கீரன் கோபால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் தரப்பில் வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.#NakkeeranGopal 

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென சந்தித்து பேசினார். மிக கனமழையையொட்டி அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விளக்கினார். #TNRains #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக அரசியல் களம் கடந்த 2 நாட்களாக சூடுபிடித்திருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டதாக பேசப்படுகிறது.

    இந்த பரபரப்புக்கு இடையே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. எனவே, மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபடத் தொடங்கியது.

    தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை நேற்று காலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று இதை கூறினாலும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் சற்று நேரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னரை திடீரென சந்திக்க இருக்கும் தகவல் வெளியானது. இதில் அரசியல் பின்னணி இருக்கும் என்று கருதப்பட்டது.

    இந்த நிலையில், நேற்று இரவு 7.15 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அவருடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடன் சென்றார். இந்த சந்திப்பின்போது, தமிழக கவர்னராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி பன்வாரிலால் புரோகித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மிக கனமழை எச்சரிக்கையையொட்டி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கி கூறினார்.

    சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு இரவு 7.45 மணியளவில் அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டு சென்றார். கவர்னரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. #TNRains #TNREDAlert #EdappadiPalaniswami  #TNGovernor #BanwarilalPurohit
    கருப்பு பணம் சேர்ப்பது, கொள்கையில்லா அரசியல் உள்ளிட்ட 7 விஷயங்கள் பாவத்திற்கு சமமானது என்று கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். #TNGovernor #BanwarilalPurohit
    கரூர்:

    கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தேவாப்பூர் பகுதியில் உள்ள இன்பசேவா சங்க பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பொன்விழா மலரை வெளியிட்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.

    ஜவஹர்லால் நேருவும், பூமி தான இயக்க தலைவருமான வினோபாஜியும் நெருங்கிய நண்பர்கள். வயதில் இளையவரான நேரு அப்போது வினோபாஜியை சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். வினோபாஜியின் கொள்கைப்படி இந்த சேவா சங்கம் நிறுவப்பட்டுள்ளது.

    என்னை பொறுத்தவரை 7 வி‌ஷயங்களை பாவமாக கருதுகிறேன். புகைபிடிப்பது, மதுஅருந்துவது, கருப்பு பணம் சேர்ப்பது, கொள்கையில்லா அரசியல், அறிவியலை அழிவுக்கு பயன்படுத்துதல், உழைப்பில்லாத செல்வம், தியாகம் இல்லாத மதவழிபாடு இவைகள்தான்.

    எந்த மதத்தினர் ஆனாலும் சரி, இரவு தூங்கும் முன்பு இந்துவாக இருந்தால் பகவத் கீதையையும், கிறிஸ்தவராக இருந்தால் பைபிளையும், முஸ்லிமாக இருந்தால் குரானையும் படித்து விட்டு தூங்க வேண்டும். இதன் மூலம் ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும். ஆன்மீகத்தில் ஊறி வரும் போது தவறுகள் செய்ய வாய்ப்பில்லை.

    காந்தி வாழ்நாள் முழுவதும் சைவத்தை கடைபிடித்தார். நானும் சைவத்தை பின்பற்றுகிறேன். அசாமில் கவர்னராக இருந்த போதும் சைவ உணவுகளையே சாப்பிட்டேன். ஆனால் இங்கு தமிழகத்திற்கு வரும் போது அது சாத்தியமில்லை என்றனர். ஆனால் இங்கு வந்த பிறகும் சைவத்தைதான் பின்பற்றுகிறேன்.

    ஜனாதிபதி, பிரதமர் யார் வந்தாலும் ராஜ்பவனில் சைவ சாப்பாடுதான். என்னை பொறுத்தவரை சாத்தியம் இல்லாதது எதுவுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம், கரூர் மாவட்டத்தில் மாதிரி கிராமத்தை தேர்ந்தெடுத்து திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்புங்கள். அதனை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த கிராமத்திற்கு தேவையான கட்டமைப்புகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

    அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூடுதல் தலைமை நிலைய செயலாளர் ராஜகோபால், கீதா எம்.எல்.ஏ., இன்பசேவா சங்க தலைவர் முத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.


    முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கரூருக்கு இன்று காலை வருகை தந்தார். அங்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்ய பிரகாஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர் னரை வரவேற்றனர்.

    இன்று மதியம் கரூர் விருந்தினர் மாளிகையில் அரசு அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்துகிறார். மாலை 4.30 மணியளவில் பொது மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    பின்னர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்று மாலை 5 மணியளவில் மூக்கணாங்குறிச்சியில் உள்ள தடுப்பணை மற்றும் தனிநபர் இல்ல கழிவறையின் பயன்பாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்கிறார். இதைத் தொடர்ந்து வீரணாம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    அதன் பின்னர் 5.30 மணியளவில் கரூர் பஸ் நிலையத்திற்கு வந்து தூய்மை இந்தியா இயக்க திட்டத்தை தொடங்கி வைத்து தூய்மை பணியை மேற்கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்று விட்டு கரூரில் இருந்து அவர் புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் கரூர் வருகையை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் கரூர் நகரமே கவர்னரின் வருகையால் பளிச்சென்று காணப்பட்டது. நகரின் எந்த பகுதியிலும் குப்பைகள் காணப்படவில்லை. #TNGovernor #BanwarilalPurohit
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 29-ந்தேதி கோபி வருகிறார். அன்று தியாகி ஜி.எஸ்.லட்சுமணன் உருவச்சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
    கோபி:

    கோபி வாய்க்கால் ரோட்டில் டி.எஸ். ராமன், சரோஜினிதேவி விடுதிகள் உள்ளன. இதை முன்னாள் கோபி நகர்மன்றத் தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியமான ஜி.எஸ்.லட்சுமணன் நிறுவினார்.

    இந்த விடுதியில் இவருடைய உருவச்சிலை இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வரும் 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தியாகி ஜி.எஸ்.லட்சுமணன் உருவச்சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலை வகிக்கிறார். டெல்லி அகில இந்திய ஹரிஜன் சேவக் சங் தலைவர் சங்கர்குமார் சன்யால், கோபி ஹரிஜன் சேவக் சங் தலைவர் வெங்கடேஸ்வரன், முன்னாள் மாணவ, மாணவிகள் பேரவை தலைவர் தொட்டு குண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    முன்னதாக தமிழ்நாடு ஹரிஜன் சேவக் சங் தலைவர் மாருதி வரவேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை டி.எஸ்.ராமன், சரோஜினிதேவி விடுதி முன்னாள் மாணவ, மாணவிகள், விடுதி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    கவுரவம், அகந்தையை விட்டுவிட்டு கருணை, பெருந்தன்மையுடன் நடக்க தீர்மானிக்க வேண்டும் என தமிழக கவர்னர் தனது பக்ரீத் வாழ்த்தை தெரிவித்துள்ளார். #TamilnaduGovernor #BanwarilalPurohit #Bakrid
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் நமது அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை கூறுகிறேன்.

    நமக்கு இறைவன் தந்த நன்மைகளை ஏழைகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தை இந்த பண்டிகை கற்றுத்தருகிறது. நம்மிடையே உள்ள ஈகோ என்ற கவுரவம், அகந்தை ஆகியவற்றை விட்டுவிட்டு, பிரார்த்தனை பாதையில் சென்று அனைவருடனும் கருணை மற்றும் பெருந்தன்மையுடன் நடக்க வேண்டும் என்று இந்த புனிதத் திருநாளில் நாம் தீர்மானிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Governor #BanwarilalPurohit  #Bakrid

    சுதந்திர தினத்தை ஒட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று அளித்த தேநீர் விருந்தை ஐகோர்ட் தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் புறக்கணித்துள்ளனர். #IndependenceDay #RajBhavan #BanwarilalPurohit #Judges
    சென்னை:

    சுதந்திர தினம், குடியரசு தினத்தை ஒட்டி மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில், மாநில முதல்வர்கள், ஐகோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், சட்டசபை சபாநாயகர் மற்றும் அரசு உயர் பொறுப்பில் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில் இன்று அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில்ரமானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    விருந்து முடிந்ததும் ராஜ்பவனில் உள்ள தோட்டத்தில் கவர்னர், முதல்வர், தலைமை நீதிபதி ஆகியோர் ரோஜா செடி நட்டு வைத்தனர். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ளது போல ரோஜா தோட்டம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஐகோர்ட் தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் யாரும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வில்லை. சில நாட்களுக்கு முன்னர் ராஜ்பவனில் நடந்த தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவியேற்கும் விழாவில், நீதிபதிகள் பின் வரிசையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு பின்னால் நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர். 
    எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு வரமாக அமையும் என்று ராஜ் பவனில் நடந்த விருது வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். #BanwarilalPurohit
    சென்னை:

    தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் விருது வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் தர்பார் அரங்கில் நேற்று நடந்தது.

    விழாவுக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று டாக்டர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இதையடுத்து விருது பெற்றவர்களுடன் அவர் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    முன்னதாக விழாவில் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

    நோயை கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் எப்போதும் முக்கிய மையமாக திகழ்கிறது. பொது சுகாதார சட்டத்தை இயற்றிய முதல் மாநிலமும் தமிழகம் தான். சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையும், அரசு கண் மருத்துவமனையும் ஆசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்தது ஆகும்.

    தமிழகத்தில் குழந்தை மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து சாதனை படைத்திருக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுப்பதில் நாட்டிலேயே முதலாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உலகின் கிழக்கு பிராந்தியத்தில் மருத்துவ சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது.

    120 கோடிக்கும் அதிக மக்கள் தொகையை கொண்ட நமது நாட்டில், தேசிய சுகாதார தகவலின்படி 10 லட்சம் அலோபதி டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் கூட இல்லை. இதில் 10 சதவீதம் பேர் மட்டுமே பொது சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்றனர்.

    அதனால் பயிற்சி பெற்ற டாக்டர்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதேபோல பொது சுகாதாரத்துறையில் பணியாற்றுவதற்கும், கிராமப்புற பகுதிகளில் சேவை செய்வதற்கும் டாக்டர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    உடல் உறுப்பு தான மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. கடுமையான வறுமையில் சிக்கி தவிக்கும் ஏழை மக்களின் உயிர்களை காப்பதில் அரசு காப்பீடு திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. மதுரையில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

    இதன்மூலம் தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள 15 மாவட்டங்கள் பயன்பெறும். தமிழகத்தின் சுமார் 4 கோடி மக்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரமாக அமையும். சமூகத்துக்காக தங்களுடைய அர்ப்பணிப்பு செய்தவர்களை நினைவுகூர்ந்து கவுரவப்படுத்துவது பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் டாக்டர்கள் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன், கே.செந்தில், டி.மருதுபாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 
    சர்வதேச செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் வீரர் என்ற சாதனைப் படைத்த சிறுவன் பிரக்ஞானந்தாவை பாரட்டிய தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று நினைவு பரிசு வழங்கினார். #PragGnanandhaa
    சென்னை:

    சென்னை முகப்பேரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவரான பிரக்ஞானந்தா, இத்தாலியில் நடந்த கிரெடின் ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 2-வது இடம் பிடித்ததுடன், செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்று சாதனைப் படைத்தார்.

    பிரக்ஞானந்தாவின் வயது 12 ஆண்டு 10 மாதங்கள் ஆகும். இதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இளம் இந்திய வீரர், ஒட்டுமொத்தத்தில் 2-வது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். செஸ் போட்டியில் இளம் வயதிலேயே புதிய உச்சத்தை தொட்ட பிரக்ஞானந்தா நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு பள்ளி மற்றும் உறவினர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இளம்வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாரட்டுக்கள் தெரிவித்தார். இது தொடர்பாக ராஜ்பவனின் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரக்ஞானந்தாவுக்கு கவர்னர் நினைவு பரிசு அளித்தார். மற்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து பல சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர். கவர்னரிடம் வாழ்த்துகள் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பிரக்ஞானந்தா தெரிவித்தான். #PragGnanandhaa
    கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று பன்வாரிலால் புரோகித் எச்சரிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவர் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் தி.மு.க.வினர் கறுப்பு கொடி காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கவர்னர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


    தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருந்து வருகையில், ஏதோ நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவது போல மாவட்டம்தோறும் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    ஆளுநர் ஆட்சி உண்மையிலேயே நடைபெற்ற கால கட்டங்களில் கூட எந்த ஓர் ஆளுநரும் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு செய்ததில்லை.

    இதற்குத் தமிழ்நாட்டில் கடும் கண்டனம் வெடித்துக் கிளம்பியது. குறிப்பாக ஆய்வு செய்ய ஆளுநர் மாவட்டங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க. கறுப்புக் கொடி காட்டும் ஜனநாயகக் கடமையைச் செய்து வருகிறது.

    மாநில ஆளுநர் மாவட்டம் தோறும், சென்று ஆய்வு நடத்துவதற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு முதுகெலும்பு அற்ற முறையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

    ‘‘ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?’’ என்று கேட்டவர் அறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சி மாநில உரிமையைக் கொச்சைப்படுத்தும் ஓர் ஆளுநருக்கு ஆலவட்டம் சுழற்றுவது வெட்கக்கேடு.

    வார்த்தைக்கு வார்த்தை அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று லாலி பாடும் முதல்-அமைச்சர் உள்ளிட்டோருக்கு அந்த அம்மா ஆளுநர் பிரச்சினையில் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார் என்ற தகவல் தெரியுமா?

    1993 ஆகஸ்ட் மாதம் 8-ம் நாளன்று சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி நேரடியாக சென்று கள ஆய்வு செய்தார்.

    ஆளுநர் அங்கு சென்றதற்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இதன்பிறகு 1995-ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற ஆளுநர் சென்னா ரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆளுநரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

    மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா புறக்கணித்தார்.

    அதுமட்டுமல்லாது, அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்குப் போகக் கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்தார்.

    ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க.வினர் மீதான வழக்கை ரத்து செய்து, ரிமாண்ட் செய்யப்பட்டவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    குட்டக் குட்ட குனிந்து கொடுத்தால் இதற்கு மேலும் ஆளுநர் செய்வார்-செல்வார் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்:-


    அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, மாநிலங்களின் உரிமைகளிலும், மக்களின் உரிமைகளிலும் தலையிடுவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, என் வீட்டிற்குள் நுழைந்து நான் என்ன சமைக்கிறேன்? என் குழந்தைக்கு என்ன சட்டை வாங்கி கொடுக்கிறேன்? என்ன மொழியில் பாடம் கற்பிக்கிறேன்? என்பதையெல்லாம், எனக்கு உரிமை இருக்கிறது நான் கட்டாயம் கேட்பேன் என்று ஆளுநர் வருவாரேயானால், என் வீட்டு வாசலில் அவரை நிறுத்துவதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது.

    இதை ஆளுநரும் புரிந்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் தலைமை நீதிபதியும் புரிந்துக் கொள்ள வேண்டும். காவல்துறையின் தலைமை அதிகாரியும் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதோ அதுபோல, குடிமக்களுக்கும் தங்களை தனி உரிமையில் பாதுகாத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அது அதிகாரத்தை விட அதிக பலம் பெற்றது.

    1947-ம் ஆண்டு முதல் ஆளுநர்கள் இருந்திருக்கிறார்கள், எப்போதும் இல்லாத அளவிற்கு இவர் சுற்றிச் சுற்றி சடுகுடு ஆடுவது போல வலம் வருகிறார், ஏன் என்று நாங்கள் கேட்பதற்கு காரணம், எங்களை அத்தனை பேருமே திருடர்கள் என்றும், நீங்கள்தான் காவலாளர் என்றும் வருகிறீர்களா? தமிழகம் ஒன்றும் டெல்லிக்கு அடிமைப்பட்டு இல்லை. நீங்கள் நுழைவதும் இந்த கேள்விகளை கேட்பதற்கே அதிகாரம் இருக்கிறது என்று வருவதால், உங்களால் தமிழகம் தன்னுடைய அடிப்படை ஜனநாயக உரிமை இழந்திருக்கிறது. இதனால் டெல்லிக்கு தமிகம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதாகத் தான் எங்கள் கண்ணுக்கு தெரிகிறது.

    எங்களை பொறுத்த வரையில் ஆளுநர் என்ற ஒரு பதவி அவசியம் தானா என்று நாங்கள் நெடுநாட்களுக்கு முன்பே எழுப்பிய கேள்வி. இதனை மத்திய அரசு இந்திய அரசியலமைப்பில் வைத்திருக்கிறது. அது மாநிலத்தின் உரிமையை பாதுகாப்பதற்கும், செழுமைப்படுத்துவதற்கும் இருக்க வேண்டுமே அன்றி, அதனை அசிங்கப்படுவதற்காக பயன்படுத்தப்படுமே ஆனால், டெல்லி அதிகாரத்தால் நியமிக்கப்பட்ட இந்த அதிகாரியை கட்டாயம் நாங்கள் எதிர்க்கத்தான் செய்வோம்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-


    மக்களால் தேர்ந்தெடுப்பட்ட அரசு இருக்கும்போது, இரட்டை ஆட்சி நடப்பதை போன்று ஆளுநர் செயல்படுவது கண்டனத்திற்குரியது. ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர் ஆளுநராக தொடர்வதற்கே தார்மீக உரிமை இல்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    எந்த வகையிலும் சட்ட வரம்பிற்குள் உட்படாத ஒருவர் ஆளுநராக நீடிப்பது நியாயமா? என்ற ஒரு கேள்வி தமிழகத்தில் நீடிக்கும்போது, அவர் நான் சட்டப்படி மாவட்டங்களுக்குப் போய் ஆய்வு செய்கிறேன் என்கிற போது, மாநில அரசாங்கம் எதற்கு இருக்கிறது.

    ஒரு ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில் தான் செயல்பட வேண்டும். அதுதான் ஆளுநருக்கு இருக்கின்ற அதிகாரம்.

    மாநில அமைச்சர்-அதிகாரிகளின் செயல்பாட்டில் இவர் சென்று ஆய்வு செய்தால், தமிழகத்தில் ஒரு இரட்டை அரசாங்கம் செயல்படுகிறதா? என்ற கேள்விதான் எழுகிறது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-


    தமிழகத்தில் ஆளுநரின் ஆய்வு தொடரும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது. மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ளாவிட்டால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தீவிரமாக போராடுவோம். ‘‘ஆளுநர் சட்டப்படிதான் நடந்து கொள்கிறார். எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் செயல்படுகின்றன’’ என்கிற முறையில் ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை கண்டனத்திற்கு உரியதாகும்.

    ஆளுநர் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவரை எதிர்த்து தீவிரமாக போராடுவோம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்:-

    தமிழகத்தில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக அறப் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிறையில் இருக்கும் தி.மு.க.வினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    2 நாட்கள் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். #BanwarilalPurohit
    சென்னை:

    2 நாட்கள் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். மாநாட்டை தொடர்ந்து அவர் பிரதமரை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

    டெல்லியில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.

    இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு, பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி, வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்த மாநாடு முடிந்த பின்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகளை சந்தித்து பேச கவர்னர் பன்வாரிலால் புரோகித் திட்டமிட்டு இருக்கிறார்.

    முன்னதாக நேற்று முன்தினம் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொலைபேசியில் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருந்தாலும், அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. அதேபோல சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அங்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு இருக் கிறது.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அங்கு நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விரிவாக ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.   #BanwarilalPurohit

    தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற பின், அவரது சிக்கன நடவடிக்கையால் கவர்னர் மாளிகை செலவு பெருமளவு குறைந்து உள்ளது.
    சென்னை:

    தமிழக கவர்னராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 30-ந் தேதி பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றார். அவர் பதவியேற்ற பின், கவர்னர் மாளிகையில், பெருமளவு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். அவர் தனது சுற்றுப்பயணத்தின்போது, கூடுமானவரை ரெயில்களில் பிரயாணம் செய்கிறார். விமானத்தில் பயணம் செய்வது என்றால், அரசு விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ எடுத்து பயணிப்பது இல்லை. சாதாரண விமானத்தில் மற்ற பயணிகளோடு பயணியாக பயணம் செய்து வருகிறார். கவர்னர் மாளிகையின் செலவுகளிலும், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார்.

    முன்னதாக 2015-2016-ல் கவர்னர் மாளிகையின் உணவு செலவு மற்றும் விருந்தினர் செலவாக 29 லட்சத்து 24 ஆயிரத்து 325 ரூபாயும், 2016-2017-ல் 44 லட்சத்து 27 ஆயிரத்து 297 ரூபாயும், 1.4.2017 முதல் பன்வாரி லால் புரோகித் பதவி ஏற்கும் வரை அதாவது 30.9.2017 வரை 41 லட்சத்து 74 ஆயிரத்து 733 ரூபாயும் செலவாகி இருந்தது.

    இதே போன்று, இதே காலகட்டங்களில் முறையே போக்குவரத்து செலவாக 25 லட்சத்து 31 ஆயிரத்து 836 ரூபாயும், 21 லட்சத்து 46 ஆயிரத்து 613 ரூபாயும், 80 லட்சத்து 55 ஆயிரத்து 405 ரூபாயும், தோட்டச் செலவாக 9 லட்சத்து 97 ஆயிரத்து 798 ரூபாயும், 15 லட்சத்து 6 ஆயிரத்து 823 ரூபாயும், 11 லட்சத்து 98 ஆயிரத்து 780 ரூபாயும், பெட்ரோல், டீசல் செலவாக 5 லட்சத்து 26 ஆயிரத்து 263 ரூபாயும், 4 லட்சத்து 92 ஆயிரத்து 93 ரூபாயும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 146 ரூபாயும், துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 5 லட்சத்து 13 ஆயிரத்து 125 ரூபாயும், 2 லட்சத்து 48 ஆயிரத்து 872 ரூபாயும், 3 லட்சத்து 24 ஆயிரத்து 625 ரூபாயும், மின் கட்டணமாக 58 லட்சத்து 88 ஆயிரத்து 755 ரூபாயும், 55 லட்சத்து 14 ஆயிரத்து 797 ரூபாயும், 28 லட்சத்து 56 ஆயிரத்து 737 ரூபாயும் செலவாகி இருந்தது.

    ஆக மொத்தத்தில் இந்த இனங்களில் 2015-2016-ல் ஒரு கோடியே 33 லட்சத்து 82 ஆயிரத்து 102 ரூபாயும், 2016-2017-ல் 1 கோடியே 43 லட்சத்து 36 ஆயிரத்து 495 ரூபாயும், 1.4.2017 முதல் 30.9.2017 வரை 1 கோடியே 68 லட்சத்து 8 ஆயிரத்து 426 ரூபாயும் செலவாகி இருந்தது.

    பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற உடன் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகளால் 1.10.2017 முதல் 31.3.2018 வரை உணவு மற்றும் விருந்தினர் செலவாக 9 லட்சத்து 22 ஆயிரத்து 673 ரூபாயும், போக்குவரத்து செலவாக 4 லட்சத்து 74 ஆயிரத்து 955 ரூபாயும், தோட்ட செலவாக 2 லட்சத்து 83 ஆயிரத்து 335 ரூபாயும், பெட்ரோல் டீசல் செலவாக 1 லட்சத்து 86 ஆயிரத்து 407 ரூபாயும், துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 64 ஆயிரத்து 906 ரூபாயும், மின்கட்டணமாக 10 லட்சத்து 99 ஆயிரத்து 145 ரூபாய் மட்டுமே செலவாகி உள்ளது. ஆக இவை அனைத்துக்கும் சேர்த்து மொத்தத்தில், 30 லட்சத்து 31 ஆயிரத்து 421 ரூபாய் செலவாகி உள்ளது.

    இந்த செலவுகளை இனிவரும் காலகட்டங்களில் மேலும் குறைக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார். 
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான செல்வசேகரின் தாய் சகோதரிகளை சந்தித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். பலரும் காயமடைந்தனர்.

    அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக துணை முதல்லமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். வன்முறை சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கும் சென்று பார்வையிட்டார். காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையையும் அவர் வழங்கினார்.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (29-ந்தேதி) தூத்துக்குடி வந்தார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த அவர் விமான நிலையத்தில் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

    துப்பாக்கி சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து அவர் துப்பாக்கி சூட்டில் பலியான‌ சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளத்தை சேர்ந்த செல்வசேகர் (40) வீட்டுக்கு சென்றார். அங்கு செல்வ சேகரின் தாய் மாசானம் அம்மாள் மற்றும் செல்வசேகரின் சகோதரிகள் 2 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது மாசானம் அம்மாள் தனது குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், தனது மகள்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கவர்னரிடம் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை கேட்டு கொண்ட கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    அதன்பிறகு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார். கவர்னர் வருகையை யொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். 
    ×