என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu governor"

    • ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து.
    • கவர்னர் ஆர்.என். ரவி டெல்லியில் ஒரு வாரம் தங்கியிருந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்குமிடையே அவ்வபோது கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செந்தில் பாலாஜி விவகாரத்திலும் கருத்து வேறுபாடு தொடர்ந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா வின் தலையீட்டால் பிரச்சனை தணிந்தது.

    இதற்கிடையே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    இதனால், ஆளுநர் ஆர்.என். ரவி, அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்ற நினைக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்றார்.

    இந்நிலையில், இதுபோன்ற சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி நேற்றிரவு டெல்லி சென்றுள்ளார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும்.
    • கவர்னரை தி.மு.க.வினர் பேசும் முறை சரியல்ல. தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று சவால் விடுத்து வருகின்றனர்.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாரதியாரின் கனவு இப்போது நனவாகி உள்ளது. இதுவரை யாரும் செல்லாத தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்து உள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த பெருமை.

    உலக நாடுகள் இந்தியாவை கிண்டல் செய்து வந்த நிலையில், தனித்துவமான நாடாக இந்தியா தற்போது உருவாகி உள்ளது.

    இஸ்ரோ விண்வெளி நிறுவனத்துக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது. நாகப்பட்டினம் வரவேண்டிய விண்கல ஏவுதளம், தி.மு.க. அமைச்சர் முயற்சி செய்யாததால் ஹரிகோட்டாவிற்கு சென்றது.

    2-வது விண்கல ஏவுதளத்தை குலசேகர பட்டிணத்தில் அமைக்க வேண்டிய கடமை தி.மு.க. அரசிற்கு உள்ளது.

    தமிழகத்தில் பா.ஜ.க.வின் நடைபயணம் குறித்து பொன்முடி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர். அவர்கள் ஏ.சி. அறையில் இருந்து அரசியல் செய்கிறார்கள்.

    23 நாளில் 128 கி.மீ. தொலைவுக்கு நடைபயணம் மேற்கொண்டு உள்ளோம். 234 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும் முதல் கட்சியாக பா.ஜ.க தான் இருக்கும்.

    தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.

    பா.ஜ.க. நடை பயணத்தால் அரசியல் புரட்சி ஏற்பட்டு உள்ளது. எனக்கு நடைபயணத்தின் போது பகவத் கீதையை விட 21 பைபிள், 7 குர்ஆன் புத்தகங்கள் அன்பளிப்பாக வந்தன. அவை தற்போது என் பூஜை அறையில் உள்ளது.

    பா.ஜ.க.வை இந்துத்துவா கட்சி என எத்தனை நாளுக்கு சொல்ல முடியும்? பா.ஜ.க. மீதான பிம்பம் உடைந்து தற்போது அனைவருக்காகவும் உழைக்கும் கட்சியாக உள்ளது.நடைபயணத்தின்போது இஸ்லாமியர், கிறிஸ்துவர்களும் என்னுடன் நடந்து வந்தனர்.

    நீட் மசோதாவில் கவர்னரின் பங்களிப்பு எதுவும் இல்லை. ஜனாதிபதி தான் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும். கவர்னரை தி.மு.க.வினர் பேசும் முறை சரியல்ல. தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று சவால் விடுத்து வருகின்றனர்.

    ஆளுநர் தி.மு.க.வின் சவாலை ஏற்று, சொந்த மாநிலமான பீகாருக்கு வரச்சொன்னால் என்ன செய்யலாம்? வாய் உள்ளது என தி.மு.க.வினர் எல்லாவற்றையும் பேசக்கூடாது.

    கவர்னரை சம்மந்தம் இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு கவர்னரிடம் அதிகாரம் உள்ளது.

    கவர்னருக்கும், அரசுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும். இதுகுறித்து பதில் சொல்ல தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு என்ன உரிமை உள்ளது?.

    காவிரி பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் தான் காரணம். அதனை இவர் தற்போது இடியாப்ப சிக்கலாக்கி ரசித்து வருகிறார்.

    அனைவருக்கும் சாதி அடையாளம் கொடுப்பது அருவருக்கத்தக்க செயல். ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவது தி.மு.க.வின் முதல் கடமையாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதுவும் நடக்காது. காவல்துறைக்கு தான் சிரமம்.

    அ.தி.மு.க மாநாடு அந்த கட்சிக்கு முக்கியமானது.மாநாடு என்றால் ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுகுறித்து நாம் கருத்து சொல்ல எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. மதசார்பற்ற நாடு. ராமரை வைத்து அரசியல் செய்ய கூடாது.
    • தமிழக கவர்னர் அவர் வேலையை பார்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக உயர் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசியதாவது:-

    இந்திய அளவில் உள்ள மாநிலங்களில் நம்பர் ஒன் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். திராவிட இயக்கத்தை கட்டி காக்க அவர் பின்னால் நாம் அணிவகுக்க வேண்டும்

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இலவச பஸ், மகளிர் உரிமை தொகை என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிதான் புதுவையிலும் வர வேண்டும் என்பது எங்களது எண்ணம்.

    புதுவை முதலமைச்சர் ரங்கசாமி சொல்வார் ஆனால் செய்ய மாட்டார். புதுவையில் நடக்கின்ற ஆட்சிக்கு ஒரு கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லை.

    தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த மலை இல்லை எந்த மலை வந்தாலும் மு.க.ஸ்டாலினை ஒன்றும் செய்ய முடியாது.

    இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. மதசார்பற்ற நாடு. ராமரை வைத்து அரசியல் செய்ய கூடாது.

    தமிழக கவர்னர் அவர் வேலையை பார்க்க வேண்டும். எங்களுக்கு மத்திய அரசை கண்டு எந்த பயமும் இல்லை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. எதுவாக இருந்தாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம்.

    தமிழகம், புதுவையில் ஒரு காலமும் தாமரை மலராது. புதுவையிலும் தி.மு.க. ஆட்சி வர வேண்டும்.காங்கிரஸ் நம்முடன் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லவில்லை. கொஞ்சமாவது உழைக்க வேண்டும். ஈரோடு தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைத்தார்.

    புதுவையில் திராவிட இயக்கத்தின் ஆட்சி விரைவில் அமையும். நாராயணசாமி கோபித்து கொள்ள கூடாது.

    சீட்டு வாங்க மட்டுமே காங்கிரஸ் கட்சியை நடத்து கின்றனர். அதனால் என்ன பிரயோசனம்? உழைக்கனும். மக்களுக்கு நல்லது செய்யனும். மக்களுக்காக கட்சி நடத்த வேண்டும். தேர்தல் நடக்கும் போது வருவது. எட்டி பார்ப்பது. சீட்டு கேட்பது. இதனால்தான் மக்கள் மத்தியில் காங்கிரஸ் எடுபடவில்லை. பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் வலிமை இழந்து விட்டது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் பலம் குறைந்து விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் இதயத்தில் வாழ்கிறார்கள்.
    • பிரதமரின் தலைமையில் நாடும், மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

    நரேந்திர மோடி இன்று 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்கள் சார்பில் வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    இதுகுறித்து ராஜ் பவன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் மகிழ்ச்சிகரமான சகோதர, சகோதரிகள் தங்களின் அன்புத் தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடிக்கு மனமார்ந்த, அன்பான மற்றும் சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வறுமையற்ற, பிணியில்லாத, கல்வியறிவின்மை போக்க, வீடற்றவர்கள் நிலை மாற மற்றும் பாகுபாடுகள் இல்லாத வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்புவதற்காக நரேந்திர மோடி தனது 3வது ஆட்சிப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    பிரதமருக்கு நாடு முழுவதும் ஒரே குடும்பம் என்பதும், தமிழ்நாட்டு மக்கள் அவரது இதயத்தில் வாழ்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். தமிழ் மக்கள் அவரை நேசிக்கிறார்கள்.

    தங்களின் இதயத்தில் பிரதமர் வாழ்கிறார் என்பதை அவர் அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். பிரதமரின் தலைமையில் நாடும், மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் அறிவார்கள்.

    கடவுள் அவருக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளைக் கொடுத்து, தேசத்தின் நலனுக்கான அவரது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை வழங்கட்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
    • அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுமார் ஒன்றரை மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்த வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். அப்போது, பல்கலைக்கழக பாதுகாப்பு தொடர்பாகவும் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுமார் ஒன்றரை மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 25 மாணவர்களின் கருத்துகளை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கேட்டறிந்துள்ளார்.

    பல்கலை மாணவர்களின் பாதுகாப்பு, காவலர்களின் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு நடத்தினார்.

    உயர்கல்வித்துறை செயலாளர் கோபால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம் உள்ளிட்டோர் ஆளுநருடன் இருந்தனர்.

    இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளரை மாற்றுமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பதிவாளரை மாற்றுவது தொடர்பான முடிவு மாநில அரசுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
    • மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திட தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதி.

    அண்ணா பல்கலைக்கழத்தில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து அச்சமடைய வேண்டாம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மேற்கொண்ட ஆய்வு குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துயரமிகு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர்- வேந்தர் இன்று (28.12.2024) மதியம் 12.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மாணவ, மாணவியர்களுடன் உரையாடவும், நமது மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திட தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்திடவும் வருகை தந்தார்.

    இவ்வாய்வின் போது, தமிழ்நாடு ஆளுநர்- வேந்தர் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

    பின்னர் ஆளுநர் - வேந்தர் மாணவர்களுடன் (பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனியாக) கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் வாயிலாக பல்கலைக்கழக வளாகத்தை மிகவும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு மாணவர்கள் கூறிய கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை மிகவும் பொறுமையாக கேட்டறிந்தார்.

    ஆளுநர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது என்று கூறியதுடன், மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

    அண்ணா பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்றும், மேலும் பலகலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திடவும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாண்புமிகு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழக ஆளுநர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    • ஆனால் திமுக அரசு அதனை மறுத்திருக்கிறது.

    தமிழக சட்டசபையில் இன்று உரையை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றது தொடர்பாக முதலமைச்சர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் சட்டமன்றத்தில் பின்பற்ற வேண்டிய விதிகளைச் சுட்டிக்காட்டியதற்காக, மாண்புமிகு தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    திமுக அரசு, தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் கோபத்தைத் திசை திருப்பவும், சட்டமன்றத்தில் பின்பற்ற வேண்டிய விதிகளைச் சுட்டிக்காட்டியதற்காக, மாண்புமிகு தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது.

    இன்று, நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக அரசு அதனை மறுத்திருக்கிறது. திமுக அரசுக்குப் பின்வருவனவற்றை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    1. கடந்த நவம்பர் 23, 1970 அன்று, மனோன்மணீயம் சுந்தரனார் பிள்ளை அவர்கள் எழுதிய அசல் தமிழ்த்தாய் வாழ்த்தைச் சுருக்கி, திருத்தப்பட்ட பாடலை, மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து என, முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் ஒரு அரசாணை மூலம் அறிவித்தார். அரசு தொடர்பான அனைத்துச் செயல்பாடுகள், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    2. இருப்பினும், 1991 ஆம் ஆண்டு வரை, தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.

    3. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம், செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்தபோதுதான், முதல்முறையாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும், முறையே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    4. மத்திய அரசின், தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளின்படி, மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் நடக்கும் முறையான அரசு நிகழ்ச்சிகளில், ஆளுநர்/ துணைநிலை ஆளுநர் வருகையின் போதும், நிகழ்ச்சியிலிருந்து விடைபெறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.

    இந்த உத்தரவு, 1971 ஆம் ஆண்டின் தேசிய மரியாதைக்கான அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் கவனத்தை திமுக அரசின் நிர்வாகத் தோல்வியிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், வகுத்துள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டுமே தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறார். இதனை ஒரு பெரிய சச்சரவாக்க முயற்சிப்பது, திமுக அரசின் தோல்விகளை மடைமாற்றுவதற்காகவே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

    ஆளுநர் உரை தொடங்கும் முன்னரும், நிறைவு பெற்றதும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை வாசிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது என்ற வாசகம் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிறது.
    • ஒரு வேளை, இதன் காரணமாக, ஆளுநர் உரையை ஆளுநர் படிக்காமலேயே புறக்கணிந்துவிட்டாரோ என்ற எண்ணமும் எழுந்துள்ளது.

    சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து சென்றார். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்தார்.

    இந்நிலையில் பொய்மையின் மறு உருவமாகத் திகழும் ஆளுநர் உரை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஆளுநர் பேருரை என்பது ஆட்சியாளர்கள் இனி செய்யப் போகின்ற காரியங்களையும், கடைப்பிடிக்க இருக்கின்ற கொள்கைகளின் விளக்கத்தையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள், ஆனால். இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

    சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், திட்டங்களே இல்லாத உரையாக, உண்மைகளை மறைக்கின்ற உரையாக ஆளுநர் உரை அமைந்தள்ளது. ஆளுநர் ஆற்றிய உரை என்று புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருந்தாலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள் ஏற்பட்ட அமளி காரணமாக உணயை வாசிக்காமல் ஆளுநர் சென்றுவிட்டார். ஒருவேனை, ஆளுநர் அவர்கள் இந்த உரையை வாசித்து இருந்தால், அந்த உரையில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுத்தது போல் ஆகிவிடும்.

    அந்த அளவுக்கு உண்மைக்கு மாறான தகவல்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை, "சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது" என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது என்பதும்; அன்றாடம் பல கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன என்பதும்; திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு, வேங்கைவயலில் உள்ள பட்டியல் பிரிவினர் பயன்படுத்திய மேல்நிலைக் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்த வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும்; மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்படுவதும், அண்ணா பல்கலைக்கழக மாலாவி அந்தப் பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும் நாடறிந்த உண்மை.

    இவற்றையெல்லாம் மறைத்து, சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது என்ற வாசகம் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிறது. ஒரு வேளை, இதன் காரணமாக, ஆளுநர் உரையை ஆளுநர் படிக்காமலேயே புறக்கணிந்துவிட்டாரோ என்ற எண்ணமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    ஆளுநர் உரையின் 58-வது பத்தியில், "மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர்களது எதிர்பார்ப்புகளுக்கும் மேலாகவே நிறைவேற்றியுள்ளதுடன், குறுகிய காலத்தில் செய்த இச்சாதனைகள் குறித்தும், ஒருபித்த முன்னேற்றம் குறித்தும் இந்த அரசு பெருமிதம் கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவர்களுக்கான பதவி மற்றும் ஊதிய உயர்வு, சத்துணவுப் பணியாளர்களுக்கான கால முறை ஊதியம்.

    மாதம் ஒரு முறை மின் கட்டணம், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, ரேஷன் கடைகளில் கூடுதலாக உ தவாக உகு உளுத்தம் பருப்பு மற்றும் கூடுதலாக ஒரு கிலோ அரிசி, 100 ரூபாய் எரிவாயு மானியம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான வஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு என பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.

    இதற்கு முற்றிலும் முரணாக ஆளுநர் உரையில் தெரிவிப்பது என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல், ஆளுநர் உரையின் பத்தி 4-ல், மகளிர் உரிமைத் தொகை 1.15 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் மொத்தம் 2.20 கோடி குடும்பங்கள் இருக்கின்ற நிலையில், 1.15 கோடி குடும்பங்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கியிருப்பது ஒருதலைபட்சமானது. இது தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு மின் கட்டண உயர்வு வாகன வரி உயர்வு பத்திரப் பதிவு உயர்வு விலைவாசி உயர்வு என பல்வேறு காரணிகள் மூலம் மாதம் 5,000 ரூபாய் வரை கூடுதல் நிதிச் சுமை சுமத்தப்பட்டிருக்கிறது.

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 1,000 மின்சாரப் பேருந்துகள் உட்பட, 7,713 பேருந்துகள் புதிதாக வாங்கப்படும் என்றும், 500 பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கைகள் வாயிலாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இதுவரை 2,578 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அறிவிக்கப்பட்டதில் 33 விழுக்காடு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசின் எல்லாத் திட்டங்களும் இந்த நிலையில் தான் உள்ளன. நீட் தேர்வு ரத்து என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. இன்று அதுபற்றி வாய் திறக்காதது ஏழையெளிய மாணவ, மாணவியரை வஞ்சிக்கும் செயல்.

    • தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் இசைப்பதும் தான் மரபு.
    • பாஜக அரசு விரும்புகிற படி நடந்து கொள்வதை ஆளுநர் ஆர்.என். ரவி வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கு சிபிஐ (எம்) வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சிபிஐ (எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது என்பது கடந்த கால மரபு அடிப்படையில் அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கடமைகளில் ஒன்று. இந்த சட்டப்பூர்வமான கடமையை நிறைவேற்றாமல் இன்று ஆளுநர் அவர்கள் வெளிநடப்பு செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் இசைப்பதும் தான் மரபு. இந்த மரபை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை காலங்காலமாக பின்பற்றி வருகிறது. இந்த மரபுகளை மதிக்காமலும், ஆளுநருக்கு உள்ள கடமைகளை நிறைவேற்றாமலும் ஒன்றிய பாஜக அரசு விரும்புகிற படி நடந்து கொள்வதை ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த காலங்களிலும் இதேபோல் அவர் சட்டமன்றத்திலிருந்து தொடர்ந்து அரசியல் உள்நோக்கத்துடன் வெளிநடப்பு செய்து வந்துள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள்.

    எனவே, சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாகவும் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும். அத்தகைய முடிவை ஆளுநர் எடுக்காவிட்டால் ஒன்றிய அரசு அரசியல் சாசன சட்டத்தை அவமதிக்கும் அவரை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென்று சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

    தமிழ்நாடு ஆளுநரின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையினை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவான கண்டனக் குரலெழுப்பிட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமுன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.
    • இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

    நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்.

    தினமும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில், தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.

    இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.

    வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது, சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர்- வள்ளலார் அதனை மீட்டார்.

    தலித்துகள் தொடர்ந்து ஒடுக்கப்படுவது எனக்கு வலியை தருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்றார் தமிழக ஆளுநர்.
    • முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை விடுத்து வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் குடியரசு தின உரையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் எனதருமை சகோதர சகோதரிகளே, வணக்கம். பாரதக் குடியரசு தன்னுடைய நிறைவான பயணத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த மங்கலமான தருணத்தில் நான் என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துக்களையும், நல்விருப்பங்களையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களுடைய உழைப்பாலும், உதிரத்தாலும், வியர்வையாலும் நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த அனைத்து உயிர்த்தியாகிகள், சுதந்திரப் போராளிகள் ஆகியோரை நான் ஆழ்மன நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

    பாபா சாஹேப் அம்பேத்கருக்கும், அரசியல் சாசன சபையின் மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்து, அவர்களை மட்டற்ற நன்றியுணர்வோடு சிந்திக்கிறேன்; ஒரு வளைந்து கொடுக்கும் தன்மையுடைய, எதிர்காலநோக்கு கொண்டதொரு அரசியலமைப்புச் சட்டத்தை இவர்கள் நமக்களித்தமையால் தான், நமது ஜனநாயகம் பாதுகாப்பாகவும், உயிர்ப்புடையதாகவும் இருக்கிறது.

    இந்த 75 ஆண்டுகளிலே, நமது அண்டைப்புற நாடுகள் உட்பட, உலகின் பல்வேறு நாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக ஜனநாயகம் நிலைகுலைவதை நாம் பார்த்திருக்கிறோம்; ஆனாலும் கூட, நமது ஜனநாயகம் மேலும் பலமுடையதாகவும், முதிர்ச்சியுடையதாகவும் காலப்போக்கில் வளர்ந்து வந்திருக்கிறது.

    ஜனநாயக உணர்வு நமது மக்களிடம் ஊறிப்போயிருக்கிறது. பாரதம் தான் ஜனநாயகத்தின் தாய்நாடு. காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரமேரூரில் உள்ள ஓராயிரம் ஆண்டுக்காலக் கல்வெட்டுகள் இதற்குச் சான்றாக விளங்குகின்றன.

    இந்த நாளன்று, நான் மிகுந்த மரியாதையோடு, அகஸ்திய முனியின் பூமியான, தமிழ்நாட்டின் புண்ணிய பூமிக்கு என் தலைவணங்குகிறேன்.

    இந்த மண்தான், பாரதம் என்ற எண்ணத்திற்கு உரமிட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாய் அடையாளப்படுத்தி, அதன் அமைவு நோக்கத்தில் வழிகாட்டியது.

    இந்த மண்ணின் சான்றோர் கூட்டமான தெய்வீகப் புலவர்கள், புனிதர்களும் சித்தர்களுமான -திருவள்ளுவர், திருமூலர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாயன்மார்கள், ஆழ்வார்களும்; மேலும் பல்லவர்கள், பாண்டியர்கள், மகத்தான சோழர்கள் போன்ற அரசர்களும், ஆன்மீகப் பெரியோரும், சமூகசீர்திருத்தவாதிகளுமான ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், வள்ளலார், அய்யாவைகுந்தர், ஸ்வாமி ஸஹஜாநந்தர் போன்றோரும், கர்நாடக இசை மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரியும், மாபெரும் சுதந்திரப் போராட்டத் தியாகியான வ.உ.சிதம்பரம்பிள்ளை போன்றோரும், மகத்தான புரட்சிக்கவியான சுப்பிரமணிய பாரதி போன்றோரெல்லாம் மிக மேன்மைமிக்க ஆன்மீக, இலக்கிய, கலாச்சார மற்றும் நாகரீகத்தின் மரபினை, நமது பெருஞ்சொத்தாக விட்டுச் சென்றிருக்கிறார்கள், இது ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் பெருமிதத்தால் விம்மச் செய்கிறது.

    நமது தேசத்தின் ஆன்மா, காலனியாதிக்க ஆட்சியாளர்களால் கருணையே இல்லாமல் காலில் போட்டு மிதிக்கப்பட்ட போது, இதே புண்ணிய பூமியான தமிழ் பூமிதான், சுவாமி விவேகானந்தருக்கு தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பாரதத்தின் ஆன்மீக, கலாச்சார மற்றும் நாகரீகத்தின் மேன்மைமிக்க மரபு குறித்த ஞானத்தை, 1893 ஆம் ஆண்டு சிகாகோவிலே உலகிற்கு அளிக்க, அவருக்குள் விழிப்பையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. இந்த அறைகூவல் தான் நமது மக்களிடம் விழிப்பினை ஏற்படுத்தியதோடு, விடுதலையை நோக்கிய நமது தேசிய சுதந்திர இயக்கத்திற்கு ஆற்றல் கூட்டியது.

    நண்பர்களே, தமிழின் ஆன்மீக, கலாச்சார மற்றும் மொழி பாரம்பரியம் தான் நமது தேசத்தின் பெருமிதம். நாம் பெருமைப்பட உலகத்தாரோடு இவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம். மலேசியாவின் மலேயா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் திருவள்ளுவர் இருக்கைகள், இலங்கையிலும், சிங்கப்பூரிலும் திருவள்ளுவர் மையங்கள், பிரான்சின் செர்ஜியில் திருவள்ளுவர் உருவச்சிலை, ஃபிஜியின் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம் என உலகம் நெடுக, தமிழின் மகோன்னதத்தைப் பரப்பும் வகையில் பல்வேறு நகரங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் திருவள்ளுவர் மையங்களையும், இருக்கைகளையும் ஏற்படுத்துவதில் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறார்.

    பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கையும், குவாஹாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டயப்படிப்பு போன்ற நடவடிக்கைகளும், தமிழின் புகழினை நாடெங்கிலும் பரப்பி வருகின்றன. பிரிட்டிஷாரிடமிருந்து அதிகாரமாற்றத்தின் கலாச்சாரச் சின்னமாக விளங்கிய, இந்த மண்ணின் புனிதமான செங்கோல், பாரதத்தின் புதிய நாடாளுமன்றத்தில் முழு கண்ணியத்தோடும், கௌரவத்தோடும் நிறுவப்பட்ட வேளையில், நாடு முழுவதும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் உணர்ந்தது.

    கடந்த மூன்றாண்டுகளின் வருடாந்தர விழாவான காசி தமிழ் சங்கமம், பாரதத்தின் ஆன்மீக-புவியீர்ப்பு மையமான காசியோடு தமிழ் மக்களுக்கு இருந்து வரும் பல்லாயிரம் ஆண்டுக்கால பழமைவாய்ந்த கலாச்சாரத் தொடர்பிற்கு, புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

    நண்பர்களே, இது பாரத தேசத்தின் பொற்காலம். இது அதன் மறுமலர்ச்சியுகம். பத்தாண்டுகளுக்கு முன்னர், பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்கிய நாம், இன்று உலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக ஆகியிருப்பதோடு, விரைவில் உலகின் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும் ஆக இருக்கிறோம்.

    உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரமாக நாம் இருக்கிறோம். நெடுநாட்கள் புரையோடிப் போன ஏமாற்றம், மனமுறிவு, அவநம்பிக்கை போன்ற உணர்வுகளை விட்டொழித்து, அற்புதமானபடைப்புத்திறன், நூதனங்கள் இயற்றல், துணிவாண்மை ஆகியவற்றால் நாம் உலகைப் பிரகாசப்படுத்தி வருகிறோம். நமது நாட்டின் 25 கோடிக்கும் மேற்பட்ட நமது மக்கள் ஏழ்மையிலிருந்து, பத்தாண்டுகள் என்ற சாதனைக்காலத்தில் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

    இன்று நமது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோர் தன்னம்பிக்கையோடும், வினைத்திட்பத்தோடும் செயல்படுகிறார்கள். மனிதத்துணிவு, விண்வெளி, இணையவெளி, ஆழ்கடல் ஆய்வு, துளிமம் மற்றும் மீநுண் தொழில்நுட்பங்கள், நீடித்த தொழில்நுட்பங்கள், எண்ணியல் பொதுக்கட்டமைப்பு, பொதுநலத் திட்டங்களின் செயலாக்கம், பிணக்குத்தீர்வு, அமைதி போன்ற அனைத்துத் துறைகளிலும் பாரதத்தின் இருப்பு முழக்கமிடுகிறது. உலகின் தயாரிப்புத் துறை மையமாக பாரதம் வேகமாக உருவெடுத்து வருகிறது.

    அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பினை பாரதத்திற்கு இடம்மாற்றி வருகின்றன. உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புகளான சாலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்றவற்றை நாம் கட்டமைத்து வருகிறோம்.

    ஆய்வுகள்-புதுமைகள் இயற்றலில் நாம் மகத்தான வீச்சை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். பாதுகாப்புத் தளவாடத் துறையில் நாம் தற்சார்பை நோக்கி முன்னேறி வருகிறோம். உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழலமைப்புகளில் ஒன்றாக நாம் விளங்கி வருகிறோம்.

    ஒவ்வொரு முக்கியமான துறையிலும் நமது தேசிய குறிக்கோளான தற்சார்பை எட்டுதல் என்பதை நோக்கி நாம் தன்னம்பிக்கையோடு உழைத்து வருகிறோம்.

    நண்பர்களே, மனிதர்களை மையப்படுத்தி, சமச்சீரான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் நமது மாதிரியானது, பிராந்திய மற்றும் உட்பிராந்திய வளர்ச்சி இடைவெளிகளை இட்டு நிரப்பி வருகிறது.

    நெடுங்காலம் விடுபட்டுப் போன, நமது முன்னேறும் பேரவா கொண்ட மாவட்டங்கள், முன்னேறிய மாவட்டங்களுக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகின்றன. சமச்சீர் வளர்ச்சியை மேலும் பரவலாக்க, முன்னேறும் பேரவா கொண்ட வட்டாரங்களுக்கும், பஞ்சாயத்துக்களுக்கும், இந்த மாதிரி நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

    தொலைவான ஊரகப்பகுதிகளில் வசிக்கின்ற, வாய்ப்புகள் குறைவான நமது சகோதர சகோதரிகளுக்கும் சமச்சீர் நிலையையும், கண்ணியத்தையும் இது கொண்டு சேர்க்கிறது.

    போட்டித்தன்மை வாய்ந்த நமது வாக்கு அரசியலிலிருந்து பெரும்பாலும் விடுபட்டுப்போகும் மிகச்சிறிய சமூகங்களையும், நமது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாதிரிஅரவணைக்கிறது.

    நாடெங்கிலும் சிதறிக்கிடக்கும், குறிப்பாக பலவீனமான பழங்குடிக் குழுக்களைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள், வளர்ச்சியின் ஆதாயங்களைப் பெற முடியாமல் இதுவரை இருந்தார்கள் என்பது கவலையளிக்கும் விஷயம். நமது மாநிலத்திலும் கூட, இப்படிப்பட்ட சுமார் 10 இலட்சம் பேர் இருக்கிறார்கள்.

    ஜவ்வாது மலைகள், கல்வராயன் மலைகள், நீலகிரி மலைகள் மற்றும் இதர இடங்களில் இருப்போரின் பரிதாபமான நிலையை நான் பார்த்திருக்கிறேன். இவர்களில் பல்லாயிரக்கணக்கானோரிடம் தங்கள் இருப்பை நிரூபிக்கும் அடிப்படை ஆவணங்கள் கூட இல்லை.

    மற்றவர்களுக்கு இணையாக இந்தக் குறிப்பிட்ட பலவீனமான பழங்குடியின மக்களை உயர்த்தி, அவர்களின் கண்ணியத்தை மீட்டெடுத்து, அவர்களின் அவலநிலையிலிருந்து மீட்கும் பணியை முதன்மையானதாக ஆக்கும் வகையில், போதுமான நிதியாதாரங்களை ஒதுக்கி, பிரதம மந்திரி ஜன்–மன் திட்டத்தைப் பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

    நண்பர்களே, நமது மக்களின் தொழில் முனைவு காரணமாக, நமது மாநிலம் சிறு-குறு-நுண் தொழில்கள் துறையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது.

    ஜவுளி, தோல், வாகனங்கள், பொறியியல் பாகங்கள், மருந்தியல் துறைகளில் நமது மாநிலம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. விவசாயத் துறையில் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, நமது விவசாயிகள் விரைவாகத் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள்.

    விவசாயத் துறையில் இணைந்து, தங்களுடைய நூதனமான எண்ணங்கள், தொழில் முனைவு காரணமாக அதில் மாற்றங்களை ஏற்படுத்தும் நமது இளைஞர்களுக்கு, நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சிறுதானிய வேளாண்மை, இயற்கை விவசாயம் ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கியிருப்பதும், அவர்கள் வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லியைத் தவிர்த்து வருவதும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

    நண்பர்களே, குறிப்பாக ஊரகப்பகுதி மற்றும் புறநகர் பின்புலத்திலிருந்து வரும் நமது தாய்மார்களும், சகோதரிகளும் மிகுந்த வினைத்திட்பத்தோடு இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் சுமார் ஒண்ணரை இலட்சம் கோடி முத்ரா கடன் பயனாளிகளில், கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையினர் பெண்கள் தாம்.

    ஊரக மாவட்டங்களுக்கு நான் சென்றிருந்த சிலவேளைகளில், அவர்களில் ஒரு சிலரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களுடைய உற்சாகம், துணிவாண்மை, நூதனங்களை உருவாக்கும் மனம் ஆகியவற்றால் நான் பெரிதும் கவரப்பட்டிருக்கிறேன்.

    ஊரகப்பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த, வினைத்திட்பம் உடைய நமது தாய்மார்களும், சகோதரிகளும், நமது தேசத்திலும், பொருளாதாரத்திலும் மாற்ற மேற்படுத்தி வரும் அமைதியான புரட்சியாளர்கள் என்பதை ஆணித்தரமாக உரைக்கும் நம்பிக்கையை இவர்கள் எனக்கு அளிக்கிறார்கள்.

    தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்களுடைய வியக்கத்தக்க செயல்பாடுகள் வாயிலாக, நமது மாநிலத்திற்கும், தேசத்திற்கும் பெருமை சேர்த்த நமது விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தனிப்பட்ட ரீதியாகவும், குழுவாகவும் இணைந்து, மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், ஏழைகள், ஆதரவற்றவர்கள் போன்றோருக்கு, மிகத்தேவையான கவனிப்பும், ஆதரவும் அளித்துவரும் கணக்கேயில்லாத போற்றப்படாத நாயகர்களுக்கு, நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நண்பர்களே, 2047-ஆம் ஆண்டுக்குள்ளாக, முழுமையாக வளர்ச்சியடைந்த, தற்சார்புடையதாக, நமது நாட்டை ஆக்குவோம் என்ற மனமார்ந்த உறுதிமொழியை நாம் ஏற்றிருக்கிறோம்.

    இதுவே நமது முன்னோர்களின் கனவாக இருந்தது. தங்கள் உயிராலும், உதிரத்தாலும், அந்நிய ஆட்சியிலிருந்து நமக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்த எண்ணற்ற உயிர்த்தியாகிகளின் கனவாகவும் இருந்தது. இதுவே வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியின் கனவாகவும் இருந்தது. இந்த தேசியக் குறிக்கோளில் எந்த சமரசமும் கிடையாது. இதை நிறைவேற்றிக் காட்டுவது நம் அனைவரின் குறிக்கோளாகும்.

    இந்த தேசியக் குறிக்கோளில், நமது மாநிலமான தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய பங்களிப்பு இருக்கிறது. இதன் வளமான திறமைகள்-திறன்களைக் காணும் போது, இதனால் நமது தேசத்தின் வளர்ச்சியின் இயந்திரமாக இருக்க முடியும்.

    இப்படிச் செய்ய வேண்டுமென்றால், நமது மாநிலம் அதன் உச்சபட்ச திறமைக்கேற்ப மேம்பட வேண்டும். ஆனால் இது நடப்பது போலத் தெரியவில்லை. முக்கியமான குறியீடுகளின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, நமது மாநிலம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

    இளைஞர்கள் தாம் நமது மிக மதிப்பு வாய்ந்த சொத்துக்கள். இவர்கள் தாம் நமது எதிர்காலம். தமிழ்நாடு வளர வேண்டுமென்று சொன்னால், மிகச் சிறப்பான கல்வியும், திறன்களும் நமது இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும்.

    மொத்த-சேர்க்கை-விகிதத்தில், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பது மிகுந்த நிறைவை அளிக்கிறது. ஆனால் குறிப்பாக, பள்ளிகளில் மாணவர்களின் கற்றல்-வெளிப்பாடு என்று காணும் போது, இது கடைத்தட்டில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது.

    நமது அரசுப்பள்ளிகளில் இருக்கும் கற்றல் நிலை தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளின் கல்வி அறிக்கைகளின் வருடாந்தர நிலை, மிகவும் கவலையளிக்கும் ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறது.

    நமது அரசுப்பள்ளிகளில் இருக்கும் சுமார் 75 சதவீதம் மாணவர்களால், இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைக் கூட, சரிவரப் படிக்க இயலவில்லை என்பதோடு, 11 முதல் 99 வரையிலான இரண்டு இலக்க எண்களைக் கூட, அவர்களால் அடையாளம் காண முடிவதில்லை.

    இரண்டு இலக்க கூட்டல்-கழித்தல்களைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகள் படிப்பதால், அரசுப்பள்ளிகளில் கற்றலில் ஏற்பட்டிருக்கும் இந்த செங்குத்தான சரிவு, ஏழைகளின் எதிர்காலத்தை மேலும் ஆபத்துக்குள்ளாக்குவதோடு, நீண்டகால சமூக மற்றும் பொருளாதார அநீதி அவர்களுக்கு இழைக்கப்படுவதை இது மேலும் அதிகப்படுத்தும்.

    நண்பர்களே, உயர்கல்வியைப் பொறுத்தமட்டிலும் கூட, நிலைமை சிறப்பாக இல்லை. நமது 20 மாநில பல்கலைக்கழகங்களில், சுமார் 25 இலட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது.

    அவை மோசமான நிதிநெருக்கடியைச் சந்தித்து வருகின்றன, ஆசிரியர்களுக்கு ஊதியத்தைக் கூட அவற்றால் அளிக்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, மாநில அரசிடமிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதிப்பங்கீடு கிடைக்கப் பெறவில்லை.

    இதன் விளைவாக, பல பல்கலைக்கழகங்கள், 50 சதவீதத்திற்கும் குறைவான ஆசிரியர்களின் எண்ணிக்கையோடு செயல்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் சேர்க்கைக்குத் தேவையான நிதி பல்கலைக்கழகங்களிடம் இல்லை. நமது தேசத்தின் பெருமிதமாக விளங்கிய மதராஸ் பல்கலைக்கழகத்தில், 66 சதவீத ஆசிரியர் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

    அரசாங்க நிதி, தொடர்ந்து கிடைக்காத காரணத்தால், சில பல்கலைக்கழகங்கள் தங்களுடைய வருமானவரி அறிக்கைகளில், தங்களை மாநில அரசுசாரா பல்கலைக்கழகங்களாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

    பத்து பல்கலைக்கழகங்கள் பல ஆண்டுகளாகவே பதிவாளர்களும், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களும் இல்லாமல் இருக்கின்றன. அவை தற்காலிக அடிப்படையில் இயங்கி வருகின்றன. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி முறை எந்த அளவுக்குத் தீவிரமாக அழிக்கப்பட்டு விட்டது என்றால், அவற்றை பல்கலைக்கழக மாமன்றக்குழு அல்ல, மாநில தலைமைச் செயலகமே அவற்றை நிர்வாகம் செய்கின்றன.

    பல்கலைக்கழகக் கல்விக்குழுவின் ஆளுமையின் கீழ் சட்டபூர்வமான வகையிலே வரக்கூடிய பாடத்திட்டத்தை அமைக்கும் குழு விஷயத்தில், மாநில அரசின் உயர்கல்விக் குழு தயாரித்தளிக்கும் தரம் தாழ்ந்த பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.

    நேர்மையான, அப்பழுக்கற்ற பல்கலைக்கழக அதிகாரிகள், பொய்யான, புனையப்பட்ட வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு, காவல்துறையின் அவமானகரமான உளைச்சலுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். துணைவேந்தர்கள் இல்லாமை, பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகிறது; ஏனென்றால், உயர்கல்வித் துறையின் செயலர் அப்போது நடைமுறையில் துணைவேந்தராகிறார்.

    ஏற்கமுடியாத, அற்பமான காரணங்களுக்காக, துணைவேந்தர்கள் நியமனத்தை நடக்க இயலாமல் செய்வது என்பது, பின்வாயில் வழியே பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரத்தைச் சிதைக்கும் தவறான வழியாகும்.

    இதனால் நிகர விளைவு கல்வித்தரத்தில் ஏற்பட்டிருக்கும் செங்குத்து வீழ்ச்சி. இத்தகைய வீழ்ச்சி காரணமாக, மேலும் மேலும் பலபட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமை; ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோர் பணிக்கமர்த்தமுடியா நிலையில் உள்ளார்கள்.

    ஆய்வுகளின் பொதுவான தர நிலைகள் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நமது பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் 6,000-த்திற்கும் மேற்பட்ட முனைவர்களில், 5 சதவீதம் பேரால் கூட, தேசியத் தகுதித்தேர்வு-NET, அல்லது இளநிலை ஆய்வு மாணவர் நிலை-JRF-க்கான குறைந்தபட்ச ஆய்வுத்தரத்திற்குத் தேர்ச்சி பெற முடியவில்லை. பல மில்லியன் மாணவர்களின் எதிர்காலம் அபாயத்தில் இருக்கிறது.

    நண்பர்களே, கல்வி நிறுவன வளாகங்களைச் சுற்றி நிலவும் சட்டவிரோதமான போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரமானக வலையை அளிக்கிறது.

    சர்வதேச போதைப்பொருள் கூட்டமைப்புகளோடு தொடர்புடைய, சக்திவாய்ந்த போதைப்பொருள் கும்பல்கள் நமது மாநிலத்தில் இயங்கி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்கும் போது, அடிமட்டத்தில் இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோர், சிலவேளைகளில் அமலாக்கப் பிரிவுகளால் பிடிக்கப்பட்டாலும், போதைப்பொருள் கூட்டமைப்புக்களை இயக்கி வரும் பெரும்புள்ளிகள் தொடப்படுவதில்லை.

    போதைப்பொருள் கூட்டமைப்புக்களின் முக்கியப்புள்ளிகள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படவில்லை என்று சொன்னால், பெருகி வரும் போதைப்பொருள் அபாயம், நமது எதிர்காலச் சந்ததிகளை அழித்துவிடும்.

    நண்பர்களே, நமது தாழ்த்தப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு எதிரான, மனிதாபிமானமே இல்லாமல் இழைக்கப்படும் சமூகப்பாகுபாடுகள் பற்றிய செய்திகளை, ஒவ்வொரு நாளும் நாம் படிக்கும் போது, நமது இதயம் குன்றி, தலை அவமானத்தால் தாழ்ந்து போகிறது.

    தங்கள் காலணிகளை அணிந்து கொண்டு கிராமத் தெருக்களில் நடக்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, பொது இடங்களில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்தப் பாகுபாட்டிற்கு எதிராக, அவர்களில் யாரேனும் தட்டிக்கேட்டால், அவர்கள் கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள், அவர்கள் மீது சிறுநீர் கழிக்கப்படுகிறது, சிலவேளைகளில் அவர்கள் கொலையும் செய்யப்படுகிறார்கள்.

    பள்ளி வகுப்பறைகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனிப்படுத்தப்படுகிறார்கள்; தாழ்த்தப்பட்ட மாணவர் யாரேனும் கல்வியில் சிறப்பாகச் செயல்பட்டால், அவர் தாக்கப்படுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவர் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை என்பதோடு, அதிகார பூர்வமான கூட்டங்களில் அவர் நாற்காலியில் அமரக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.

    தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள், தமிழ்நாட்டில் சீராக அதிகரித்து வருகின்றன.

    ஒருபுறம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கவும்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றத்தீர்ப்பு, தேசிய சராசரியில் பாதியளவே இருக்கிறது. 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில், மிகப்பெரிய கள்ளச்சாராய பெருந்துயர்கள், மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

    சுமார் 100 மனிதர்கள் இறந்தார்கள், பலநூறு குடும்பங்கள் கள்ளச்சாராயத்தால் நிலைகுலைந்து போயின. ஏழை மக்களின் மரணத்திலும், அழிவிலும் இலாபம் அடையும் கள்ளச்சாராயத்தின் பெருமுதலைகள் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில், கீழ்மட்டத்தில் இருக்கும் கையாட்கள் சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    தங்களுடைய வாழ்க்கையையே சமூகநீதியை நிலைநிறுத்த அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், எம்.சி. ராஜா அவர்களைப் போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவர்கள் பற்றிப் பெருமிதம் கொள்ளும் மாநிலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன.

    நண்பர்களே, சில ஆண்டுகள் முன்புவரை, தனியார் முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட மாநிலமாக நமது மாநிலம் இருந்தது. ஆனால் இன்று முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை விடுத்து மற்ற மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

    2021-22 ஆம் நிதியாண்டில், மாநிலங்களிலேயே அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈர்த்த 4-ஆவது மாநிலமாக தமிழ்நாடு இருந்ததோடு, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு முதலீட்டைப் பெற்றது. 2023-24 ஆம் ஆண்டில் நமது மாநிலம் 6-ஆவது நிலைக்கு வீழ்ச்சி கண்டதோடு, 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவே முதலீட்டைப் பெற்றது. அதேவேளையில், கர்நாடகம் 6.5 பில்லியன் டாலர் அளவும், குஜராத் 7.3 பில்லியன் டாலர் அளவும், மஹாராஷ்டிரம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவும் முதலீடுகளை ஈர்த்தன.

    தெலங்காணாவும், ஹரியாணாவும் ஒருகாலத்தில் நமக்கு அடுத்த நிலையில் இருந்தார்கள்; ஆனால் இப்போது அவர்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறிவிட்டார்கள். குறைந்து வரும் தனியார் முதலீடுகள், தொழில்கள் மற்றும் சேவைத்துறைகளின் வேகத்தைக் குறைத்திருக்கிறது.

    இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் பாதகமான விளைவுகளை உண்டாக்கும். முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் காரணங்களை நாம் அகற்றியாக வேண்டும்.

    நண்பர்களே, ஒரு சமூகத்தில் நடக்கும் தற்கொலைகள் தாம் அதன் சமூக மற்றும் பொருளாதாரத் துயரின் அளவுகோல். நாட்டிலேயே மிக அதிக தற்கொலை வீதம் உடைய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு சராசரி 12 தற்கொலைகள் என்பது தேசிய சராசரி.

    நமது மாநிலமான தமிழ்நாட்டிலோ, ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 26-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் என்ற நிலை இருக்கிறது. இது தேசிய சராசரியை விட இருமடங்கிற்கும் அதிகமானது. நமது மாநிலத்தில் சுமார் 20,000 பேர்கள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    தமிழ்நாடு தான் இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்கிறார்கள் தரவு ஆய்வாளர்கள். பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், ஏழைகள். தீவிரமான சமூக மற்றும் பொருளாதாரத் துயர் நிறைந்த சூழல், வளர்ச்சிக்கும் நீதிக்கும் எதிரானது. இதில் விரிவான உடனடி இடையீடு தேவைப்படுகிறது.

    நண்பர்களே, தேசிய புலனாய்வு முகமை-NIA எனும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய முகமை, நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தீவிரவாத வலையமைப்புக்களின் அலகுகளையும், இரகசியமாகச் செயல்படும் தீவிரவாதிகளையும் அவ்வப்போது கண்டுபிடித்து செயலிழக்கச் செய்து வருகிறது.

    இவற்றில் சில தீவிரவாத அலகுகள், ஆஃப்கனிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளில் இயங்கி வரும் சர்வதேச தீவிரவாத வலையமைப்புக்களோடு தொடர்பு கொண்டவை. தேசிய பாதுகாப்பு பற்றிய மிகமிகத் தீவிரமான கவலையை அளிக்கும் விஷயம் இது.

    இது நமது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, நமது பொருளாதாரத்தைக் கடுமையாகத் தகர்க்கக்கூடிய திறன் கொண்டது. மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும், அமலாக்க முகமைகள் தீவிரத்தோடு அவர்களைக் களையெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    நண்பர்களே, 2047-லே வளர்ச்சியடைந்த பாரதமாக ஆகும் பாதையில் நமது தேசம் தன்னம்பிக்கையோடு பயணிக்கும் வேளையிலே, உள்நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி, சில சுயநலமிகளும், எதிரிசக்திகளும் நமது முன்னேற்றத்தின் வேகத்தைக் குலைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

    இனம், சமயம், மொழி, சாதிகளின் பெயரால் நமது சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, அதைச் சிதைக்க முயற்சி செய்கிறார்கள். தவறான, எதிர்மறை கூற்றுகள் வாயிலாக, நமது மக்களின் நெஞ்சுரத்தை பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.

    நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதும், அரசியல் சட்டபூர்வமாக நிறுவப்பட்ட அமைப்புகளின் மீதும், நமது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பொய்யான கருத்துரைகளைப் பரப்பி வருகிறார்கள். இத்தகைய தேசவிரோதக்கூறுகளுக்கு எதிராக, விழிப்போடு இருக்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடமும் நான் வலியுறுத்துகிறேன்.

    நண்பர்களே, பாரதத்தின் அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆன வேளையை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இது ஓராண்டுக்காலக் கொண்டாட்டம். இதில் அனைவரும் சுறுசுறுப்போடு பங்கெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    நமது கனவுகள், நமது சிந்தனைகள், நமது இலக்குகள் அனைத்துமே நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன. நமது உரிமைகளும், கடமைகளும் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன. நாம் சென்று சேருமிடமும், திசைகளும் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன.

    ஒவ்வொரு இந்தியருக்கும், அனைத்திலும் மிகமிகப் புனிதமான புத்தகமாகும் இது. இது இந்திய மக்களாகிய நம் அனைவருக்கும் சொந்தம். இதை நாம் மீட்டெடுப்போம், உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் நாம் கொண்டாடுவோம்.

    மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாழ்க தமிழ், வாழ்க பாரத அன்னை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக அரசு எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திற்குள் மகாத்மா காந்தியின் புதிய சிலையை நிறுவியது.
    • ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கடந்த ஆண்டுகளில் எழும்பூரில் நடந்த இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

    காந்தி நினைவு நாள் அனுசரிப்பு குறித்து கேள்வி எழுப்பிய ஆளுநர் ரவிக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து எம்.பி சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மகாத்மா காந்தியின் நினைவு தினம் நடத்துவது தொடர்பாக ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். "காந்தி மண்டபத்தில் காந்தி நினைவு நிகழ்வை நடத்தாமல் அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?" என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர் என்.ரவி.

    பாரம்பரியமாக, காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் மெரினா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.

    இருப்பினும், மெரினா கடற்கரை சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திற்குள் மகாத்மா காந்தியின் புதிய சிலையை நிறுவியது.

    அன்று முதல் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் இரண்டும் எழும்பூர் அருங்காட்சியக காந்தி சிலை முன்புதான் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கடந்த ஆண்டுகளில் எழும்பூரில் நடந்த இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

    பாரம்பரியமிக்க எழும்பூர் அருங்காட்சியகத்தின் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

    பாந்தியன் சாலையை ஒட்டியிருக்கும் அந்த அருங்காட்சிகத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு இருக்கும் காந்தி சிலை முன்புதான் அஞ்சலி நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.

    ஆளுதர் குறிப்பிடுவது போல அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடக்கவில்லை என்பதை முதலமைச்சர் அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை பார்த்தாலே தெரியும் பின்னணியில் பாந்தியன் சாலையும் மேம்பாலமும் புகைப்படத்தில் தெரியும். ஆனால் ஆளுநர் கண்களுக்கு வெறும் அவதூறு தான் தெரியும் 'காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார்.

    ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?" எனவும் கேட்டிருக்கிறார் ஆளுநர் 1947ஆகஸ்ட்15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த போது. திராவிட கழக பொதுச் செயலாளராக இருந்த அண்ணா 'சுதந்திர தினம் இன்பநான்' என சொல்லி, பிரிட்டிஷுக்கு ஆதரவானவர்கள் என்கிற பழி விழுந்துவிடாமல் பாதுகாத்தார்.

    அந்த அண்ணாவின் வழி வந்த நாங்கள் தேசத்தையும் தேச பிதாவையும் நேசிப்பவர்கள் தேசப்பிதாவை கொன்றவர்களை கொண்டாடுகிறவர்கள் அல்ல நாங்கள் காந்தி ஏன் கொல்லப்பட்டார்? அவரை கொன்றது யார்? என்பது எல்லாம் ஆளுதருக்கு தெரியும்தானே!

    இன்று தேசப்பிதா மறைந்த தினம் மட்டுமல்ல. இந்துத்துவா தீவிரவாதியால் மகாத்மா காந்தி கொல்லப்பட்ட தினமும் என்பது வரலாறு மதவெறிக்காக காந்தியை கொன்றவர்கள் இன்று ரத்த பசியோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

    அவர்களை எதிர்த்து ஆளுநர் குறிப்பிடும் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்தான் களமாடி கொண்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தியின் கொலைக்குப் பின்னால் இருந்தவர்களையும் அமைப்பையும் ஆதரிப்பவர் நோக்கங்களை தமிழக மக்கள் ன்கு அறிவார்கள்.

    2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, "மகாத்மா காந்தியைப் பற்றி உலகினர் யாருக்கும் தெரியாது. கோந்தி' என்ற திரைப்படத்திற்குப் பிறகே தெரிந்தது" என சொல்லி காந்தியை சிறுமைப்படுத்திய போது ஆர்.என்.ரவி எங்கே போனார்?

    2019-ம் ஆண்டு உத்தரபிரதேசம் அலிகாரில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு தீ வைத்த பூஜா சகுன் பாண்டேவை ஆணார கண்டித்திருக்கிறாரா?

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைவிட ஆளுநர் முக்கியமானவர் அல்ல. மன்னராக ஜமீன்தாராக நினைத்துக் கொண்டு அதிகாரம் செய்யும் மனநோயில் இருந்து ஆளுநர் விடுபட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதைத் தவிர்த்து. தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு ஆளுநரை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×