search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashok Gehlot"

    • 200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரசுக்கு 108 உறுப்பினர்கள் உள்ளனர்.
    • சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிட விரும்பவில்லை.

    இதனால் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து சசிதரூர் களம் இறங்க உள்ளார். எனினும் அசோக் கெலாட், காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசி என்பதால் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கட்சியில் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற அடிப்படையில் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் விலகுவார் என கூறப்படுகிறது.

    இதனை நேற்று அசோக் கெலாட் சூசகமாக கூறினார். இதுதொடர்பாக பேட்டி அளித்த அவர், 40 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சாசன பதவிகளை வகித்து விட்டேன். இப்போது புதிய தலைமுறையினர் வாய்ப்பை பெற வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றார்.

    இதனால் மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரி ஆவதற்கு சச்சின் பைலட் தீவிரம் காட்டி வருகிறார். அவருக்கு 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சச்சின் பைலட் புதிய முதல்-மந்திரி ஆவதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக எம்.எல்.ஏ. கோவிந்த் ராம் மேக்வால் கூறுகையில், கடந்த 2020-ம் ஆண்டு கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் கிளர்ச்சி செய்ததால் ஆட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

    அப்போது சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தான் உதவினர். இதனால் புதிய முதல்-மந்திரி யார்? என்பதை அனைத்து தரப்பினரும் ஆலோசித்து தான் முடிவு செய்ய முடியும் என்றார்.

    அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யக்கூடாது எனவும், அவர் முதல்-மந்திரியாக தொடர வேண்டும் எனவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். இதனால் நேற்று இரவு தொடங்க இருந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தாமதமானது.

    இந்த கூட்டத்திற்காக முதல்-மந்திரி அசோக் கெலாட், சச்சின் பைலட், மேலிட பார்வையாளர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் முதல்-மந்திரி இல்லத்தில் காத்திருந்தனர். ஆனால் கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    சச்சின் பைலட்டுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கூடாது என வலியுறுத்தி அவைத்தலைவரிடம் ராஜினாமா கடிதம் வழங்கப்போவதாக மாநில அமைச்சர் பிரதாப் சிங் கச்சரியவாஸ் கூறினார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை என்பது அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தான் நடைபெறும். கட்சியில் இடம்பெற்றிருக்கும் 102 எம்.எல்.ஏ.க்களில் யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரியாக வர முடியும்.

    மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் ஆகியோரே தீர்மானிப்பார்கள் என்றார்.

    200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரசுக்கு 108 உறுப்பினர்கள் உள்ளனர். சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இவர்களில் 20 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சச்சின் பைலட்டுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில், புதிய முதல்-மந்திரி தேர்வு செய்வதில் ராஜஸ்தான் மாநில காங்கிரசில் கடும் குழப்பம் நிலவுகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 80 பேர் மற்றும் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேரும் டெல்லி வருமாறு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

    • சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு
    • அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. இதையடுத்து முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் சச்சின் பைலட் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள், போர்க்கொடி தூக்கியதால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.

    2020-ம் ஆண்டு அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்களுடன் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை வழங்கக் கூடாது என கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பைலட் போர்க்கொடி தூக்கியபோது கெலாட் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    இதற்கிடையே, 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று இரவில் சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சச்சின் பைலட்டை முதல்வராக்க கட்சித் தலைமை திட்டமிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. நிலைமையை உணர்ந்த மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட்டை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே இது பற்றி அசோக் கெலாட்டிடம் பேசி இருக்கிறார். ஆனால் அசோக் கெலாட், தன் கையில் எதுவும் இல்லை என்றும், எம்எல்ஏக்கள் தன் மீது உள்ள பாசத்தில் இப்படி செய்கிறார்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.

    இது ஒருபுறமிருக்க, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் மேலிடப் பார்வையாளர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய்மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் வந்திருந்தனர். அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள அசோக் கெலாட் இல்லத்தில் கூட்டத்தை நடத்துவதற்காக காத்திருந்தனர். சச்சின் பைல்ட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சென்றனர். கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் வராததால் கூட்டம் நடைபெறவில்லை. இதன்மூலம் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது.

    • காங்கிரஸ் தலைவராக ராகுலை தேர்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • அசோக் கெலாட்டை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் களம் இறங்க உள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17- ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. 30-ந் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    காங்கிரஸ் தலைவராக ராகுலை தேர்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு மாநில காங்கிரஸ் சார்பில் இதற்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. என்றாலும் தலைவர் பதவியை ஏற்க ராகுல் கடைசி வரை திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

    இதனால் சோனியா, ராகுல் சார்பில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் நிறுத்தப்படுகிறார். தலைவர் தேர்தலில் போட்டியிட முதலில் தயங்கிய அவர் பிறகு சம்மதித்தார். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது. அவரை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் களம் இறங்க உள்ளார்.

    இது தொடர்பாக அசோக் கெலாட் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்குமாறு ராகுல்காந்தியை நாங்கள் பல தடவை வலியுறுத்தினோம். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தனது குடும்பத்தை சேர்ந்த வேறு யாரும் தலைவர் பதவிக்கு வரக்கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.

    எனவே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். விரைவில் நான் மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். மனு தாக்கல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்தல் நடைபெறலாம். தனிப்பட்ட முறையில் நான் யாரையும் குறிப்பிட்டு பேச விரும்பவில்லை.

    காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றாலும் ராஜஸ்தான் அரசியலுடன் தொடர்ந்து பயணிக்கவே நான் விரும்புகிறேன். இதுபற்றி காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் காங்கிரஸ் தலைவராக வருபவர் அதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தி உள்ளார். ஒருவருக்கு ஒரு பதவி என்பதிலும் ராகுல் உறுதியாக கருத்து தெரிவித்து உள்ளார்.

    ராகுலின் கருத்துப்படி பார்த்தால் அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க நேரிடும். அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் புதிய முதல்-மந்திரியாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தற்போது துணை முதல்-மந்திரியாக இருக்கும் சச்சின் பைலட் புதிய முதல்-மந்திரியாக அதிக வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு பிரியங்கா ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே சில மூத்த மந்திரிகளும், சபாநாயகரும் முதல்-மந்திரி பதவியை விரும்புகிறார்கள். இதனால் ராஜஸ்தான் காங்கிரசில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    • காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
    • தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும்.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந்தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல், வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.

    ராகுல்காந்தி தலைவர் பதவியை ஏற்க வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. ராகுல்காந்தி இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் மேலிட விருப்பப்படி, ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. அதை அசோக் கெலாட் மறுத்து வந்தார்.

    இந்தநிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பினால், அதற்கு கட்டுப்படுவேன் என்று நேற்று அசோக் கெலாட் கூறினார். ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்தவுடன் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்சியும், கட்சி மேலிடமும் எனக்கு எல்லாமே கொடுத்துள்ளன. கடந்த 40, 50 ஆண்டுகளாக நான் பதவியில் இருக்கிறேன். பதவி எனக்கு முக்கியம் அல்ல. கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன்.

    சோனியாகாந்தி குடும்பம் மட்டுமின்றி, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் அன்பை பெற்ற அதிர்ஷ்டசாலி நான். எனவே, அவர்கள் தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யுமாறு கூறினால், என்னால் மறுக்க முடியாது. இருந்தாலும், ராகுல்காந்தியை நிற்குமாறு கடைசியாக ஒருதடவை வலியுறுத்துவேன்.

    ராஜஸ்தானிலோ அல்லது டெல்லியிலோ கட்சிக்கு பயனளிக்கும்வகையில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றுவேன். காங்கிரசை வலுப்படுத்தக்கூடிய முடிவை எடுப்பேன். தலைவர் தேர்தலில் நின்றாலும், முதல்-மந்திரி பதவியில் நீடிக்க முடியும்.

    நான் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பேனா, இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். என்னால் கட்சிக்கு எங்கு பலன் கிடைக்குமோ அங்கு இருப்பேன்.

    எந்த பதவியும் வேண்டாம் என்று முடிவு எடுத்தாலும், ராகுல்காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்து கொள்வேன்.

    தலைவர் தேர்தலில் சசிதரூர் போட்டியிடுவது பற்றி கேட்கிறீர்கள். உட்கட்சி ஜனநாயகத்துக்கு போட்டி நடப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். 10 காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆதரவு இருந்தால், வேட்புமனு தாக்கல் செய்யலாம். தேர்தலில் போட்டியிட சோனியாகாந்தி அல்லது ராகுல்காந்தியின் ஒப்புதல் பெறத் தேவையில்லை. தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும். வேறு எந்த கட்சியும் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது இல்லை.

    அதே சமயத்தில், காமராஜர் மாடல்படி, கருத்தொற்றுமை அடிப்படையில் கட்சி தலைவரை தேர்வு செய்வதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரிடமும் பேசி, கருத்தொற்றுமை அடிப்படையில் பொருத்தமானவரை தலைவர் பதவிக்கு தேர்வு செய்வதுதான் காமராஜர் மாடல்.

    கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால், தேர்தல் சரியானதுதான். தேர்தல் நடத்துவதில் இருந்து நாங்கள் ஓடவில்லை. யார் யார் போட்டியிடுவார்கள் என்று எனக்கு தெரியாது.

    பாதயாத்திரைக்கு 23-ந் தேதி ஓய்வு விடப்படுகிறது. அப்போது, ராகுல்காந்தி டெல்லிக்கு சென்றால், நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயாரை பார்க்க செல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அவர் இரண்டு, மூன்று வாரங்களாக தனது தாயாரை பார்க்கவில்லை. அவரும் மனிதர் தானே? உங்கள் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், பார்க்க செல்ல மாட்டீர்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் காந்தி ரூ.41 ஆயிரம் மதிப்பிலான டி-ஷர்ட்டை அணிந்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது.
    • அசோக் கெலாட் அமித்ஷாவின் உடையை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

    ஜெய்ப்பூர் :

    இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரூ.41 ஆயிரம் மதிப்பிலான டி-ஷர்ட்டை அணிந்திருப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பதிலடி கொடுத்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் நேற்று, பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷாவின் உடையை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'இந்திய ஒற்றுமை பயணத்தில் அவர்களுக்கு (பா.ஜனதாவினர்) என்ன பிரச்சினை? அவர்கள் ரூ.2½ லட்சத்துக்கான மூக்கு கண்ணாடியும், ரூ.80 ஆயிரத்தில் மப்ளரும் அணிந்து கொண்டு, ராகுல் காந்தியின் டி-ஷர்ட் குறித்து பேசுகிறார்கள். உள்துறை மந்திரி அணிந்துள்ள மப்ளரின் விலை ரூ.80 ஆயிரம்' என தெரிவித்தார்.

    பா.ஜனதாவினர் டி-ஷர்ட் அரசியல் செய்வதாக சாடிய அசோக் கெலாட், இந்திய ஒற்றுமை பயணத்துக்கு கிடைத்து வரும் சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.

    • நாட்டின் முன்பு நிறைய சவால்கள் உள்ளன.
    • ராகுல்காந்தி தலைவர் ஆனால் சவால்களை சந்திப்பது எளிதாக இருக்கும்.

    கன்னியாகுமரி

    கன்னியாகுமரியில் ராகுல்காந்தி பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சிக்காக வந்திருந்த ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்க வேண்டும் என்று ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் விரும்புகிறார்கள். அவர் தலைவர் ஆனால்தான் காங்கிரஸ் ஒற்றுமையாகவும், வலிமையாகவும் இருக்கும். நாட்டின் முன்பு நிறைய சவால்கள் உள்ளன. ராகுல்காந்தி தலைவர் ஆனால், அந்த சவால்களை சந்திப்பது எளிதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது.
    • காந்தி குடும்பத்தை சாராத சிலரும் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகி இருந்தன.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி நடக்கிறது. இதில் ராகுல் காந்தியை போட்டியிட வைப்பதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேநேரம் காந்தி குடும்பத்தை சாராத சிலரும் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகி இருந்தன. இதில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோரின் பெயர்கள் வலுவாக அடிபடுகின்றன.

    எனினும் இந்த தகவலை கடந்த வாரம் புறந்தள்ளிய அசோக் கெலாட், ராகுல் காந்தியை கட்சித்தலைமை ஏற்பதற்கு கடைசி நிமிடம் வரை வலியுறுத்துவோம் என தெரிவித்தார். ஆனால் சசிதரூரோ, தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு இது குறித்து முடிவு செய்வேன் என அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அசோக் கெலாட்டை, சசிதரூர் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம், தலைவர் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம் என கருதப்படும் அசோக் கெலாட்டும், சசிதரூரும் சந்தித்து பேசியிருக்கும் விவகாரம் காங்கிரசார் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டில் ஜனநாயகத்தை காங்கிரஸ் உயிர்ப்புடன் வைத்துள்ளது.
    • அதன் காரணமாக இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருக்கிறார்.

    வரும் செப்டம்பர் 20-ந் தேதிக்குள் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு நடைபெறும் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி மறுத்து வருகிறார்.

    இது குறித்து ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட் கூறியுள்ளதாவது:

    ராகுல் காந்தி கட்சித் தலைவராக வரவில்லை என்றால், அது நாட்டில் உள்ள அனைத்து காங்கிரஸ்காரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்.

    நாட்டில் உள்ள சாமானிய காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர் (ராகுல் காந்தி) இந்த பதவியை தானாக ஏற்க வேண்டும்.

    கட்சிக்குள் ராகுல் காந்தி தலைவராவதற்குதான் ஆதரவான சூழல் இருக்கிறது. கடந்த 32 ஆண்டுகளில் ராகுல் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவோ, மத்திய அமைச்சராகவோ, முதல்வராகவோ பொறுப்பேற்றதில்லை. பிறகு ஏன் மோடி இந்தக் குடும்பத்தைக் கண்டு பயப்படுகிறார்.

    சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்குப் பிறகும் காங்கிரஸ் கட்சியின் ஒரே மாதிரியாகதான் உள்ளது. அனைத்து மதங்களையும் வகுப்பினரையும் அழைத்துச் செல்லும் கட்சி காங்கிரஸ்.

    கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் ஜனநாயகத்தை காங்கிரஸ் உயிர்ப்புடன் வைத்துள்ளது. அதன் காரணமாகவே இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகவும், கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகவும் உள்ளனர்.

    இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளனர்.

    • ராகுல் காந்தி தலைவர் ஆகாவிட்டால், கட்சிக்கு ஏமாற்றமாகி விடும்.
    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல், மோடிக்கு எளிதாக இருக்காது.

    ஜெய்ப்பூர் :

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் செப்டம்பர் 20-ந்தேதிக்குள் நடத்தப்பட உள்ளது. ஆனால், தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார்.

    இந்தநிலையில், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்திக்குத்தான் கட்சியில் ஒருமித்த ஆதரவு உள்ளது. தொண்டர்களின் உணர்வுகளை கருதி, அவர் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தலைவர் ஆகாவிட்டால், கட்சிக்கு ஏமாற்றமாகி விடும்.

    பெரும்பாலானோர் வீட்டிலேயே உட்கார்ந்து விடுவார்கள். அது கட்சிக்கு பாதிப்பாகி விடும். நேரு குடும்பத்தை சேர்ந்த யாரும் கடந்த 32 ஆண்டுகளாக பிரதமராகவோ, மத்திய மந்திரியாகவோ, முதல்-மந்திரியாகவே ஆனது இல்லை. பிறகு ஏன் மோடி, அக்குடும்பத்தை பார்த்து பயப்படுகிறார்?

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல், மோடிக்கு எளிதாக இருக்காது. காங்கிரஸ்தான் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வளர்ந்த நாடுகளில் ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
    • மக்கள் நலனுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கிறது.

    ஜெய்பூர்

    பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களை பிரதமர் மோடி அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோர் பிரதமர் மோடியின் கருத்துக்கு பதில் அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டத்தை இலவச திட்டம் என்று கூற முடியாது என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டும் குறிப்பிட்டுள்ளார்.

    சுதந்திர தினத்தையொட்டி சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பேசிய அவர், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்றார். வளர்ந்த நாடுகளில் ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கு வாரம்தோறும் நிதி உதவி வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மக்கள் நலனுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கிறது என்றும், ராஜஸ்தானில், ஒரு கோடி பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது, இதுபோன்ற திட்டங்களை இலவசம் என்று கூற முடியாது என அவர் விளக்கம் அளித்தார்.

    மதத்தைப் பற்றி பேசுபவர்கள், சமத்துவமின்மை மற்றும் தீண்டாமையை எப்படி அகற்றுவது என்பதில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவதாகவும், மதத்தின் பெயரால் தேசத்தை கட்டமைக்க நினைப்பவர்களுக்கு பாகிஸ்தான் ஒரு உதாரணம் என்றும் என்றும் கெலாட் குறிப்பிட்டார்.

    • நள்ளிரவு 12 மணி வரை ஒருவரைக் கேள்வி கேட்பது தவறு. எந்த குற்றம் அல்லது பணமோசடி நடந்தது?
    • கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில், அவர்கள் விசாரிப்பதில்லை.

    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, நேற்று காலை 11.10 மணிக்கு டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்.

    பிற்பகல் ராகுல்காந்திக்கு 80 நிமிடங்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டது. பின்னர் மாலையிலும் விசாரணை தொடர்ந்தது. 10 மணி நேர விசாரணை இரவு முடிவடைந்தது.

    இதையடுத்து கார் மூலம் தனது வீட்டிற்கு ராகுல்காந்தி திரும்பினார். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    முன்னதாக அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்தும் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் டெல்லியில் காங்கிரசார் மூத்த தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி பேரணியாக சென்ற காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

    காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் சரோஜினி நகர் காவல்நிலையத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டனர்.

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சக்திசிங் கோஹில், அனில் சவுத்ரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் காவலில் வைக்கப்பட்டனர்.

    கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் துக்ளக் சாலை காவல் நிலையத்தில் 8 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்றும் காங்கிரசாரின் போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் குரலை அவர்கள் நசுக்க நினைப்பதாகவும் அதை தடுக்க போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார்.

    இதனிடையே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக்கெலாட், தெரிவித்துள்ளதாவது:

    நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை கடவுள் உங்களுக்கு கொடுத்துள்ளார் என்று மோடியிடம் கூற விரும்புகிறேன். சிபிஐ, வருமான வரித்துறை, மத்திய அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை கொண்டு நாட்டு மக்களை இப்படி நடத்த வேண்டாம். இதை கைவிட வில்லை என்றால் இந்த நாடு உங்களையும் விட்டு வைக்காது.

    இன்றும் காங்கிரஸ் கட்சி வீதிக்கு வரும். சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான், ஆனால் நள்ளிரவு 12 மணி வரை ஒருவரைக் கேள்வி கேட்பது தவறு. எந்த குற்றம் அல்லது பணமோசடி நடந்தது? கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில், அவர்கள் விசாரிப்பதில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தானில் பதவியேற்ற 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் 4 பேர் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முக்கிய தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதனால் ஏற்பட்ட மோதலை காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்தியது.

    தனது ஆதரவாளர்களுக்கு மந்திரிசபையில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சச்சின் பைலட் வலியுறுத்தி வந்தார். எனவே, ராஜஸ்தான் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என அசோக் கெலாட் தெரிவித்திருந்தார்.

    ராஜஸ்தான் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அனைத்து மந்திரிகளும் ராஜினாமா செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், அனைவரும் ராஜினாமா செய்தனர்.

    இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய அமைச்சரவை இன்று மாலை பதவி ஏற்றது. புதிதாக 15 மந்திரிகள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 4 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில், ஜிதேந்திர சிங், பாபுலால் நகர், ராஜ்குமார் சர்மா, சன்யம் லோதா, ராம்கேஷ் மீனா மற்றும் டேனிஷ் அப்ரர் ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் முதல் மந்திரி அசோக் கெலாட் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    ×