search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல்காந்தியிடம் இன்றும் விசாரணை நடத்துகிறது அமலாக்கத்துறை - போராட்டத்தை தொடர காங்கிரஸ் முடிவு
    X

    விசாரணை முடிந்து வீடு திரும்பும் ராகுல்காந்தி 

    ராகுல்காந்தியிடம் இன்றும் விசாரணை நடத்துகிறது அமலாக்கத்துறை - போராட்டத்தை தொடர காங்கிரஸ் முடிவு

    • நள்ளிரவு 12 மணி வரை ஒருவரைக் கேள்வி கேட்பது தவறு. எந்த குற்றம் அல்லது பணமோசடி நடந்தது?
    • கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில், அவர்கள் விசாரிப்பதில்லை.

    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, நேற்று காலை 11.10 மணிக்கு டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்.

    பிற்பகல் ராகுல்காந்திக்கு 80 நிமிடங்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டது. பின்னர் மாலையிலும் விசாரணை தொடர்ந்தது. 10 மணி நேர விசாரணை இரவு முடிவடைந்தது.

    இதையடுத்து கார் மூலம் தனது வீட்டிற்கு ராகுல்காந்தி திரும்பினார். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    முன்னதாக அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்தும் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் டெல்லியில் காங்கிரசார் மூத்த தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி பேரணியாக சென்ற காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

    காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் சரோஜினி நகர் காவல்நிலையத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டனர்.

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சக்திசிங் கோஹில், அனில் சவுத்ரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் காவலில் வைக்கப்பட்டனர்.

    கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் துக்ளக் சாலை காவல் நிலையத்தில் 8 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்றும் காங்கிரசாரின் போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் குரலை அவர்கள் நசுக்க நினைப்பதாகவும் அதை தடுக்க போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார்.

    இதனிடையே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக்கெலாட், தெரிவித்துள்ளதாவது:

    நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை கடவுள் உங்களுக்கு கொடுத்துள்ளார் என்று மோடியிடம் கூற விரும்புகிறேன். சிபிஐ, வருமான வரித்துறை, மத்திய அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை கொண்டு நாட்டு மக்களை இப்படி நடத்த வேண்டாம். இதை கைவிட வில்லை என்றால் இந்த நாடு உங்களையும் விட்டு வைக்காது.

    இன்றும் காங்கிரஸ் கட்சி வீதிக்கு வரும். சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான், ஆனால் நள்ளிரவு 12 மணி வரை ஒருவரைக் கேள்வி கேட்பது தவறு. எந்த குற்றம் அல்லது பணமோசடி நடந்தது? கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில், அவர்கள் விசாரிப்பதில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×