search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajastan"

    • பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது.
    • ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

    ராஜஸ்தான் மாநிலம், கோட்புல்லு என்ற நகரில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ராஜேந்திர யாதவ் என்பவர் 25 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திர யாதவ், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தன் மீதான வழக்கை திரும்ப பெற கோரி மிரட்டி உள்ளார். வழக்கை திரும்ப பெற முடியாது என்று அப்பெண் உறுதியாக இருந்திருக்கிறார்.

    இதனால் கோபமடைந்த ராஜேந்திர யாதவ் தனது கூட்டாளிகளான மஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகியோருடன் இணைந்து, தனது சகோதரருடன் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் கூர்மையான ஆயுதங்களை கொண்டும் அவரையும், அவரது சகோதரரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

    விவரம் அறிந்த காவல்துறையினர், ஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகிய இருவரை கைது செய்யப்பட்டனர். ராஜேந்திர யாதவ் இன்னும் கிடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    இந்நிலையில் காயமடைந்த அப்பெண்ணுக்கு உள்ளூர் மருத்துவமனையில் தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்பெண்ணின் சகோதரருக்கும் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான ராஜேந்திர யாதவை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது. மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை அவரது உயிரை காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். ஏஎஸ்ஐயை சஸ்பெண்ட் செய்வது போதாது, இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

    • கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை அட்டையை கொண்டு வரவில்லை என்பதால் அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    • கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சாலையில் நடந்த பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளை பறிகொடுத்த பெண்ணுக்கு ₹4 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை அட்டையை கொண்டு வரவில்லை என்பதால் அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், வேறு வழியின்றி சாலையிலேயே இரட்டைக் குழந்தைகளை அவர் பிரசவிக்க, ஒரு குழந்தை அங்கேயே உயிரிழந்தது. மற்றொன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தது.

    கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளை களைய ஒரு உயர்மட்ட குழுவை நியமிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • பட்ஜெட்டை தவறுதலாக வாசித்ததற்காக அசோக் கெலாட் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
    • பாஜக தலைவர் வசுந்தரா ராஜே அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது. நிதித்துறை பொறுப்பும் முதல் மந்திரி அசோக் கெலாட்டிடமே உள்ளதால் பட்ஜெட்டை அவரே தாக்கல் செய்தார். அசோக் கெலாட் பட்ஜெட் தாக்கல் செய்து உரையை வாசித்துக்கொண்டு இருந்தார். சுமார் 7 நிமிடங்கள் வாசித்த நிலையில், அவர் கடந்த ஆண்டின் பட்ஜெட் உரையை படிப்பதை தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, கவனித்தார். உடனடியாக அவர் அசோக் கெலாட்டிடம் இதைக் கூறினார்.

    உடனே சுதாரித்துக்கொண்ட அசோக் கெலாட் பட்ஜெட் உரை வாசிப்பதை நிறுத்தினார். தவறுதலாக வாசித்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர், இந்த ஆண்டின் பட்ஜெட்டை வாசித்தார்.

    முதல்வரின் இந்த கவனக்குறைவை சுட்டிக்காட்டி, பாஜக எம்.எல்.எக்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரியும் பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே, முதல்வர் அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார். வசுந்தரா ராஜே பேசுகையில், "நான் முதல் மந்திரியாக இருந்தபோது பட்ஜெட் வாசிப்பதற்கு முன்பாக முழுமையாக சரிபார்த்துக்கொள்வேன். கடந்த பட்ஜெட்டை மீண்டும் வாசிக்கும் முதல்வரின் கையில் மாநிலம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்றார்.

    இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது, இது கசிந்துவிட்டதா? என்று பாஜக தலைவர் குலாப் சந்த் கட்டாரியா கூறினார்.

    இன்று முதல்வர் கெலாட் பழைய பட்ஜெட்டை தாக்கல் செய்ததன் மூலம் ராஜஸ்தான் சட்டசபை அவமதிக்கப்பட்டுள்ளது என பாஜக எம்எல்ஏ ராஜேந்திர ரத்தோர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு பதிலளித்த அசோக் கெலாட், 'உங்கள் கையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்ஜெட்டின் நகலில் இருந்து என்னிடம் இருக்கும் பட்ஜெட் உரையில் வேறுபாடு இருந்தால் என்னிடம் சுட்டிக்காட்டுங்கள். பட்ஜெட் உரை கசிந்துவிட்டதாக எப்படி சொல்ல முடியும்? தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்த பக்கங்கள் சேர்க்கப்பட்டு விட்டது" என்றார்.

    • சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு
    • அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. இதையடுத்து முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் சச்சின் பைலட் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள், போர்க்கொடி தூக்கியதால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.

    2020-ம் ஆண்டு அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்களுடன் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை வழங்கக் கூடாது என கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பைலட் போர்க்கொடி தூக்கியபோது கெலாட் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    இதற்கிடையே, 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று இரவில் சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சச்சின் பைலட்டை முதல்வராக்க கட்சித் தலைமை திட்டமிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. நிலைமையை உணர்ந்த மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட்டை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே இது பற்றி அசோக் கெலாட்டிடம் பேசி இருக்கிறார். ஆனால் அசோக் கெலாட், தன் கையில் எதுவும் இல்லை என்றும், எம்எல்ஏக்கள் தன் மீது உள்ள பாசத்தில் இப்படி செய்கிறார்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.

    இது ஒருபுறமிருக்க, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் மேலிடப் பார்வையாளர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய்மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் வந்திருந்தனர். அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள அசோக் கெலாட் இல்லத்தில் கூட்டத்தை நடத்துவதற்காக காத்திருந்தனர். சச்சின் பைல்ட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சென்றனர். கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் வராததால் கூட்டம் நடைபெறவில்லை. இதன்மூலம் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது.

    • சட்டசபை நோக்கி சென்ற பாஜகவினரை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.
    • பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் எனப்படும் தோல் கட்டி நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த லம்பி ஸ்கின் நோயால் ௧௧ லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 57 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன

    லம்பி நோயை கட்டுப்படுத்த மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக குற்றம்சாட்டியதுடன், இது தொடர்பாக ஜெய்ப்பூரில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. லம்பி நோய் பாதிப்பு, வேலையின்மை, மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறி முழக்கம் எழுப்பினர்.

    பாஜக அலுவலகத்தில் இருந்து சட்டசபை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். அங்கு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. சட்டசபை நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதுடன், போலீசாருடனும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், நேற்று பசுவை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார். லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • தோல் கட்டி நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
    • இந்நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தல்

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடருக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், ஒரு பசுவை தன்னுடன் அழைத்து வந்தார். இதுதொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மாடுகள் லம்பி ஸ்கின் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் மாநில அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பசுவை அழைத்து வந்ததாகவும் அவர் கூறினார். 

    அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மாடு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவரது ஆதரவாளர்கள் மாட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது தொடர்ந்து பேசிய எம்எல்ஏ ராவத், 'பாருங்கள். இந்த அரசு மீது கோமாதாவுக்கும் கோபம் வந்துவிட்டது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த தேவையான மருந்து ஊசிகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், இந்நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

    அதேசமயம், சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

    கூட்டத்தொடர் தொடங்கும் முன், முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'லம்பி ஸ்கின் எனப்படும் தோல் கட்டி நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்நோயிலிருந்து மாடுகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். தடுப்பூசி மற்றும் மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும்' என்றார்.

    • மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • காற்றழுத்த தாழ்வு மண்டம் மேற்கு, வடமேற்கு திசையில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் நோக்கி நகர்ந்து வலுவிழக்கும்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை வலுவிழந்து இருந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் பருவமழை தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்கிறது.

    இந்நிலையில், ராஜஸ்தானின் ஜலாவர் மற்றும் உதய்பூர் மாவட்டங்களில் நேற்று மட்டும் மின்னல் தாக்கியதில் 7 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.

    காற்றழுத்த தாழ்வு மண்டம் மேற்கு, வடமேற்கு திசையில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் நோக்கி நகர்ந்து வலுவிழக்கும். இதன் காரணமாக நாளை முதல் 15ம் தேதி வரை கிழக்கு ராஜஸ்தானில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ராஜஸ்தானில் திருமண ஊர்வலம் சென்றுகொண்டிருந்த போது, லாரி மோதியதில் 13 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். #RajastanAccident
    பிரதாப்கர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்நகர் -ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு திருமண ஊர்வலம் நடைபெற்றது. மணமகள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் ஊர்வலமாக வந்துகொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து ஊர்வலத்திற்குள் புகுந்தது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மணமகள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்,  விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். #RajastanAccident
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றதையடுத்து, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பட்டாசுகளுடன் தொண்டர்கள் குவிந்துள்ளனர். #Results2018 #RajasthanElections2018
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஓட்டு எண்ணும் 40 மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    இங்கு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. தேர்தலில் கட்சி வெற்றியடைந்த பின்னரே பாரம்பரிய தலைப்பாகையை அணிவேன் என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் பிரசாரத்தின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.  வாக்கு எண்ணிக்கையில் டோங்க் தொகுதியில் அவர் முன்னிலை வகிக்கிறார்.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகியிருந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 100 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் காலை 9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 85 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 70 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.

    அதிக இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பட்டாசுகளுடன் காலையிலேயே தொண்டர்கள் குவிந்தனர். சச்சின் பைலட் வீட்டின் முன்பாக ஏராளமான தொண்டர்கள் திரண்டு உற்சாகமாக முழக்கங்கள் எழுப்பினர்.



    டெல்லியில் ராகுல் காந்தி வீட்டின் அருகே தொண்டர்கள் ஹோமம் வளர்த்து பூஜை செய்து வருகின்றனர். இதில், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மகள் பிரியங்கா உள்ளிட்டோரின் புகைப்படங்களை வைத்து தொண்டர்கள் பூஜை செய்தனர்.  #Results2018 #RajasthanElections2018
    ×