search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anmiga kalanjiyam"

    • சுசீந்திரம் கோவிலில் நந்தி சங்குகளை இழைத்து ஸ்தாபிதம் செய்யப்பெற்றது.
    • தஞ்சை பெரிய கோவில் விமானம் 13 நிலைகளாக உயர்ந்துள்ளது.

    கோபுரத்தில் நந்தி

    கோயம்புத்தூர் பேரூரில் சோழன் படித்துறை அருகில் அம்பலவாணர் கோவில் இருக்கிறது. இதன் முகத்துவார மண்டபத்தின் மீது பிரமாண்டமாக ஒரு நந்தி படுத்திருக்கிறது. கோவிலுக்குள் சன்னதி முன் இருக்க வேண்டிய நந்தி இங்கே கோவிலுக்கு வெளியே கோபுரம் இருக்க வேண்டிய இடத்தில் ஊரை பார்த்துக் கொண்டு மண்டபத்தின் மேல் இருக்கிறது.

    பெங்களூர் நந்தி

    பெங்களூர் பசவன் குடியில் நந்தி 15 அடி உயரத்தில் முறைத்துப் பார்த்தபடி படுத்திருக்கும். ஆனி மாத வியாழக்கிழமைகளில் பசவனுக்கு கடலைக்காய் நைவேத்யமும் கடலை வெல்லம் உருண்டையிலான மாலையும் அணிவிப்பர்.

    ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் லேபாசி என்ற இடத்திலும் மைசூருக்கு அருகில் உள்ள சாமுண்டி மலையிலும் உள்ள நந்தியும் ஒரே கல்லினால் ஆன மிகப் பெரிய நந்திகள் ஆகும்.

    விமானத்தில் நந்தி

    தஞ்சை பெரிய கோவில் விமானம் 13 நிலைகளாக உயர்ந்துள்ளது. பதின்மூன்றாம் நிலைக்கு மேல் கற்பலகை மூடியாக அமைக்கப் பெற்றுள்ளது. அதன் நான்கு மூலைகளிலும் மூலைக்கு இரண்டு வீதம் எதிரெதிராக 8 நந்திகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 10 டன் எடையுடன் கூடிய ஒரே கல்லால் ஆனவை.

    வடஆற்காடு மாவட்டம் திருவத்திபுரம் சிவன் கோவிலில் நந்திதேவர் மூலவரைப் பார்த்து இல்லாமல் கோவிலின் வெளிவாயிலை பார்த்தபடி இருக்கிறார்.

    கொடி மரம் நோக்கி

    வட திருமுல்லைவாயில் கோவிலில் நந்தி கருவறை நோக்கி அமராமல் கொடி மரம் நோக்கி அமர்ந்துள்ளது.

    சங்காலய நந்தி

    சுசீந்திரம் கோவிலில் உள்ள பெரிய நந்தி சங்குகளை இழைத்து அதன் மூலம் ஸ்தாபிதம் செய்யப் பெற்றதாகும்.

    நவ நந்திகள்

    பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, கருட நந்தி, சிவ நந்தி, விஷ்ணு நந்தி, சோம நந்தி, மகா நந்தி, சூரிய நந்தி ஆகிய நவ நந்திகள், நந்தியால் என்னும் ஊருக்கு அருகே உள்ளன. இந்த நவ நந்திகளைத் தரிசித்து பிரசட்சணம் செய்து பூஜை செய்கிறவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அஸ்வமேத யாகங்கள் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வாளுடன் நந்தி

    திருநாகேசுவரத்தில் கருங்கல் மண்டபத்தில் வலப்புறமாக அதிகார நந்தியின் விக்ரக வடிவமுள்ளது. சிவபெருமானின் அருளால் வாள் பெற்றதால் நந்தி வீரவாளுடன் காட்சி தருகிறார். இது ஓர் அபூர்வ அமைப்பாகும்.

    நந்தியிடம் பிரார்த்தனை

    நந்தியின் காதில் தங்களது வேண்டுதல்களைச் சொல்வது பல கோயில்களில் வாடிக்கையாக நடக்கிறது. ஆனால் பெங்களூரில் அல்சூர் சோமேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தியின் மீது சாய்ந்து கொண்டு பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை சொல்கிறார்கள்.

    இதில் ரகசிய பிரார்த்தனையான திருமணத்தடை, காதலில் வெற்றி, குழந்தைபேறு, நோய்தீர, பணக்கஷ்டம் இவைகளை இந்த நந்தியிடம் கோரினாலும் சிரமம் தீரும் என்பது நம்பிக்கை! இக்கோயிலில் நான்கு முகம் கொண்ட சித்திர பிரம்மனின் சிலையும் உள்ளது.

    • வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும்.
    • சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

    பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இல்லையென்றால் இவ்வுலகம் மட்டுமல்ல நாமும், நம் உடலுமே இயங்குவது கடினம். அதாவது நம் உடலில் ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை உடையவை. ரத்தம், கொழுப்பு, கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு கொண்டவை.

    அதேவேளை பசி, தாகம், தூக்கம் ஆகியவை நெருப்பின் தன்மை உடையவையாகவும், அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன. வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும்.

    இதன் அடிப்படையில் நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்புற வேண்டும் எனில் கோயில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதும் நன்மை பயக்கும்.

    அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் ஆகிய தென்னிந்தியாவில் உள்ள கோயில்களுக்கு சென்று நாம் வழிபடலாம்.

    இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

    பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம். அதற்கு திருச்சியில் இருந்து தொடங்கி திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று இறுதியாக ஸ்ரீ காளஹஸ்தியை அடைய வேண்டும்.

    இதற்கு திருச்சியில் இருந்து ஸ்ரீ காளஹஸ்தி வரை மொத்தம் 560 கி.மீ பயணிக்க வேண்டும். எல்லா ஊர்களுக்கும் ரெயில், பேருந்து ஆகிய போக்குவரத்து வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன.

    • பஞ்சபூத தலங்களில் வாயுத் தலம் ஆகும்.
    • வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக்கோயிலின் தல மரங்கள்.

    திருக்காளத்தி - காளஹஸ்தீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது.

    பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளஹஸ்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.

    வடமொழிப் புராணங்கள் பலவும் இக்கோவிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்தி புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன. அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக்கோயிலின் தல மரங்கள்.

    வரலாறு

    இந்தயாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காலஹஸ்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான் ராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும்.மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று.

    சங்க தமிழ் இலக்கியங்களில் இக்கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக்கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுக்களும் இக்கோவிலில் உள்ளன. சோழர்களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோயிலுக்கு அளித்துள்ளனர்.

    பல்லவர் காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோயில்களை இங்கு எடுப்பித்துள்ளான்.

    12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தான். கிபி 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவன் நூறுகால் மண்டபம் ஒன்றையும் மேற்கு புற கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.

    • சர்ப்ப கிரகங்களுக்கு இடையில் மற்ற கிரகங்கள் அமைவது கால சர்ப்ப தோஷம் ஆகும்.
    • கீழ்புறமாக கால சர்ப்ப தோஷம் அமைய பெற்றவர்கள் விதியை மாற்ற முடியாது.

    ராகு, கேது என்னும் சர்ப்ப கிரகங்களுக்கிடையில் மற்ற கிரகங்கள் அமைவது காலசர்ப்பதோஷம் ஆகும். இத்தோஷம் இருப்பவர்களுக்கு திருமண தடை, பிள்ளைப்பேரின்மை போன்ற தடைகள் ஏற்படும். அரசியல் தலைவர்களுக்கு இத்தோஷம் இருப்பின் சாண் ஏறினால் முழம் சறுக்கும்.

    (மொத்தம் உள்ள 12 கட்டங்களில்) மேல்புறமாக கால சர்ப்ப தோஷம் அமையப் பெற்றவர்கள் இறைவனை தொடர்ந்து வழிபட தடைகளை வென்று நல்வாழ்வு பெறுவார்கள். அதனால் இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

    கீழ்புறமாக கால சர்ப்ப தோஷம் அமைய பெற்றவர்கள் இயற்கையாய் அமைந்த விதியை மாற்ற முடியாது என்கிறது ஜோதிட விதி. இருப்பினும் இந்தக் கால சர்ப்ப தோஷத்திற்கு சங்கரன்கோவிலில் உள்ள ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் உள்ள புற்றீஸ்வரருக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்து தாத்தா முதல் இப்போது உள்ள பேரன் வரை அவர்களது பெயர்களுக்கு அர்ச்சனை செய்து வழிபட "கீழ்புற கால சர்ப்ப தோஷம் குறைகிறது'' என்று பெரியோர்கள் கூறி உள்ளனர்.

    • சர்ப்ப தோஷம் முப்பது ஆண்டுகள் என்பதுதான் அனுபவ உண்மை.
    • வான்வெளியில் 180 டிகிரி ஒன்றை ஒன்று எதிர் நோக்கி இருக்கும்.

    ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு தீய கிரகங்கள், வான்வெளியில் 180 டிகிரியில் ஒன்றை ஒன்று எதிர் நோக்கியவாறு இருக்கும். சுழற்சியில் இரண்டின் வேகமும் ஒரே அளவு என்பதால். அந்த 180 டிகிரில் ஒரு இம்மி கூட மாற்றம் இருக்காது.

    அவை இரண்டை தவிர மற்றும் உள்ள ஏழு கிரகங்கள், அடுத்தடுத்தோ அல்லது கூட்டாகவோ அந்த இரண்டு கிரகங்களுக்கு நடுவே வான்வெளியில் இருக்கும் சூழ்நிலையில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில், ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் அந்த கிரகங்கள் மாட்டிக்கொண்டுவிடும்.

    அதன் கால அளவு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. சிலர் அதை 33 வருட காலம் என்று சொல்வார்கள். வேறு சிலர் அதை லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ, அத்தனை வருடம் அது உண்டென்பார்கள். அந்த கருத்து பிரச்சினைகள் எல்லாம் இடையில் பல ஜோதிட வல்லுனர்களால் ஏற்பட்டவை.பொதுவாக முப்பது ஆண்டுகள் என்பதுதான் அனுபவ உண்மை.

    • 21 நாகங்களின் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
    • ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள்.

    கொஞ்சு தமிழ் பேசும் கொங்குநாட்டின் குறிப்பிடத் தகுந்த தலம், நன்செய் புளியம்பட்டி. இங்கு நடு நாயகமாகத் திகழ்கின்றது, கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில். 110 ஆண்டுகள் தொன்மையானது. 1902-ம் ஆண்டில் முதல் கும்பாபிஷேகம் கண்டது. ஆனால் மூலவர், 600 ஆண்டுகள் பழமையானவர்.

    இவ்வூரின் வயல் நடுவே ஒரு கருட கம்பம் மட்டும் தனித்து நின்றிருந்த இடத்தில்தான், பெருமாளின் திருக்கோயில் இருந்திருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு பலத்த மழை பெய்து பவானி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. ஊரும் கோயிலும் அடித்துச் செல்லப்பட்டன. கருட கம்பமும் சுயம்பு மூலவரும் மட்டும் நிலைத்து நின்றன. இந்த வயல்வெளி பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை செய்யப்பட்டது.

    கோயில் கட்டுவது சம்பந்தமாக ஊர்மக்கள் பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் வேகமாக அங்கே வந்தார். ''ஐயா, இந்த உச்சி வெயில் நேரத்தில் ஒரு வெள்ளை நாகம், நான் வரும் வழியில் மண்டலமிட்டு படுத்திருக்கிறது. நான் பயந்து ஓடிவந்து விட்டேன். வந்து பாருங்கள்'' என்று பதற்றத்துடன் சொன்னார்.

    எல்லோரும் சென்று பார்த்தார்கள். அவர் சொன்னபடியே இருந்தது. இவர்களைப் பார்த்த நாகம் படமெடுத்துச் சில விநாடிகள் ஆடியது. பிறகு மூன்று முறை நிலத்தில் முத்தமிட்டு விட்டு, மளமளவென்று ஊர்ந்து சென்று மறைந்தது. தம் குலதெய்வமான 'கருத்திருமராய சுவாமி'யே கோயில் கட்ட இந்த இடத்தை நாக உருவில் வந்து காட்டியிருக்கிறார் என்று நம்பினார்கள்.

    அதன்படிதான் அங்கே கரிவரதராஜப் பெருமாளின் கருவறையுடன் கோயில் நிர்மாணிக்கப்பட்டது. மூலஸ்தானத்தின் உட்சுவர்களில் 21 நாகங்களின் புடைப்புச் சிற்பங்களும் வெளிச் சுவர்களில் நாக சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. ஆலய ராஜகோபுரம் பேரழகு வாய்ந்தது.

    இங்கு கருவறை வெளிச் சுவரில், ராமாயணத்தின் சுந்தரகாண்ட காட்சி புடைப்பு சிற்பமாக, நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. அசோக மரத்தடியில் அமர்ந்திருக்கும் சீதாதேவிக்கு அனுமன், ராமபிரானின் கணையாழியை கொடுக்கும் காட்சி அது.

    ஜாதகத்தில் தசாபுக்தி கோளாறு உள்ள தம் குழந்தையை இந்த பெருமாளுக்கு தத்துக்கொடுத்து, பெருமாளிடம் இருந்து தவிடு வாங்கி, பிறகு தவிட்டை கொடுத்து குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த பிரார்த்தனையால் குழந்தை பாதிப்பில்லாமல் வளர்கிறது என்கிறார்கள்.

    புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை இந்தப் பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடத்துகிறார்கள். பிறகு அலங்காரம், சிறப்பு பூஜை, நைவேத்யம், சமபந்தி போஜனம் என நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. இந்த கரிவரதராஜப் பெருமாளைப் பிரார்த்தித்தால், தாங்கள் எண்ணிய காரியம் நல்ல முறையில் நிறைவேறுகிறது என்பது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவம்.

    கர்ப்பிணி பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் அச்ச உணர்வைப் போக்கி, சுகப் பிரசவம் அடையச் செய்பவர் இவர். இவ்வாலயத்தில் ராமருக்குத் தனி சந்நதி உள்ளது.

    அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் நவகிரகங்கள், அனுமன், கருடாழ்வார், விஷ்வக்சேனர் ஆகியோரும் தனித்தனி சந்நதி கொண்டுள்ளனர். ராகு-கேது, நாகர் சிறப்பு பீடங்கள் இவ்வாலயத்தின் கூடுதல் சிறப்புகள். செல்வங்களுக்கு அதிபதியான ஸ்ரீதேவியையும் நிலங்களுக்கு அதிபதியான பூமிதேவியையும் தன்னருகே கொண்டு, கரிவரதராஜப் பெருமாள் அருளாசி புரிந்து வருகிறார்.

    அபய ஹஸ்தத்தால் ஆசீர்வாதத்தையும் கடிஹஸ்தத்தால் நல்ல வைராக்கியத்தையும் நல்கி, சங்கு-சக்கரங்களால் துன்பத்தையும் தீமையையும் விலக்குகிறார். அர்த்த மண்டபத்தின் முன்னால் தல விருட்சமான வில்வ மரத்தின் அடியில், காளிங்க நர்த்தன நாகச் சிற்பங்கள் காட்சி தருகின்றன. ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள்.

    இவ்வாலயத்தில் காணப்படும் கருட கம்பமும் கருடாழ்வார் சிலையும் மிக உன்னதமானவை. தன்னை வணங்குவோர்க்கு, தன் தலைவராகிய ஸ்ரீமந் நாராயணனிடம் எடுத்துச் சொல்லி வரம் தர வைப்பவர் இவர். இவருக்கு மிளகு சாதம் நைவேத்யமாகப் படைத்தால் நினைத்த காரியம் கைகூடுகிறது.

    தான் விரும்பும் மணமகனை அல்லது மணமகளைத் திருமணம் செய்துகொள்ள நினைப்பவர்கள் இவ்வாலயம் வந்து இங்குள்ள சீதாதேவிக்கு சந்தனக் காப்பும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெயும் சாற்றி, நெய் தீபம் ஏற்றி, நறுமண தூபங்கள் இட்டு, வேண்டிக் கொண்டால், மனவிருப்பம் நிறைவேறுகிறது. பிரிந்திருக்கும் கணவன்-மனைவி, கருவறை வெளிச் சுவரில் காட்சிதரும் சுந்தர காண்ட சிற்பங்களை வணங்கி, பூஜித்தால் மனமுறிவு நீங்கி ஒன்றாவார்கள்.

    இவ்வாலயத்தின் முன்புறம் உள்ள வன்னி மரத்தைச் சுற்றி வந்து வணங்குவோர்க்கு புத்திர தோஷம் நீங்கி, மழலைச் செல்வம் கிடைக்கும். கிரக தோஷம் உள்ளவர்கள், நவகிரக சந்நதிக்கு வந்து, தோஷம் ஏற்படுத்திய கிரகத்துக்குரிய உரிய வஸ்திரம், தானியம், மலர் சமர்ப்பித்தால், தோஷம் நிவர்த்தியாகிறது.

    முக்கியமாக, கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு, நாகம் இடம் காட்டிக் கொடுத்த இந்த கோயில் மிகச் சரியான பரிகாரத் தலம் என்றே சொல்லலாம். மூலவரை வணங்கி, தோஷ பரிகாரம் செய்துகொண்டால், கால சர்ப்ப தோஷம் நீங்கி விடும்.

    கோயில் தினசரி காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரையிலும் மாலையில் 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும். சனிக்கிழமை, பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மதியம் 12 மணி வரை கோயில் திறந்திருக்கும். 'கரி' - என்றால் யானை. 'வரதர்'- என்பது முதலையால் துன்பப்பட்ட அந்த யானையை விடுவித்து வைகுண்ட பதவியை அளித்த எம்பெருமான் என்று பொருள்.

    வரம் அளிக்கும் தெய்வங்களில் முதன்மையானவர் இந்த கரிவரதர். கோபிச் செட்டிப்பாளையம்-பங்களாப் புதூர் பேருந்துப் பாதையில் உள்ள இக்கோயிலுக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்தும் வரலாம். கோபியிலில் இருந்து 18 கி.மீ. தொலைவு.

    • பார்கவ ராமர் வழிபட்டதால் பார்கவ நரசிம்மர் என்று பெயர் வந்தது.
    • உக்ர நரசிம்மராக இங்கே சுவாமி காட்சி தருகிறார்.

    1. பார்கவ நரசிம்மர்:- கீழ் அஹோபிலத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இது உள்ளது. பார்கவ தீர்த்தம் அருகில், குன்றில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பார்கவ ராமர் வழிபட்டதால் பார்கவ நரசிம்மர் என்று பெயர் வந்தது.

    2. யோகானந்த நரசிம்ம சுவாமி:- கீழ் அஹோபிலத்திற்கு தென் கிழக்குத் திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் உள்ளது. கிரண்ய கசிபுவை சம்ஹாரம் செய்தபின் பக்தர் பிரகலாதனுக்கு சுவாமி அனுக்கிரகம் செய்ததோடு, யோக முறைகள் பலவற்றையும் இங்கே போதித்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.

    3. சத்ரவட நரசிம்மர்:- கீழ் அஹோபிலத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் முட்புதர்கள் சூழ்ந்த ஓரிடத்தில் உள்ளது. இங்கு சுவாமி ஓர் ஆலமரத்தின் கீழ் சேவை சாதிப்பதால் இந்தப் பெயர். வட வருசம் ஆலமரத்தின் பெயராகும்.

    4. அஹோபில நரசிம்மர்:- மேல் அஹோபிலத்தில், கீழ் அஹோபிலத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. மற்ற எல்லா கோவில்களை விட பழமையானதும், முதன்மையானதுமான சன்னதி இது. உக்ர நரசிம்மராக இங்கே சுவாமி காட்சி தருகிறார். இந்த சிலாரூபம் தானாக ஏற்பட்ட 'சுயம்பு விக்கிரகம்' என்று உறுதியாகக் கூறப்படுகிறது.

    5. குரோட(வராஹ) நரசிம்மர்:- அஹோபில நரசிம்மர் கோவிலிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. சுவாமியின் முகம் வராஹர் என்னும் குரோட வடிவத்தில் இருப்பதால் இந்தத் திருநாமம். லட்சுமிதேவி சம்பன்னராக இவர் சேவை சாதிக்கிறார்.

    6. கரஞ்ச நரசிம்மர்:- மேல் அஹோபிலத்தில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் கரஞ்ச (புங்கை மரம்) தருவினடியில் இந்த நரசிம்மர் எழுந்தருளியிருப்பதால் கரஞ்ச நரசிம்மர் என்று இவரது திருநாமம்.

    7. மாலோல நரசிம்மர்:- மேல் அஹோபிலத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாலோல நரசிம்மர் மிகப் பிரசித்தி பெற்றவர். திருவுடன் (லட்சுமியுடன்) நேர்த்தியாக சாந்த ஸ்வரூபமாக காட்சி தருவதால் `ஸ்ரீமாலோல' நரசிம்மர் எனப் பெயர் பெற்றார்.

    இந்த மூர்த்தியின் உற்சவ விக்கிரகம் முதல் ஆதிவன் சடகோப யதீந்திர மகா தேசிகன் சுவாமிக்கு நேரிடையாக நரசிம்மரால் அனுகிரகிக்கப்பட்டதால் மேற்படி அஹோபில மடத்தின் ஜீயர் சுவாமிகள் யாத்திரையாக எங்கு எழுந்தருளினாலும், ஸ்ரீமாலோல நரசிம்மருடன் சென்று வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.

    8. ஜவாலா நரசிம்ம சுவாமி:- அசலசாயா மேரு என்ற உயரமான மலையில், மேல் அஹோபிலத்தில் இருந்து இன்னும் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. புராணப்படி இங்கு தான் நரசிம்ம சுவாமி கிரண்ய கசிபுவை சம்ஹாரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

    9. பாவன நரசிம்மர்:- ஜவாலா நரசிம்மர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது பாவன நரசிம்மர் தலம். பாவன ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த வழிபாட்டு இடம் மேல் அஹோபிலத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    • முதலில் நம் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.
    • நம் உடல் இயக்கம் முழுவதையும் இந்த சக்கரங்களே கட்டுப்படுத்துகின்றன.

    அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் முருகனை வழிபாடு செய்தால் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் நம் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.

    சும்மா... ஏதோ கோவிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம், வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற நிலையில் இருக்கக் கூடாது.

    அறுபடை வீடுகளில் உள்ள ஆழமான சூட்சம ரகசியங்களை முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதலை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பது பலருக்கும் மலைப்பாக இருக்கலாம்.

    கவலையே படாதீர்கள். அது மிக, மிக எளிதானது. கொஞ்சம் நாம் மனதை ஒருமுகப்படுத்தினால் நிச்சயம் அறுபடை வீடுகளில் உள்ள முருகப்பெருமானின் அருளை ஒவ்வொன்றாக பெறமுடியும்.

    அறுபடை வீடுகளையும், நம் உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, அந்த ரகசியம் நமக்குத் தெரிந்து விடும்.

    நம் உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி ஆக்ஞை என்று 6 சக்கரங்கள் உள்ளன. நம் முதுகுத் தண்டில் அவை அமைந்துள்ளன.

    இந்த சக்கரங்கள் நம் பிட்டத்தில் இருந்து தலை வரை உள்ளது. அவை வேறு, வேறு பகுதிகளில் இருந்தாலும், ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை.

    நம் உடல் இயக்கம் முழுவதையும் இந்த சக்கரங்களே கட்டுப்படுத்துகின்றன. எனவே இந்த சக்கரங்களை நாம் சரியானபடி தட்டி எழுப்பினால் ஞான முதிர்ச்சியைப் பெற முடியும்.

    அது போலத்தான் அறுபடை வீடுகளை ஆறு ஆதாரங்களாகப் பிரித்து வழிபட்டால் இறுதியில் முக்தி கிடைக்கும்.

    முருகப்பெருமானின் முதல் படை வீடு-திருப்பரங்குன்றம். இந்த படை வீட்டின் நமது ஆதாரமாக மூலாதாரம் உள்ளது. இத்தலத்தில் முருகன் வடிவத்தில் நல் துணை வடிவமாகவும், சக்தியில் பராசக்தியாகவும், தன்மையில் உல்லாசமாகவும் உள்ளார்.

    நம் உடம்பில் உள்ள மூலாதாரம், நமது உயிர் இயக்கத்துக்கு எப்படி மூல காரணமாக உள்ளதோ, அது போல திருப்பரங்குன்றமும் நம் ஆன்மிக இயக்கத்துக்கு முதல் படியாக உள்ளது. இங்கு முருகனை வழிபட்டால் உடனே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

    அது மாதிரிதான் நம் உடம்பில் உள்ள மூலாதாரத்தை உசுப்பி விட்டால், அது குண்டலினியின் ஒட்டு மொத்த சக்தியையும் தட்டி உஷார்படுத்தி விடும். முக்கியமாக உயிராற்றல் அதிகரிக்கும்.

    திருப்பரங்குன்றம் தலத்தில்தான் முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணம் செய்தார். ஆக இத்தலத்தில் நாம் வழிபாடு செய்யும் போது குண்டலினியின் மொத்த சக்தியும் தட்டி எழுப்பப்படுவது போல நம் ஆன்மீக பயணத்தின் மொத்த உணர்வும் இங்கு தட்டி எழுப்பப்பட்டு விழிப்பை பெறும்.

    திருப்பரங்குன்றம் தலத்தில் மூலாதாரத்தை நினைத்து வழிபட்டு பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு அந்த உல்லாசம் கிடைக்கும்.

    அடுத்து இரண்டாவது படை வீடாக திகழும் திருச்செந்தூர் பற்றி பார்க்கலாம். நமது உடல் ஆதாரங்களில் இத்தலத்தை சுவாதிஷ்டான சக்கரத்துடன் ஒப்பிடுகிறார்கள்.

    இந்த சக்கரத்துக்கு பாலியல் உணர்வு, ஈகோ குணம் ஆகியவற்றை தூண்டி விடும் சக்தி உண்டு. அது மட்டுமின்றி மற்றவர்களின் உணர்ச்சி போக்கை அறியும் சக்தி, ஐம்புலன்களை தாண்டி அறியும் சக்தியும் உண்டு.

    இதை அப்படியே திருச்செந்தூர் தலத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள், உண்மை புரியும்.

    சூரனை அழிக்க படையுடன் வந்த முருகப் பெருமான், சூரனின் உணர்ச்சிப் போக்கை அறிந்தான். பிறகு ஐம்புலன்களை தாண்டி அறிந்து சூரனை சம்ஹாரம் செய்து தன்னோடு இணைத்துக் கொண்டார்.

    இத்தலத்தில் முருகப் பெருமான், ஒளிவடிவாக உள்ளார். கடலில் நீராடி முருகனை வழிபட்டால் மனம் தெளிவு பெறும். நோய், பகை நீங்கும்.

    சக்திகளில் ஆதிசக்தியாக இங்கு முருகன் உள்ளார். அவரிடம் நம் மனதை ஒருமைப்படுத்தினால் எல்லா துன்பங்களும் தொலைந்து போகும்.

    சுவாதிஷ்டான சக்கரம் தூண்டப்படும் போது செயல், சிந்தனை, சுயகட்டுப்பாடு மேம்படும் என்பார்கள். இத்தலத்து முருகனும் அப்படித்தானே உள்ளார். எனவே திருச்செந்தூர் முருகனை வழிபடும் போது உங்களது செயல், சிந்தனை எல்லாமே மேம்படுவது உறுதி.

    முருகப்பெருமானின் மூன்றாவது படை வீடான பழனியை நம் உடம்பில் உள்ள மணிபூரகம் சக்கரத்துடன் ஒப்பிடலாம். இந்த சக்கரத்தில் இருந்துதான் உடல் முழுவதும் சக்தி வினியோகிக்கப்படுகிறது. எனவேதான் பழனி தலத்தில் உள்ள முருகன், ஞானசக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

    மணிபூரகம் தூண்டப்படும் போது கட்டுக்கடங்காத உணர்ச்சி ஏற்படும். இது அப்படியே நம் முருகப் பெருமானின் சிறு வயது இயல்புடன் ஒத்துப் போகிறது.

    உலகை சுற்றி வந்த பிறகும் மாம்பழம் தனக்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில், கட்டுக் கடங்காத உணர்ச்சிப் பெருக்குடன் முருகன், இந்த பகுதியில் உள்ள மலைக்கு வந்து விட்டான் என்பது வரலாறு. அவனுக்கு காட்சிக் கொடுத்த அம்மையும் அப்பனும் ''பழம் நீ'' என்றதால்தானே பழனி வந்தது.

    பழம் வடிவில் உள்ள முருகப்பெருமானின் கட்டுக் கடங்காத உணர்ச்சியை, மணிபூரகம் சக்கரம் தூண்டப்பட்ட நிலையில் ஏற்படுவது போன்ற நிலை காட்டப்படுகிறது.

    மணிபூரகம் தூண்டப்பட்ட பிறகு உடல் உறுதி மேம்படும். இதனால் ஒருவர் எப்போதும் கடும் உழைப்பாளியாகவும், சுறுசுறுப்பானராகவும் இருப்பார்.

    முருகனும் இத்தலத்தில் அப்படித்தானே உள்ளார். துறவு நிலை பூண்டு ஆண்டி கோலத்தில் இருந்தாலும் அவர் சுறுசுறுப்பாக இருந்ததற்கு இடும்பனிடமும், அவ்வையிடமும் காண்பித்த திருவிளையாடல்களை உதாரணமாக சொல்லாம்.

    இங்கு ஞானப்பழமாக இருக்கும் முருகனை வழிபட்டால், ஞானம், ஆரோக்கியம் மேம்படும். சுவாதிஷ்டான சக்கர பலன்களை இங்கு பெறலாம்.

    அடுத்தது சுவாமி மலை. இது முருகப் பெருமானின் 4-வது படை வீடு. இத்தலத்தை நம் உடம்பு சக்கரங்களில் அனாகதம் என்கிறார்கள்.

    அனாகதம் சக்கரம் நம் இதயத்துக்கு நேர்பின்புறம் உள்ளது. அதனால் தானோ என்னவோ இந்த சக்கரம் அன்பு, பாசம், இரக்கம், விசுவாசம், பக்தி போன்ற நல்ல இயல்புகளை உயர்த்தும் சக்தியாக உள்ளது.

    இத்தகைய இயல்புகள் எல்லாம் சுவாமிமலையில் இருப்பதை காணலாம். இத்தலத்தில் முருகன் கிரியா சக்தியாகவும், சொல் வடிவாகவும் உள்ளார்.

    முருகப்பெருமான் தம் பெற்றோரிடம் அன்பும், பக்தியும் கொண்டிருந்ததால்தான் படைப்பாற்றல் பெற்று இத்தலத்தில் தந்தைக்கு உபதேசம் செய்ய முடிந்தது. அத்தகைய உபதேச சக்தியையும், படைப்பாற்றலையும் நாம் அனாகதம் சக்கரத்தை தூண்டும் போது நிச்சயமாக பெற முடியும்.

    அனாகதம் சக்கரம் விழிப்பு பெற்றால், அருள்நிலை ஆன்மிக வளர்ச்சி உயர் நிலைக்கு உந்தப்படும். இதை ''அக்கினி குண்டலினி'' என்று சொல்வார்கள்.

    அனாகதம் சக்கரம் துடிப்புடன் செயல்படும் போது, சாத்வீக குணங்கள் உண்டாகும். மனம் பக்குவநிலைக்கு வந்து விடும். படைப்பாற்றலின் ரகசியம் நமக்கு தெரியத் தொடங்கும்.

    இந்த நிலையை நீங்கள் சுவாமிமலை தலத்தில் பெற முடியும்.

    அறுபடை வீடுகளில் 5-வது படை வீடான திருத்தணியை நம் உடம்பில் 6 ஆதாரங்களாக திகழும் சக்கரங்களில் விசுத்தி சக்கரமாக கருதுகிறார்கள்.

    விசுத்தி சக்கரம் நம் உடம்பில் மைய கழுத்துக்கு பின்னால் இருக்கிறது. குரல் வளை சக்கரமான இதை தூண்டி விட்டால் நம் புலன்களுக்கு அப்பால் உள்ள விஷயங்களையும் அறிந்து, புரிந்து கொள்ளக் கூடிய நிலை ஏற்படும்.

    திருத்தணியில் இச்சா சக்தியாக திகழும் முருகனின் அருளை பெற்றால் நமக்கும் நம் புலன்களை அடக்கி தொலைவில் உள்ள விஷயங்களை அறியும் ஆற்றல் கிடைக்கும். இந்த ஆற்றல் அவ்வளவு எளிதில் எல்லாருக்கும் கிடைத்து விடாது. அதற்கு நாம் விசுத்தி சக்கரத்தை முழுமையாக விழிப்படைய செய்தல் வேண்டும்.

    திருத்தணியில் முருகப்பெருமான் தன் கோபம் முழுவதையும் விட்டொழித்தார். மலைகளில் விளையாடி, வள்ளியை மணந்து சல்லாப தன்மைக்கு வந்தார். எனவே திருத்தணிகை நாதனை வழிபடும் போது நமது மனதில் இருக்கும் கோபம் முழுமையாக நீங்கும்.

    கோபம் நீங்கும் போது மனம் சரணாகதி தத்துவத்துக்கு செல்லும். இதன் மூலம் விசுத்தியான திருத்தணி நம் ஆத்ம சக்தியின் பரிமாணத்தை திறக்க செய்யம்.

    விசுத்தி தட்டி எழுப்பப்பட எழுப்பப்பட, புனிதத்துவம் வளரும். நம் உடலுக்குள் விஷத்தன்மை எந்த வடிவிலும் நுழைய முடியாத தன்மை உண்டாகும்.

    தீய உணர்வு, தீய எண்ணம் வரவே வராது. விசுத்தி மூலம் திருத்தணிநாதன் அதை நமக்குத் தருவார்.

    விசுத்தி சக்கரம் ஒருவரிடம் முழுமையாக மலர்ந்து விட்டால் அவருக்கு எதிலும் விருப்பு வெறுப்பு வராது. பற்றற்ற நிலைக்கு அடித்தளம் போடப்பட்டு விடும்.

    மனதில் அகந்தை என்பதே இருக்காது. திருத்தணி முருகனை வழிபடும் போது இந்த நிலையை பெற முடியும்.

    ஆனால் அதற்கு நாம் நமது விசுத்தி சக்கரத்தை தூண்டி விட்டு, மலரச் செய்யும் சூட்சமத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த ரகசியம் புரிந்து விட்டால் திருத்தணி முருகன் அருளால் நீங்களும் பற்றற்ற நிலைக்கு உயர்ந்து விடலாம்.

    இறுதியாக நம் உடம்பில் ஆதாரமாக இருப்பது ஆக்ஞை. இதை முருகனின் படை வீடுகளில் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலையுடன் நம் முன்னோர்கள் ஒப்பிட்டு பலன்களை கூறியுள்ளனர்.

    நமது இரு கண் புருவ மத்தியில் இருக்கும் இந்த சக்கரத்துக்கு நெற்றிக் கண் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இந்த சக்கரம் தூண்டப்படும் போது அறிவு சங்கல்பம் உண்டாகும்.

    பழமுதிர்ச்சோலையில் மர வடிவிலும், குடிலா சக்தியுடனும் இருக்கும் முருகன் நமக்கு அறிவு சங்கல்பத்தை தருபவராக உள்ளார். இத்தலத்தில் வழிபடும் போது வருமானம் பெருகி, பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். இவை லௌகீக வாழ்க்கைக்கு உதவும்.

    ஆனால் ஆக்ஞை முழுமையாக மலரும் போது, அது ஆன்மீகக் கண்ணை திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். அதோடு சமூக வாழ்க்கையில் இருந்து விலகும் நிலை வரும் என்கிறார்கள்.

    இதைத்தான் நெற்றிக் கண் திறப்பதாக நம்முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர். பழமுதிர்ச்சோலை வழிபாடு இந்த ஆன்மீக கண் திறக்கும் நிலையை மேம்படுத்தும்.

    வாழ்வின் ஞானத்தை எல்லாம் தன்னகத்தே ஈர்த்து கொள்ளும் உயரிய நிலை ஆக்ஞையால் வரும். பழமுதிர்ச்சோலை இந்த ஞான முதிர்ச்சியைத் தரும்.

    இப்படி திருப்பரங்குன்றத்தில் தொடங்கி பழமுதிர்ச்சோலை தலம் வரை நாம் படிப்படியாக நம் ஆத்மா நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். அதாவது ஆன்மீக வாழ்வில் நம்நிலை படிப்படியாக உயரும்.

    இறுதியில் பிறவாமை நிலையைப் பெற முடியும். வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற்று விட்டு, இறுதியில் முருகன் திருவடிகளில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொள்ளும் உயர் மன நிலை பக்குவம் உண்டாகும். அறுபடை வீடுகளின் வழிபாட்டில் உள்ள அரிய ரகசியமே இதுதான்.

    • பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.
    • தனித்து அமர்ந்த தலம் என்பதால் திருத்தணிகை.

    திருப்பரங்குன்றம்: தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

    திருச்செந்தூர்: அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.

    பழனி: ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக் கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.

    சுவாமிமலை: தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

    திருத்தணி: சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.

    பழமுதிர்ச்சோலை: தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    • முருகப்பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
    • பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது.

    முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை " என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை " என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

    எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது-.

    கோவில் அமைவிடம்:

    மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

    மலையின் அடிவாரத்தை சென்றடைந்ததும் அழகர்கோவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் கோவில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. அழகர் கோவில் நுழைவுவாயில் முன்பு நாம் இறங்கியதும், வேறு யாரும் வரவேற்கிறார்களோ இல்லையோ, குரங்குகள் தவறாமல் கூட்டமாக வந்து வரவேற்கின்றன.

    ஆம்... இங்கு குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. கொஞ்சம் அசந்தால் நம் கையில் உள்ள பொருட்களை அலேக்காக லபக்கிவிடுகின்றன இவை. அதனால், கொஞ்சம் உஷாராகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது.

    அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம்.

    சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

    வரலாற்று ஆதாரங்கள்:

    திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.

    கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றையதினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்த தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாக சொல்கிறார்கள்.

    தனது புலமையால் புகழின் உச்சிக்கு சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.

    அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் அவருக்கு களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

    அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.

    உடனே அந்த சிறுவனிடம், "குழந்தாய்... எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்து தர முடியுமா? " என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

    சிறுவனின் கேள்வி அவ்வைக்கு புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப்பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப்பழத்தையே கொடுப்பா... " என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப்பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்த பழங்களை பொறுக்கிய அவ்வை, அந்த பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.

    இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா? " என்று கேட்டார்.

    சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்துபோனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.

    மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

    இந்த திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

    அதிசய நூபுர கங்கை:

    பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்த தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.

    மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்த தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த தீர்த்த தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எப்பேற்பட்ட நோயும் பறந்தோடிவிடும் என்பதால், இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள்.

    இந்த தீர்த்த தண்ணீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோவை தயார் செய்யப்படுகிறது.

    மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம்.

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் என்கிறார்கள்.

    திருமண பரிகார தலம்:

    முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

    திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, வெற்றிக்கரமான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.

    விழாக்கள் விவரம்:

    கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

    • தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் என்பது பொருள்.
    • போருக்குப் பின் அமைதி நிலவுவதாக கருதப்படுவதால் சூரசம்ஹாரம் நடத்துவதில்லை.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஐந்தாவது படை வீடாக திகழ்வது திருத்தணி என்று அழைக்கப்படும் திருத்தணிகை. இங்கு முருகப்பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமியாக, தனது இச்சா சக்தியான வள்ளியுடன் அருள்பாலிக்கிறார்.

    அமைவிடம்:

    திருவள்ளூர் மாவட்டத்தில், அரக்கோணத்தில் இருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருத்தணி. "தொண்டை நாடு" என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.

    தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சீபுரம் தெற்கிலும், விரிஞ்சிபுரம், வள்ளிமலை, சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும், திருவாலங்காடு கிழக்கிலும், ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதி ஆகியவை வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாக திருத்தணி அமைந்துள்ளது.

    தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய நடந்த பெரும் போரும், வள்ளியை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் இது என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.

    தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் என்பதும் ஒரு பொருள் என்பதால், "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை" என்று இத்தலத்திற்கு பொருள் கொள்வதும் சரியான ஒன்றாகவே கருதலாம்.

    மலையின் சிறப்புகள்:

    திருத்தணியில் முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி அருள் புரிகிறார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவி படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக காணப்படுவதால் "பிண்ணாக்கு மலை" என்றும் அழைக்கப்படுகின்றன.

    மொத்தத்தில், இந்த திருத்தணி மலை அழகு பொங்கி வழியும் மலையாக காட்சி தருகின்றது. அதனால்தான் என்னவோ, திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் "அழகு திருத்தணிமலை" என்று இந்த மலையை புகழ்கிறார்.

    "குமார தீர்த்தம்" என்று அழைக்கப்படும் பெரிய குளம், மலையடிவாரத்தில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதி "மடம் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.

    தலச்சிறப்புகள்:

    இந்த தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றி பாடியுள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த கோவில் சிறப்புபெற்று விளங்கியது தெரிய வருகிறது.

    இதுதவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சீபுரம் போலவும், மலைகளில் எல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று கூறுகிறார்.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

    தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர் கொண்டு பூஜித்தான் என்கிறது இக்கோவில் தலவரலாறு.

    திருமுருகாற்றுப்படை தந்த நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... என்று சிவபெருமானிடமே வாதிட்ட நக்கீரர், இந்த தலத்தை குன்றுதோறாடல் என்று குறிப்பிடுகிறார். குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்கும் என்றாலும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்பது அறிஞர்களின் கருத்து.

    வள்ளலாரும், முருகப்பெருமானும்:

    வடலூர் ராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அவரையே ஞான குருவாகக் கொண்டவர். தனது இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சியை கண்டு பரவசம் ஆகி இருக்கிறார். அதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

    சூரசம்ஹாரம் நடக்காத திருத்தணி:

    சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் (வதம்) செய்த இடம் திருச்செந்தூராகும். கந்தசஷ்டி அன்று அந்த நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலுமே நடத்தப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அங்கு, போருக்குப் பின் அமைதி நிலவுவதாக கருதப்படுவதால் சூரசம்ஹாரத்தை நடத்துவதில்லை.

    திருவிழாக்கள் விவரம்:

    ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, மாசி கிருத்திகை ஆகிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், பூக்காவடி, பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    வள்ளிமலை சுவாமிகள், இத்தலத்தில் திருப்புகழ் பாராயணம் செய்து கொண்டே மலையேறும் திருப்புகழ் திருப்படித் திருவிழாவை தொடங்கி வைத்தார். இப்போதும் ஆண்டுதோறும் அவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    • வடமொழியில் சுவாமிநாதனை “ஞானஸ்கந்தன்” என்று போற்றுகின்றனர்.
    • கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாக திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

    தந்தைக்கே குருவான கதை:

    படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மா, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு -ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இந்த கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான்.

    ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.

    அதன்படி சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது.

    முருகப்பெருமான் காட்சி:

    இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் காட்சி கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.

    மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

    தலவிருட்சம் நெல்லி:

    நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.

    அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாக சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

    இயற்கையான மலை அல்ல:

    சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

    தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது.

    மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

    மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை.

    திருவிழாக்கள் விவரம்:

    இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. பிற விழாக்கள் : சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம், புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    ×